Bed coffee பிரியரா நீங்கள்? புதுசா ட்ரை பண்ணுங்களேன்!!(மருத்துவம்)

Read Time:25 Minute, 45 Second

காலை எழுந்ததும் பலர் கண் விழிப்பதே காபியில்தான். பல்கூட துலக்காமல் காபி, டீ பருகுபவர்கள்தான் இங்கு அதிகம். அந்த கெட்ட பழக்கத்துக்கு ‘பெட் காபி’ என்ற செல்லப் பெயர் வேறு உள்ளது. சிலருக்கு காபியோ டீயோ சாப்பிட்டால்தான் காலைக்கடனே முடிக்க முடியும்.அன்றாட உணவில் ஏதேனும் ஒருவேளை உணவைப் புறக்கணித்துவிட்டு வெறும் காபி, டீயிலேயே காலத்தைக் கடத்துபவர்களும் நிறைய பேர் உள்ளார்கள். தினசரி பத்து டீ சாப்பிடுபவர்கள், பத்து காபி சாப்பிடுபவர்களை சர்வசாதாரணமாக நம் ஊரில் பார்க்கலாம். அந்த அளவுக்கு காபிக்கும் டீக்கும் அடிமையாகிக் கிடக்கிறோம்.

இந்தியாவின் தேசிய பானங்களாக மாறிவிட்ட டீ, காபி சாப்பிடும் பழக்கம் நமக்கு போன நூற்றாண்டில் ஏற்பட்டதுதான். காலை எழுந்ததும் கஞ்சியோ கூலோ குடித்துவிட்டு வேலைக்கு ஓடும் பழக்கம்தான் நம் முப்பாட்டன்களுக்கு இருந்தது. இரண்டு மூன்று தலைமுறைக்கு முன்புதான் காபியும் டீயும் நம் நாக்கை அடிமைப்படுத்தின. காபியோ டீயோ ஒருநாளைக்கு இரண்டு வேளை பருகுவதால் எந்தக் கெடுதலும் இல்லை.ஆனால்-இந்த எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க நமது உடல்நலக் கோளாறுகளும் அதிகரிக்கும் என்பதை மறக்க வேண்டாம். காபி டீ சாப்பிடுவதை நிறுத்துவது என்பது சற்று சிரமமான காரியம். இதோ உங்களுக்காக சில ஆரோக்கியமான மாற்று பானங்கள். இவற்றைப் பழக்கப்படுத்திக்கொள்வதன் மூலம் காபி, டீ சாப்பிடும் பழக்கத்தையும் தக்க வைக்கலாம். ஆரோக்கியத்தையும் அரவணைக்கலாம்.

துளசி டீ

தேவையானவை: துளசி இலைகள் – 15, ஏலக்காய் – 4, சுக்கு – அரை அங்குலத்துண்டு, தேன் – 2 டீஸ்பூன், பால் – கால் கப் (விருப்பப்பட்டால்.)
செய்முறை: துளசி இலைகள், ஏலக்காய், சுக்கு ஆகியவற்றை நன்கு நசுக்கி, ஒரு டம்ளர் நீரில் சேர்த்து நிதானமான தீயில் கொதிக்கவிட வேண்டும். அரை டம்ளராக வற்றியதும் வடிகட்டி விருப்பப்பட்டால் பால், தேன் கலந்து பருகலாம்.
பலன்கள்: துளசி சளியை முறிக்கும். தொண்டைப் புண், தொற்றைச் சரியாக்கும். நுரையீரலுக்கு இதமானது.

இஞ்சி டீ

தேவையானவை: இஞ்சி – 2 அங்குலத் துண்டு, ஏலக்காய் – 2, பால் – கால் கப், பனஞ்சர்க்கரை – ஒரு டீஸ்பூன்.
செய்முறை: இஞ்சியைத் தோல் சீவி சுத்தம் செய்த பிறகு அதனுடன் ஏலக்காய் சேர்த்து தட்டி ஒரு டம்ளர் நீரில் போட்டு கொதிக்கவிட வேண்டும். பாதியாக வற்றியதும் வடிகட்டி, பால், பனஞ்சர்க்கரைச் சேர்த்துக் கலந்து அருந்தலாம்.
பலன்கள்: இதைக் காலை நேரம் அருந்துவது நலம். நெஞ்சு எரிச்சல், அஜீரணத்தைக் குணமாக்கும். செரிமானம் மேம்படும்.

