By 29 May 2018 0 Comments

ஆசையும் துயரங்களும்!!( கட்டுரை )

“எரிபொருள் மூலம் அரசு அறவிடும் 40,000 மில்லியன் ரூபாய்க்கும் மேற்பட்ட வரியை நீக்கி, எரிபொருள் விலை குறைக்கப்படும். பொதுப் போக்குவரத்துச் சேவைக்கும் ஓட்டோக்களுக்கும், மோட்டார் சைக்கிள்களுக்கும் இதன் மூலம் விசேட சலுகை கிடைக்கும்”.

மேலே உள்ளது, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது, வெளியிட்ட கொள்கைப் பிரகடனத்தில் கூறப்பட்ட விடயமாகும். ‘வலுசக்தியைப் பாதுகாக்கும் இலங்கை’ எனும் தலைப்பில் மேற்படி விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆயினும், கடந்த 10ஆம் திகதி, எரிபொருள்களுக்கான விலைகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டன. 117 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு லீற்றர் பெற்றோலின் விலை, 137 ரூபாயாக உயர்த்தப்பட்டது.

மக்களுக்கு இந்த விலையேற்றம், பல்வேறு வழிகளிலும் நெருக்கடிகளைக் கொடுக்கத் தொடங்கியுள்ளது. பெற்றோல் விலையேற்றத்துக்கு முன்னராக, சமையல் எரிவாயு, பால்மா ஆகியவற்றுக்கான விலைகளை அரசாங்கம் அதிகரித்தது.

இவ்வாறானதொரு நிலையில், பெற்றோலை 90 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்திருக்கின்றார். “உலக சந்தையில், தற்போது ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்யின் விலை 67 ஐக்கிய அமெரிக்க டொலர்களாக உள்ள நிலையில், பெற்றோலின் விலையை அரசாங்கம் 137 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஆனால், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 100 ஐக்கிய அமெரிக்க டொலர்களாக இருந்த போது, ஒரு லீற்றர் பெற்றோல் 137 ரூபாய்க்கு விற்கப்பட்டது” என்று கம்மன்பில விளக்கியிருந்தார்.

எரிபொருள் மீது, இறக்குமதி வரி, உள்நாட்டு வரி, துறைமுகம் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரி, தேச நிர்மாண வரி ஆகிய நான்கு வகையான வரிகளை அரசாங்கம் விதிப்பதாகவும் உதய கம்மன்பில சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, “சகல விதமான செலவீனங்களும் உள்ளடங்கலாக, தற்போதைக்கு ஒரு லீற்றர் பெற்றோலை 80 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியும்” என்று ஜே.வி.பி தலைவர் அநுர குமார திஸாநாயக்கவும் கூறியிருக்கின்றார்.

அப்படியென்றால், ‘எரிபொருளுக்கு அரசு அறவிடும் வரி நீக்கப்பட்டு, எரிபொருளுக்கான விலை குறைக்கப்படும்’ என்று, மைத்திரியின் கொள்கைப் பிரகடனத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழி, மீறப்பட்டுள்ளதா என்கிற கேள்வி, இங்கு எழுகிறது.

மேலேயுள்ளது, மக்களுக்கு எழுத்து மூலம் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் மீறப்பட்டமைக்கு ஓர் உதாரணமாகும். மஹிந்த ராஜபக்‌ஷவை தோற்கடிப்பதற்காக, மக்களுக்கு வழங்கிய இதுபோன்ற ஏராளமான உறுதிமொழிகளைத் தற்போதைய ஆட்சியாளர்கள் கைவிட்டுள்ளனர்; அல்லது அவற்றுக்கு எதிர்மாறாக நடந்து வருகின்றனர் என்பது கசப்பான உண்மைகளாகும்.

