By 21 May 2018 0 Comments

ஆரோக்கியம் விளையாடும் வீடு!(மருத்துவம்)

‘‘இந்தியர்களின் அன்றாட வாழ்வே பெரும்பாடு!

இதில் எதிர்பாராத உடல்நல பாதிப்பு, மருத்துவ சிகிச்சை என்ற சூழல் ஏற்பட்டுவிட்டால் கடன் வாங்கவோ அல்லது சொத்துக்களை விற்கவோ வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவிடுகிறார்கள். சமீபத்திய நாடாளுமன்ற பட்ஜெட் தாக்கலின்போது மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் இந்த பிரச்னையை சுட்டிக் காட்டியிருந்தார்.

எனவே, ஒரு தனிமனிதன் இன்றைய சூழலில் ஆரோக்கியமாக இருப்பதுடன் தன்னுடைய குடும்பத்தின் ஆரோக்கியத்தின் மீதும் அதிக அக்கறை காட்ட வேண்டியது அவசியமாகிறது. இது பல வழிகளிலும் ஒரு தனிமனிதருக்கும், அந்த குடும்பத்துக்கும் பெரிய உதவியாக இருக்கும்’’ என்கிறார் மூத்த பொது நல மருத்துவரான தேவராஜன்.குடும்ப ஆரோக்கியத்தின் மீது அக்கறை காட்ட சில முக்கியமான எளிய வழிமுறைகளையும் கூறுகிறார்.

குடும்பம்தான் எல்லாம்…அழகான ஆரோக்கியமான குடும்பங்களிலிருந்துதான் சிறந்த மனிதர்கள் உருவாகிறார்கள். இவர்கள்தான் சிறந்த சமூகத்தை படைப்பார்கள். நல்ல சமூகம், நல்ல நாட்டுக்கு அடிப்படை. இதற்கு, குடும்ப உறவுகளை ஆரோக்கியமாகவும், நெருக்கமாகவும் வைத்துக்கொள்வது மிகவும் முக்கியம். இது நம்மை பாதுகாப்பானவர்களாகவும் உற்சாகமானவர்களாகவும் வைத்திருப்பதோடு, உடல், மனம் இரண்டிலும் ஆரோக்கியமான எதிர்கால சமுதாயத்தை உருவாக்க உதவும்.

ஃபிட்னஸ் ஆர்வத்தை அதிகரிக்கும் வழிகுடும்பத் தலைவன், தலைவி இருவரும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். குழந்தைகள்
சொல்லிக் கொடுக்காமலே நீங்கள் கடைப்பிடிக்கும் பழக்க, வழக்கங்களைத்தான் பின்பற்றுவார்கள்.தினமும் அதிகாலையில் எழும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அதுதான் நாள் முழுவதும் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க உதவும்.

முக்கியமாக, ஆரோக்கியத்தின் அடிப்படையே அதிகாலையில் எழுவதுதான். உங்களைப் பார்த்து குழந்தைகளும் அதிகாலையில் எழுந்து படித்தால், பாடங்கள் நன்கு மனதில் பதியும். அவர்களின் நினைவாற்றல் மற்றும் சிந்தனைத்திறன் மேம்படும்.தினமும் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, யோகா, மூச்சுப்பயிற்சி, தியானம் போன்ற உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பயிற்சிகளை குழந்தைகளோடு சேர்ந்து செய்யலாம்.

இது சிறுவயதிலிருந்தே உடற்பயிற்சியின் அவசியத்தை உணரச் செய்யும். வயதானவர்களும் சிறு நடைப் பயிற்சியை மேற்கொள்ளலாம். குடும்பத்தில் இருக்கும் ஒருவரின் ஃபிட்னஸ் ஆர்வத்தைப் பார்த்து மற்றவரும் கற்றுக் கொள்வார். இயல்பாகவே அந்த ஆர்வம் தொற்றிக் கொள்ளும்.
உணவுப்பழக்கம் நலமாக…

தினமும், ஒருவேளை உணவையாவது குடும்பத்தில் உள்ள அனைவருடனும் சேர்ந்து உண்ணுங்கள். ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடும்போதுதான், ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பங்கள், வெறுப்புகள், தேர்வுகளை நம்மால் நன்கு புரிந்துகொள்ள முடியும். சாப்பிடுவதற்கு முன்பு எப்படி சுத்தமாகக் கை கழுவ வேண்டும் என்பதையும், உணவை நன்கு மென்று சாப்பிடுவது எப்படி என்பதையும் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள்.சேர்ந்து சாப்பிடுவதன் மூலம் ஓட்டலில் சாப்பிடும் பழக்கம் குறையும். துரித உணவுகளையோ மற்ற ஆரோக்கியக் கேடான உணவுகளையோ சாப்பிடாமலும் தடுக்க முடியும். இது மது மற்றும் புகைப்பழக்கம் ஏற்படாமல் தடுக்கவும் ஒரு வழியில் வகை செய்யும்.