க்ரீன் டீ – எலுமிச்சை

தேவையானவை: க்ரீன் டீ – அரை டீஸ்பூன், தேன் – 2 டீஸ்பூன், எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்.
செய்முறை: இரண்டு டம்ளர் நீரில் அரை டீஸ்பூன் க்ரீன் டீ தேயிலையைச் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். பாதியளவு வந்ததும் இறக்கி, வடிகட்டி, தேன், எலுமிச்சைசாறு சேர்த்துப் பருகலாம்.
பலன்கள்: க்ரீன் டீ இதயத்துக்கு நல்லது. எலுமிச்சையுடன் சேரும்போது தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும்.

ஆவாரம் பூ டீ

தேவையானவை: ஆவாரம் பூ, இலை, பட்டை, வேர், விதை ஐந்தும் சேர்த்து செய்த பொடி – 2 டீஸ்பூன் அல்லது காய்ந்த ஆவாரம் பூ – 10 -15, ஏலக்காய் – 2, பட்டை – சிறிய துண்டு, தேன் – ஒரு டீஸ்பூன், பால் – கால் கப்.
செய்முறை: இரண்டு டம்ளர் நீரில் ஆவாரம் பூப் பொடி, பட்டை, பொடித்த ஏலக்காய் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். பாதியளவு வந்ததும், வடிகட்டி தேன், பால் சேர்த்துப் பருகலாம்.
பலன்கள்: உடலில் சர்க்கரை அளவைச் சீராக்கும் குணம் ஆவாரம் பூவுக்கு உண்டு. ரத்தத்தை சுத்திகரிக்கும்.

பெரிய நெல்லி டீ

தேவையானவை: பெரிய நெல்லி – 3, மஞ்சள் பொடி – ஒரு டீஸ்பூன், மிளகு – 5, தேன்- தேவையான அளவு, எலுமிச்சைசாறு – 2 டீஸ்பூன்.
செய்முறை: நெல்லிக்காயை நன்கு தட்டிக்கொள்ளவும். மிளகைப் பொடிக்கவும்.இரண்டு டம்ளர் நீரில் இவற்றுடன் மஞ்சள் பொடி சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். நீர் ஒரு டம்ளராக வற்றியதும், எலுமிச்சை சாறு சேர்த்து, விருப்பப்பட்டால் தேன் சேர்த்துப் பருகலாம்.
பலன்கள்: இரும்புச்சத்து, ஆன்டிஆக்ஸிடென்ட்கள் நிறைந்த நெல்லி செரிமானத்தின் நண்பன். அல்சரைக் கட்டுப்படுத்தும், ரத்தத்தை சுத்திகரிக்கும். புற்றுசெல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும்.

முருங்கைப்பூ காபி

தேவையானவை: முருங்கைப் பூ பொடி – ஒரு டீஸ்பூன், பால் – ஒரு டம்ளர், பனங்கல்கண்டுப்பொடி – ஒரு டீஸ்பூன்.
செய்முறை: முருங்கைப் பூவை சுத்தம் செய்து உலர்த்தி பொடி செய்ய வேண்டும். காய்ச்சிய பாலில், இந்தப் பொடியையும் பனங்கல்கண்டுப் பொடியையும் சேர்த்துக் கலக்கி அருந்தலாம்.
பலன்கள்: முருங்கைப்பூவில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. ரத்தசோகையைப் போக்கும். ஆண்மையை அதிகரிக்கும்.

