நகை மாட்டும் ஸ்டாண்டா பெண்?!!(மகளிர் பக்கம்)
தங்கத்தில் முதலீடு என்பது உடனடி நிதி நெருக்கடியை சமாளிக்க உதவும் ஒரு சேமிப்பு. தங்கத்தின் மதிப்பு விண்ணைமுட்டும் அளவு உயர்ந்து நிற்கும் நிலையில், நமது நீண்டநாளைய சேமிப்பை, தங்க ஆபரணங்கள் என்ற பெயரில் “நகை மாட்டும் ஸ்டாண்டாக” பெண்கள் தங்களை பாவித்து, பொதுவெளிகளில் நடமாடுவதும், தங்களின் பகட்டை வெளி உலகிற்கு காட்டுவதாக நினைத்து உலகம் அறியா சிறுசுகளின் அங்கங்களில் தங்க ஆபரணங்களைப் பூட்டி அழகு பார்ப்பதும், நெருங்கிப் பழகுபவரிடம் தங்க நகைகளை இரவல் பெற்று வாங்கி அணிந்து செல்வதும் ஏனோ? பகட்டை வெளிப்படுத்த பெண்கள் அணியும் ஆபரணங்கள் பல நேரங்களில் அவர்களின் உயிருக்கே ஆபத்தாய் அமைகிறது.
சமீபத்தில் ஜன நெருக்கடி அதிகம் உள்ள சென்னை மற்றும் பிற முக்கிய நகரங்களில் மக்களை அடிக்கடி அதிர்ச்சிக்குள்ளாக்கும் செய்தி செயின் பறிப்பு குறித்த செய்தியாகவே இருக்கிறது. மோட்டார் சைக்கிளில் வரும் மர்ம நபர்கள் தனியாகச் செல்லும் பெண்களைக் குறிவைத்து செயினைப் பறித்து மின்னல் வேகத்தில் மறைகின்றனர். செயினைப் பறிகொடுப்பதுடன், அந்த கனநேர அதிர்ச்சியில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் காயம் அடையும் பெண்கள் இங்கு அதிகம். சில நேரங்களில் இது உயிரிழப்புவரைக் கொண்டு செல்கிறது. கடந்த இரண்டு மாதங்களில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவங்கள்…
சம்பவம் 1
சென்னை, அண்ணாநகர் சிந்தாமணி பகுதியில் டாக்டர் தம்பதியினர் வசித்து வருகின்றனர். கணவர் அரசு மருத்துவராய் பணியாற்றி ஓய்வு பெற்ற நிலையில், மகப்பேறு மருத்துவரான அவர் மனைவி அமுதா தாங்கள் குடியிருக்கும் வீட்டின் கீழ் தளத்தில் கிளினிக் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.உதவியாளர் யாரும் இல்லாத நிலையில் தனியாக இருந்த டாக்டர் அமுதா விடம் இரவு நேரத்தில் இளைஞர் ஒருவர், அவரிடம் நோயாளிபோல் அணுகியுள்ளார்.
எதிர்பாராத நேரத்தில் அந்த இளைஞர் டாக்டர் அமுதாவை மிரட்டி அவர் கழுத்திலிருந்த 10 சவரன் செயினையும் பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் ஓடியுள்ளார். செயினைப் பறிகொடுத்து, அதிர்ச்சியடைந்த டாக்டர் அமுதா அந்த இளைஞரின் பின்னாலேயே திருடன், திருடன் எனக் கூச்சலிட்டிருக்கிறார். அவரின் கிளினிக் எதிர்ப்புறம் கார் உதிரிபாகக் கடையில் பணியாற்றும் சூர்யா என்ற சிறுவன் அமுதா வின் கூச்சலை கேட்டு, செயினோடு ஓடிய இளைஞனை ஒரு கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்று, போராடிப் பிடித்து, செயினை மீட்டதுடன், அண்ணா நகர் காவல் நிலையத்தில் பொதுமக்கள் உதவியோடு செயின் பறித்த இளைஞனை ஒப்படைத்திருக்கிறான்.
