By 13 June 2018 0 Comments

மேற்குலகின் மையம்!!(மகளிர் பக்கம்)

தலை நிமிர்ந்து தெரு முழுவதும் நிரம்பி இருந்த கட்டடங்களைப் பார்த்தோம். வேறு ஏதோ உலகத்தில் இருப்பது போன்ற பிரமை ஏற்பட்டது. அவ்வப்பொழுது, ஐஸ்கட்டிகள் ‘பட்பட்’ டென கீழே விழுந்தன. அந்த ஐஸ்கட்டிகள்கூட ஏதோ எந்திரம் மூலம் ஷேப் செய்யப்பட்டது போன்றிருந்தன. காரின் மேல் விழுந்தால், கண்ணாடிகள் உடையும்படியும், பொருட்கள் நொறுங்கும்படியும் பலமான கட்டிகளாகயிருந்தன.

வழி முழுவதும் காணப்படும் தோட்டங்களையும், மரங்களையும் வியப்புடன் பார்த்தோம். மரங்களின் இலைகளில்தான் எத்தனையெத்தனை நிறங்கள்! சில மரங்கள் அழகான பிரவுன் நிறம், ரோஸ் நிறம், சிவப்பும், மஞ்சளும் கலந்தவையென கண்களுக்கு விருந்தளித்த வண்ணம் காணப்பட்டன. என்ன ஒரு இயற்கையின் மாயம்! அழகையெல்லாம் ஒரே இடத்தில் கொட்டியதுபோல காணப்பட்டது.

மரங்கள் மட்டுமா அழகு? பூக்களைப்பற்றிச் சொல்லவே வேண்டாம். என்னென்ன நிறங்கள்? செடிகளின் இலைகளைவிட பூக்களே அதிகம் காணப்பட்டன. மிகச்சிறிய செடியாகயிருந்தாலும், அதில் பூக்களும், மொட்டுக்களும் மண்டிக் கிடந்தன. வண்ணங்களை சொல்லவே முடியாது. அப்படியொரு நிறங்களின் கூட்டு. அனைத்து இயற்கை அழகும் இங்குதான் கொட்டிக்கிடக்கிறதோ என்று நினைக்கும்அளவுக்கு இயற்கையின் அழகு! இதில் ஆச்சரியமென்னவென்றால், ஒரே தொட்டியில் பலவித ‘வெரைட்டி’களில் பூக்கள். அவற்றை அலசி ஆராய்ந்து, செடிகளின் கூட்டை அமைப்பார்கள் போலும்! ஒவ்வொரு கிளையிலும் ஒவ்வொரு விதமான பூங்கொத்து! தரையில் உட்கார்ந்து விடலாம் என்றுகூட தோன்றும்.

அப்படி ஒரு சுத்தம். சிறிது நமக்கு வயிற்றுக்குக் கிடைத்தால்கூட போதும்! கண்களுக்கும், மனதிற்கும் விருந்து கிடைத்துவிட்டதே என்று எண்ணத்தோன்றும். ‘குளிர்காற்று அடித்தால் என்ன, பனி மழை பெய்தால் என்ன’ அனைத்தையும் ரசித்துக்கொண்டு, வீட்டிற்குள் நுழைந்தாலும், மிதமான வெப்பம் நம்மை அரவணைத்து, அன்போடு வரவேற்றது. வெளியில் நடக்கும்பொழுது கதகதப்பாக‌ இருக்கும். இந்த அனுபவமும் முதன் முதலில்தான். பின் அதுவே நமக்கு ‘த்ரில்’ ஆகத் தோன்றும். நாங்கள் இருந்த இருப்பிடத்தில், சுற்றிலும் நிறைய சீனர்களும், அமெரிக்கர்களும்தான். எங்காவது, ‘ஓர் இந்தியரைப் பார்க்க மாட்டோமா’ என்று முதலில் தோன்றியது. ஆனால், கல்லூரிக்குச் சென்று பார்த்தவுடன், ஓர் இந்திய சூழ்நிலையும் தென்பட்டது.

