இளைஞர்களை அடிமையாக்கும் டெக்னாலஜி நிறுவனங்கள்!(மருத்துவம்)

Read Time:10 Minute, 26 Second

பஸ்ஸில் பக்கத்தில் இருப்பவருக்கு அழைப்போ, குறுஞ்செய்தியோ வந்தால் உங்கள் கை செல்போனை தேடுகிறதா? காலையில் எழுந்தவுடன் சோஷியல் தளங்களில் உங்கள் செல்ஃபிக்கு எத்தனை லைக்ஸ் விழுந்திருக்கின்றன என்று பரபரப்பாக கண்கள் தேடுகிறதா? முப்பது நிமிட டீ பிரேக்குகளில் வாட்ஸ்அப் வீடியோக்களையும், இன்ஸ்டாகிராம் படங்களையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் எனத் தோன்றுகிறதா? எனில், டெக்னாலஜி நிறுவனங்கள் உங்களை டிஜிட்டல் பைனரி சங்கிலியால் பிணைத்து அடிமையாக்கிவிட்டன என அர்த்தம்.

மனிதர்கள் விற்பனைக்கு!

யாரோ ஒருவர் மட்டுமல்ல; ஜென் இசட் தலைமுறை முழுக்கவே இன்று ஸ்மார்ட்போனின் ஒளிர்திரையில் கவனம் குவித்து குனிந்த தலை நிமிராமல் வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஃபேஸ்புக், கூகுள், அமேஸான் ஆகியோரின் டேட்டா கொள்ளை பற்றி பேசுகிறோம். உண்மையில் மனிதர்களின் தகவல் மட்டுமல்ல;

மனிதர்களே இணையச்சந்தையில் விற்கப்படும் விளைபொருட்கள்தாம். இணைய நிறுவனங்களின் வெற்றி மனிதர்களின் உளவியலை ஆழமாகத் தோண்டித் துருவி அறிவதில்தான் இருக்கிறது. அனைத்து ஆப்களும் மனிதர்களின் உளவியலுக்கேற்றபடி உருவாக்கப்படுகிறது. உதாரணமாக, ஃபேஸ்புக், பின்ட்ரெஸ்ட், யூ டியூப் போன்றவற்றில் ஸ்குரோல் செய்து கீழிறங்கினால் வீடியோக்கள் முடிவற்று பெருகும்.

உளவியலே மந்திரம்!

‘‘இத்தொழில்நுட்பத்தை அடிப்பாகம் இல்லாத பாத்திரம் எனலாம். கம்ப்யூட்டர்கள் மனிதர்களைக் கட்டுப்படுத்தும் காட்சிகளைக் காண 20 ஆண்டுகள் போதும்…’’ என்கிறார் ஸ்டான்ஃபோர்டு உளவியல் ஆராய்ச்சியாளர் பி.ஜே.ஃபோக். முடிந்தவரை சிறுநீர், மலம் கழிக்க, சாப்பிடச் செல்லாமல் ஒருவரை மெய்மறந்து உட்கார வைக்கவே சமூகவலைத்தளங்கள் மெனக்கெடுகின்றன.

ஃபேஸ்புக், கூகுள் பிளஸ், டிவிட்டர், பின்ட்ரெஸ்ட் ஆகிய தளங்களின் பதிவுகள், பின்னூட்டங்கள், செய்திகள் ஆகியவை நம் கருத்து, விருப்பத்துக்கு ஏற்ப வடிவமைக்கப்படுகின்றன. அதோடு ஆப்பிள் முதலீட்டாளர்கள், அடிமைத்தனத்தை குறைக்கும் டிசைனில் ஆப்பிள் போனை வடிவமைக்க மாநாட்டில் வற்புறுத்தி குரல் எழுப்பி யுள்ளதும், பிஎம்டபிள்யூ, ஃபோக்ஸ்வேகன் ஆகிய நிறுவனங்கள் பணியாளர்களின் இமெயில் பார்க்கும் நேரங்களை கட்டுப்படுத்துவதும் நாம் அலட்சியப்படுத்தக்கூடாத முன்முயற்சிகளில் சில.

