By 11 May 2018 0 Comments

4 வது மாதம்!!(மருத்துவம்)

கர்ப்பமாக இருக்கும்போது ஒரு பெண் உடல்ரீதியாக பெரிய தொல்லைகள் எதுவும் இல்லாமல் சந்தோஷமாக இருக்கும் காலக்கட்டம் நான்காம் மாதம்தான். இரண்டாவது டிரைமெஸ்டர் என்று குறிப்பிடப்படும் இந்த காலத்தில் சாப்பிடவே முடியாமல் தலைச்சுற்றல், மயக்கம் வருவதெல்லாம் இப்போது பெரும்பாலும் நின்றுவிடும்.

பிடித்த உணவை நன்றாகச் சுவைத்து, ருசித்துச் சாப்பிட முடியும். ஊட்டமான உணவும், குழந்தைக்குத் தாயாகப் போகிறோம் என்ற பூரிப்பும் உடலுக்கும் உள்ளத்துக்கும் உற்சாகத்தை ஊட்டும். இவற்றோடு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் செயல்பாடும் சேர்ந்துகொள்ள கர்ப்பிணியின் முகத்தில் தாய்மைப் பொலிவு பிரகாசிக்கும்.

‘நான் கர்ப்பமாக இருக்கிறேன்’ என்று வெளியில் சொன்னால் தவிர சில பெண்களுக்கு முதல் மூன்று மாதங்கள் வரையிலும் வயிறு பெரிதாகத் தெரியாது. இரண்டாவது டிரைமெஸ்டரின் ஆரம்பத்தில்தான், அதாவது கர்ப்பம் தரித்த நான்காவது மாதத்தில்தான் வயிறு பூசினாற்போல் லேசாக மேடிடத் தொடங்கும்.

தாயின் குரலைக் கேட்கும் தருணம்!
நான்காவது கர்ப்ப மாதம் ஆரம்பிக்கும்போது கர்ப்பிணிக்கு வயிற்றுத்தசைகளும், சருமமும் கருவின் வளர்ச்சிக்கு ஏற்ப விரிவடையும். அப்போது விரி தடயங்கள்(Stretch marks) வரிவரியாய் ஏற்படத் தொடங்கும். மார்பகத்தின் இயல்பான மென்தன்மை குறைந்து, பெரிதாகி கனமாகத் தெரியும்.

இப்போது கருவில் இருக்கும் குழந்தை ஒரு லிப்ஸ்டிக் நீளத்தில்தான் இருக்கும். எனினும் முகமும், கழுத்தும் தெளிவாகத் தெரியும். முகத்தசைகள் இயங்க ஆரம்பிப்பதால் குழந்தை புன்முறுவல் பூக்கவும், கோபமாக முறைக்கவும், நெற்றியைச் சுருக்கவும் முடியும். குழந்தை ஆணா, பெண்ணா என்பது தெளிவாகும். இந்தத் தருணத்தில் தாயின் குரலைக் கேட்கத் தொடங்கும். வெளியில் கூச்சல் கேட்டால் கருக்குழந்தை திடுக்கிட்டு நகர்வதை தாயால் உணர முடியும்.

கருக்குழந்தையின் இதயம் பெரியவர்களைவிட இரண்டு மடங்கு வேகத்தில் துடிக்கும். குழந்தையின் இதயத்துடிப்பை ஸ்டெத்தாஸ்கோப் கொண்டு 5-வது மாதத்தில்தான் கேட்க முடியும். ஆனால், ‘டாப்ளர் டிவைஸ்’ எனும் கருவிகொண்டு கருவுற்ற 4-வது மாதத்திலிருந்தே குழந்தையின் இதயத்துடிப்பைக் கேட்க முடியும்.

மனித முகம் தோன்றும்!
ஐந்தாவது மாதத்தில் கருக்குழந்தை சற்றே வேகமாக வளர ஆரம்பிக்கிறது. கண், காது, மூக்கு எல்லாம் அதனதன் வடிவங்களில், ஒரு மனித முகத்துக்கே உரிய அமைப்பில், முகம் முழுமையாக உருப்பெறுகிறது. தலை, புருவம், இமை, தோல் ஆகியவற்றில் முடி வளர்கிறது. குழந்தையின் வயிற்றில் கணையம் இன்சுலினைச் சுரக்கத் தொடங்கும். தாயின் அடிவயிறு கனமாகி அவ்வப்போது லேசாக வலிக்கும்.

