By 6 June 2018 0 Comments

பாழும் கிணற்றில் விழுவதற்கு ஒப்பாகும் பிணக்குகள்!!(கட்டுரை)

பல்வேறு இனக்குழுமங்களுக்கு இடையிலான அரசியல் என்பது, நீருக்குள்ளால் நெருப்பைக் கொண்டு செல்வது போன்றதாகும்.

இத்தகைய அரசியல் செயற்பாட்டையே இன்றைய அரசியலாளர்கள் பல்வேறு கோணங்களில் செயற்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக, யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் ஏற்பட்ட திடீர் அரசியல் மாற்றங்களும், அதனூடாக உருவெடுத்த இனரீதியான கருத்தியலும் இன்று மேலோங்கியுள்ளதைக் கருத்தில் கொண்டேயாக வேண்டும்.

வடபுலத்து அரசியலுக்கு அப்பால், கிழக்கிலங்கையில் மையம் கொண்டுள்ள இனரீதியான அரசியல்போக்குகள், ஆரோக்கியமற்றதும் இனரீதியான விரிசலைத் தோற்றுவிக்கும் தன்மை கொண்டனவாகவுமே காணப்படுகின்றன.

அரசியலாளர்களின் கருத்துகளும் அவர்களது செயற்பாடுகளும் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்துவதோடு, இலங்கையில் நிரந்தர அமைதியின்மையைத் தோற்றுவிக்கும் போக்கையும் கொண்டுள்ளது.

இவ்வாறான நிலையில், வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், இலங்கை அரசாங்கத்தைத் தொடர்ச்சியாக விமர்சித்து வரும் நிலையில், அண்மைய நாட்களாக அவருடைய கருத்துகள், காரசாரமானவையாகக் காணப்படுகின்றன.

குறிப்பாக, தமிழர்களது நிலங்களை அரசாங்கம் எவ்வாறு கபளீகரம் செய்கின்றது என்பது தொடர்பாக முதலமைச்சர் முன்வைத்த கருத்துகளின் சூடு இறங்குவதற்குள், சொகுசு வார்த்தைகளைக் கூறிப் பாசாங்கு செய்வதை விட சொல்லவேண்டியதைச் சொல்லிச் சாவது மேல் என்ற மற்றைய கருத்து, தமிழ் அரசியல் தலைமைகளுக்குச் சாட்டையடியாகவுள்ளது.

வடக்கில் ஏற்பட்டுள்ள, தமிழர்களின் ஸ்திரமற்ற அரசியல் நிலைக்கு, ஆக்கபூர்வமான அரசியல் தலைமையொன்றின் தேவை பரவலாக உணரப்படுகின்றது.

எனினும், அது வடமாகாண முதலமைச்சர் தலைமையிலானதா என்பதும் அந்தத் தலைமை, வடக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் அனுசரித்துச் செல்லவல்லதா என்பதும் சந்தேகத்துக்கு உரியதே.

ஏனெனில், வடமாகாண முதலமைச்சர், வடக்கிலுள்ள பல மாவட்டங்களுக்குச் சென்று, மக்களின் நிலையை கேட்பதில்லை என்ற குற்றச்சாட்டும், வடமாகாண சபை உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு முதலமைச்சர் செவிசாய்ப்பதில்லை என்ற முறைப்பாடும் முதலமைச்சருக்கு எதிராகக் காணப்படும் நிலையில், தமிழர் அரசியலில் புதிய தலைமைக்கு அவர் ஏற்புடையவரா என்கின்ற பலத்த சந்தேகங்கள் வடக்கு மக்கள் மத்தியில் நிலவுகிறது.

இதற்கும் அப்பால், தமிழ் மக்கள் பேரவை, வீறுகொண்டு வந்த வேகத்துக்கு தற்போது சோர்வடைந்து போயுள்ளது. யாழ்ப்பாணத்தில் மட்டுமே தனது செயற்பாட்டைச் சுருக்கிக்கொண்டு, குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டும் நடைமுறையைப் பின்பற்றுகின்றது.

