By 5 June 2018 0 Comments

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை இருந்தாலென்ன ஒழித்தாலென்ன?(கட்டுரை)

இலங்கை அரசியல்வாதிகள் தாம், தமது இனத்தின் பாதுகாவலர்களாகக் காட்டிக் கொண்டே, அரசியலில் காரியம் சாதிக்கிறார்கள்.

வடபகுதி அரசியல்வாதிகள், எதை எடுத்தாலும் மற்றவர்கள் செய்வதெல்லாம் தமிழர்களைப் பாதிக்கும் என்றும், தாம் செய்யும் அனைத்தும் தமிழர்களுக்குச் சாதகமானது என்றும் கூறி வருகின்றனர்.

சிங்கள அரசியல்வாதிகளும் இதேபோல், தாம் செய்வது அனைத்தும் சிங்களவர்களுக்குச் சாதகமானது என்றும், மற்றவர்கள் செய்வதெல்லாம் நாட்டைத் தமிழர்களுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கும் செயல் என்றுமே கூறி வருகின்றனர்.

முஸ்லிம் அரசியல்வாதிகளும், இதைதான் அரசியல் என்று செய்து வருகின்றனர்.

இதில் குறிப்பாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவும் அவரது தலைமையை ஏற்கும் குழுவினரும், புலியையும் தமிழரையும் காட்டி, சிங்கள மக்களைப் பயமுறுத்துவதையே, தமது அரசியலாக்கிக் கொண்டுள்ளனர்.

புலிகளைப் போரில் தோற்கடித்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட போது, “அவர் புலிகளின் ஏஜென்ட்” என்று கூறியமை, அதில் உச்சக் கட்டம் எனலாம்.

அதன் பின்னர், 2014 ஆம் ஆண்டு, அப்போதைய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த மைத்திரிபால சிறிசேன, 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த போது, அவரும், மேற்கத்தைய நாடுகளினதும் புலிகளினதும் ஏஜென்டாகவே வர்ணிக்கப்பட்டார்.

“புலிகளுக்கு நாட்டைத் தாரை வார்த்துக் கொடுக்கும், இரகசிய ஒப்பந்தம் ஒன்று இருக்கிறது” என்று, அப்போது மஹிந்தவின் மேடைகளில் கூறிய, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, இப்போது நீதிமன்றத்தின் முன், கைகட்டி நிற்கிறர்.

2015 ஆம் ஆண்டு, பதவிக்கு வந்த அரசாங்கம், புதிய அரசமைப்பொன்றை வரைவதற்காக நடவடிக்கை எடுத்த போது, அதற்கான குழுக்களிலும் கலந்து கொண்ட மஹிந்தவின் சகாக்கள், இப்போது, “அது நாட்டைப் பிரித்து, தமிழீழத்தை உருவாக்கும் திட்டம்” என்கிறார்கள்.

இப்போது, நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதற்காகவென, மக்கள் விடுதலை முன்னணி, ‘20 ஆவது அரசமைப்புத் திருத்தம்’ என்ற பெயரில், தனிநபர் பிரேரணையொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கும் நிலையில், “அது, நாட்டைப் பிரிக்கும் தந்திரோபாயம்” என்கிறார்கள்.

இவ்வாறு, தாம் விரும்பாத அனைத்தும், அவர்களுக்குப் புலிகளை மீண்டும் கொண்டுவரும் திட்டமாகவே தெரிகிறது.

பிரிவினைவாதம் மீண்டும் தலைதூக்கினால், அதை அடக்க, நிறைவேற்றதிகார ஜனாதிபதி ஒருவர் இருக்க வேண்டும் என்பதே, மக்கள் விடுதலை முன்னணியின் பிரேரணை விடயத்தில், அவர்களது வாதமாகும்.

எனவே, அதிகாரப் பரவலாக்கலை நாட்டில் அறிமுகப்படுத்திய 13 ஆவது அரசமைப்புத் திருத்தம் அமுலில் இருக்கும் வரை, நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை இரத்துச் செய்யக்கூடாது என்பதே, அவர்களது நிலைப்பாடாகும்.

அதாவது ஒரு நாட்டில், அதிகாரப் பரவலாக்கல் நடைமுறையில் இருந்தால், அந்த நாட்டில் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையும் அமுலில் இருக்க வேண்டும்; இல்லாவிட்டால் நாடு பிரிந்துவிடும் என்பதாகும்.

ஆனால் இந்தியா, பாகிஸ்தான், பிரிட்டன், அவுஸ்திரேலியா மற்றும் மலேசியா போன்ற பல நாடுகளில், அதிகாரப் பரவலாக்கல் அமுலில் இருக்கிறது. எனினும் அந்த நாடுகளில், நிறைவேற்று ஜனாதிபதி முறை இல்லையே.

