பாரம்பரிய முறையில் பல் துலக்குவோம் !(மருத்துவம்)

Read Time:10 Minute, 23 Second

பல் துலக்குவதற்காக இன்றைக்கு பல விதமான பற்பசைகள் வந்துவிட்டன. ஆனால், அவையெல்லாம் எந்த அளவுக்கு நம்பகத்தன்மையானது என்று தெரியவில்லை. நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமுமாக பற்பசைகளைப் பற்றி பீதி கிளப்பும் செய்திகளும் அவ்வப்போது வந்தவண்ணம் இருக்கின்றன. எல்லாம் தெரிந்தாலும் தவிர்க்க முடியாமல் பற்பசைகளையே பயன்படுத்தி தினமும் பல் துலக்கி வருகிறோம்.

அதே வேளையில் நம்முடைய பற்களைப் பாதுகாப்பதற்கு பாரம்பரிய பல் துலக்கும் முறைகளையும் கொஞ்சம்கொஞ்சமாக மறந்துவிட்டு வருகிற சூழலில் நம்முடைய பாரம்பரிய பல் துலக்கும் முறையை தற்போது கடைபிடித்தால் பற்கள் பாதுகாப்புக்கு உத்திரவாதம் தருகிறார் ஆயுர்வேத மருத்துவர் சீனி. ‘‘நம் உடலில் அதிகம் உழைத்து தேயக்கூடிய பாகங்களில் முக்கியமானவை பற்கள். நம்முடைய மரணத்துக்குப் பின்னும் நெடுங்காலம் அழியாமல் இருக்கும் ஒரு உறுப்பும் கூட.

இத்தகைய பெருமை கொண்ட பற்களின் கருப்பையாக இருப்பது ஈறுகள். ஈறுக்குமேல் தோன்றும் பாகம் எனாமலால் பூசப்பட்டிருக்கிறது. எனாமலில் நரம்புகள் இல்லாமையால் வலி உணர்வு தெரியாது. எனாமலுக்கு அடியில் மிகக் கடினமான காங்கிரீட் பூச்சு இருக்கிறது. அது எலும்போடு சம்பந்தமுடையது. பல் உணர்ச்சி இங்குதான் ஆரம்பிக்கிறது. உள் புறத்திலே மிக மென்மையான நரம்பு, ரத்தக்குழாய்கள் மற்றும் செல்கள் அமைந்த ஜவ்வு இருக்கிறது. போதக கபம் எனும் உமிழ்நீர் வாயினுள்ளே எப்போதும் கசிந்து கொண்டேயிருக்கும்.

இந்த உமிழ்நீர் வாயின் உட்புற ஜவ்வுகளில் புண் ஏற்படாமல் பாதுகாக்கும். மேலும், இரைப்பையின் பித்தத்திலுள்ள சூட்டை வாயில் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. பற்கள் திடமாகவும் ஈறுகள் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு உடல் சூடும், வயிற்றிலுள்ள பித்த திரவமும் சரியான நிலையில் இருக்க வேண்டியிருக்கிறது. இன்றைய மாறுபட்ட உணவு பழக்க வழக்கங்களால் உமிழ்நீர் சரியாக சுரக்காமல் இரைப்பையில் உள்ள பித்தத்தின் புளிப்பு மற்றும் வெப்பத் தன்மையால் வாய்ப்புண், வாய் நாற்றம், பல் கூச்சம் மற்றும் பற்களில் கறை படிதல் போன்ற பிரச்னை ஏற்படும்.

இதனால் பாரம்பரிய பல் துலக்கும் முறையை கடைபிடித்தால் நம் பற்களை நாம் பாதுகாக்க முடியும். தற்போது இருக்கிற ரசாயனம் கலந்த பேஸ்ட்டுகளில் பேஸ்ட்டுகள் கெட்டுப் போகாமல் இருப்பதற்கும், அதன் ஈரப்பதம் குறையாமல் இருப்பதற்கும் சோடியம் பெஞ்சால்ட், க்ளோரைடு, நிக்கோட்டின், பெட்ரோலிய கெமிக்கல், அதிகப்படியான இனிப்பு போன்றவை பயன்படுத்தி டூத் பேஸ்ட்டுகள் தயாரிக்கின்றனர்.

இதனால் பற்கள் பாதிப்படைவதைத் தாண்டி அல்ஸர், சுவாசப்பிரச்னைகள், செரிமானக் கோளாறுகள் போன்றவை வருகிறது. அதுபோல தற்போது உள்ள டூத் பேஸ்ட்டுகளில் பாரம்பரியம் என்கிற பெயரில் வேம்பு, கிராம்பு, உப்பு, கரி போன்றவை சேர்க்கப்பட்ட பேஸ்ட்டுகள் விற்பனைக்கு வந்திருக்கின்றன. ஆனாலும் அவை மேலே குறிப்பிட்ட ரசாயனங்கள் இல்லாமல் தயாரிக்க முடியாது.

அதனால் அவற்றைத் தவிர்ப்பது நல்லது. பற்களை வெண்மையாக்குவது மட்டுமே பல் துலக்குவதின் நோக்கம் கிடையாது. ஆனால், பாரம்பரிய பல் துலக்கும் முறைகளில் பற்களை சுத்தமாக்குவது, பாதுகாப்பது இவற்றுடன் வெண்மையாக்குவது என மூன்று விஷயங்களும் கலந்தே இருக்கின்றன. ஆலம், கருங்காலி, புங்கை, மருது, வேங்கை, வேலம், நாயுருவி முதலியவற்றின் எதாவது ஒன்றின் குச்சிகளை வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் வெட்டி வைத்து கொள்ளுங்கள்.

