By 14 June 2018 0 Comments

காதல்!!(மகளிர் பக்கம்)

ஒரு பெண்ணின் மென்மையான உணர்வுகளின் வழியாக, அவளுக்குள் காதல் மலர்கின்ற அற்புதமான தருணங்களையும், பிரிவின் துயரையும் பார்வையாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் உணர்ந்துகொள்ளும்படி அருமையாகச் சித்தரிக்கிறது டேவிட் லீன் இயக்கத்தில் வெளியான ‘ப்ரீஃப் என்கவுன்டர்’.1938 ஆம் வருடத்தின் கடைசி நாட்களில் படத்தின் கதை நிகழ்கிறது. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பிரிட்டிஷ் பெண்ணான லாரா ஒரு புத்தகப்புழு. முப்பது வயதைக் கடந்த அவளுக்கு அன்பான கணவனும், அழகிய இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள்.

ஒவ்வொரு வியாழக்கிழமையும் காலையில் நூலகத்துக்குச் செல்வது. அங்கே சில மணி நேரங்கள் செலவிட்டபின் மதியம் திரையரங்கு சென்று படம் பார்ப்பது. படம் முடிந்தபின் வீட்டுக்குத் திரும்ப ரயில் நிலையத்துக்குச் செல்வது. ரயிலுக்காகக் காத்திருக்கும் இடைவெளியில் அங்கிருக்கும் காபி ஷாப்பில் பொழுதைப் போக்குவது… அவளது வாடிக்கை. இப்படித்தான் லாராவின் ஒவ்வொரு வியாழக்கிழமையும் கழிகிறது.

அந்த நாட்களில் லாரா மட்டுமல்ல, இங்கிலாந்தில் வசிக்கும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பல பெண்களின் வாடிக்கையும் இதுவே. லாராவின் கணவர் வீட்டில் இருக்கும்போது எல்லாம் செய்தித்தாளில் வருகின்ற புதிர் விளையாட்டை சரி செய்வதிலேயே மும்முரமாக இருக்கிறார். விளையாட்டில் ஏற்படும் சந்தேகங்களைத் தீர்க்க லாரா அவருக்கு உதவுகிறாள். கணவனும் மனைவியும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக தங்களின் வாழ்க்கையை வாழ்கிறார்கள். இந்த நிலையில் இன்னொரு வியாழக்கிழமை வருகிறது.

அது ஸ்பெஷலான ஒரு வியாழக்கிழமையாக லாராவுக்கு அமைகிறது. ஆம்; படம் முடிந்து வீட்டுக்குச் செல்ல ரயில் நிலையத்தில் லாரா காத்திருக்கிறாள். அப்போது அவளது வலது கண்ணில் தூசு விழுந்து, கண்ணைத் திறக்கமுடியாமல் அவதிப்படுகிறாள். அந்த நேரத்தில் ஏதேச்சையாக அங்கே வருகிறார் ஹார்வி. சிரமத்தில் இருக்கும் லாராவைக் காண்கின்ற அவர், ‘தான் ஒரு மருத்துவர்…’ என்று அறிமுகமாகி அவளுக்கு உதவுகிறார். இயல்பு நிலைக்குத் திரும்புகிறாள் லாரா. ஹார்விக்கும் லாராவுக்கும் இடையிலான இந்த முதல் சந்திப்பு எந்தவித ஆரவாரமுமில்லாமல் சில நொடிகளிலேயே நிகழ்ந்து முடிகிறது.

ஒவ்வொரு வியாழக்கிழமையும் ரயில் நிலையத்துக்கு அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு ஸ்பெஷல் டாக்டராக வருகை புரிகிறார் ஹார்வி. முப்பது வயதைக் கடந்த அவருக்கும் திருமணமாகி குழந்தைகள் இருக்கிறார்கள். அடுத்த வியாழக்கிழமை. தான் வேலை செய்யும் மருத்துவமனைக்கு அருகில் லாரா செல்வதைக் கவனிக்கிறார் ஹார்வி. உடனே லாராவிடம் சென்று கடந்த வாரம் நிகழ்ந்ததை நினைவூட்டுகிறார். இருவரும் பரஸ்பரமாக தங்களைப் பற்றி பரிமாறிக் கொள்கின்றனர். காபி ஷாப்புக்குச் செல்கின்றனர். திரைப்படத்துக்கும் போகிறார்கள்.

‘அடுத்த வாரமும் சந்திக்கலாம்…’ என்று ரயில் நிலையத்தில் லாராவிடமிருந்து விடைபெறுகிறார் ஹார்வி. முதல் முறையாக லாரா வீட்டுக்குத் திரும்ப தாமதமாகிறது. ஹார்வியைச் சந்தித்தது, அவருடன் திரைப்படத்துக்குச் சென்றது… என எல்லாவற்றையும் தன் கணவருடன் பகிர்ந்துகொள்கிறாள். அவர் எதையும் பெரிதுபடுத்தாமல் வழக்கம்போல புதிர் விளையாட்டில் மூழ்கிக் கிடக்கிறார். ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஹார்வியும், லாராவும் ரயில் நிலையத்தில் சந்தித்துக் கொள்கின்றனர். இருவருக்கும் இடையில் காதல் மலர்கிறது. அருகிலிருக்கும் அற்புதமான இடங்களுக்கெல்லாம் லாராவை ஹார்வி அழைத்துச் செல்கிறார். காலம், இடம், சூழல் எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.