அது மட்டுமல்ல, இந்தியாவில் தோன்றிய பல பிரிவினைவாதப் போராட்டங்களை, நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை இல்லாமலே, அந்நாடு மிக வெற்றிகரமாக முறியடித்துள்ளது. உதாரணமாக, பஞ்சாப், காஷ்மீர், அஸ்ஸாம், திரிபுரா, மிசோராம் போன்ற மாநிலங்களில் இடம்பெற்ற பிரிவினைவாதக் கிளர்ச்சிகளைச் சுட்டிக் காட்டலாம்.

அதேபோல், பல மாநிலங்களில் இயங்கும் ‘நக்சலைட்’ அமைப்பையும் இந்திய அரசாங்கம் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருக்கிறது.

பிரிட்டனிலும் நிறைவேற்று ஜனாதிபதி ஒருவர் இல்லை. அரச குடும்பம், அரசியலில் முடிவுகளை எடுப்பதுமில்லை. ஆயினும், அந்நாட்டு அரசாங்கம் மிகச் சாதுரியமாக, வட அயர்லாந்துக் கிளர்ச்சியை அடக்கியது.

இந்த நாடுகள், நிறைவேற்று ஜனாதிபதி ஒருவர் இல்லாமலே உள்நாட்டுக் கிளர்ச்சிகளை அடக்குவதில் மட்டுமல்லாது, வெளிநாடுகளுடனான போர்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் போர்களும் ஆர்ஜென்டீனாவுக்கு எதிரான பிரிட்டனின் போரும் இதற்கு உதாரணமாகும்.

மறுபுறத்தில், இலங்கையில் அதிகாரப் பரவலாக்கல் இல்லாத காலத்திலேயே பிரிவினைவாத ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. எனவே, அதிகாரப் பரவலாக்கல் தான் பிரிவினையை ஏற்படுத்தும் என்ற வாதம் நிராகரிக்கப்படுகிறது. அதேபோல், நிறைவேற்று ஜனாதிபதிகளின், குறிப்பாக முதலாவது நிறைவேற்று ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவின் செயற்பாடுகளே, அந்தப் பிரிவினைவாதத்தைப் பெருமளவில் வளர்த்தன.

1979 ஆம் ஆண்டு வருடம் டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்பதாக, வடபகுதியிலுள்ள தமிழ்ப் பிரிவினைவாத கிளர்ச்சியாளர்களை அடக்க வேண்டும் எனத் தமது மருமகனான பிரிகேடியர் திஸ்ஸ வீரதுங்கவை, யாழ்ப்பாணத்துக்கு அனுப்பினார்.

வீரதுங்க, கண்டபடி இளைஞர்களைச் சுட்டுத் தள்ளி, அரசாங்கத்தின் மீதான வடபகுதி மக்களின் வெறுப்பை, மேலும் அதிகரித்தார். இது, ஆயுதப் போராட்டத்துக்கு மேலும் உந்து சக்தியாகியது எனலாம்
ஏனெனில், அந்தக் கொடூரச் செயல்களுக்குப் பின்னர், தமிழ் ஆயுதக் குழுக்கள், மேலும் வைராக்கியத்துடன் போராட முற்பட்டன.

1983 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் திகதி, யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலியில் 13 இராணுவ வீரர்கள், புலிகளால் கொல்லப்பட்ட போது, ஏற்பட்ட பதற்ற நிலைமையைத் தணிக்க, ஜனாதிபதி ஜே.ஆர் நடவடிக்கை எடுக்கவில்லை.

அவர், அந்த 13 இராணுவ வீரர்களின் சடலங்களை, அவரவரது ஊர்களுக்கு அனுப்பாமல், கொழும்பில் அடக்கம் செய்ய எடுத்த முடிவு, வரலாறு காணாத பாரிய இனக் கலவரமொன்றைத் தூண்டுவதாகவே அமைந்தது.

அந்தக் கலவரம் மூண்ட போது, அவரது கட்சிக்காரர்கள், தேர்தல் இடாப்புகளை எடுத்துச்சென்றே, தமிழரின் வீடுகளை அடையாளம் கண்டு தாக்கினார்கள் என்று, பரவலாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. நாடே பற்றி எரிந்தது.

கலவரம் ஆரம்பிக்கப்பட்டு, நான்கு நாட்களுக்குப் பின்னரே ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதிலும் அவர், தாக்குதல் நடத்தியவர்களை கட்டுப்படுத்தும் வகையில் உரையாற்றவில்லை.