குழந்தைகள் நலன்

குழந்தைகளுக்கு அந்தந்த வயதில் ஏற்படும் உடல், மனம் மற்றும் சமூகம் சார்ந்த விஷயங்களை ஆராய்ந்து அதற்கேற்ப
பக்குவமாக கையாள்வது முக்கியம். பொய் சொல்லும்போதும், அளவுக்கு அதிகமாகக் குறும்புத்தனம் செய்யும்போதும் தவறை சுட்டிக்காட்ட வேண்டும். செய்த தவறை திரும்பத் திரும்பச் செய்யும் குழந்தைகளிடம் கண்டிப்பைப் படிப்படியாக அதிகரிப்பதில் தவறு இல்லை.
சாப்பிட மறுக்கும் குழந்தைகளைத் துரத்தி உண்ண வைப்பது மிகவும் தவறு. ஒவ்வொரு குழந்தைக்கும் உணவுத் தேவை மாறுபடுகிறது. எனவே, மற்ற குழந்தைகளோடு ஒப்பிட அதிகமாகத் தருவதோ குறைப்பதோ கூடாது.

தினமும் இரண்டு முறை பல் துலக்குவது, தும்மல் வந்தால் கைக்குட்டையைக்கொண்டு மூக்கை மூடுவது போன்ற சுகாதார பழக்க வழக்கங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு அந்தந்த காலக்கட்டங்களில் தடுப்பூசி, டெட்டனஸ் ஊசி போன்றவற்றைத் தவறாமல் போட்டுவிடவேண்டும்.

குழந்தைகளுக்குத் தேவையான இருமல் சிரப், காய்ச்சல் மாத்திரைகளை எப்போதும் கையிருப்பில் வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகள் விஷயத்தில் மருத்துவர் அறிவுரை அல்லாத சுய மருத்துவத்தை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். சிறு குழந்தைகள் உள்ள வீட்டில் கிருமிநாசினிகள், மருந்து மாத்திரைகள், கூரிய ஆயுதங்கள் போன்றவற்றை அவர்கள் கைக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும்.

முதியோர் பாதுகாப்பு

முதியவர்கள் அனுபவப் பெட்டகங்கள். அவர்களை போற்றிப் பாதுகாப்பது நம் வாழ்வை அர்த்தப்படுத்துவதோடு நம்மை பக்குவமானவர்களாகவும் மாற்றும். காலையில் வெளியே செல்லும்போதும், மாலையில் வந்ததும் அவர்களை விசாரிப்பதால் அவர்களை சந்தோஷமாகவும் பாதுகாப்பாகவும் உணர வைக்கும்.முதியவர்கள் நண்பர்களுடனும், உறவினர்களுடனும் தொடர்பு கொள்ளத் தேவையான வசதிகளை செய்துத் தர வேண்டும். தொடர்பில் இருப்பதால் தனிமையில் இருக்கிறோம் என்கிற மன அழுத்தம் குறையும். முதுமையினால் அவர்களுக்கு ஏற்படும் இயலாமை, மறதி போன்றவற்றைக் குத்திக்காட்டியோ, கிண்டலாகவோ பேசக்கூடாது. இதனால் அவர்கள் மனம் புண்படும்.

குழந்தைகளுக்கும் இதைச் சொல்லித் தர வேண்டும்.பெரும்பாலும் சர்க்கரை நோய், இதய நோய், மூட்டுவலி போன்ற நோய் உள்ள முதியவர்களுக்குத் தேவையான மருந்துகளை தீர்வதற்குக் கொஞ்சம் முன்பாகவே வாங்கி வைத்துவிடுங்கள். முதியோருக்கு ஃப்ளூ, டெட்டனஸ் உள்ளிட்ட நோய்த்தொற்றுத் தடுப்பூசிகளையும், நிமோனியா தடுப்பூசிகளையும் போட்டுக் கொள்ள வேண்டும்.

முதியோருக்கான டயட், உடற்பயிற்சி, மருத்துவம் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு அளவு, அல்ட்ரா சவுண்ட், கண் பரிசோதனை போன்றவற்றை ஆண்டுக்கு ஒருமுறை செய்துகொள்ள வேண்டும். பெண்கள் குடும்பத்தின் அஸ்திவாரம்50 வயதைக் கடந்த பெண்கள் தைராய்டு பரிசோதனை, மார்பகப் புற்றுநோய்க்கான மேமோகிராம் பரிசோதனை, கர்ப்பப்பை வாய் நோயைக் கண்டறியும் பாப்ஸ்மியர் பரிசோதனை போன்றவற்றை அவசியம் செய்து கொள்ள வேண்டும்.