எனவே, தமிழ் மக்கள் பேரவை, யாழ்ப்பாண மாவட்டம் உட்பட ஏனைய மாவட்டங்களிலும் எந்தளவுக்குச் செல்வாக்குச் செலுத்தப்போகின்றது என்பது தற்போதைய காலச்சூழலில் கேள்வி நிறைந்தாகவே உள்ளது.

இந்நிலையில், வட மாகாணசபையால் வட மாகாணத்துக்கான அபிவிருத்தியில் புலம்பெயர் அமைப்புகளுடனான கலந்துரையாடல்கள் சிங்கள இனவாத அமைப்புகளிடமிருந்தும் மஹிந்த ராஜபக்ஷ சார்பு அரசியலாளர்கள் இடமிருந்தும் பாரிய சவால்களுக்கு உட்பட்டுள்ளது.

இவர்களது கருத்துகளால், புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகள் வட மாகாணசபையின் ஊடாக, அவர்களது நேரடிப் பங்களிப்புக்கு ஒப்புதல் அளிக்க அரசாங்கம் பின்னிற்கும்.

எனவே, புலம்பெயர் அமைப்புகள் தொடர்பான தெளிவூட்டல்களைச் சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டிய பாரிய பொறுப்பு, தமிழ் அரசியலாளர்களுக்கு உள்ளது. அந்தச் செயற்பாட்டை முன்கொண்டு செல்லக்கூடிய தலைமை எது என்பது வெற்றிடமாகவே உள்ளது.

புலம்பெயர் அமைப்புகளையும் புலம்பெயர்ந்தவர்களையும் புலிகளாக முத்திரை குத்தும் பெரும்பான்மையின அரசியலாளர்கள் சிலருக்கு, உண்மையைத் தெளிவுபடுத்த வேண்டிய தேவை தமிழ்த் தலைமைகளுக்கு அதிகமாக உள்ளது.

எனினும், தமிழ்த் தலைமைகள் அவ்வாறான முனைப்பை முன்கொண்டு செல்லாதவர்களாகவே உள்ளனர். இத்தகைய நிலைமைகளால் மஹிந்த ராஜபக்ஷ சார்பு ஆதரவாளர்களும் இனவாத அரசியலாளர்களும் பயங்கரவாதப் பூச்சாண்டியை வைத்தே, அரசியல் செய்யும் துணிவைப் பெற்றுள்ளதுடன், தமிழர்களின் நீண்ட காலப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்குவதென்பதையும் எட்டாக்கனியாக்கியும் வருகிறார்கள்.

எனவே, தற்கால நிலைமையை உணர்ந்து செயற்படும் அரசியலாளர்களாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைமைகளும் சரி, ஏனைய தமிழ்த் தலைமைகளாகத் தம்மை உருவகப்படுத்தும் தலைமைகளும் முன்வரவேண்டும்.

இதற்குமப்பால் பெரும் சக்தியாகத் தமிழர்கள் எண்ணிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போக்குகளும் அதனுள் இருந்து வெளியேறிய தலைமைகளும் எதைச் சாதிக்க முனைகின்றன என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழத்தொடங்கியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கட்டுமானத்தில் இருந்து, அதன் உள்ளக முரண்பாடுகளால் எவ்வாறு அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் வெளியேறி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியாக உருப்பெற்று, இன்று தமிழர்களின் வாக்குகளைச் சிதறடிக்கும் சக்தியாக உருப்பெற்றுள்ளதோ, அதே போன்றதொரு நிலைப்பாட்டை ஈ.பி.அர்.எல்.எப் எடுத்து, தமிழர் விடுதலைக்கூட்டணியுடன் இணைந்து, தன்னை அழித்துக்கொண்டதோ இவ்வாறான நிலைமையே, இனி உருவாகும் கட்சிகளுக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது.

