By 14 May 2018 0 Comments

குழப்பங்களும் கவலைகளும்!!(மகளிர் பக்கம்)

குழப்பங்களும், கவலைகளும் நிறைந்தது கர்ப்ப காலம். எத்தனை மருத்துவ விளக்கங்கள் தரப்பட்டாலும் தீராதவை அவை.யாருக்குமே ஏற்பட்டிருக்காத விசித்திரமான சில பிரச்னைகளையும், மாற்றங்களையும் சந்திக்கிற பெண்களுக்கு இந்தக் கவலைகள் இன்னும் அதிகம்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் சந்திக்கிற அத்தகைய வித்தியாசமான மாற்றங்களையும், அவற்றுக்கான தீர்வுகளையும் விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.

இம்சை தரும் வாயுத் தொல்லை வழக்கமான நாட்களைவிட கர்ப்ப காலத்தின் போது அதிகளவில் வாயு வெளியேறுவதை பெண்கள் உணர்வார்கள். கர்ப்ப காலத்தில் உச்சி முதல் பாதம் வரை உடலின் அனைத்து பாகங்களுமே ஹார்மோன் மாறுதலுக்குள்ளாகின்றன.

இரைப்பை மற்றும் குடல் பகுதியும் அதற்கு விதிவிலக்கல்ல. அதன் விளைவுதான் இந்த அதீத வாயு வெளியேற்றம். தர்மசங்கடத்துக்குள்ளாகி, அந்த வாயுவை அடக்க நினைக்க வேண்டாம். கர்ப்பத்தின் போது தசைகளைக் கட்டுப்படுத்தும் திறன் உங்களுக்குக் குறைவாக இருக்கும்.

* சரி… இதற்கு என்னதான் தீர்வு?

உடற்பயிற்சிகள் உதவும். மிதமான உடற்பயிற்சிகள், இரைப்பை மற்றும் குடல் பாதையின் இயக்கத்தை சீராக்கி, உணவு செரிமானத்தை சுலபமாக்கும். வாயு வெளியேற்றத்துக்கு பயந்துகொண்டு கடுமையான பயிற்சிகளை முயற்சி செய்ய வேண்டாம். கர்ப்பத்தின் பருவத்தைப் பொறுத்து மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மிதமான பயிற்சிகளை மேற்கொள்வதே பாதுகாப்பானது.

சிலவகை உணவுகள் வாயுத் தொல்லையை அதிகப்படுத்துபவை என்பதால் அவற்றைத் தவிர்ப்பதும் இந்தப் பிரச்னைக்கான தீர்வாக அமையும். உதாரணத்துக்கு கார்பனேட்டட் பானங்கள், பீன்ஸ், ப்ரோக்கோலி, காலிஃபிளவர் போன்றவை.

அளவுக்கதிகமான பால் பொருட்களும் வாயுத் தொல்லையை அதிகப்படுத்தலாம். கர்ப்ப காலத்தில் நிறைய பால் குடிப்பது அவசியம் என்று அடிக்கடி பால் குடிப்பார்கள். கால்சியம் தேவைக்கு பால் குடிப்பவர்கள், பாலைவிடவும் அதிக கால்சியம் உள்ள உணவுகளைத் தெரிந்துகொண்டு எடுத்துக் கொள்ளலாம்.

* சிறுநீரை அடக்க முடியாமை கர்ப்ப காலத்தில் இருமும்போதும், தும்மும்போதும்கூட சிறுநீர் கசிவதை பலர் உணர்ந்திருப்பார்கள். பலர் முன்னிலையில் இப்படி நடக்கும்போது அது அவர்களை அதிகபட்ச தர்மசங்கடத்தில் தள்ளும்.

ஒரு சிலருக்கு ஒன்றிரண்டு சொட்டு சிறுநீர்தான் வெளியேறும் என்றாலும் அதுவுமே அவர்களை மன அழுத்தத்தில் தள்ளும்.வேலைக்குச் செல்கிற பெண்களாக இருந்தால் இது இன்னும் சங்கடமானது. கர்ப்பத்தின் கடைசி மாதங்களில் உள்ளாடைக்குள் அணிகிற பேன்ட்டி லைனர் உபயோகிப்பது அவர்களுக்குத் தற்காலிகத் தீர்வாக இருக்கும்.

கர்ப்பத்தின் எடை அதிகரிப்பதால், அதன் அழுத்தம் தாங்காமல் ஏற்படுகிற இந்தப் பிரச்னை தற்காலிகமானதுதான் என்பதால் பயம் வேண்டாம்.
அடிக்கடி சிறுநீர் கழிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். சிறுநீர்ப்பை முழுவது மாக நிரம்பும் வரை காத்திருக்காமல் அவ்வப்போது சிறுநீர் கழிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். சிறுநீர் கசிவுக்கு பயந்துகொண்டு தண்ணீர் குடிப்பதைத் தவிர்ப்பதும் கூடாது.

* தேவையற்ற ரோம வளர்ச்சி கர்ப்ப காலத்தில் ஹார்மோன்கள் செய்யும் மாற்றங்களில் ஒன்று உடலின் பல பாகங்களிலும் தேவையற்ற ரோம வளர்ச்சி. இது முகம், மார்பகங்கள் போன்ற பகுதிகளில் வரும்போது தர்மசங்கடத்தை ஏற்படுத்தும். இதுவும் தற்காலிகமான பிரச்னைதான்.