பேரீச்சை விதை காபி

தேவையானவை: பேரீச்சை விதைப்பொடி – ஒரு டீஸ்பூன், பால் – ஒரு டம்ளர், பனங்கற்கண்டு – ஒரு டீஸ்பூன்.
செய்முறை: பேரீச்சை விதையை வறுத்துப் பொடிசெய்ய வேண்டும். ஒரு டம்ளர் நீரில் ஒரு டீஸ்பூன் பொடி சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். பிறகு வடிகட்டி பால், பனங்கல்கண்டு சேர்த்து அருந்தலாம்.
பலன்கள்: இதை வாரம் ஒரு முறை பருகிவரலாம். பேரீச்சையில் இரும்புச்சத்து, நார்ச்சத்து, துத்தநாகம் உட்பட பல்வேறு சத்துகள் உள்ளன. ரத்தத்தைப்பெருக்கும். ரத்தசோகையை விரட்டும். உடலை உறுதியாக்கும்.

இஞ்சி க்ரீன் டீ

தேவையானவை: இஞ்சி – ஒரு அங்குலத்துண்டு, க்ரீன் டீ – ஒன்றரை டீஸ்பூன், தேன் அல்லது பனங்கல்கண்டு, பால் – கால் டம்ளர்.
செய்முறை: இஞ்சியை நன்கு தட்டிக்கொள்ள வேண்டும். அதை ஒரு டம்ளர் நீரில் சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதி வரும்போது தேயிலை சேர்க்க வேண்டும். சாறு இறங்கியதும் வடிகட்டி, பால், பனங்கல்கண்டுப் பொடி சேர்த்து அருந்தலாம்.
பலன்கள்: இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால் என்ற சத்து செரிமானத்தை மேம்படுத்தும். ரத்தத்தை சுத்திகரிக்கும்.

சுக்கு காபி

தேவையானவை: சுக்கு – ஒரு அங்குலத்துண்டு, ஏலக்காய் – 2, பனஞ்சர்க்கரை – 2 டீஸ்பூன், பால் – அரைகப்.
செய்முறை: சுக்கு, ஏலக்காயைச் சேர்த்துப் பொடி செய்ய வேண்டும். இவற்றை ஒரு டம்ளர் நீரில் சேர்த்து கொதிக்கவிடவும். பாதியாக குறைந்ததும், வடிகட்டி, பால், பனஞ்சர்க்கரை சேர்த்து கலக்கி மாலையில் பருகலாம்.
பலன்கள்: சுக்கு செரிமானத்துக்கு நல்லது. நெஞ்சு சளியை அறுக்கும். அஜீரணத்தைப் போக்கும்.

கொத்தமல்லி டீ

தேவையானவை: கொத்தமல்லி விதை – 100 கிராம், ஏலக்காய் – 2, பனஞ்சர்க்கரை – 2 டீஸ்பூன், பால் – அரைடம்ளர்.
செய்முறை: கொத்தமல்லி விதையை வெறும் கடாயில் வறுத்து, ஆறவிட்டு பொடிக்க வேண்டும். ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் கொத்தமல்லிப் பொடியைச் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். பிறகு இதில், ஏலக்காய் தட்டி சேர்க்கவும். நன்கு கொதித்ததும் எடுத்து, பால், பனஞ்சர்க்கரை சேர்த்துப்பருகலாம்.
பலன்கள்: கொத்தமல்லி ஜீரணத்துக்கு ஏற்றது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிெடன்ட்கள் ரத்தத்தை சுத்தம் செய்யும்.

சீரக பானம்

தேவையானவை: (சீரகம் – ஒரு டீஸ்பூன், ஏலக்காய் – 3, கிராம்பு – ஒன்று) சேர்த்து அரைத்த பொடி – ஒரு டீஸ்பூன், தேன் – ஒரு டீஸ்பூன்.
செய்முறை: ஒரு டம்ளர் கொதி நீரில் மேற்கூறிய பொடியைப் போட்டு, 5 நிமிடங்கள் கழித்து எடுத்து வடிகட்டி, தேன் கலந்து பருகலாம்.
பலன்கள்: தொண்டைக் கட்டு சரியாகும். செரிமானம் சீராகும். வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும். உடலுக்கு குளிர்ச்சி தரும்.