அந்தக் குச்சிகளை ஈரப்பதம் குறையாத வண்ணம் பாதுகாத்து காலையில் அந்த குச்சியை சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்துப் பயன்படுத்துங்கள். இல்லாவிட்டால் தற்போது இருக்கிற டூத் பிரஸ்களை மட்டும் பயன்படுத்தி, மூலிகை பற்பொடிகளை பயன்படுத்தியும் பல் துலக்கலாம், வாய்ப்பிருந்தால் வீட்டிலேயே தயார் செய்து அல்லது நாட்டு மருந்துக்கடைகளில் வாங்கி கீழே குறிப்பிடப்படுகிற மூலிகைகளைப் பயன்படுத்தி பல் துலக்கலாம்.

கோஷ்டம் (புஸ்கர மூலம்) சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், லவங்கப்பட்டை, ஏலம், லவங்கப்பத்திரி, தேன் இவற்றின் கலவையின் தந்தகாஷ்டத்தை மூலிகை பயன்படுத்தி பல் துலக்கலாம். பற்கள் வலிமையுடனும், வெண்மையுடனும் இருப்பதற்கு உதவும். எள்ளும் அதிமதுரமும் சேர்த்து பக்குவம் செய்யப்பட்ட பாலினால் கொப்பளித்துத் துப்பி வரலாம். அர்மேதஸ் தைலத்தையும் இரவில் படுக்கும் முன் ஒரு ஸ்பூன் வாயிலிட்டு நன்றாகக் கொப்பளித்துத் துப்பி வர, பல் கூச்சம் விரைவில் குணமாகும்.

தந்தசாலம் மூலிகை பொடி பல் அசைவுகளை சரிபடுத்துகிறது. தசனகாந்தி என்னும் பல் பொடியைக் கொண்டுபல் தேய்த்து வந்தால் பற்களின் ஈறுகள் வலிமையுறும். மேலும் ஈறுகளை அழுத்தி விட வேண்டும். கண்டிப்பாக உணவு சாப்பிட்டதும் வாயை நன்றாக (ஒவ்வொரு வேளையும்) கொப்பளிக்கவும். இதன் மூலம் கிருமித்தொற்று ஏற்படாமல் பாதுகாக்கலாம். இந்து உப்பு, திரிபலா, ஏலக்காய், கிராம்பு போன்றவற்றை பொடியாக வைத்து பல் தேய்க்கலாம்.

ரசாயனத்தால் உருவான மவுத் வாஷ்-க்கு பதிலாக தினமும் நல்லெண்ணெயில் வாய் கொப்பளிப்பது, வாரம் ஒருமுறை எலுமிச்சைச்சாறு உப்பு கலந்து நன்றாக வாய் கொப்பளிப்பது நல்லது. பால் பொருட்கள், பொட்டாசியம் உள்ள உணவுகளான வாழைப்பழம், விட்டமின் சி இருக்கிற கொய்யா, நெல்லிக்கனி, திராட்சை, ஆரஞ்ச் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்’’ என்கிறார். பல் மருத்துவர் சக்திவேல் ராஜேந்திரனிடமும் இதுபற்றிக் கேட்டோம்…‘‘பற்களை பாதுகாத்து வைத்துக்கொள்வது அவசியம்.

ஆரோக்கியமாக வாழ்வதற்கான உணவை மென்று தருவது பற்கள்தான். உண்ணும் உணவுப் பொருட்களை நன்றாக மென்று அது எளிதில் செரிமானம் அடைய பற்கள் இன்றியமையாதது. பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதன் மூலம் உடலில் பல நோய்கள் வராமல் தடுக்கலாம். நோய்கள் நம்முடைய பல் நாம் உண்ணும் உணவு, கூல்ட்ரிங்ஸ், சூடான பானங்கள், நொறுக்குத் தீனிகள், உணவில் உள்ள சர்க்கரைச் சத்து உள்ளிட்டவைகளால் சேதம் அடைகிறது.

அதனால் ஒரு நாளைக்கு இரண்டு முறை பல்துலக்குவது அவசியம். பாரம்பரிய பல் துலக்கும் முறையில் பல் துலக்கினாலும், தற்போது இருக்கிற நவீன முறையில் ப்ரஷ், டூத் பேஸ்ட் போன்றவற்றைப் பயன்படுத்தி பல் துலக்கினாலும் நல்லதுதான். பல் துலக்குவதன் மூலம் உங்களுடைய பற்களில் தொற்றுகிருமிகள் நீக்கப்பட்டு பற்கள் வெண்மையுடனும் சுத்தமாகவும் இருக்கிறது.

தற்போது எல்லோருக்கும் பாரம்பரிய பல் துலக்கும் முறையை கடைபிடிப்பது சிரமமிருக்கலாம். அதனால் பாரம்பரிய பல் துலக்கும்முறையை பின்பற்றி வேம்பு, கிராம்பு, உப்பு போன்றவற்றை பயன்படுத்தி டூத் பேஸ்ட்டுகளும் வந்திருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தியும் பல் துலக்கலாம். அதுபோல் டூத் பேஸ்ட்டினை பட்டாணி அளவில் மட்டுமே எடுத்துக் கொள்வது அதன் பாதிப்புகளிலிருந்து தப்பிக்கலாம்’’ என்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரஜினியை பார்த்து யார் நீங்கன்னு கேட்ட இளைஞனுக்கு நடந்த கொடூரம்! (வீடியோ)
Next post மாட்டிறைச்சியை முன்வைத்த பிணக்குகள்!!( கட்டுரை )