இதேபோல், ஆண்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் முழு உடல் பரிசோதனையை மேற்கொண்டு தங்களின் உடல்நிலையைத் தெரிந்துகொள்வது நல்லது. இல்லம் சுத்தமாக இருக்கட்டும்எவ்வளவு உடல் களைப்பாகவும், மனச்சோர்வாகவும் வீட்டுக்குள் நுழைந்தாலும் வீடு சுத்தமாகவும், அமைதியாகவும் இருந்தால் அவை இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

ஆடம்பரமாக இல்லாவிட்டாலும் சிறிய வீடாக இருந்தாலும் பொருட்களை நேர்த்தியாகவும், சுத்தமாகவும் அந்தந்த இடத்தில் வைத்திருந்தாலே வீடு பளிச்சென அழகாகத் தோன்றும். கண்களை உறுத்தாத நிறங்களில் சுவர்களும், திரைச்சீலைகளும் இருக்க வேண்டும். பகலில் மின்சார செலவில்லாமல் காற்றும், ஒளியும் வீட்டுக்குள் வரும்படி அமைந்திருந்தால் ஆரோக்கியம் மேம்படும். படுக்கை விரிப்புகள், கால் மிதியடிகள் போன்றவற்றை குறிப்பிட்ட இடைவெளியில் துவைத்து, வெயிலில் காய வைத்துப் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக நோய்க்கிருமிகள் அண்டாத வகையில் சுகாதாரம் மிக்க இடமாக வீடு இருப்பது அவசியம்.

பாத்ரூம் தரைகளை வழுவழுப்பாக இல்லாமல் சற்று சொரசொரப்பாக அமைக்க வேண்டும். முதியவர்களின் பயன்பாட்டுக்கேற்ற பாத்ரூம் டைல்ஸ், சுவர் கைப்பிடிகள் விற்கப்படுகின்றன. அவற்றை பயன்படுத்தலாம். இதன்மூலம் முதியவர்கள் வழுக்கி விழாமல் தடுக்க முடியும்.

வீட்டுத் தோட்டம்அன்றாட உணவுக்குப் பயன்படும் காய்கறிகளைப் பயிரிட்டு வீட்டுத்தோட்டத்தை உருவாக்கலாம். இதனால், ரசாயனங்களால் வளர்ந்து, ரசாயனங்களால் பாதுகாக்கப்பட்ட காய்கறிகளையும், பழங்களையும் தவிர்க்க முடியும். இதுபோல் வீட்டை, பசுமை வீடாக மாற்றுவது உங்களை உற்சாகமாகவும், மனநிறைவோடும் வைத்திருக்கும்.

முதல் உதவி பெட்டி முக்கியம்வீட்டில் ஒரு முதல் உதவிப் பெட்டி கட்டாயம் இருக்கட்டும். சிறுசிறு காயங்களுக்குக் கட்டுப்போட தேவையான பஞ்சு, பேண்டேஜ், கிருமிநாசினி, ஆயின்மென்ட், சாதாரணத் தலைவலி, காய்ச்சலுக்கு மாத்திரை, தீக்காயத்துக்கு ஆயின்மென்ட், வயிற்று வலி, உடல்வலி போன்றவற்றுக்கு வலி நிவாரணிகள் போன்றவை அதில் இருக்க வேண்டும். முதலுதவிப் பெட்டியில் உள்ள மருந்துகளின் காலாவதித் தேதிகளைக் கவனத்தில்கொண்டு மாற்றிக்கொண்டே இருப்பது மிகவும் முக்கியம்.

காப்பீடுகள் எடுத்துக் கொள்ளுங்கள் தற்போது முழு உடலுக்கான மருத்துவக் காப்பீடுகள் இருக்கின்றன. அவற்றை கட்டாயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனைகளிலேயே பல மருத்துவ சலுகைகளை வழங்கப்பட்டு வருகிறது. இதை முழுமையாக தெரிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம்.

படுக்கையறையில்…

படுக்கையறையில் கடினமாக இல்லாமல், பருத்தி பஞ்சாலான மென்மையான மெத்தை, தலையணைகளைப் பயன்படுத்தலாம். இதனால் முதுகுவலி, கழுத்துவலி இருக்காது. மெத்தை தலையணை உறைகளை வாரம் ஒருமுறை துவைத்து பயன்படுத்த வேண்டும்.

கூடியவரை படுக்கை அறையில் நிறைய பொருட்களை வைத்து அடைக்காமல், மெல்லிய நறுமணத்துடன் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதனால் சீரான ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும். இரவில் 11 மணிக்கு முன்பே உறங்க செல்வதிலும் கவனம் செலுத்துவதும் முக்கியம்!Post a Comment

Protected by WP Anti Spam