அறுகம்புல் பானம்

தேவையானவை: அறுகம்புல் – ஒரு கைப்பிடி, வெந்நீர் 1 டம்ளர்.
செய்முறை: அறுகம்புல்லை சுத்தம் செய்து, அரைத்து சாறு எடுக்க வேண்டும். பிறகு அந்த சாற்றைப் பிழிந்து, வெந்நீரில் கலந்து அருந்தலாம்.
பலன்கள்: இதை வாரத்திற்கு மூன்று நாட்கள் பருகலாம். இதனால் உடலில் சேர்ந்துள்ள நஞ்சுகள் வெளியேறும். உடல் குளிர்ச்சியடையும்.

மசாலா டீ

தேவையானவை: தேயிலை – 2 டீஸ்பூன், பட்டை – சிறிய துண்டு, கிராம்பு – 2, ஏலக்காய் – 2, பால் – அரை கப், சர்க்கரை – 2 டீஸ்பூன்.
செய்முறை: பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்துப் பொடிக்க வேண்டும். பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரை கொதிக்கவிடவும். அதில் தேயிலை மற்றும் செய்து வைத்துள்ள பொடியை கால் டீஸ்பூன் சேர்க்க வேண்டும். பாதி அளவு ஆனதும் இறக்கி வடிகட்டி, பால், சர்க்கரை சேர்த்துப் பருகலாம்.
பலன்கள்: கிராம்பு, பட்டை, ஏலக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிெடன்ட்கள் ரத்தத்தை சுத்திகரிக்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்
படுத்துகின்றன. மூளையின் செல்களைத் தூண்டி சுறுசுறுப்பைத் தருகின்றன.

செம்பருத்திப்பூ டீ

தேவையானவை: செம்பருத்தி பூ – ஒன்று, ஏலக்காய் – 2, மிளகு – 5, கிராம்பு – 2, பால் – அரை கப், பனங்கல்கண்டு – ஒரு டீஸ்பூன்.
செய்முறை: ஐந்து இதழ்கள் கொண்ட செம்பருத்திப் பூவை எடுத்து, காம்பு, மகரந்தத் தண்டை நீக்கிவிட்டு, ஒரு டம்ளர் நீரில் கொதிக்கவிட வேண்டும். இதனுடன் ஏலக்காய், கிராம்பு, மிளகு சேர்த்தப் பொடியைச் சேர்க்கவும். கொதித்ததும் வடிகட்டி, பால், பனங்கண்டு சேர்த்து பருகலாம்.
பலன்கள்: செம்பருத்தி நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளை சீராக்குகிறது.
உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறது.

தாமரைப்பூ டீ

தேவையானவை: வெண்தாமரை அல்லது செந்தாமரை – ஒன்று, மிளகு – 5, கிராம்பு – 2, ஏலக்காய் – 2, பால் – கால் டம்ளர், பனங்கல்கண்டு – ஒரு டீஸ்பூன்.
செய்முறை: இரண்டு டம்ளர் நீரில் காம்பு நீக்கிய தாமரைப் பூவை போட்டு கொதிக்கவிட வேண்டும். கொதி வரும்போது மிளகு, ஏலக்காய், கிராம்பு பொடி சேர்க்கவும். முக்கால் டம்ளர் அளவு வந்ததும் வடிகட்டி, பால், பனங்கல்கண்டு சேர்த்துப் பருகலாம்.
பலன்கள்: தாமரைப் பூ மூளைக்கும் நரம்பு மண்டலத்துக்கும் நல்லது. உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும். சுறுசுறுப்பை அதிகரிக்கும்.