‘சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி’ என்பது போல், கூட்டமைப்பாக, ஒற்றுமையாகச் செயற்பட்ட ஓர் இயங்கு கருவியை, இடையிட்டு வந்த சிலரின் கருத்துகள் சிதறடிப்பது, ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகவே தமிழர் தரப்பால் பார்க்கப்படுகிறது.

கூட்டமைப்பைச் சிதறடிக்கும் நோக்கத்தோடு, அதற்குள் இருக்கும் சிலரின் செயற்பாடுகள் காணப்படுகின்றன. நீண்ட காலமாக அல்லது கூட்டமைப்பு உருவாக்கப்படும் போது, அதற்குள் இருந்த தலைமைகள், கீழ்த்தர நோக்கம் கொண்டவர்களை வெளியேற்றியோ அல்லது ஆக்கபூர்வமான செயலை முன்னெடுத்தோ, கூட்டமைப்பைப் பலப்படுத்தவேண்டிய பொறுப்பில் இருந்து நழுவி இருக்கின்றனர்.

இவ்வாறான நிலைமைகள், தமிழ் மக்கள் இன்று, தேசியக் கட்சிகளின் பக்கம் பின்செல்லக் காரணமாகியதோடு, தமிழ் சமூகம், தமது தேவைகளைப் பூர்த்தி செய்யத் தம்மைத் தேடி வருவார்கள் என்ற நிலைப்பாட்டை, இனவாதக் கருத்துகளை முன்வைக்கும் அரசியலாளர்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளது. எனவே அவர்கள் தொடர்ந்தும் இனவாதக் கருத்தியலையும் தம் இனம் மட்டும் சார்ந்த சேவைகளையும் செய்ய முற்படுவதற்கு வழிசமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவரான வீ. ஆனந்தசங்கரியின் அண்மைக்கால கடிதங்கள், தமது கட்சியை ஆளுமையுள்ளவர்கள் பொறுப்பேற்க வரவேண்டும் என்கின்ற தோரணையை முன்வைத்துள்ளது.

எனினும் இக்கட்சி, முட்டிமோதி சின்னாபின்னப்பட்டு நிற்கும் நிலையில், அக்கட்சிக்குப் புத்துயிர்கொடுத்து , அரசியல்பாதைக்குக் கொண்டு செல்ல முனைவதை, பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற வாக்குக்கு இணங்க, பழைய பகை மறந்து தமிழர் விடுதலைக் கூட்டணியைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அரங்கத்துக்குள் ஒன்றிணைத்து, வலுவுள்ள சக்தியாகத் தமிழர் அரசியல் தளத்தை மாற்ற கூட்டமைப்பின் தலைமைகள் முன்வரவேண்டும். அத்துடன் தமது கட்சி நலன் சார்ந்த விடயங்களை விடுத்து, தமிழ் மக்களின் எதிர்காலம் நோக்கிச் சிந்திக்கும் தலைவர்களாக உருவாகவும் வேண்டும்.

இவ்வாறான நிலை காணப்படும் போது, முதலமைச்சரின் புதிய அரசியல்போக்கு, மேலும் மேலும் தமிழர் அரசியல் தளத்தில், ஸ்திரத்தன்மை இன்மையைத் தோற்றுவித்து, தேசியக் கட்சிகளின் ஊடுருவலை வடக்கில் ஏற்படுத்துவதற்கு வழிசமைக்க காரணமாகிவிட வாய்ப்புள்ளது.

எனவே, இதை உணர்ந்து, தமிழ் தலைமைகள் ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்பதற்கிணங்க, ஓரணியில் இணைவதன் மூலமே, தமிழ் மக்களின் நீண்டகால அபிலாஷைகளை நிறைவேற்ற முடியும் என்ற யதார்த்த அரசியலை உணரத் தலைப்படவேண்டும்.Post a Comment

Protected by WP Anti Spam