By 21 June 2018 0 Comments

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்? : நிஜம் என்ன?(மருத்துவம்)

அலசல்

வலுவான எலும்புகள், ஆரோக்கியமான பற்களுக்கு வைட்டமின் D அவசியம் என்று நமக்கு தெரிந்தாலும் ஒவ்வொருவருக்கும் எந்த அளவுக்கு தேவை, அதை எப்படி பெறுவது, யாருக்கெல்லாம் அவசியம் என்பதில் எப்போதும் குழப்பம் உண்டு.

இத்துடன் மருத்துவர்களும் தற்போது வைட்டமின் D ஊட்டச்சத்து மாத்திரைகளையும் பரிசோதனையையும் அதிகம் பரிந்துரைப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊடகங்களில் வெளிவரும் வைட்டமின் டி குறித்த விளம்பரங்களும் இந்த பீதியைப் பெரிதாக்கிக் கொண்டிருக்கிறது. இதில் உண்மை நிலவரம்தான் என்ன… எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் ஆறுமுகம் விளக்கமளிக்கிறார்…

வைட்டமின் D பரிசோதனை யாருக்கு அவசியம்?

‘‘எலும்பு சம்பந்தமான நோயால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே வைட்டமின் டி பரிசோதனை அவசியம். சிகிச்சைக்கு வருகிற எல்லோருக்கும், உடனே பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இது தவிர, கட்டணம் அதிகம் கொண்ட பரிசோதனை இது என்பதால் எளிய மக்களுக்கு, நேரிடையாகவே சப்ளிமென்ட் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளச் சொல்வோம்.

பரிசோதனை செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் கொண்டவர்களுக்கு மட்டும் பரிசோதனையின் அடிப்படையில் சப்ளிமென்ட் எடுத்துக்கொள்ள பரிந்துரைப்போம். இதில் விதிவிலக்காக சில மருத்துவர்கள் அப்படி பயமுறுத்தலாம். அது தேவையற்ற அச்சம்தான். ஒருவேளை ஒரு மருத்துவரின் பரிந்துரையில் மாற்றுக் கருத்து உங்களுக்கு இருந்தால், தயங்காமல் செகண்ட் ஒப்பீனியன் இன்னொரு மருத்துவரிடம் பெறுவதில் தவறு இல்லை.’’
நம் உடலே போதுமான வைட்டமின் D ஊட்டச்சத்தை உற்பத்தி செய்துகொள்ள முடியுமா?

‘‘நமக்குத் தேவையான வைட்டமின் D பெரும்பகுதியை சூரிய ஒளியிலிருந்து வெளியாகும் UVB கதிர்களிலிருந்து தோல் உற்பத்தி செய்து கொள்கிறது. போதுமான சூரிய ஒளி கிடைக்காதபோதுதான் பற்றாக்குறை ஏற்படுகிறது. பூமியின் வடகோள நாடுகளில் வசிப்பவர்கள் பெரும்பாலும் இந்த வைட்டமின் சத்து குறைபாடுள்ளவராக இருக்கிறார்கள். கருமை நிறமுடைய ஆப்பிரிக்கர்களின் தோலுக்கு வைட்டமின் D உற்பத்தி
செய்யும் திறன் குறைவாக இருக்கிறது.’’

வெப்ப பிரதேசமான நம் நாட்டில் இருப்பவர்களுக்கு வைட்டமின் டி பற்றாக்குறை எதனால் ஏற்படுகிறது?

‘‘நம் ஊரில் சூரிய ஒளிக்கு குறைவே இல்லை என்றாலும், இன்று கார்ப்பரேட் அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் முழுக்கை சட்டை, காலில் ஷீமற்றும் காலரில் இறுக்கமான டை அணிபவர்களாகவும், ஏ.சி அறைகளிலும், ஏ.சி கார்களிலும் நாளின் பெரும்
பொழுதை கழிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். நேரடியான சூரியக்கதிர் இவர்கள் உடல் மீது படுவதில்லை.

இதுதவிர, நவநாகரீகப் பெண்கள் வெளியில் சென்றாலே தங்கள் தோலின் நிறத்தை பாதுகாத்துக் கொள்ள சன்ஸ்க்ரீன் லோஷன் தடவிக்கொள்கிறார்கள். இதனால் புற ஊதாக்கதிர்கள் ஊடுருவுவது தடுக்கப்பட்டு வைட்டமின் ‘டி’ பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு உருவாகிறது. நம் நாட்டிலும் மழை, குளிர் காலங்களில் சூரிய ஒளி குறைவாக இருக்கும் காலங்களில் வைட்டமின் D சத்துக்கள் நிறைந்த உணவு மூலம்
பற்றாக்குறையை சரி செய்து கொள்ளலாம்.

“யாருக்கெல்லாம் வைட்டமின் D பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது?