புதினா டீ

தேவையானவை: புதினா இலை – 5, தேயிலை – ஒரு டீஸ்பூன், தேன் அல்லது பனங்கல்கண்டு – ஒரு டீஸ்பூன், பால் – கால் டம்ளர் விருப்பப்பட்டால்.
செய்முறை: ஒரு டம்ளர் நீரில் ஐந்து புதினா இலைகளை ஒரு டீஸ்பூன் தேயிலையுடன் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். பாதியளவு வந்ததும் வடிகட்டி, தேன் அல்லது பனங்கல்கண்டு சேர்த்துப் பருகலாம். விருப்பப்பட்டால் பால் சேர்க்கலாம்.
பலன்கள்: புதினா சுவாசத்தை புத்துணர்ச்சியாக்கும். வாய்ப்புண்ணுக்கு நல்லது. நுரையீரல் வலுப்படும். செரிமானம் சீராகும்.

சோம்பு டீ

தேவையானவை: சோம்பு – 2 டீஸ்பூன், ஏலக்காய் – 2, தேன் – ஒரு டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)
செய்முறை: சோம்பு, ஏலக்காய் சேர்த்துப் பொடி செய்ய வேண்டும். இரண்டு டம்ளர் நீரில் இந்தப் பொடியைச் சேர்த்துக் கொதிக்க விடவும். ஒரு டம்ளராக வற்றியதும் வடிகட்டி விருப்பப்பட்டால் தேன் சேர்த்து பருகலாம்.
பலன்கள்: சோம்பில் உள்ள ஆன்டிஆக்ஸிெடன்ட்கள் புற்றுசெல்களைக் கட்டுப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

ஏலக்காய் டீ

தேவையானவை: க்ரீன் டீ – 2 டீஸ்பூன், ஏலக்காய் – 2, பால் – ஒரு கப், நாட்டுச்சர்க்கரை –
2 டீஸ்பூன்.
செய்முறை: ஒரு கப் பாலுடன் அரை கப் நீர் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். அதில் தேயிலையுடன் தட்டிய ஏலக்காய் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். டிகாக்ஷன் இறங்கியதும், வடிகட்டி நாட்டுச்சர்க்கரை சேர்த்துப் பருகலாம்.
பலன்கள்: ஏலக்காய் செரிமானத்தின் நண்பன். சுவாசத்தை புத்துணர்வாக்கும். உடலுக்கு உடனடி சுறுசுறுப்பைத் தரும்.

பட்டை டீ

தேவையானவை: க்ரீன் டீ – 2 டீஸ்பூன், பட்டைப்பொடி – கால் டீஸ்பூன், தேன் – ஒரு டீஸ்பூன்.
செய்முறை: கொதிக்கும் நீரில் தேயிலை, பட்டைப் பொடி சேர்த்துக் கொதிக்கவிட
வேண்டும். பின் வடிகட்டி தேன் சேர்த்து அருந்தலாம். விருப்பப்பட்டால் பால் சேர்க்கவும்.
பலன்கள்: பட்டையில் உள்ள ஆன்டிஆக்ஸிெடன்ட்கள் செரிமானத்தை மேம்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். புற்றுசெல்களைக் கட்டுப்படுத்தும்.

ஆரஞ்சு தோல் டீ

தேவையானவை: ஆரஞ்சு தோல் பொடியாக நறுக்கியது – 2 டீஸ்பூன், ஏலக்காய் – 2, தேன் – 2 டீஸ்பூன்.
செய்முறை: ஆரஞ்சு தோலின் வெள்ளைப் பகுதியை எடுத்து விட்டு, பொடியாக நறுக்கவும். இரண்டு டம்ளர் நீரில் அதைப் போட்டு கொதிக்கவிட வேண்டும். கொதிக்கும்போது, தட்டிய ஏலக்காய் சேர்க்கவும். பாதியளவு வந்ததும், எடுத்து வடிகட்டி தேன் சேர்த்து பருகலாம்.
பலன்கள்: ஆரஞ்சு தோலில் உள்ள இயற்கை அமிலங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும். ரத்தத்தை சுத்திகரிக்கும். நெஞ்சு எரிச்சல் அகலும்.

