By 16 June 2018 0 Comments

குற்ற உணர்வு!!(மகளிர் பக்கம்)

வாசகர் பகுதியில் ‘நான் ஒரு கொலைகாரன்’ என்ற உண்மை சம்பவத்தைப் படித்ததும் நான்கு வருடங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்ற போது நடந்த நிகழ்ச்சியை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.‘‘அம்மா, எனக்கு ‘குமானில்’ (என் மருமகள் நடத்தும் கணிதம், ஆங்கில பள்ளி) மீட்டிங் இருக்கிறது. நித்யாவின் மாமியார் நேற்று வந்திருப்பதால் அவரிடம் அவளுடைய மூன்று வயது குழந்தையை விட்டு விட்டு வந்து உங்களை காரில் மாலுக்கு (Mall) அழைத்துப் போவாள்.

வரலஷ்மி நோன்பிற்கு தேவையான மளிகை சாமான்களை வாங்கிக் கொள்ளுங்கள்’’என்று சொல்லி விட்டு, என் மருமகள் லதா காரில் கிளம்பி போய் விட்டாள். நானும் செய்ய வேண்டிய வேலைகளை முடித்துக் கொண்டு காத்திருந்தேன். லதாவின் தோழி நித்யா வரும் வரை. மணி பத்தாயிற்று, பதினொன்றாயிற்று அவள் வரவில்லை. அவள் மொபைல் நம்பருக்கு போன் பண்ணினேன், எடுக்கவில்லை. என் மருமகளுக்கே போன் பண்ணி விஷயத்தை சொன்னேன்.

‘‘அம்மா! என் மீட்டிங் முடிந்து விட்டது. நான் வருகிறேன். நாம் இருவருமாக அவள் வீட்டிற்கு போய் பார்த்து விட்டுப் போகலாம்’’ என்றாள். அமெரிக்காவில் எல்லா வீடுகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருக்கும். கீழே உள்ள பகுதியை ‘பேஸ்மென்ட்’ என்பார்கள். அங்கிருந்து மேலே போக படிகள் இருக்கும். அந்த பேஸ்மென்ட்டுகளை ஒட்டி ‘கராஜ்’ என கார் வைக்குமிடம் இருக்கும். அந்த ஷட்டரை போட்டு விட்டால் பேஸ்மென்ட்டிலிருந்து யாரும் வெளியே வர முடியாது. அதை இயக்க தனி ‘மின் பொத்தான்’ (switch) உள்ளது.

மாடியில் தான் சமையலறை, ஹால், பூஜை அறை, டைனிங் ஹால், வாஷிங்மிஷின் ரூம் என யாவும் இருக்கும். சமையலறையிலிருந்து நேராக வாசலுக்கு வந்து விடலாம். இதற்கு மேல் மற்றொரு மாடி படியுடன் சமையலறையை ஒட்டிய அறையிலிருந்தே மாடிக்குப் போகலாம். வாசலிலிருந்து வந்தாலும் நேராக மாடிக்கு போகலாம். அங்கு தான் அனைவரின் படுக்கையறை, தனித்தனி பாத்ரூம் என்று நாலைந்து அறைகள் இருக்கும். சமையல் அறையை ஒட்டி கொல்லைப்புறம் செல்ல வழி இருக்கும்.

அவ்வழியே போனால் ‘டெக்’ எனப்படும் மரத்தாலான தரை, கைச்சுவர் கொண்ட இடம் இருக்கும். அங்கு அமர்ந்து மாலை வேளைகளில் தேநீர் அருந்துவார்கள். ‘டெக்’கிற்கு போகும் வழியில் கண்ணாடி கதவு இருக்கும். அதை தள்ளினால் கதவு திறந்து கொள்ளும். ‘டெக்’கிலிருந்து மரப்படிகள் ஏழெட்டு கீழே இறங்க இருக்கும். அப்படி இறங்கிப் போனாலும் வாசலை அடையலாம். நாங்கள் போன போது எக்கச்சக்க கூட்டம் அவள் வீட்டில். அப்பொழுது அங்கிருந்தவர்கள் சொன்னதை கேட்டதும் தான் நடந்த விபரீதம் தெரிய வந்தது.

நித்யா மாமியார் முதல் நாள் முதன் முறையாக அமெரிக்கா வந்துள்ளார். நித்யா கிளம்பும் முன் தன் மாமியாரிடம், ‘‘மெயின் ஹாலில் நீங்கள் வாசல் படியில் உட்கார்ந்து, நிவேதிதா வெளியே வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்’’ என்று சொல்லி விட்டு, பெண்ணிற்கு தெரியாமல் கீழே இறங்கி ‘பேஸ்மென்ட்டுக்கு’ வந்து அங்கிருந்து ‘கரா’க்கு வந்து ஷட்டரை திறந்து காரை மெல்ல வெளியே கொண்டு வந்தாள்.

அங்கிருந்து ‘ரிவர்ஸில்’ எடுத்தால் தான் நேராக காரை ஓட்டிக் கொண்டு போக முடியும். இவள் காரை வெளியே எடுத்து நிறுத்தி, ஷட்டரை மூடி விட்டு ரிவர்ஸில் எடுக்கவும், கார் சத்தத்தையும் ‘ஷட்டரின்’ திறக்கும் ஓசையையும் கேட்ட அந்த மூன்று வயது குழந்தை ‘டெக்’ வழியாக ஓடி வரவும், நித்யா காரை ரிவர்ஸில் எடுக்க, குழந்தை மீது கார் மோத, குழந்தை காருக்கடியில் சிக்கிக் கொண்டு இறந்து விட்டது. மாமியாருக்கு இந்த வழி இருப்பது தெரியாது. நித்யாவுக்கு தெரிந்தும் மாமியாரிடம் சொல்ல மறந்து விட்டாள்.

மற்றொன்று அந்த கதவை திறக்க முடியாதவாறு ஒரு தாழ்ப்பாள் உள்ளது. அதை போட மறந்து விட்டாள். இந்த விஷயம் நடந்து நாலைந்து வருடங்கள் ஆன போதிலும், நித்யாவிற்கு தன் குழந்தையை தானே கொன்று விட்டோம் என்ற நினைப்பில் அவளும், கவனிக்காமல் விட்டு விட்டோமே என்று அவள் மாமியாரும் மனதினுள் நொந்து கொண்டிருக்க, நாம் அழைத்துச் செல்ல சொல்லவில்லை என்றால் இந்த விபரீதம் நடந்திருக்காதே என்று நானும், என் மருமகளும் இன்றளவும் அந்த நிகழ்ச்சியை நினைத்தும், அந்த குழந்தையின் அழகு முகத்தை மறக்க முடியாமலும் தவித்துக் கொண்டிருக்கிறோம்.Post a Comment

Protected by WP Anti Spam