இது போன்ற பல விடயங்கள், மைத்திரியின் கொள்கைப் பிரகடனத்தில் ‘எனது தொலைநோக்கு’ எனும் தலைப்பில் கூறப்பட்டிருந்தன. அதன் ஓரிடத்தில், ‘கடந்த சில வருடங்களாக இலங்கையில் இடம்பெற்ற ஊழல்களின் அளவு, வரலாற்றில் என்றுமே நாம் கேள்விப்படாதவை’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல்கள் குறித்தே, மைத்திரியின் கொள்கைப் பிரகடனத்தில் அவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

“ராஜபக்‌ஷக்கள், நாட்டின் செல்வங்களை விழுங்கி விட்டார்கள்” என்று, தற்போதைய ஆட்சியாளர்கள் தேர்தல் காலங்களில் கோஷமிட்டுத் திரிந்தனர். ஆனாலும், ‘வரலாற்றில் எப்போதும் நிகழ்ந்திராதவை’ என்று மைத்திரி கூறிய அந்த ஊழல்களைப் புரிந்த எவரும், இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது மக்களுக்குப் பெருத்த ஏமாற்றமாகும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, கிட்டத்தட்ட ‘ஓர் அரசியல் துறவி’ போல, தன்னைக் காட்டிக் கொண்டு களமிறங்கிய மைத்திரி, இப்போது ஒரு ‘மாமூல்’ அரசியல்வாதியாக மாறிவிட்டதன் விளைவுதான், மேற்படி ஏமாற்றங்களாகும் என்பதைப் புரிந்து கொள்ளுதல், அத்தனை சிரமமல்ல.

‘என்ன ஆனாலும், நான் இவற்றைச் செய்தே ஆவேன்’ என்றிருந்த மைத்திரி, இப்போது ‘இவற்றையெல்லாம் செய்தால், எனது அரசியலுக்கு என்ன ஆகி விடுமோ’ என்று பயம் கொள்கின்றமையால்தான், வரலாற்றில் என்றுமே நடந்திராத ஊழல்களைப் புரிந்தவர்கள் மீது, கைவைக்க முடியாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரி, ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் தனது மக்களுக்கு, எழுத்து மூலம் வழங்கிய மேற்கண்டவாறான பல வாக்குறுதிகள், தடம்புரண்டு போயுள்ளன.

மைத்திரியின் கொள்கைப் பிரகடனத்தில், ‘ஒழுக்க நெறிமுறை சார்ந்த சமூகம்’ எனும் தலைப்பின்கீழ் ஓரிடத்தில், ‘தீவிரவாத மதக் கும்பல்களின் நடவடிக்கைகள் காரணமாக, நாட்டில் மத அமைதியின்மை வளர்ச்சியடைந்து வருகிறது. இந்நிலைமையின் கீழ், தீவிரவாதக் கும்பல்கள் பரஸ்பரம் போதித்து, தமது நடவடிக்கைகளை விரிவாக்கி வருகின்றன’ எனக் குறிப்பிடப்பட்டிருந்ததோடு, ‘நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் அவ்வாறான நடவடிக்கைகளை மாற்றியமைக்க, உடனடி நடவடிக்கை எடுப்பேன்’ எனவும் கூறப்பட்டிருந்தது.

முஸ்லிம் மக்கள் மீது, மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பௌத்த இனவாதத் தாக்குதல்கள் பற்றியே, மேற்படி வரிகள் பேசியிருந்தன. ஆனாலும், முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வந்த பௌத்த பேரினவாதத் தாக்குதல்கள், மைத்திரி ஆட்சியில் தீவிரமடைந்துள்ளனவென முஸ்லிம் மக்கள் விசனப்படுகின்றனர்.