சிறுவன் தனியாகப் போராடி சங்கிலி பறிப்பு நபரை விரட்டிப் பிடித்தது ஊடகங்களில் மிகப் பெரிய செய்தியாக சமீபத்தில் வெளியானது. சிறுவனைத் திருடன் கத்தி போன்ற ஆயுதம் வைத்து தாக்கியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என ஊடகவியலாளர்கள் அவனிடத்தில் கேட்ட போது “சொல்ல முடியாது பெரிய அளவில் காயமோ அல்லது உயிரே கூட போயிருக்கலாம். ஆனால் அந்த நேரத்தில் அதையெல்லாம் நான் யோசிக்கவே இல்லை” என்று அச்சிறுவன் சூர்யா பதில் அளித்திருந்தான்.
சம்பவம் 2
பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த மேனகா என்பவர் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அரும்பாக்கம் வந்துள்ளார். சாலையில் நடந்து சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மற்றும் அவர்களில் பின்னால் இருந்த மர்ம நபர் ஒருவரும் மேனகாவின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறித்துள்ளனர். சுதாரித்த மேனகா கழுத்தில் அணிந்திருந்த தன் நகைகளை இறுக்கிப் பிடித்திருக்கிறார். மர்ம நபர்கள் தொடர்ந்து அவரின் கழுத்தில் இருந்த செயினை இழுத்ததால் மேனகா நிலை தடுமாறிக் கீழே விழுந்துள்ளார்.
அந்த நேரத்தில் பைக்கில் இருந்த நபர்கள் மேனகாவின் தங்கச்சங்கிலியை கையில் பிடித்துக்கொண்டு அவரை சாலையில் தரதரவென்று இழுத்துக்கொண்டே பைக்கில் சென்றிருக்கின்றனர். ஒரு கட்டத்தில் அவர் கழுத்தில் இருந்த 15 பவுன் தங்கச் செயினைப் பறித்துக்கொண்டு, அவரை அப்படியே கீழே தள்ளிவிட்டு அந்த மர்மநபர்கள் தப்பிவிட்டனர். இதில் மேனகா படுகாயம் அடைந்தார். இந்தக் கொடூரச் சம்பவம் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
சம்பவம் 3
திருவொற்றியூரை சேர்ந்த சுரேஷ் மற்றும் அவரின் மனைவி சங்கீதா. இவர்கள் இருவரும் உறவினர் வீட்டு திருமணத்திற்காக அண்ணா நகரில் உள்ள திருமண மண்டபத்திற்குச் சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் இரவு வீடு திரும்பினார்கள். அண்ணாநகர், போலீஸ் நிலையம் அருகே வந்தபோது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இவர்கள் மீது மோதி கீழே தள்ளியதுடன், அச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சங்கீதா கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு தலைமறைவாகி விட்டனர். மிகச் சமீபத்தில் போலீஸ் நிலையம் அருகிலேயே நடந்த இச்சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பவம் 4
மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் வேலுமணி. இவரின் மனைவி உமாதேவி கொளத்தூர் பகுதியில் தெருவில் நடந்து சென்றபோது, எதிரே வந்த 2 வாலிபர்கள் முகவரி கேட்பதுபோல் உமாதேவியின் அருகில் வந்து, அவர் சுதாரிப்பதற்குள் திடீரென உமாதேவியின் கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் பைக்கில் மறைந்திருக்கின்றனர். அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்கள் அனைத்துமே பெண்கள் அணியும் ஆபரணங்களை குறிவைத்தே நிகழ்த்தப்பட்டுள்ளன.
நகை மாட்டும் ஸ்டாண்டாக தங்களை பெண்கள் பாவிப்பது ஏன்? அழகையும் ஆடம்பரத்தையும் தாண்டி அணிகலன்களால் உங்கள் உடமைக்கும் உயிருக்கும் பாதுகாப்பில்லை என்றான பிறகு, மதிப்புமிக்க ஆபரணங்களைக் கொண்டு உங்கள் காதுக்கும் மூக்கிற்கும் அல்லது காதுக்கும் கூந்தலுக்குமாய் கொடுக்கும் இணைப்புக்களையும், கண்ணைக் கவரும் விதத்தில் கழுத்தில் பளபளவென கனமாக அணியும் அணிகலன்களையும் தவிர்க்கலாமே…!!? படிப்பதற்காகவும், பொருளாதாரத் தேவைகளுக்காகவும் பெண்கள் அதிகம் வெளியில் செல்ல வேண்டிய நிலையில், தாங்கள் அணிந்திருக்கும் ஆபரணங்களால் உயிருக்கே ஆபத்து என்கிற நிலையில், அந்த ஆபத்தை ஏன் விலை கொடுத்து வாங்க வேண்டும்..?