கம்பியூட்டர் ஜோதிடமும் மைத்திரியின் விஞ்ஞானமும்!!(கட்டுரை)

Read Time:19 Minute, 42 Second

வடிவேலுவை ஒரு படத்தில் ‘செத்துச் செத்து விளையாடுவதற்கு’ அழைப்பார் முத்துக்காளை. நல்லாட்சி அரசாங்கமானது, ‘அமைச்சரவையை மாற்றி – மாற்றி விளையாடிக் கொண்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுவரையில் நான்கு தடவை அமைச்சரவை மாற்றங்கள் இடம்பெற்றுள்ள போதிலும், மக்களுக்கு அவற்றினால் என்ன பயன் ஏற்பட்டுள்ளது என்கிற கேள்வி முக்கியமானதாகும்.

அரசாங்கத்தினுள்ளும், அரசாங்கத்தைக் கொண்டு செல்கின்ற கட்சிகளுக்குள்ளும் ஏற்பட்டுள்ள சரிவுகளையும் முறுகல்களையும் சரி செய்வதற்காகவே, அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனும் பேச்சுகள், கவனத்துக்குரியவையாகும். ஆகக்குறைந்தது சின்னதாக ஒரு சுவாரசியத்தையாயினும் இந்த அமைச்சரவை மாற்றமானது மக்களுக்குள் ஏற்படுத்தி விட்டுச் செல்லவில்லை.

நடந்து முடிந்த அமைச்சரவை மாற்றமானது, விஞ்ஞான ரீதியிலானது என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார். அவதானித்தல், தரவுகளைச் சேகரித்தல், அவற்றை ஒழுங்குபடுத்துதல், வகைப்படுத்தி பகுப்பாய்வு செய்தல் மற்றும் இறுதி முடிவுக்கு வருதல் போன்ற செயற்பாடுகள் – விஞ்ஞான முறைமையின் அடிப்படைகளாகும். ஆனால், நடந்து முடிந்த அமைச்சரவை மாற்றத்தில் மேற்படி செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளனவா என்கிற கேள்வி முக்கியமானதாகும். மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுடன், விளையாட்டுத்துறை அமைச்​ைசச் சேர்த்து வழங்கியதில், என்ன வகையான வகைப்படுத்தல் உள்ளது என்று விளங்கவேயில்லை.

நடந்து முடிந்துள்ள அமைச்சரவை மாற்றத்தில் 18 பேர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாகவும் 08 பேர் இராஜாங்க அமைச்சர்களாகவும் 10 பேர் பிரதியமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், சிலருக்கு மட்டும் சந்தோசம் ஏற்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. மற்றொரு தரப்பாருக்கு, பெருத்த அதிருப்தியும், இன்னும் சிலக்கு ஏமாற்றமும் ஏற்பட்டுள்ளமை​ைய, செய்திகள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

உதாரணமாக, விஜேதாச ராஜபக்ஷவுக்கு அமைச்சரவை மாற்றம் அதிர்ஷ்டமாக அமைந்துள்ளது. நீதியமைச்சராக இருந்து – அதனை இராஜினாமா செய்த விஜேதாச ராஜபக்ஷவுக்கு, உயர்கல்வி மற்றும் கலாசார அமைச்சு வழங்கப்பட்டுள்ளமையானது, அவரளவில் பெருத்த அதிர்ஷ்டமாகும். அதேவேளை அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்த மற்றொருவரான ரவி கருணாநாயக்கவுக்கு இம்முறை அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படும் என்று பரவலாகப் பேசப்பட்டபோதும் அது நடக்கவில்லை.

விஜேதாச ராஜபக்ஷவும் ரவி கருணாநாயக்கவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களாவர். இருவரும் அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்தவர்கள். ஆட்சியாளர்கள் வழங்கிய அழுத்தத்தின் காரணமாகவே, இருவரும் தமது பதவிகளைத் துறந்தனர். ஆயினும், இவர்கள் இராஜினாமாச் செய்தமைக்கான காரணங்கள் வெவ்வேறானவையாகும். அரசாங்கத்தை, உள்ளிருந்து கொண்டே விமர்சித்தார் எனும் குற்றச்சாட்டின் அடிப்படையில், விஜேதாச ராஜபக்ஷ இராஜினாமா செய்திருந்தார். ஆனால், பிணைமுறி மோசடியுடன் தொடர்புபட்டார் எனும் பாரிய குற்றச்சாட்டின் பின்னணியில் ரவி கருணாநாயக்கவின் இராஜினாமா அமைந்திருந்தது.