அம்பாறையிலும் கண்டி மாவட்டத்திலும் முஸ்லிம்கள் மீது பௌத்த இனவாதத் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கு ‘கதவுகள்’ திறந்து கொடுக்கப்பட்டிருந்ததாகப் பரவலாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

திகன தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளில் ஒருவர் எனக் கூறப்படும் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் மீது, எந்தவித சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று, முஸ்லிம் மக்கள் விசனத்தோடு இருந்த சந்தர்ப்பத்தில், ஜப்பான் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரி, அங்கு கலந்து கொண்ட நிகழ்வொன்றில், ஞானசார தேரரும் கலந்து கொண்டமை, இலங்கை முஸ்லிம்களுக்கு அதிர்ச்சியையும் பெருத்த ஏமாற்றத்தையும் கொடுத்திருந்தன.

தீவிர பௌத்த செயற்பாட்டாளர்களின் கோபத்துக்கு, தான் ஆளாகி விடக் கூடாது என்பதில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனமாக இருக்கின்றார். அவர்களின் கோபம் தனது அரசியலைக் கடுமையாகப் பாதித்து விடும் என்று அவர் அச்சப்படுகிறார் போல் தெரிகிறது. அதனால்தான், ஞானசார தேரரைக் கூட, அவர் சமரசம் செய்ய வேண்டிய நிலைவரம் ஏற்பட்டுள்ளது.

இதற்குப் பிறகு, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்கிற கோசத்துடன், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரி களமிறங்கினார். இந்த அறிவிப்பின் மூலம், ‘தனது ஜனாதிபதிப் பதவி நிறைவுடன், அரசியலில் இருந்து மைத்திரி ஓய்வு பெற்றுவிடுவார்’ என, மக்கள் புரிந்து கொண்டனர்.

ஆனாலும், “அரசியலில் இருந்து தான் ஓய்வுபெறப் போவதில்லை” என்று, தனது மேதின உரையில், ஜனாதிபதி மைத்திரி கூறியிருந்தார். இதன் மூலம், அவருக்குள் இன்னுமிருக்கும் அரசியல் ஆசையை அவர் அம்பலப்படுத்தியுள்ளார்.

‘ஆசைதான் துயரங்களுக்கெல்லாம் காரணமாகும்’ என்றார் கௌதம புத்தர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திணறுவதற்கும், அதனால் ஏற்பட்டுள்ள துயரங்களுக்கும் காரணம், அவருக்குள் எஞ்சியிருக்கும் அரசியல் ஆசையாகும்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவும், சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர், மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆதரவாளர்களாக உள்ளமையும் அந்தக் கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேனவுக்குப் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.

‘வரலாற்றில் என்றுமே நடந்திராத ஊழல்களைப் புரிந்தவர்களுக்கு’ எதிராக, ஜனாதிபதி மைத்திரியால் நடவடிக்கை எடுக்க முடியாமல் இருப்பதற்கு, இது போன்ற அரசியல் சூழ்நிலைகள்தான் காரணமாகியுள்ளன.

சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தில் தொடர்ந்திருக்க வேண்டும் என்கிற ஆசையும் அரசியல் சுகபோகங்களை இன்னும் அனுபவிக்க வேண்டும் என்கிற அவாவும்தான், மைத்திரியின் கொள்கைப் பிரகடனங்களை நிறைவேற்றுவதற்குப் பிரதான தடைகளாக உள்ளன.

இவ்வாறானதொரு நிலையில்தான், புதிய அரசமைப்பின் முதலாவது வரைவு, வழிநடத்தல் குழுவிடம் வியாழக்கிழமை (24) வழங்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்
எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்திருக்கிறார்.

‘ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் அரசமைப்புத் திருத்தம்’ என்பது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொள்கைப் பிரகடனத்திலுள்ள முதலாவது விடயமாகும்.

அதில் அவர் குறிப்பிட்டிருந்த சில விடயங்களை, நிறைவேற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். விருப்பு வாக்கு முறையை நீக்கும் வகையில், தேர்தல் முறையைத் திருத்தியமைப்பது, 18ஆவது அரசமைப்புத் திருத்தத்தை இல்லாதொழிப்பது போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இவ்வாறானதொரு நிலையிலேயே, புதிய அரசமைப்பின் முதலாவது வரைவு, வழிநடத்தல் குழுவிடம் நாளை மறுதினம் வழங்கப்படவுள்ளது.