கருக்குழந்தையைச் சுற்றி உருவாகியிருக்கும் மெல்லிய பையில் சற்றே வழவழப்பான திரவம் சுரக்கத் தொடங்கும். இதுதான் ‘பனிக்குடநீர்’ (Amniotic fluid). குழந்தையின் சிறுநீர், அதன் நுரையீரல்களில் சுரக்கும் திரவம் எல்லாம் சேர்ந்துதான் பனிக்குடநீர் உருவாகிறது. ஐந்தாவது மாதத்தில் இது ஒரு மினி நீச்சல் குளம்போல் ஆகிவிடுவதால், குழந்தை அதில் கை, கால்களை ஆட்டி, நீச்சலடிக்கிறது. குழந்தையின் இந்த விளையாட்டு அம்மாவின் மேனியைச் சிலிர்க்க வைக்கிறது.

இப்போது குழந்தையின் சருமத்தில் ‘வெர்னிக்ஸ்’ எனும் பிசுபிசுப்பான மெழுகு பூசப்படுவதால் அதன் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.கருக்குழந்தையையும் தாயின் கருப்பையையும் இணைக்கும் ‘நெட் ஒர்க்’குக்குப் பெயர் ‘நச்சுக்கொடி’(Placenta). இது ஒரு தட்டுமாதிரி இவை இரண்டுக்கும் நடுவில் இருக்கும்.

குழந்தைக்குத் தேவைப்படும் உணவும் ஆக்ஸிஜனும் ரத்தம் மூலம் நச்சுக்கொடி வழியாகத்தான் அம்மாவிடமிருந்து குழந்தைக்குச் செல்லும். கருக்குழந்தைக்கு ரத்தம் எடுத்துச்செல்லும் குழாய்க்குப் பெயர்தான் தொப்புள்கொடி!

ஆறாவது மாதத்தில் பல கர்ப்பிணிகளுக்கு மேல் தோல் கருமையடைகிறது. கருக்குழந்தைக்கு நகங்கள் வளர்ந்து விரல்களுக்கு உறுதி கிடைக்கிறது. குழந்தைக்கென்று விரல்களில் ரேகைகள் பிரத்யேகமாக அமைகின்றன. முதுகுத்தண்டு முழுமையாக வளர்ந்திருக்கும். பகலில் கருக்குழந்தை அமைதியாக உறங்கும்; இரவில் வயிற்றுக்குள் கால்பந்து விளையாடுகிற மாதிரி உதைத்துக் குதிக்கும். இப்போது குழந்தையின் நீளம் நான்காவது மாதத்தில் இருந்ததைவிட நான்கு மடங்கு அதிகரித்திருக்கும்.

இரும்புச்சத்து மாத்திரை தேவைஇரும்புச்சத்து மாத்திரை மற்றும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மாத்திரையை இதுவரை சாப்பிடாத கர்ப்பிணிகள் மருத்துவரின் பரிந்துரைப்படி இப்போது சாப்பிட ஆரம்பிக்கலாம்.

உடற்பயிற்சி முக்கியம்இரண்டாவது டிரைமெஸ்டரில் கர்ப்பிணியானவள் தேவையான அளவுக்குச் சரிவிகித உணவைச் சாப்பிடுவதுடன் முடிந்த அளவுக்கு வீட்டில் வேலைகளையும் செய்ய வேண்டும். மகப்பேறு மருத்துவர் மற்றும் உடற்பயிற்சி ஆலோசகரைக் கலந்துபேசி வீட்டிலேயே செய்யக்கூடிய உடற்பயிற்சி மற்றும் யோகாசனம் செய்யலாம்.

உடலை விரிக்கச் செய்யும்படியான உடற்பயிற்சிகளைச் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். தினமும் 30 முதல் 45 நிமிடங்களுக்கு சுறுசுறுப்பான நடைபயிற்சி செய்வதும் நல்லதுதான். உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சி செய்யும்போது மூச்சுத்திணறல், கிறுகிறுப்பு, மயக்கம் ஆகியவை ஏற்பட்டால், நெஞ்சு அடைப்பது போலிருந்தால், பாதங்களில் வீக்கம் தெரிந்தால் உடனே பயிற்சிகள் செய்வதை நிறுத்திவிட வேண்டும். மருத்துவரிடம் ஆலோசித்த பிறகு பயிற்சிகளைத் தொடர வேண்டும்.

சந்தோஷ பரவசம் உதவும்!

இரண்டாவது டிரைமெஸ்டரில் தனக்குள் நடக்கும் மாறுதல்களையும் தன் குழந்தையின் அசைவுகளையும் கர்ப்பிணி நன்றாக உணர முடிவதால் சொல்லில் அடங்காத பரவச உணர்வை அடைகிறாள். இந்த நேரத்தில் மனதுக்குப் பிடித்த இசையைக் கேட்க வேண்டும். நல்ல புத்தகங்களைப் படிக்க வேண்டும். எவ்வித பயமோ, பதற்றமோ இல்லாமல், மனதை மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த சந்தோஷ பரவசங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை வலுப்படுத்த உதவும். உதாரணத்துக்கு நீங்கள் இனிய இசையைக் கேட்கிறீர்கள் என்றால் கருக்குழந்தையும் அதைக் கேட்டு ரசிக்கும்.நீங்கள் நான்கு மாத கர்ப்பிணி என்றால், ‘குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்?’ என்று யோசிக்கத் தொடங்கினால் போதும், உள்ளத்தில் உற்சாகம் குற்றால அருவியாய் கொட்டும்; சந்தோஷ பரவசம் அடைமழைபோல் உங்களை ஆக்கிரமித்துக் கொள்ளும்.

