பிரித்தானிய றகர் அணியின் இரண்டாவது வீரரும் உயிரிழப்பு!!
நட்புறவு றகர் போட்டியில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்திருந்த பிரித்தானிய நாட்டு றகர் அணி ஒன்றின் வீரர் ஒருவர் நேற்று உயிரிழந்திருந்த நிலையில், பாதிக்கப்பட்டிருந்த இரண்டாவது வீரர் இன்று (16) உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இதனைக் கூறியுள்ளார்.
நட்புறவு றகர் போட்டியொன்றில் விளையாடுவதற்காக கடந்த 10 ஆம் திகதி இலங்கை வந்திருந்த பிரித்தானிய நாட்டு றகர் அணி கடந்த 12 ஆம் திகதி கொழும்பில் உள்ள விளையாட்டறங்கு ஒன்றில் விளையாடியுள்ளது.
போட்டி முடிவடைந்த பின்னர் இரவு விருந்தை முடித்துவிட்டு அவர்கள் தங்கியிருந்த விடுதிக்கு சென்றுள்ளனர்.
பின்னர் அவர்கள் மீண்டும் கொள்ளுபிட்டி பிரதேசத்தில் உள்ள களியாட்ட விடுதியொன்றிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
களியாட்ட விடுதியில் இருந்து அதிகாலை 4 மணியளவில் அவர்கள் மீண்டும் விடுதிக்கு திரும்பியுள்ள நிலையில், குறித்த வீரர்களில் இருவருக்கு மூச்சுத்திணரல் ஏற்பட்டு நேற்று முன்தினம் (13) பிற்பகல் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த இருவரில் ஒருவர் நேற்று உயிரிழந்திருந்த நிலையில் இன்று இரண்டாவது வீரரும் உயிரிழந்துள்ளார்.