மூளை யாருடைய சொத்து?

டெக் அடிமைத்தனத்தை நீக்க பாடுபடும் ஸ்டார்ட்அப் நிறுவனமான பவுண்ட்லெஸ் மைண்டில் (2015) பத்து பேர் பணிபுரிகிறார்கள். நம் மூளையை அல்காரிதம் மூலம் வடிவமைக்க நினைக்கும் டெக் நிறுவனங்களைத் தடுக்க உதவுவதே இவர்களின் பணி. ‘‘உங்கள் மூளை நீங்கள் விரும்பியபடி செயல்பட வேண்டுமா அல்லது அவர்கள் விரும்பியபடி இயங்க வேண்டுமா என்பதில்தான் அனைத்தும் இருக்கிறது…’’ என்கிறார்கள் கம்பெனி நிறுவனர்களான ராம்சே ப்ரௌன், டால்டன் காம்ஸ் ஆகிய இருவரும். இவ்விருவரும் நியூரோசயின்ஸ் படித்துவிட்டு டயட் மற்றும் சிகரெட் பழக்கத்தை மாற்ற நினைப்பவர்களுக்கு ஆலோசகராகப் பணிபுரிந்த அனுபவத்தை முதலீடாக்கி பவுண்ட்லெஸ் மைண்டைத் தொடங்கியுள்ளனர்.

பாராட்டு என்னும் தூண்டில்!

டெக் நிறுவனங்களின் அல்காரிதம் Basal Ganglia என்னும் முன் மூளையின் அடிப்பகுதியைக் குறிவைத்து உருவாகிறது. பற்கள், கண்களின் இயக்கம், உணர்ச்சிகர இயக்கங்கள் ஆகியவற்றை இப்பகுதி கட்டுப்படுத்துகிறது. தூண்டுவது, செயல்பாடு, பாராட்டு என்னும் ஃபார்முலாவில் இப்பகுதியை வளைத்து மனிதர்களை அடிமையாக்குகின்றன டெக் நிறுவனங்கள். ஃபேஸ்புக்கில் உங்கள் பதிவுக்கு யாரென்றே தெரியாதவர்கள் லைக்ஸ் போட்டு கமெண்ட் எழுதினால் என்ன செய்வீர்கள்?

பாராட்டு வார்த்தைகள் கிடைத்தால் மூளையில் டோபமைன் வேதிப் பொருள் அபரிமிதமாக உருவாகும். ‘‘பாராட்டுக்கு ஏங்கித் தவித்து இணையத்தில் உலாவித் திரியும் இந்நிலைக்கு ‘சர்ப்ரைஸ் அண்ட் டிலைட்’ என்று பெயர்…’’ என்கிறார் ப்ரௌன். நாட்டிலுள்ள 190 மருத்துவமனைகளோடு இணைந்து டெக் அடிமைத்தனத்துக்கு இவரது குழு சிகிச்சையளித்து வருகிறது. இணையத்தில் நம் நேரம் செரிக்கப்படுவதைத் தடுக்க Moment,Onward ஆகிய ஆப்கள் சிறப்பாக உதவுகின்றன.

மனதை வளைக்கும் தந்திரம்!

ஸ்நாப்சாட்டில் தொடர்ச்சியாக ஒருவாரம் சாட் செய்பவர்களின் பெயர்களுக்கு அருகில் நெருப்பு இமோஜி இடம்பெறும். நண்பர்களோடு ஒருநாள் சாட் செய்யாதபோது இவை மறைந்துவிடும். மேற்சொன்ன பார்முலாவுக்கு இதுவே சாம்பிள். சூதாட்ட கிளப்புகளில் வெளிப்புறத்தைக் காட்டும் ஜன்னல்களோ, கடிகாரங்களோ இருக்காது. அங்குள்ள மெஷின்களும் மூளையில் டோபமைன் சுரப்பைத் தூண்டுமாறு டிசைன் செய்யப்பட்டிருக்கும்.