கர்ப்பிணிக்குப் பொதுவான ஆலோசனைகள்!

*தளர்வான உடைகளையே அணிய வேண்டும். உள்ளாடைகள் இறுக்கமாக இருக்கக்கூடாது. பருத்தி ஆடைகள் மிகவும் நல்லது.

*ஹைஹீல்ஸ் செருப்புகள், இடுப்பில் பெல்ட் போன்றவற்றை அணியக்கூடாது.

*இதமான சுடுநீரில் குளிக்கலாம். குளியலறையில் வழுக்கிவிழுந்துவிடாமல் கவனமாக இருப்பது முக்கியம்.

*குளிர்ந்தகாற்று, பனிக்காற்று வீசும் இடங்களில் நிற்கவோ, உட்காரவோ கூடாது.

*கொதிக்க வைத்து ஆறவைத்த தண்ணீரையே குடிக்க வேண்டும். பாட்டில் தண்ணீர் மற்றும் கேன் தண்ணீரின் பாதுகாப்புத் தன்மையை நம்ப முடியாது.

*ஃப்ரிட்ஜில் வைத்த பானங்கள் மற்றும் உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

*காரம் மற்றும் புளிப்பு அதிகமுள்ள உணவுகளையும் காற்றடைத்த பானங்களையும் ஓரங்கட்ட வேண்டும்.

*எளிதில் செரிமானமாகும் உணவுகளையே சாப்பிட வேண்டும். நேரத்துக்குச் சாப்பிட வேண்டியது முக்கியம்.

*மதியம் சாப்பிட்டதும் 2 மணி நேரம் ஓய்வெடுத்தால் போதும்.

*பகலில் தூங்குவதைத் தவிர்ப்பதே நல்லது. இரவில் 8 மணிநேரம் உறங்குவது அவசியம்.

*ஒருபக்கமாகப் படுக்கும்போது, வயிற்றுக்கு அடியில் ஒரு தலையணையும், முழங்கால்களுக்கு இடையே ஒரு தலையணையும் வைத்துக்கொண்டு படுப்பது நல்லது.

*இரவில் சாப்பிட்டவுடன் படுக்கக்கூடாது. ஆகவே, இரவில் சீக்கிரம் சாப்பிட்டுவிடுவது நல்லது.

*தொலைக்காட்சியை அதிக நேரம் பார்க்க வேண்டாம். மனதைப் பாதிக்கும் நிகழ்ச்சிகளைக் கண்டிப்பாக பார்க்கக்கூடாது.

*அதிக வெயிலில் அலையக்கூடாது.

*மழை, புயல், இடி, மின்னல் ஏற்படும்போது வெளியில் செல்லக்கூடாது.

*மக்கள் நெருக்கமாக உள்ள சந்தை, திருவிழா, மால்களுக்குச் செல்ல வேண்டாம்.

*கோபமாகப் பேசுவதையும் அதிக கூச்சல் போட்டு பேசுவதையும் தவிர்க்க வேண்டும்.

*இரவு நேரங்களில் அதிக வெளிச்சம் இல்லாத இடங்களுக்குச் செல்லக்கூடாது.

*மலச்சிக்கல் தொல்லை கொடுத்தால் நிறைய தண்ணீர் குடிக்கலாம். நார்ச்சத்துமிகுந்த பழங்களைச் சாப்பிடலாம். இவற்றில் அது சரியாகவில்லை என்றால், மலமிளக்கி மருந்துகளை மருத்துவரிடம் கேட்டுச் சாப்பிடலாம்.

*மலச்சிக்கலைத் தவிர்த்தால்தான் இந்தப் பருவத்தில் மூலநோய் வராமலும் தடுக்க முடியும்.

*வாய் சுத்தமும் பற்களின் ஆரோக்கியமும் முக்கியம். சொத்தைப் பற்கள் இருந்தால், இரண்டாவது டிரைமெஸ்டரில் அகற்றிவிட வேண்டும் அல்லது ‘ரூட்கெனால் சிகிச்சை’ செய்து சரிசெய்து கொள்ள வேண்டும்.

*உடல் எடை மிகவும் அதிகமாகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

*ரத்த அழுத்தம் மற்றும் ரத்தச்சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.Post a Comment

Protected by WP Anti Spam