மாறாக, தாக்குதலுக்குள்ளாகிய சமுகத்தின் தலைவர்களையே தாக்கிப் பேசியிருந்தார். மறுநாள், கலவரம் மேலும் உக்கிரமாக இடம்பெற்றது.

இந்தக் கலவரம் முடிவடைந்து, ஒரு வாரத்துக்குப் பின்னர், ஜனாதிபதி ஜெயவர்தன, ஆறாவது அரசமைப்புத் திருத்தத்தை கொண்டு வந்தார். அதன் அனுகூலம், பிரிவினையை ஆதரித்துப் பேசுவது குற்றமாக்கப்பட்டது.
அ. அமிர்தலிங்கம், எஸ். சிவசிதம்பரம் போன்ற மிதவாத தமிழ்த் தலைவர்கள், அப்போது சாத்வீகமாக நாட்டுப் பிரிவினையைக் கோரி வந்த காலம் அது. அந்த அரசியல்வாதிகள், இந்தத் திருத்தத்தை எதிர்த்து, நாடாளுமன்றத்தைப் பகிஷ்கரித்ததோடு, நாட்டை விட்டும் வெளியேறி இந்தியா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்குச் சென்றுவிட்டனர். தமிழர்களின் அரசியல், முற்றாகவே ஆயுதக் குழுக்களிடம் சென்றடைந்தது.

பிரிவினைவாதப் போராட்டத்தை அடக்க, நிறைவேற்று ஜனாதிபதி முறை வேண்டும் என்று இன்று பலர் வாதிட்டாலும், நிறைவேற்று ஜனாதிபதி முறை, எவ்வாறு இனப்பிரச்சினையை வளர்த்துவிட்டது என்பதை, இந்தச் சம்பவங்கள் மூலம் தெளிவாகிறது.

அதேவேளை, நிறைவேற்றதிகார ஜனாதிபதிகள் கிளர்ச்சிகளை அடக்கியும் இருக்கிறார்கள்தான். இலங்கை மற்றும் ஈராக் நாடுகளை இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

சுருக்கமாகக் கூறின், கிளர்ச்சிகளை அடக்குவதிலோ, வளர்ப்பதிலோ நிறைவேற்றதிகார ஜனாதிபதிகளும், நிறைவேற்று அதிகாரம் அமைச்சரவையிடம் இருக்கும் நாடுகளின் பிரதமர்களும், ஒரே விதமாகத்தான் செயற்பட்டுள்ளனர்.

காரணம் நிறைவேற்று ஜனாதிபதி முறை இல்லாவிட்டாலும், ஒரு நாட்டின் சட்டம் நிறைவேற்றும் அதிகாரம், அந்நாட்டின் தலைவரிடம் இல்லாமல் போவதில்லை.

கடந்த காலங்களில் சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சித் தலைவர்களும், மக்கள் விடுதலை முன்னணி உள்ளிடட இடதுசாரிக் கட்சிகளும் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை எதிர்த்தபோது, சிறுபான்மையினக் கட்சிகள் அதை ஆதரித்தன.

பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைப் போலன்றி, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுபவர் முழு நாட்டிலும் நடைபெறும் தேர்தலில் போட்டியிடுவதால் அவர் சகல சமூகங்களினதும் ஆதரவை நாடுவார். எனவே அவர், சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முனைவார் என்பதே, சிறுபான்மையினரின் எதிர்பார்ப்பாக இருந்தது.

எனவேதான், “நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையானது, சிறுபான்மை மக்களுக்கு ஒரு மேன்முறையீட்டு நீதிமன்றம் போன்றது” என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் காலஞ்சென்ற எம்.எச்.எம். அஷ்ரப் கூறியிருந்தார்.

ஆனால், போர் வெற்றியின் சூட்டோடு, 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், பெருமளவில் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற மஹிந்த ராஜபக்‌ஷ, தொடர்ந்து சிங்கள வாக்குகளால் மட்டும் தாம் ஜனாதிபதியாகலாம் என நினைத்தார். அதனால், சிறுபான்மை மக்களை வெகுவாகப் புண்படுத்தினார்.

எனினும், அவரது கருத்துப் பிழை என்பதை உணர்த்திய சிறுபான்மை மக்கள், குறிப்பாக முஸ்லிம்கள், அவருக்குக் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, அரசியல் பாடமொன்றைக் கற்றுக் கொடுத்தனர்.

