By 12 May 2018 0 Comments

அடல்ட் காமெடியா? அலறுகிறார் நிக்கி! (சினிமா செய்தி)

தமிழ் சினிமாவின் பக்காவான நாயகியாக செட்டில் ஆகிவிட்டார் நிக்கி கல்ராணி. சினிமா ஸ்ட்ரைக் முடிந்ததையொட்டி மீண்டும் படப்பிடிப்பு, தியேட்டர் விசிட் என்று பரபரப்பாக இருந்தவரிடம் பேட்டிக்காக நேரம் கேட்டோம். கொஞ்சம் பிஸியா இருக்கேனே? என்று இழுத்தவர், வண்ணத்திரைன்னா மறுக்க முடியாதே, உடனே வாங்க என்று அழைத்தார்.

இப்போ பக்கா ரிலீஸ் ஆகியிருக்கு. அனுபவம் எப்படி?

நான் இந்தப் படத்தை கமிட் பண்ண முக்கியமாக இருந்தது படத்துல வரும் ரஜினி ராதா கேரக்டர். ஏன்னா நான் ரஜினி சாரின் தீவிர ரசிகை. நான் மட்டுமில்ல, எங்கம்மா, உட்பட ஃபேமிலியில் உள்ளவர்கள் அனைவருக்கும் ரஜினி சாரை ரொம்பப் பிடிக்கும். எங்கம்மா சென்னையில் இருந்ததால் ரஜினி சார் நடித்த பெரும்பாலான படங்களை பார்த்துள்ளார். அவர் ரஜினியின் நடிப்பைப் பற்றி சொல்லும்போது என்னையும் அறியாமல் ரஜினி சார் மீது குழந்தைப் பருவத்திலிருந்தே கிரேஸ் ஏற்பட்டது.

ரஜினி சார் தமிழ்நாட்டில் எவ்வளவு பெரிய ஆளுமை என்பதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பக்கா படத்தின் தியேட்டர் ரவுண்ட்ஸுக்காக வெளியூர் சென்றபோது ரஜினி ரசிகர்கள் ரஜினி சார் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதை நேரடியாகப் பார்க்க முடிந்தது. ரஜினி ரசிகையாக நடித்ததால் தனிப்பட்ட விதத்தில் ரஜினி ரசிகர்கள் தலையில் வைத்துக் கொண்டாடாத குறையாக என்னையும் பாராட்டித் தள்ளினார்கள். அடுத்து பக்கா படம் இன்னொரு மறக்க முடியாத அனுபவத்தையும் கொடுத்தது. நான் இதுவரை சிட்டி சப்ஜெக்ட்டில்தான் நடித்துள்ளேன்.

முதன் முறையாக முழுப்படமும் வில்லேஜ் பேக்டிராப்பில் இடம் பெற்ற கதையில் இப்போதுதான் நடித்தேன். மலையாளத்தில் சில ரூரல் சப்ஜெக்ட்டில் நடித்திருந்தாலும் தமிழிலும் முதன் முறையாக நடித்தது சிறப்பான அனுபவமாக இருந்தது. கிராமத்து மக்களின் எளிமையான வாழ்க்கை, வெள்ளந்தியாகப் பழகும் தன்மை எனக்குப் பிடித்திருந்தது. உண்மையில் என் சினிமா கேரியரில் பக்கா படத்தின் மூலம் மறக்க முடியாத அனுபத்தை ஏற்படுத்தி கொடுத்த இயக்குநர் எஸ்.எஸ்.சூர்யாவுக்கும் படக்குழுவினரும் என் நன்றி.

டபுள் ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களைத் தேடிப்பிடித்து நடிக்கிற மாதிரி தெரியுதே?

அது எனக்கே ஆச்சர்யமான நிகழ்வுதான். எதுவுமே திட்டமிட்டு நடக்கும் விஷயம் இல்லை. பக்கா படத்துல இரண்டு ஹீரோயின் இருந்தாலும் என் கேரக்டர் அழுத்தமாக இருந்ததாக படம் பார்த்தவர்கள் சொன்னார்கள். என் கேரக்டர் மட்டுமில்ல, படத்துல வரும் எல்லாருடைய கேரக்டரையும் இயக்குநர் அப்படித்தான் உருவாக்கியிருந்தார். டபுள் ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் நடித்தாலும் எனக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களைத்தான் கமிட் பண்ணுகிறேன். இப்போது ஒரே படத்துல மல்டி ஸ்டார்ஸ் இருக்கிற மாதிரியான கதைகள் அதிகமாக வருவதால் டபுள் ஹீரோயின் சப்ஜெக்ட்டில் நடிப்பதை தவிர்க்க முடியாது.

தமிழ் கற்றுக் கொண்டு வருகிறேன் என்று முந்தைய பேட்டியில் சொல்லியிருந்தீர்கள். இப்போது உங்கள் தமிழ் வளர்ச்சி எப்படி உள்ளது?

உங்களிடம் தமிழிலேயே பேசுமளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளேன். நான் நடிக்கும் படங்களில் தமிங்கிலத்தில் டயலாக் பேப்பர் கொடுப்பதால் கதையையும் என்னுடைய கேரக்டரையும் உள்வாங்கி நடிக்க முடிகிறது. சமீப நாட்களில் எல்லாரிடமும் கூச்சமில்லாமல், வார்த்தைகள் தடுமாறாமல் தமிழில் பேச முடிகிறது. அடுத்த கட்டமாக தமிழில் எழுதவும், படிக்கவும் தீவிரமாகப் பயிற்சி எடுத்து வருகிறேன்.