‘‘வயது வித்தியாசமோ, பாலின வித்தியாசமோ கிடையாது. யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். கர்ப்பிணிகள், வெளியில் அதிகம் செல்லமுடியாத வயதானவர்கள், குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள், ஏதேனும் நோயால் மிகவும் பலவீனமாக இருப்பவர்களுக்கு இந்த சத்துக்குறைவு ஏற்படலாம்.’’
வெயிலில் 10 நிமிடம் உட்கார்ந்திருந்தாலே ஒருவருக்குத் தேவையான வைட்டமின் டி சத்து முழுவதுமாக கிடைத்துவிடுமா?

‘‘காலை இளம் வெயிலில் அரை மணிநேரம் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். முடியாதவர்கள் 10 நிமிடம் வெயிலில் நடந்துவிட்டு
வரலாம். இப்போது உடற்பயிற்சிகளையும் ஜிம்முக்குள்ளேயும், வீட்டுக்குள்ளேயே ட்ரெட்மில்லில் நடக்கவும் செய்கிறார்கள். திறந்தவெளி மைதானங்கள் அல்லது பூங்காக்களில் பயிற்சிகளை செய்ய வேண்டும். மேலும் கண்கள் மட்டும் தெரியும்படி உடலை முழுவதும் மறைக்காமல் சூரிய ஒளி உடலுக்கு போதுமான அளவு கிடைக்கும் வகையில் ஆடைகளை அணிய வேண்டும். பெரும்பாலான நேரம் வெயிலில் வேலை செய்பவர்களுக்கு சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் சத்தே போதுமானது.’’

‘வைட்டமின் D’ சத்து கிடைக்கும் உணவுகள்…‘‘மீன், மாட்டு ஈரல், முட்டை மஞ்சள்கரு, பால் பொருட்களில் அதிகமாக இருக்கிறது. பாதாம் பால், சோயா பால், ஆரஞ்சு பழச்சாறு, நவதானியங்கள், மற்றும் காளான் ஆகியவற்றில் சற்று குறைவாகவும் இருக்கிறது.’’வைட்டமின் டி பற்றிய விளம்பரங்கள் பற்றி…‘‘நன்றாக இருந்தால் ரசியுங்கள்… இல்லாவிட்டால் சேனல் மாற்றுங்கள். அவைகளுக்கு அதற்கு மேல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை.’’
ஒருவர் வைட்டமின் D சத்தை பராமரிக்க வேண்டிய அளவு என்ன?

‘‘வைட்டமின் D கவுன்சிலானது ஒருவர் 50ng/ml (Equivalent to 125 nmol/L) அளவில் பராமரிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. இதில், 0 – 40 ng/ml – பற்றாக்குறை, 40 – 80 ng/ml – போதுமானது, 80 – 100 ng/ml – உயர்வு, 100 ng/ml-க்கு மேல் – விரும்பத்தகாதது, 150 ng/ml க்கு மேல் – நச்சு என்று அந்த கவுன்சில் எச்சரிக்கிறது.’’யாருக்கெல்லாம் சப்ளிமென்ட் தேவைப்படும்?

‘‘பச்சிளம் குழந்தைகள் மற்றும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிப்பெண்கள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் ஆகியவர்கள் அபாயகட்டத்தில் இருப்பவர்கள். இவர்களுக்கு வைட்டமின் D பரிசோதனை செய்து 20 ng/ml க்கும் குறைவாக உள்ளவர்களுக்கு சப்ளிமென்ட் மாத்திரைகளை பரிந்துரைப்போம்.’’சராசரியாக எடுத்துக் கொள்ள வேண்டிய வைட்டமின் D சப்ளிமென்ட் அளவு என்ன?

‘‘0 – 6 மாதங்கள் 1000 IU, 7 – 12 மாதங்கள் 1500 IU, 1 – 3 வருடங்கள் 2500 IU, 4 – 8 வருடங்கள் 3000 IU, 9 வயதுக்குமேல் அனைவருக்கும் 4000 IU, கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் 4000 IU. இதுவே பரிந்துரைக்கப்பட்ட அளவு.’’வைட்டமின் டி பற்றாக்குறையால் ஏற்படும் விளைவுகள் என்ன?

‘‘தீவிர பற்றாக்குறையால் குழந்தைகள் மத்தியில் என்புருக்கி நோயும்(Rickets) வயதானோருக்கு ஏற்படும் எலும்பு நலிவு(Osteomalasia) மற்றும் எலும்புப்புரை(Osteoporosis) ஆகிய நோய்களுக்கு முக்கிய காரணமாகிறது. நடுத்தர வயதினர் எப்போதும் சோர்வுடன் காணப்படுவார்கள்.’’அளவுக்கு அதிகமாக வைட்டமின் D சப்ளிமென்ட் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் விளைவுகள் என்ன?

‘‘நீர்ச்சத்துக் குறைவு, வாந்தி, பசியின்மை, எரிச்சல், மலச்சிக்கல், மயக்கம் மற்றும் தசைச்சோர்வு ஏற்படும். மருத்துவரின் ஆலோசனைப்படி, சப்ளிமென்ட் மாத்திரைகளை சாப்பிட்டால் போதும். தாங்களாகவே அதிகப்படியான சப்ளிமென்ட் மாத்திரைகளை எடுத்துக்கொள்வதையும், குறிப்பாக குழந்தைகளுக்கு கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.’’Post a Comment

Protected by WP Anti Spam