ரோஸ்மேரி

தேவையானவை: க்ரீன் டீ – ஒரு டீஸ்பூன், ரோஸ் மேரி துகள்கள் – அரை டீஸ்பூன், தேன் – ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: ஒரு டம்ளர் கொதிக்கும் நீரில் க்ரீன் டீ ரோஸ்மேரி துகள் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். சாறு இறங்கியதும் வடிகட்டி தேன் சேர்த்துப் பருகலாம்.
பலன்கள்: இதில் உள்ள கார்னோசிக் அமிலம் அல்சைமர் எனும் மறதிநோய்க்கு நல்ல மருந்து. மூளை செல்களைத் தூண்டும். நரம்பு
மண்டலத்தை வலுவாக்கும்.

தைம் (Thyme)

தேவையானவை: க்ரீன் டீ – ஒரு டீஸ்பூன், தைம் – கால் டீஸ்பூன், பனங்கல்கண்டு – ஒரு டீஸ்பூன்.
செய்முறை: க்ரீன் டீயுடன் தைம் சேர்த்து கொதிக்கவிட வேண்டும். சாறு இறங்கியதும் வடிகட்டி தேன் அல்லது பனங்கல்கண்டு சேர்த்துப் பருகலாம்.
பலன்கள்: காசநோய்க்கு நல்ல மருந்து. மார்புச்சளியை அறுக்கும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும்.

மல்லிகைப் பூ க்ரீன் டீ

தேவையானவை: க்ரீன் டீ – ஒரு டீஸ்பூன், மல்லிகைப் பூ – 2 டீஸ்பூன், பனங்கல்கண்டு – ஒரு டீஸ்பூன்.
செய்முறை: மல்லிகைப் பூக்களை இரண்டு மணி நேரம் நீரில் போட்டு மூடி எடுத்தால்
மல்லிகைப்பூ வாசனை நிறைந்த நீர் ரெடி, இதைக் கொதிக்கவைத்து க்ரீன் டீ சேர்க்க வேண்டும். பிறகு, வடிகட்டி பனங்கல்கண்டு சேர்த்து அருந்தலாம்.
பலன்கள்: மல்லிகைப்பூ வயிற்றில் உள்ள கிருமிகளை அழிக்கும். தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாகும்.

ஆரிகானோ டீ

தேவையானவை: தேயிலை – ஒரு டீஸ்பூன், ஆரிகானோ – கால் டீஸ்பூன், தேன் – 10 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: தேயிலையுடன் ஆரிகானோ சேர்த்து கொதிக்கவிட்டு, வடிகட்ட வேண்டும். இதனுடன் தேன் சேர்த்துப் பருகலாம்.
பலன்கள்: சுவாசத்தை புத்துணர்வாக்கும். செரிமானத்தை மேம்படுத்தும்.

ஓமவல்லி டீ

தேவையானவை: ஓமவல்லி இலைகள் – 5, மிளகு – 5, க்ரீன் டீ – ஒரு டீஸ்பூன், பனங்கல்கண்டு – 2 டீஸ்பூன்.
செய்முறை: க்ரீன் டீயுடன் ஓமவல்லி இலைகள், மிளகு சேர்த்து கொதிக்கவிட வேண்டும். பிறகு வடிகட்டி, பனங்கல்கண்டு சேர்த்துப்
பருகலாம்.
பலன்கள்: ஓமவல்லி செரிமானத்துக்குச் சிறந்தது. வயிற்றுப்புண்களை குணமாக்கும். அஜீரணத்தைப் போக்கும்.

பன்னீர் ரோஸ் டீ

தேவையானவை: க்ரீன் டீ – ஒரு டீஸ்பூன், பன்னீர் ரோஜா – 2, தேன் – 2 டீஸ்பூன்.
செய்முறை: இரண்டு டம்ளர் நீரில் பன்னீர் ரோஜாக்களைப் போட்டு மூடிவைக்க வேண்டும். இரண்டு மணி நேரம் கழித்து அந்த நீரை எடுத்து அதில் க்ரீன் டீ சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். பிறகு வடிகட்டி தேன் சேர்த்து அருந்தலாம்.
பலன்கள்: ரோஜா இதழ்கள் ரத்தத்தை சுத்திகரிக்கும். உடலில் உள்ள கழிவுகளை நீக்கும். சருமத்துக்கு நல்லது.