லாரா வீடு திரும்ப முன்பைவிட தாமதமாகிறது. வீட்டுக்குப் போகாமல் ஹார்வியுடன் இருக்கவே அவளின் மனம் துடிக்கிறது. இருந்தாலும் கணவர், குழந்தைகளுக்காக வீட்டுக்குச் செல்கிறாள். கணவரிடம் ஏதாவது பொய்யைச் சொல்லி சமாளிக்கிறாள். பொய் சொல்வது அவளைக் குற்றவுணர்வில் தள்ளுகிறது. தன்னுடைய கணவரை ஏமாற்றுகிறோமோ என்று வருந்துகிறாள். ஒருவித அவமான உணர்வு அவளைப் பற்றிக்கொள்கிறது. கணவருக்கு லாராவின் விஷயம் தெரியவந்தாலும், அவர் எதையும் வெளிக்காட்டாமல் இயல்பாக எப்போதும் போலவே லாராவிடம் நடந்துகொள்கிறார்.

தன்னுடைய நிலை என்னவென்று தெரிந்தாலும் லாராவால் ஹார்வியின் மீதான காதல் உணர்வை கைவிட முடிவதில்லை. கணவனுக்கும், ஹார்விக்கும், சமூக கட்டமைப்புக்கும், குழந்தைகளுக்கும் இடையில் மாட்டிக்கொண்டு காதலில் தத்தளிக்கிறாள் லாரா. இறுதியில் ஹார்வியிடம் ‘நம்முடைய உறவுக்கு எந்த எதிர்காலமும் இல்லை, அது நம் இருவருடைய குடும்பத்தையும் பாதிக்கும். நாம் பிரிந்துவிடுவதே நல்லது…’ என்று முறையிடுகிறாள். ஹார்வியும் தனது சகோதரன் மூலம் ஆப்பிரிக்காவில் உள்ள மருத்துவமனையில் தனக்கு வேலை கிடைத்திருப்பதாகச் சொல்கிறான்.

‘நீ விரும்பினால் நான் இங்கேயே இருக்கிறேன். இல்லையென்றால் ஆப்பிரிக்காவுக்குக் கிளம்புகிறேன்…’ என்கிறான். ஹார்வி ஆப்பிரிக்கா செல்ல அரை மனதோடு சம்மதிக்கிறாள். அவர்கள் சந்தித்த அதே ரயில் நிலையத்தில் கண்ணீர் மல்க இருவரும் பிரிகின்றனர். தன்னிடம் மீண்டும் திரும்பி வந்ததற்காக லாராவிடம் நன்றி தெரிவிக்கிறார் அவளுடைய கணவர். திரை இருள்கிறது. கதாநாயகியின் கண்ணில் தூசு விழ, அந்த வழியாக வருகின்ற கதாநாயகன் அதை எடுத்துவிட… இதனால் இருவருக்கும் இடையில் காதல் மலர்வதை திரையில் காட்டிய முதல் படம் இதுவாகத்தான் இருக்க வேண்டும்.

ஏனென்றால் இப்படம் வெளியான ஆண்டு 1945. இந்தப் படத்தில் கதையைவிட மனித உணர்ச்சிகளுக்குத் தான் அதிகளவில் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர் டேவிட் லீன். கதை நிகழும் இடத்தைத் தாண்டி, கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறது ராபர்ட் கிராஸ்கரின் கேமரா. லாராவாக நடித்த சிலியா ஜான்சனின் நடிப்பு அசாதாரணம். கேன்ஸ் உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்ற இந்தப் படத்தில் இடம்பெற்ற வசனங்களும் அற்புதம்.

உதாரணத்துக்கு லாராவைப் பிரிகின்ற போது ஹார்வி அவளிடம் பேசும் இந்த வசனம்…‘‘ஹார்வி: என்னை மன்னித்துவிடு. லாரா: எதுக்காக உன்னை நான் மன்னிக்கணும்? ஹார்வி: எல்லாவற்றுக்கும்…உன் கண்ணில் விழுந்த தூசை வெளியே எடுப்பதற்காக நிகழ்ந்த நம் முதல் சந்திப்பிற்காகவும், உன்னைக் காதலித்ததற்காகவும், அந்த காதலால் உனக்கு ஏற்பட்ட இன்னல்களுக்காகவும் என்னை மன்னித்துவிடு. லாரா: நான் உன்னை மன்னிக்கிறேன். இதே காரணங்களுக்காக நீயும் என்னை மன்னித்தால்…’’திருமணத்துக்குப் பிறகு காதலில் ஈடுபடுபவர்களை ‘கள்ளக் காதலர்கள் என்று கொச்சைப்படுத்துபவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம் இது.Post a Comment

Protected by WP Anti Spam