ஆமாம், இந்தியாவின் மூலை முடுக்குகளிலிருந்தெல்லாம், வந்திருந்த மாணவர்களைக்காண முடிந்தது. பொறியியல், தொழிற்கல்வி, மருத்துவக்கல்வி என அனைத்திலும் இந்திய மாணவர்கள் காணப்பட்டார்கள். முதலில் அங்கு நடந்த ஒரு பட்டமளிப்பு விழாவில் பங்கு கொண்டோம். பெரிய அளவில் பல கோடிகள் செலவழித்து செய்யப்படும் திருமணங்கள்கூட அப்படியிருக்காது. உலகத்திலுள்ள அனைத்துப் படித்த அறிவாளிகள் ஒன்றுகூடினால் எப்படியிருக்குமோ அப்படிக் காணப்பட்டது கல்லூரி அரங்கமும், ஆடிட்டோரியமும். அத்தனை பேர் ஒன்றுகூடினாலும், ஆரம்பிக்கும் விழாவோ முடியும் சமயமோ ஒரு நிமிடம்கூட தாமதம் இல்லை. அத்தனை மாணவர்களும் பேண்ட் வாத்தியங்களுடன், புகைப்படக்காரர்கள் பொறுமையோடு பின்தொடர்ந்து செல்ல, அவரவர் இருக்கைக்கு அணிவகுத்துச் செல்வது வரை சிறப்பான‌ ஏற்பாடு.

அங்கு கூடியிருந்தவர்கள் முகத்தில் சந்தோஷத்தை பார்க்க முடிந்தது. மாணவர்கள் யாரும் எந்த நாட்டவர், எந்த மொழிக்காரர் என்றெல்லாம் யோசிக்கக்கூடவில்லை. ஒருவருக்கொருவர், பாட்ச் சொருகி விட்டும், கோட் அணிவதில் உதவி செய்துகொண்டும் மகிழ்ச்சிகளை பரிமாறிக் கொண்டனர். தங்கள் குடும்பத்தினருடன் ஒவ்வொருவரும் புகைப்படம் எடுத்துக்கொள்ள மற்றவர் தானே வலிய வந்து உதவுவது இதயத்தைத் தொட்டது. நம்மைப்போல பிறரையும் நினைக்க வேண்டும் என்று சொல்லுவோம். அது உண்மைதான். ‘மே ஐ ஹெல்ப் யூ?’ என்று ஒருவர் மற்றொருவரிடம் கேள்வி கேட்டுக்கொண்டு, மரியாதையுடன் உதவுவது என்பது சிறப்புக்குரியது. நாங்கள் அங்கு இருக்கும்பொழுது, வேறு ஒரு வீடு மாற நேர்ந்தது. இங்குபோல் அங்கு பேக்கர்ஸ் வைத்து பொருட்களை எடுத்துச்செல்வது மிகவும் கடினம்.

காரணம், ஆட்களுக்கு பணம் தந்து வேலை செய்வது கட்டுப்படியாகாது. பெரும்பாலும் அதை யாரும் விரும்புவதில்லை. மாணவர்கள் யாராவது வீடு காலி செய்ய நேரிட்டால், அவர்கள் நண்பர்கள், சக ஊழியர்கள் போன்றவர்களுக்கு மின்னஞ்சலில் விஷயத்தைத் தெரியப்படுத்துவார்கள். அதைப் படித்து விட்டு, அன்றைய தினத்தில் யார் யார் ஓய்வில் இருப்பார்களோ அல்லது யாரால் வந்து உதவ முடியுமோ, அவர்கள் முன்கூட்டியே சொல்லிவிடுவார்கள். அதன்படி ஒவ்வொருவரும் பொருட்களை எடுத்துச்செல்ல உதவுவர். நாங்கள் வீடு மாறும்பொழுது, இரண்டு பேர் டிரக் எடுத்து (வாடகைக்கு) வந்தார்கள். இரண்டு பேர் பொருட்களை அடுக்கி வைத்தார்கள். பொறுமையாக அனைத்தையும் புதிய இடத்திற்குக்கொண்டு வந்து சேர்த்தனர். ஒரு ‘டீம் ஒர்க்’ என்று சொல்வோமே, அதை எனக்குப் பார்க்க முடிந்தது.