புதிய அரசமைப்புக் குறித்து, அனைத்துச் சமூகங்களும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளன. புதிய அரசமைப்பு, நாட்டுக்குத் தேவையில்லை என்று, மகாநாயக்கர்கள் தெரிவித்திருந்த நிலையில், வழங்கப்படும் அரசமைப்பின் முதல் வரைவு, சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதாக இருக்குமா என்கிற கேள்வி முக்கியமானதாகும்.

மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி ஆனதும், பாற்சோறு சமைத்துப் பகிர்ந்து, அதைக் கொண்டாடிய முஸ்லிம் மக்களிடம், இப்போது அதற்கு எதிரான மனநிலைதான் அதிகமுள்ளது.

நல்லாட்சியில் பொருட்களுக்கு விலைகள் குறையும், நாட்டில் ஊழல் மறைந்து விடும், இனவாதச் செயற்பாடுகள் இல்லாமல் போகும் என்று நம்பியிருந்த மக்கள், ஏமாந்து போயுள்ளனர்.

ஊழல் செய்தவர்களைப் பிடிக்கப் போவதாக ஆட்சி பீடம் ஏறியவர்களே, மத்திய வங்கியின் பிணைமுறியில் மோசடி செய்து விட்டதாகக் கூறப்படுவது வெட்கக் கேடாகும்.

பிணைமுறி விவகாரத்தில் பாரிய மோசடி நடந்துள்ளதாக ஜனாதிபதியும் ஏற்றுக்கொண்டுள்ளார். ஆனாலும், அதில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் அரசியல்வாதிகளுக்கு எதிராக, எதுவித நடவடிக்கைகளையும் எடுக்க முடியாத நிலையில், மைத்திரி இருக்கின்றமை கவலைக்குரியதாகும்.

ஒரேயொரு தடவை ஜனாதிபதியாகி, இந்த நாட்டிலுள்ள களைகளையெல்லாம் பிடுங்கி, சுத்தப்படுத்தப் போவதாகக் கூறிய மைத்திரியின் ஆட்சியிலும், மக்கள் தொடர்ந்தும் துயரப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர் என்பது வேதனையாகும்.

மக்கள் மீது சுமைகளை ஏற்றும் போதெல்லாம், மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக்காலத்தை நினைவுபடுத்துவதும், கடன்பொறியில் நாடு சிக்கித் தவிப்பதாகக் கூறுவதும், மக்களின் கோபத்திலிருந்து நல்லாட்சியாளர்களைக் காப்பாற்றி விடப் போவதில்லை.

யுத்தகாலத்தில் பொருட்களுக்கு விலைகள் அதிகரிக்கப்பட்டமை போல், தற்போது விலையேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அப்படியென்றால், ஆயுத மோதலல்லாத ஒரு யுத்தம், நாட்டில் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறதா என்கிற கேள்வியும் இங்கு முக்கியமானதாகும்.

உறைப்புச் சாப்பிடாதவன், தனது தோட்டத்தில் விளைந்த இஞ்சியைச் சந்தையில் கொடுத்து விட்டு, பச்சை மிளகாயை வாங்கிக்கொண்ட கதையாகத் தமது நிலை மாறி விட்டதோ என்று, ஆட்சி மாற்றம் ஏற்படுத்தியமை குறித்து, மக்கள் யோசிக்கத் தொடங்கியுள்ளனர்.

இன்னும் ஒன்றரை வருடங்களுக்குள் மக்களின் இந்தக் கவலை, துயரம், கோபம் போன்றவற்றை எல்லாம், நல்லாட்சியாளர்கள் சீர்செய்யலாமா என்று தெரியவில்லை.Post a Comment

Protected by WP Anti Spam