இருந்தபோதும், ரவி கருணாநாயக்க மீது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருக்கும் அன்பு, இன்னும் மாறாமலேயே உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். ஐக்கிய தேசியக் கட்சியினுள்ளே அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களின்போது, பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் ரவி கருணாநாயக்கவுக்கு உப தலைவர் பதவி வழங்கப்பட்டமையின் மூலம் இதனைப் புரிந்து கொள்ள முடியும். கட்சித் தலைவர் ரணிலின் விருப்பமின்றி, ரவிக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டிருக்காது எனும் உண்மை மறைக்க முடியாதது.

எனவே, ரவி கருணாநாயக்கவுக்கு அமைச்சுப் பதவியொன்​ைறப் பெற்றுக் கொடுப்பதிலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரச்சினைகள் இருந்திருக்காது. அவ்வாறாயின் ஜனாதிபதியின் விருப்பமின்மையே, அதற்குத் தடையாக இருந்திருக்கும் என யோசிப்பதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளன.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும் இந்த அமைச்சரவை மாற்றம் ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது. அவரின் பேச்சு மற்றும் அறிக்கைகள் மூலம் அதனைப் புரிந்துகொள்ள முடிகிறது. சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக சரத் பொன்சேகா நியமிக்கப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு அரசியலரங்கில் பரவலாகக் காணப்பட்ட போதும், அது நடக்கவில்லை. ‘சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சுப் பதவியை எனக்கு வழங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிபாரிசு செய்திருந்த போதும், ஜனாதிபதியின் உடன்பாடு அதற்கு இருக்கவில்லை’ என்று, சரத் பொன்சேகாவே கூறியிருக்கின்றார். இராணுவத் தளபதியாக இருந்த ஒருவருக்கு நிலையான அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள், பிரதேச அபிவிருத்தி அமைச்சினை வழங்கியதில் என்ன வகையான விஞ்ஞானம் உள்ளது என்பதும் புதிராகவே உள்ளது.

இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர் பதவி மாற்றங்களின்போது, முஸ்லிம்கள் தரப்பில் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், எம்.எஸ்.எஸ். அமீரலி மற்றும் அலிசாஹிர் மௌலானா ஆகியோருக்கு அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக ஹிஸ்புல்லாஹ்வும் மீன்பிடி, நீரியல் வளம் மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சராக அமீரலியும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருக்கும் முன்னர் வழங்கப்பட்ட அமைச்சுகளை விடவும் தற்போது கிடைத்துள்ள அமைச்சுகள் ‘பெறுமதி’யானவையாகும்.

இதேவேளை, மு.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானாவுக்கு இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது, பிரதியமைச்சர் பதவியொன்று வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பதவியை மு.கா. தலைவர் அலிசாஹிர் மௌலானாவுக்கு ஏன் பெற்றுக் கொடுத்தார் என்பதற்கு, ஒரு பின்னணிக் கதை உள்ளது.

மு.காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான ஹாபிஸ் நசீருக்கும் அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானாவுக்கும் இடையில் பாரிய முரண்பாடுகள் இருந்து வருகின்றமை அறிந்ததே. ஹாபிஸ் நசீரும், அலிசாஹிர் மௌலானாவும் ஏறாவூரைச் சேர்ந்தவர்களாவர்.

இந்த இருவருக்குள்ளும் இருக்கின்ற முரண்பாடுகள் காரணமாக, நடைபெற்று முடிந்த ஏறாவூர் நகர சபைக்கான தேர்தலில் இரண்டு சின்னங்களில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட நேர்ந்தது. ஹாபிஸ் நசீரின் அணி மு.கா. சார்பாக யானைச் சின்னத்திலும், அலிசாஹிர் மௌலானா அணியினர் மு.கா. சார்பாக தராசு சின்னத்திலும் களமிறங்கினர். இறுதியாக ஹாபிஸ் நசீருடைய அணியை விடவும் அலிசாஹிர் மௌலானாவின் அணி அதிக ஆசனங்களைக் கைப்பற்றியது.

இருந்தபோதும், ஏறாவூர் நகரசபைக்கான தலைவர் தெரிவின்போது இரண்டு அணிகளையும் ஒற்றுமைப்படுத்திய மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம்; ஹாபிஸ் நசீருடைய அணியினரில் ஒருவரை தலைவராக்கும் சூழ்நிலை​ைய ஏற்படுத்தினார்.