என்னுடைய முதல் படமான யாகாவாராயினும் நா காக்க படத்திலேயே விசேஷ பயிற்சி மூலம் சொந்தக் குரலில் பேசி நடித்தேன். ஆனால் அதன் பிறகு சொந்தக் குரலில் பேசுவதற்கான சந்தர்ப்பங்கள் அமையவில்லை. வருங்காலத்தில் என்னுடைய படங்களில் சொந்தக் குரலில் பேசி நடிக்க முயற்சி எடுப்பேன். சீக்கிரத்துல சொந்தக் குரலில் பேசுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அடுத்து நடிக்கும் படங்கள்?

பிரபுதேவா சாருடன் சார்லி சாப்ளின் -2. பிரபுதேவா மாஸ்டர் கிரேட் லெஜண்ட். நடிகர், இயக்குநர், நடன இயக்குநர், தயாரிப்பாளர் என்று சினிமாவில் பல தளங்களில் இயங்குபவர். இந்தப் படத்தில் அவருடன் நான் நடித்திருக்கிறேன் என்று சொல்வதைவிட மாஸ்டர்ஜியிடம் சினிமாவைக் கற்றுக்கொண்டதுதான் அதிகம். மிகப் பெரிய திறமைசாலியாக இருந்தாலும் எனக்கு எல்லாம் தெரியும் என்ற தலைக்கனம் இல்லாமல் நடந்துகொள்வார். எப்போதும் ஜாலியாக இருப்பார். சிம்பிள் பெர்சன். என்னைப் போன்ற வளர்ந்துவரும் நடிகைகளுக்கு பிரபுதேவா மாஸ்டர் மிகச் சிறந்த வாத்தியார் என்று சொல்லலாம். ஏன்னா, சினிமாவைப் பற்றி அவரிடம் கற்றுக் கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கிறது.

ஜீவாவுடன் சேர்ந்து நடிக்கும் கீ படம் வித்தியாசமாக இருக்கும். ஏற்கனவே ஜீவாவும் நானும் கலகலப்பு-2 படத்தில் இணைந்து நடித்துள்ளோம். ஆக்சுவலா கீதான் முதலில் நான் கமிட் பண்ணிய படம். அதற்குள் கலகலப்பு-2 ரிலீஸாகிவிட்டது. அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்ததால் புரிதல் அதிகமாகி இயல்பாக நடிக்க முடிந்தது. இது தவிர சில படங்கள் இருக்கு. ஸ்டிரைக் நடந்ததால் அந்தப் படங்களைப் பற்றிய அறிவிப்பு வெளியிட காலதாமதமானது.

பெண்களுக்கு முக்கியத்துவம் தருகிற மாதிரி கதைகளில் எப்போது உங்களைப் பார்க்கலாம்?

இப்போது காலம் மாறிவிட்டது. பாலிவுட், கோலிவுட் என்று பரவலாக எல்லா இண்டஸ்ட்ரியிலும் பெண்களை மையப்படுத்திய கதைகள் வருகிறது. நயன்தாராவுக்கு அறம் இருக்கிறது. வித்யாபாலனுக்கு ககானி. டங்கல் படத்துல இரண்டு பெண்கள் அசத்தியிருந்தார்கள். எனக்கும் நயன்தாரா மாதிரி, வித்யா பாலன் மாதிரி அழுத்தமான வேடங்கள் வந்தால் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.

இதுவரை நான் மாடர்ன் ரோல் நடித்திருந்தாலும் க்ளாமர் டால் என்ற பெயர் எனக்கில்லை. கேர்ள் நெக்ஸ்ட் டோர் என்ற இமேஜ்தான் இருக்கிறது. நான் இதுவரை நடித்த படங்களை எடுத்துக் கொண்டாலும் உங்க வீட்டு பெண் மாதிரியான தோற்றத்தில்தான் இருப்பேன். ஒரே ஒரு படத்துல க்ளாமர் டாலாக வந்து காணாமல் போக எனக்கு விருப்பமில்லை.

என்னுடைய ஒவ்வொரு படத்திலும் என் கேரக்டர் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். டார்லிங், மரகத நாணயம், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்ல போலீஸ் கேரக்டர், என்று வித்தியாசமான வேடங்களில் நடித்திருக்கிறேன். பரீட்சார்த்த வேடங்களில் நடிப்பது எனக்குப் பிடிக்கும். அப்படி ஒரு வாய்ப்பு அமையும்போது என்னால் நடிக்க முடியும் என்ற நம்பிக்கையும் திறமையும் என்னிடம் இருக்கிறது.

அடல்ட் காமெடி படங்களில் நடிக்க பல நடிகைகள் தயங்கும்போது நீங்கள் துணிச்சலாக எப்படி நடிக்கிறீர்கள்?

அந்தப் படத்தைப் பற்றி பேச வேண்டாமே. அந்தப் படத்தில் ஒரு கல்லூரி மாணவிக்கான வரைமுறையுடன்தான் என்னுடைய ரோல் இருந்தது. இனிமேல் அடல்ட் காமெடி படம் பண்ண மாட்டேன். ஹர ஹர மகாதேவகி தான் முதலும் கடைசியும்.Post a Comment

Protected by WP Anti Spam