சினிமா வேலை நிறுத்தத்துக்கு பிறகு நட்சத்திர படங்கள் மோதல்!! (சினிமா செய்தி)
தமிழ் திரையுலகில் டிஜிட்டல் முறையில் படங்கள் திரையிடுவதற்கான கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் புதிய படங்கள் ரிலீஸ் நிறுத்திவைக்கப்பட்டதுடன், படப்பிடிப்பு பணிகளும் முற்றிலுமாக தடைபட்டது. பின்னர் அரசு முன்னிலையில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு பிறகு பிரச்னை முடிவுக்கு வந்தது. அதன்பிறகு புதிய படங்கள் வெளிவரத் தொடங்கின. ஏற்கனவே திரைக்கு வருவதற்கு தயாராக இருந்த சுமார் 30க்கும் மேற்பட்ட படங்கள் முடங்கியிருந்ததால் எந்த படத்தை முதலில் ரிலீஸ் செய்வது என்ற கேள்வி எழுந்தது.
தணிக்கை சான்றிதழ் பெற்ற தேதி வாரியாக படங்கள் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி பிரபுதேவா நடித்த மெர்க்குரி, முந்தல் படங்கள் முதலில் ரிலீஸ் ஆகின. அதைத் தொடர்ந்து பக்கா, அலைபேசி, காத்திருப்போர் பட்டியல் என அடுத்தடுத்து படங்கள் வெளிவந்தன. ஆனால் வசூல் திருப்திகரமாக அமையவில்லை. அடல்ட் காமெடி பாணியில் உருவான இருட்டு அறையில் முரட்டு குத்து சமீபத்தில் திரைக்கு வந்தது.
இப்படம் எதிர்பார்த்ததைவிட வசூல் ரீதியாக வெற்றிபெற்றிருக்கிறது. ஆனால் திரையுலகை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலர் இப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இரட்டை அர்த்த வசனங்களுடன் ஆபாச காட்சிகளுடன் உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைத்தது எப்படி? என்று கேள்வியும் எழுப்பி உள்ளனர். இந்நிலையில் வரும் 11ம் தேதி விஷால், சமந்தா நடித்துள்ள இரும்புத்திரை, அரவிந்த்சாமி, அமலாபால் நடித்துள்ள பாஸ்கர் ஒரு ராஸ்கல், அருள்நிதி நடித்துள்ள இரவுக்கு ஆயிரம் கண்கள் ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.
மறைந்த நடிகை சாவித்ரி வாழ்க்கை படமாக உருவாகியிருக்கும் நடிகையர் திலகம் படமும் அன்றைய தினம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேலை நிறுத்தம் முடிந்தபிறகு ஸ்டார் அந்தஸ்துள்ள படங்கள் தற்போதுதான் வெளிவரவுள்ளது. இந்த மாதம் வெளியாவதாக இருந்த ரஜினி நடித்துள்ள காலா, வரும் ஜூன் மாதம் 7ம் தேதி ரிலீஸ் ஆகவிருக்கிறது. கமலின் விஸ்வரூபம் 2 படமும் தணிக்கை சான்றிதழ் பெற்ற நிலையில் அதன் ரிலீஸ் தேதியும் வெகு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.