பிள்ளைகள் இரவு ஒரு மணியானாலும் வேலையை முடித்துக் காட்டியது எனக்குப் பெருமிதத்தையும், கண்களில் ஆனந்தக் கண்ணீரையும் வரவழைத்தது. ஒரு தாயாக, மற்றப் பிள்ளைகளையும், என் பிள்ளையாகவே நினைக்கத் தோன்றியது. என் மகனும் அவ்வப்பொழுது, அவன் நண்பர்கள் வீடு மாறுவதால் உதவ வேண்டும் என்று கூறியதெல்லாம் இப்பொழுது எனக்குச் சரியெனப் புலப்பட்டது. எல்லாம் சட்டப்படியே நியாயமாகவே நடைபெற்றன. இங்கு போலவே 11 மாதங்கள் வாடகைக்கு பத்திரம் எழுதித் தருவர். தொடர்ந்து இருப்பவர்களுக்கு மீண்டும் புதுப்பித்துத் தருவர். வீட்டுக்கு ரொம்பவும் முன்பணம் பெரும்பாலோர் கேட்பதில்லை. அதுவும் படிக்கும் மாணவர்களுக்கு ரொம்பவும் சலுகைகள்.

ஓரிரு மாதங்கள் முன்பணம் வாங்கினாலும், நம் விருப்பப்படி சிலர், வீட்டிற்கு புதிய ‘பெயின்டிங்’ போன்றவற்றை செய்து தருவர். நாம் ஏதாவது பொருளை நஷ்டம் செய்திருந்தால் மட்டும் அதற்கான செலவை எடுத்துக்கொண்டு, மீதமுள்ள முன்பணத்தை நம் கணக்கில் செலுத்தி விடுவர். பெரிய அபார்ட்மென்ட்களில் நீச்சல் குளம் முதல் கிரிக்கெட் அல்லது பாஸ்கெட் பால் போன்ற விளையாட்டு மைதானங்களும் அமைந்திருக்கும். குளிர்காலங்களில் வெறிச்சோடி காணப்படும் மைதானங்களில், கோடை ஆரம்பித்தால், திருவிழா போன்று கூட்டம் அலை மோதும். சூரியன் இரவு ஒன்பது மணிவரைகூட சில சமயங்களில் மறையாது. அதனால் பிள்ளைகள் வெகுநேரம் தங்கள் பொழுதுபோக்குகளில் மகிழ்ந்து திளைப்பர். அதைப்பார்த்து பெற்றோரும் மகிழ்வர்.

குழந்தைகள் மூலம் பெற்றோர்களுக்கும் நட்பு வட்டம் அதிகரிக்கும். குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர்கள், குழந்தைகள் விளையாடி முடிக்கும் வரை ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்துகொண்டு, தங்களின் நட்பை வளர்த்துக்கொள்வதைப் பார்க்கலாம். பெரும்பாலான குடும்பங்களில் தாய்-தந்தை இருவரும் குழந்தைகளுடன் வருவார்கள். பெண்களில் முக்கால்வாசிப்பேர் அலுவலகங்களில் வேலை செய்பவர்கள். ஆனால் அவர்களுக்கு ஒரு சில வசதிகள் உண்டு. வேலைக்கு காலையில் வெகு சீக்கிரம் புறப்பட்டுச் சென்றுவிட்டு, குழந்தைகள் பள்ளியிலிருந்து வரும் சமயம் வீட்டிற்குத் திரும்பி விடுவார்கள். அலுவலகத்திற்கு அருகில் வசிப்பவர்கள் மதியம் சாப்பாட்டிற்கு வீட்டிற்கு வருவதும் உண்டு.

பள்ளிக்கல்வி மட்டுமல்லாமல், அவர்களுக்கு விருப்பக் கல்வி தருவதில் பெற்றோருக்கு ஆர்வம் அதிகம். அதுபோல் உடல்நலனில் அக்கறை காட்டுவதில் அவ்வளவு ஈடுபாடு, எப்படிப்பட்ட தொழிலில் இருந்தாலும், ஆறுமாத குழந்தையைக்கூட, தொட்டிலில் வைத்து தள்ளிக்கொண்டு உடற்பயிற்சியில் ஈடுபடு வார்கள். ஏரிக்கரைகளில் காணப்படும் புல்தரைகளிலும், பெஞ்சுகளிலும் குடும்பத்தோடு அமர்ந்து ஓய்வு எடுத்துக்கொண்டு, மீண்டும் நடைப்பயிற்சியை மேற்கொள்வார்கள். சனி, ஞாயிறு வரை விடுமுறை நாட்களென்றால், வீட்டை சுத்தப்படுத்தி அழகுபடுத்துவதும், குடும்பத்துடன் செலவழித்து குதூகலப்படுவதும் பார்ப்பதற்கு பரவசம்தான்!Post a Comment

Protected by WP Anti Spam