கடந்த வருடம், ஜப்பானுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த மஹிந்த, அங்கு ‘ஜப்பான் போஸ்ட்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “முஸ்லிம்களே தமது வெற்றியை தடுத்தனர்” எனக் கூறியிருந்தார்.
மஹிந்தவின் இந்தச் செயற்பாடுகளால், நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை பற்றிய, சிறுபான்மையின மக்களின் கருத்து மாறிவிட்டது போலும்; இப்போது அவர்களில் எவரும் அஷ்ரபைப் போல், அந்த ஆட்சி முறையைப் பாதுகாக்க வேண்டும் என்று கூறுவதில்லை.

இந்த விடயத்தில், பிரதான சிங்கள அரசியல்வாதிகளின் நிலைப்பாடு, அடிக்கடி மாறுகிறது. வழமையாக அக்கட்சிகள், எதிர்க்கட்சியில் இருக்கும் போது, இம்முறையை இரத்துச் செய்ய வேண்டும் எனக் கூச்சலிடுவதும், ஆட்சிக்கு வந்தபோது, அதைப் பாதுகாப்பதுமே அவர்களது கொள்கையாக இருந்து வந்துள்ளது.

இதன்படி, அதிகாரத்துக்கு வருவதற்கான தேர்தலில் போட்டியிடும் போது, அம்முறையை இரத்துச் செய்வதாக, இரு பிரதான கட்சிகளும் வாக்குறுதி அளித்துள்ளன. சந்திரிகா குமாரதுங்கவும் மஹிந்த ராஜபக்‌ஷவும் மைத்திரிபால சிறிசேனவும் அவ்வாறு வாக்குறுதி அளித்துவிட்டுப் பதவிக்கு வந்தவர்கள். ஆனால், அவர்கள் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முன்வரவில்லை.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையால் நாடாளுமன்றத்தைப் புறந்தள்ளிவிட்டு, தனிநபர் ஒருவருக்கு எதேச்சாதிகாரமாக முடிவு எடுக்கும் வாய்ப்புக் கிடைக்கிறது. எனவேதான், அந்தத் தலைவர்கள் அம்முறையை இரத்துச் செய்ய விரும்பவில்லை.

இனப்பிரச்சினை விடயத்திலும், நாடாளுமன்றத்தின் நெருக்குதலுக்கு உள்ளாகாமல், தனிநபர் ஒருவர் முடிவுகளை எடுக்க முடியும் என்பதாலேயே, இனவாதிகள் அம்முறையை விரும்புகிறார்கள்.

ஒன்றிணைந்த எதிரணிக்கு இப்போது புதியதோர் எதிர்பார்ப்பும் இருக்கிறது. 19ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் பிரகாரம், மஹிந்தவுக்கு இனி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாததால், அவரது சகோதரரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கொட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதியாக்குவதே அந்த எதிர்பார்ப்பாகும். கோட்டாவும் இப்போது, அதற்காக ஆயத்தமாகி வருகிறார் போல்தான் தெரிகிறது.

ஆனால், அதற்கு மஹிந்த அணியிலேயே சிலர் விரும்பவில்லை. வாசுதேவ நாணயக்கார எதிர்ப்பைப் பகிரங்கமாகவே தெரிவித்து இருந்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுபவருக்குச் சிறுபான்மை மக்களின் ஆதரவு இருக்க வேண்டும் என மஹிந்தவின் மற்றொரு சகோதரரான பஷில் ராஜபக்‌ஷ கடந்த வாரம் சிங்களப் பத்திரிகையொன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். இது, கோட்டா ஜனாதிபதியாவதை, அவரும் விரும்பவில்லை என்பதையே எடுத்து காட்டுகிறது.

ஒருவர் ஜனாதிபதியாவதற்குச் சிறுபான்மை மக்களின் ஆதரவு தேவை தான். ஆனால், அந்த ஆதரவைப் பெற்று ஜனாதிபதியாகும் ஒருவர், நிச்சயமாகச் சிறுபான்மை மக்களின் நலன்களைப் பாதுகாப்பார் என்பதற்கு எந்தவித உத்தரவாமும் இல்லை.

எனவே, நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதோ, அதைத் தொடர்ந்தும் வைத்திருப்பதோ தற்போதைய நிலையில், சிறுபான்மை மக்கள் அலட்டிக் கொள்ள வேண்டிய விடயம் அல்ல.

ஆனால், ஜனநாயகம் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால், தனியொருவரின் விருப்பு வெறுப்புகளுக்கு இணங்க, நாட்டை ஆளும் முறையை விட, ஓரளவுக்குக் கூட்டாக முடிவுகளை எடுக்கும் ஆட்சி முறை நல்லது.Post a Comment

Protected by WP Anti Spam