இதனால், அலிசாஹிர் மௌலானா அணி கடும் அதிருப்திக்குள்ளானது. இதனைச் சரி செய்வதற்காகவே, அமைச்சரவை மாற்றத்தின்போது அலிசாஹிர் மௌலானாவுக்கு பிரதியமைச்சர் பதவியொன்​ைற மு.கா. தலைவர் ஹக்கீம் பெற்றுக் கொடுத்தார் என்கிற பேச்சுக்கள் உள்ளன.

இதேவேளை, மு.காங்கிரஸ் சார்பாக விளையாட்டுத்துறை பிரதியமைச்சராகப் பதவி வகித்த எச்.எம்.எம். ஹரீஸுக்கும், அமைச்சரவை மாற்றம் திருப்தியாக அமையவில்லை என்பது வெளிப்படையானது. அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சின் பிரதியமைச்சராக ஹரீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டுத்துறைப் பிரதியமைச்சராக இருந்தபோது தனது மாவட்டத்திலுள்ள பொது விளையாட்டு மைதானங்களைப் புனரமைக்கக் கிடைத்த சந்தர்ப்பமும் பிரதியமைச்சர் ஹரீஸுக்கு இப்போது இல்லாமல் போயுள்ளது. அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சானது, நல்லாட்சி அரசாங்கத்தால் 2015ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகும்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனும், மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீமுடனும் மு.காங்கிரஸின் பிரதித் தலைவர்களில் ஒருவராகப் பதவி வகிக்கும் பிரதியமைச்சர் ஹரீஸ் அண்மைக்காலமாக முரண்பட்டு வந்தார். அம்பாறை மற்றும் கண்டி மாவட்டங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாதத் தாக்குதல்களை அடுத்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கிய ஹரீஸ், நாடாளுமன்றத்திலும் பிரதமரைக் குற்றம்சாட்டி உரையாற்றியிருந்தார்.

இதனையடுத்து, முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டமொன்றில், ஹரீஸுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென்கிற பிரேரணையொன்றும் கொண்டுவரப்பட்டது. மு.கா. தலைவரின் சம்மதத்துடனேயே இந்த ஒழுக்காற்றுப் பிரேரணை ஹரீஸுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டது எனும் பேச்சுகள், முஸ்லிம் காங்கிரஸுக்குள்ளேயே உள்ளது. இருந்தபோதும், உயர்பீடத்தில் இதனைப் பலர் எதிர்த்தமையினால், ஹரீஸுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை எனும் பேச்சு அமுங்கிப் போனது.

ஆயினும், பிரதமர் மற்றும் மு.கா தலைவர் ஆகியோரின் அதிருப்தியைச் சம்பாதித்துக் கொண்டமையின் பிரதிபலனாகவே, தற்போது ‘தரம்’ குறைந்த பிரதியமைச்சுப் பதவி ஹரீஸுக்குக் வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசியலரங்கில் பேசப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

ஆக, சிலரைத் திருப்திப்படுத்துவதற்காகவும் வேறு சிலருக்குப் பாடம் புகட்டுவதற்குமாகவே இந்த அமைச்சரவை மாற்றம் இடம்பெற்றிருக்கிறது. இதனால், மக்களுக்கு எந்தவிதப் பயனும் இல்லை.

இன்னொருபுறம், முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் றிசாட் பதியுதீன் ஆகியோரின் அமைச்சுப் பதவிகளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் கவனத்துக்குரியது.

நடந்து முடிந்த அமைச்சரவை மாற்றத்தின்போது ரவூப் ஹக்கீமுக்கு இப்போதிருக்கும் அமைச்சுப் பதவியை விடவும் ‘பெறுமதி’ குறைந்த அமைச்சுப் பதவியொன்று வழங்கப்பட வேண்டுமென, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்களில் கணிசமானோர் விரும்பினர்.

அதேபோன்று, ரிஷாட் பதியுதீனிடமுள்ள அமைச்சினைப் பிடுங்கியெடுத்து விட்டு, ‘ஒன்றுக்கும் உதவாக’ ஓர் அமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டும் என்று மு.காங்கிரஸ்காரர்களில் ஒரு தொகையானோரும் ஆசைப்பட்டனர். சமூக வலைத்தளங்களில் இதனை அவர்கள் எழுதியும் வந்தனர்.