ஹார்மோன்களின் சீரற்ற தன்மை சரியானதும் இந்த ரோம வளர்ச்சியும் சரியாகிவிடும். ரோமங்களை நீக்கும் முயற்சியில் கெமிக்கல் சிகிச்சைகளை மேற்கொள்வது ஆபத்தானது. முகத்திலுள்ள முடிகளை நீக்க திரெடிங் செய்து கொள்ளலாம். அதுவும் அதிக அழுத்தம் கொடுக்கப்படாமல் மென்மையாக செய்யப்பட வேண்டும்.

* உடல் வாடை கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு வாடைகளை உணர்வதில் வித்தியாசமான நிலை ஏற்படும். வழக்கமாக நுகரும் வாசனைகள் கூட இந்த நாட்களில் பிடிக்காமல் போகும். கடல் உணவுகள், அசைவ உணவுகளின் வாடை பிடிக்காமல் குமட்டும். சில பெண்களுக்கு குறிப்பிட்ட சில வாடைகளின் மீது ஈர்ப்பு ஏற்படும்.

கர்ப்பத்தின் கடைசி மாதங்களை நெருங்கும்போது சிலருக்கு அந்தரங்க உறுப்பிலிருந்து வித்தியாசமான வாடை கிளம்பும். அது அந்த உறுப்பில் சேரும் சளிபோன்ற திரவம் ஏற்படுத்துவதாக இருக்கும். இப்படி வினோதமான வாடையை உணரும் பலரும் வெளியிடங்களுக்குச் செல்லவே கூச்சப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் உண்மை என்ன தெரியுமா? இந்த வாடை அவர்களுக்கு மட்டுமே உணர முடியும். வெளியாட்களுக்குத் தெரிகிற அளவுக்குக் கடுமையாக இருக்காது. எனவே பயம் வேண்டாம். பிரசவத்துக்குப் பிறகு சரியாகிவிடும்.அதே நேரம் கடுமையான வாடையாக இருந்து, அடுத்தவரை முகம் சுளிக்க வைக்கிற அளவுக்குத் தீவிரமானால் மருத்துவப் பரிசோதனை முக்கியம். ஏதேனும் தொற்றின் காரணமாக ஏற்பட்டதா என்பது சோதிக்கப்பட வேண்டும்.

* மலச்சிக்கல் பெரும்பாலான கர்ப்பிணிகள் சந்திக்கும் பிரச்னை இது. கடுமையான மலச்சிக்கலின் விளைவால் சிலருக்கு ஆசன வாயில் ரத்தக் கசிவுகூட ஏற்படும். இதை எப்படி வெளியே சொல்வது எனத் தயங்குவார்கள்.

நிறைய தண்ணீர் குடிப்பது, பழங்களும், பழச்சாறுகளும் எடுத்துக்கொள்வது, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது போன்றவையே இதற்கான தீர்வு. மலச்சிக்கல் வராமல் காப்பதன் மூலம் ரத்தக் கசிவையும் தடுக்கலாம். ஆசனவாய் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மருத்துவரிடம் பேசி மருந்துகள் உபயோகிக்கலாம்.

* பருக்கள் பருவ வயதில்கூட எட்டிப்பார்க்காத பருக்கள், கர்ப்ப காலத்தில் சிலருக்கு பயமுறுத்தும்.அது வந்தவேகத்தில் தானாகச் சரியாகிவிடும். சரும அழகைக் காப்பதாக நினைத்துக்கொண்டு கன்னாபின்னா கிரீம்களை பயன்படுத்துவதோ, பருக்களுக்கான பார்லர் சிகிச்சைகளை மேற்கொள்வதோ கூடாது. பருக்களைக் கட்டுப்படுத்தும் ஃபேஸ் வாஷ் போன்றவற்றை உபயோகிக்கலாம். ஆயின்மென்ட்டுகள் தவிர்க்கப்பட வேண்டும்.

* ஈர்ப்பு குறைதல்

கர்ப்பகாலத்தில் உடலளவில் ஏற்படுகிற மாற்றங்கள் அந்தப் பெண்ணுக்கு ஒருவித தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தக்கூடும். எடை அதிகரிப்பது, சருமத்திலும், கூந்தலிலும் திடீர் மாற்றங்கள், உடல் வாடை என பல காரணங்களால் அவர்கள் தன் துணையிடமிருந்து விலகி இருக்க நினைப்பார்கள். இது தேவையற்ற பயம்.

பிரச்னையில்லாத கர்ப்பம் சுமப்பவர்கள் என்றால் மருத்துவரிடம் பேசி, பாதுகாப்பான தாம்பத்திய உறவில் ஈடுபடலாம். கர்ப்பிணிக்கு அசௌகர்யத்தை ஏற்படுத்தாத வகையிலும், கருவிலுள்ள குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலும் அந்த உறவு பாதுகாப்பானதாக இருக்க வேண்டியது அவசியம் என்பதை மட்டும் கவனத்தில் கொண்டால் போதும்.Post a Comment

Protected by WP Anti Spam