தூதுவளை பானம்

தேவையானவை: தூதுவளை பூ, காய், இலை சேர்த்து உலர்த்தி பொடி செய்தது – 2 டீஸ்பூன், மிளகு – 5, பனங்கல்கண்டு – 2 டீஸ்பூன்.
செய்முறை: இரண்டு டம்ளர் நீரில் தூதுவளைப் பொடி சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். இதனுடன் மிளகு சேர்க்கவும். மிதமான தீயில் கொதிக்கவிடவும். பிறகு வடிகட்டி தேன் அல்லது பனங்கல்கண்டு சேர்த்து கலக்கிப் பருகலாம்.
பலன்கள்: தூதுவளை மார்புச் சளிக்கு நல்ல மருந்து. நுரையீரலை வலுவாக்கும். ரத்தத்தை சுத்தமாக்கும்.

வல்லாரை பானம்

தேவையானவை: வல்லாரை இலைகள் – 25, சீரகம் – ஒரு டீஸ்பூன், தேன் – 2 டீஸ்பூன்.
செய்முறை: இரண்டு டம்ளர் நீரில் வல்லாரை இலைகள், சீரகம் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். பாதியாக வற்றியதும், வடிகட்டி தேன்
சேர்த்துப் பருகலாம்.
பலன்கள்: வல்லாரை மூளையின் நண்பன். நினைவாற்றலைப் பெருக்கும். நரம்புகளை வலுவாக்கும்.

கருப்பட்டி காபி

தேவையானவை: காபித்தூள் – 2 டீஸ்பூன், கருப்பட்டி – கால் கப்.
செய்முறை: கருப்பட்டியைக் கரைத்து வடிகட்டிகொள்ள வேண்டும். காபித்தூளை கொதிக்கும் நீரில் போட்டு இறக்கவும். பின், வடிகட்டி கருப்பட்டி சேர்த்து சூடாகப் பருகலாம்.
பலன்கள்: கருப்பட்டி காபி உடனடியாக உடலுக்கு ஆற்றலைத் தருவது. கல்லீரலுக்கு ஏற்றது.

காஷ்மீரி காவா சாய்

தேவையானவை: க்ரீன் டீ – ஒரு டீஸ்பூன், ஏலக்காய் – 2, பட்டை – சிறிய துண்டு, பாதாம் பருப்பு பொடித்தது – ஒரு டீஸ்பூன், குங்குமப்பூ – ஒரு சிட்டிகை, உப்பு – 1 சிட்டிகை, சர்க்கரை – 2 டீஸ்பூன்.
செய்முறை: மூன்று கப் நீரைக் கொதிக்கவிட வேண்டும். அதில் க்ரீன் டீயுடன் ஏலக்காய், பட்டையைப் பொடித்துச் சேர்க்கவும். மிதமான தீயில் கொதிக்கவிட வேண்டும். பாதி ஆனதும் குங்குமப்பூ சேர்க்கவும். சிட்டிகை உப்பு சேர்க்கவும். நன்கு கலக்கவும். சர்க்கரை சேர்த்துக் கலக்கி வடிகட்டி பரிமாறவும். (இதில் வெண்ணெய் சேர்த்தும் பரிமாறலாம்)
பலன்கள்: உடலுக்கு உடனடி ஆற்றல் தருவது. இதில் உள்ள குங்குமப்பூ செரிமானத்தை மேம்படுத்தும். பாதாம் உடலில் நல்ல கொழுப்பைச் சேர்க்கும். பட்டை நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மீண்டும் முருங்கையில் ஏறிய வேதாளம்!!(கட்டுரை)
Next post ஃப்ரிட்ஜை பராமரிப்பது எப்படி?(மகளிர் பக்கம்)