இருந்தபோதும் இரண்டு தரப்பாரின் ஆசைகளும் நிறைவேறவில்லை என்பது இரண்டு தரப்பாருக்கும் ஏமாற்றத்தையளித்திருக்கும்.

எவ்வாறாயினும், இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது, எண்ணிக்கையின் அடிப்படையில் மு.காங்கிரஸுக்கு பிரதியமைச்சர் பதவியொன்று அதிகரித்திருக்கிறது. இந்த அதிகரிப்பானது,
மட்டக்களப்பு மாவட்டத்திலும் முஸ்லிம் அமைச்சர்களின் எண்ணிக்கைைய உயர்த்தியுள்ளது. இராஜாங்க அமைச்சராக ஹிஸ்புல்லாஹ்வும் பிரதியமைச்சராக அமீரலியும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து வந்த நிலையில், தற்போது அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அலிசாஹிர் மௌலானவுக்கும் பிரதியமைச்சுப் பதவி கிடைத்திருக்கிறது.

தேசிய சகவாழ்வு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சர் பதவி – அலிசாஹிர் மௌலானாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் முழு அமைச்சராக மனோ கணேசன் இருக்கின்றார். உண்மையில் பெயரளவிலான ஓர் அமைச்சாகவே இதனைப் பலரும் பார்க்கின்றனர். தேசிய சக வாழ்வுக்குக் குந்தகம் ஏற்பட்ட எந்தவொரு தருணத்திலும் இந்த அமைச்சு குறிப்பிடத்தக்க எந்தவொரு கருமத்​ைதயும் ஆற்றவில்லை.

உதாரணமாக, திருகோணமலை சண்முகா வித்தியாலயத்தில் ஹபாயா அணிவது தொடர்பில் எழுந்த முரண்பாடானது, இனங்களுக்கிடையிலான சக வாழ்வுக்குக் குந்தகம் ஏற்படுத்தும் நிலைைய உருவாக்கியது. ஆனால், தேசிய சகவாழ்வு அமைச்சர் எனும் வகையில் இது தொடர்பில் மனோ கணேசன் எதுவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. ‘ரவூப் ஹக்கீமும் சம்பந்தனும் இணைந்து அந்தப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளட்டும்’ என்று கூறிவிட்டு மனோ கணேசன் தப்பித்துக் கொண்டமையும் நினைவு கொள்ளத்தக்கது.

ஆக, இவ்வாறானதோர் அமைச்சின் பிரதியமைச்சராக இருந்து கொண்டு, எவற்றையெல்லாம் அலிசாஹிர் மௌலானா சாதிக்கலாம் என்பது கேள்விக்குரியதாகும். முழு அமைச்சருக்கே ஒன்றும் முடியாத போது, பிரதியமைச்சரால் எதைத்தான் செய்ய முடியும் என்கிற வினா தவிர்க்க முடியாதது.

கூட்டிக் கழித்துப் பார்க்கையில், கலைந்து போய்க் கிடந்த தனது விளையாட்டுப் பொருட்களை, ஒரு குழந்தை – தனது அந்தக் கணத்து விருப்பத்துக்கேற்ப ஒழுங்குபடுத்தியமைக்கு ஒப்பானதொரு செயற்பாடாகவே, நடந்து முடிந்த அமைச்சரவை மாற்றத்தைப் பார்க்க முடிகிறது. அதைத் தவிர்த்து ஜனாதிபதி கூறிய – விஞ்ஞானபூர்வ மாற்றங்கள் எவற்ைறயும் இந்த அமைச்சரவை நியமனங்களில் காண முடியவில்லை.

ஒரு காலத்தில் கைரேகைகளைப் பார்த்தும், ஏடு புரட்டியும் சாத்திரம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள், தற்காலத்தில் கம்பியூட்டர் மூலம் ‘விஞ்ஞானபூர்வமாக’ சாத்திரம் பார்ப்பது போல, நடந்து முடிந்த அமைச்சரவை மாற்றத்தில் ஏதாவது விஞ்ஞானபூர்வமான செயற்பாட்​ைட சிலவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்திருக்கக் கூடும். அறிந்தவர்கள் அது பற்றி எழுதலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாலின நோய்கள் தெரியுமா?(அவ்வப்போது கிளாமர்)
Next post அண்ணன் என நினைச்சி நம்பி போன அசிங்கமா தொட்டான்… வீடியோ !!