Farmville சமூகவலைத்தள விளையாட்டில் பயனர்கள் குறிப்பிட்ட லெவலைத் தாண்டவும் பணம் கட்ட வைக்கவும் தந்திர ஃபார்முலாக்களைக் கையாண்டு ஜெயித்திருக்கிறார்கள். ‘‘மக்களின் தூக்கம்தான் நம் நிறுவனத்திற்கு ஒரே சவால்…’’ என முதலீட்டாளர் மாநாட்டில் நெட்ஃபிளிக்ஸ் இயக்குனர் ரீட் ஹாஸ்டிங்ஸ் பேசியுள்ளது டெக் நிறுவனங்கள் செல்லும் அபாய திசையைக் காட்டுகிறது.

லாபம் சமுதாயத்துக்கா? கம்பெனிக்கா?

‘‘மக்களுக்கு உதவும் சேவை என்பதைத் தாண்டி ஃபேஸ்புக் இனி சமுதாயத்துக்கான நலன்களையும் கருத்தில் கொள்ளும்…’’ என மார்க் அமெரிக்க செனட் சபையில் உன்னத வார்த்தைகளை சொல்லியிருந்தாலும் நடைமுறையில் இது சாத்தியமல்ல. ‘‘ஃபேஸ்புக்கில் நேரம் செலவிடும் ஒவ்வொருவரின் பழக்க வழக்கங்களையும் சிறுகச் சிறுகச் சேமித்து தகவல்தளமாக்கி அதனை மக்கள் யாரும் நெருங்க முடியாதபடி கவனமாக ஃபேஸ்புக் வடிவமைத்துள்ளது…’’ என்கிறார் ஸடான்ஃபோர்டு பல்கலைக்கழக உளவியலாளர் ஆடம் பிர்ஸிபைல்ஸ்கி. இன்று எத்தனை முறை வானம் பார்த்தீர்கள் என்ற கேள்வியை தினசரி கேட்டு நேர்மையான பதில் சொன்னால், ஸ்மார்ட்போன் தாண்டிய வாழ்வின் வாசனை உங்கள் ஆன்மாவையும் குளிரவைக்கும்!

நான் அடிமை அல்ல!

Onward: ஆப்ஸ்களை பயன்படுத்தும் நேரம், கட்டுப்பாடு ஆகியவற்றை இதில் செட் செய்து அடிக்‌ஷனை ஒழிக்கலாம்.

Steplock: காலையில் வாக்கிங், எக்சர்சைஸ் என தினசரி கடமையைச் செய்தால் மட்டுமே போனிலுள்ள ஆப்ஸ்களை பயன்படுத்தலாம். இல்லையெனில் ஆப்ஸ்களுக்கு லாக் விழுந்துவிடும்.

Dinnertime plus: குழந்தைகளின் தூக்கம், சாப்பாட்டுக்கான நேரம், வீட்டுப்பாட நேரம் ஆகியவற்றை பெற்றோர் தம் போனிலிருந்து கண்காணிக்க உதவும் செயலி இது.

Forest: விர்ச்சுவலாக இந்த ஆப் மூலம் மரக்கன்றை நட்டு மரமாகும்வரை உழைக்கவேண்டும். பொறுமையிழந்து வேறு ஆப் மாறினால் மரம் பட்டுப்போய் இறந்துவிடும்.

Yondr: பழைய ஆப் டெக்னிக்தான். ஸ்பெஷல் பவுச்சில் போனை வைத்துவிட்டால் ஸ்பெஷல் கீ இன்றி போனை ஆன் செய்ய முடியாது. பிரபலங்கள் நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது பயன்படுத்தலாம்.

ஸ்மார்ட் இந்தியா!

அதிகரிக்கும் ஸ்மார்ட்போன்கள் – 468 மில்லியன் (2021).
மொபைல்போன்களின் விகிதம் – 775.5 மில்லியன் (2018), 730 மில்லியன் (2017)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கடத்தல் காரர்களிடமிருந்து மீட்கப்பட்ட அரிய வகை கடல் ஆமைகள்!!( உலக செய்தி)
Next post கோட்டாவும் முஸ்லிம்களும்!!(கட்டுரை)