இலங்கையின் உயர் குழாம் அரசியல்!!(கட்டுரை)

Read Time:18 Minute, 45 Second

தலைநகரை அதிர வைத்த தாக்குதல்கள்

வல்பொல ராஹுல தேரரின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் நிராகரித்ததை, ஜே.ஆர், தனக்குச் சாதகமான பிரசாரமாக மாற்றினார்.

தாம் சமாதானத்தை விரும்பினாலும், தாம் நேசக்கரம் நீட்டினாலும், ‘பயங்கரவாதிகள்’ அதை ஏற்கத் தயாரில்லை என்ற பாணியில், அந்தப் பிரசாரம் அமைந்திருந்தது. இதன் உட்பொருளாக, இராணுவ நடவடிக்கைதான் ஒரே வழி என்பது வௌிப்படுத்தப்பட்டிருந்தது.

ஜே.ஆர் சமாதானத்தையும் சுமுகமான தீர்வையும் விரும்பியிருந்தால், சர்வகட்சி மாநாடும், பிராந்திய ரீதியிலான அதிகாரப் பகிர்வுத் தீர்வுக்கு, அவர் இந்தியாவிடம் இணங்கிய, ‘அனெக்ஷர் சி’ முன்மொழிவுகளும் அவரது கையில்தான் இருந்தன. அவற்றை மிகச் சுலபமாக நிறைவேற்றியிருக்க முடியும்.

ஆனால், ஜே.ஆரின் நோக்கம், சமாதானமும் சுமுகத் தீர்வுமாக இங்கு இருந்திருக்க முடியாது. தனது, இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்துவதற்கான காரணங்களையே அவர் தேடிக்கொண்டிருந்தார்.

வடக்கு, கிழக்கில் வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருந்த வேளை, 1984 ஒக்டோபர் மாதத்தின் இறுதிப்பகுதியில், தலைநகர் கொழும்பை ஆட்டிப்போட்ட தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதல்களை, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களில் ஒன்றான ‘ஈரோஸ்’ (ஈழப் புரட்சிகர மாணவர் இயக்கம்) நடாத்தியது.

1984 ஒக்டோபர் 22ஆம் திகதி, புறக்கோட்டை, கொட்டாஞ்சேனை, பாலியகொடை உள்ளிட்ட பல பிரதேசங்களில், தொடர்ந்து நடந்த குண்டுவெடிப்புகள், ஜே.ஆர் அரசாங்கத்துக்கு அதிர்ச்சியைத் தந்தன.

வடக்கு, கிழக்கில் வன்முறைத் தாக்குதல் நடக்கும்போது, அதற்கப்பால் உள்ள பிரதேசங்களுக்கு அவை வெறும் செய்திதான். ஆனால், இலங்கையின் தலைநகரில் அது நடக்கும் போது, அது வெறும் செய்தியாகக் கடந்து போகக்கூடிய ஒன்றல்ல.

உடனடியாக ஊடகச் சந்திப்பை நடத்திய தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி, பொதுமக்களை அமைதி காக்குமாறு வேண்டினார்.

“பயங்கரவாதிகளின் எண்ணம், தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடாத்த, சிங்கள மக்களைத் தூண்டிவிடுவதாகும். பயங்கரவாதிகளின் இந்த நோக்கம் நிறைவேறக் கூடாது. ஆகவே, சிங்கள மக்கள் அமைதி காக்கவும்” என்று அவர் வேண்டியிருந்தார்.

இந்தத் தாக்குதலின் பின்னணியில், இந்தியா இருந்ததெனச் சில விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

பேச்சுவார்த்தை மேசையிலிருந்து ஜே.ஆர் நழுவி, அமெரிக்கா, இஸ்‌ரேல் உள்ளிட்ட நாடுகளின் பின்புலத்துடன், இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுப்பது, இந்திரா காந்தி தலைமையிலான இந்திய அரசாங்கத்துக்கு அதிருப்தியை அளித்தது.

‘ஜே.ஆர், வன்முறை வழியை நாடினால், இந்தியாவும் அதை உரிய வகையில் எதிர்கொள்ளத் தயார்’ என்ற செய்தியை, குறித்த தாக்குதல் உணர்த்துவதாக அமைந்ததுடன், ஜே.ஆரைப் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்பச் சொல்லும் எச்சரிக்கையாகவும் அமைந்தது என அவர்கள் கருத்துரைக்கிறார்கள்.

இந்தியாவின் கடும் அதிருப்திக்கு மத்தியில் ஜே.ஆர், மேற்கின் உதவியுடன் தன்னுடைய இராணுவத்தைப் பலப்படுத்திக் கொண்டிருந்தபோது, மறுபுறத்தில் இந்தியா, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களைப் பலப்படுத்திக் கொண்டிருந்தது.

இலங்கை அரசியலில் முக்கியமான திருப்பம்

இதில் ஜே.ஆருக்கு புரிபடாது போன ஒரே விடயம், ஜே.ஆரைப் பின்புலத்தில் ஆதரித்த எந்தவொரு மேற்கு நாடும், இந்தியாவை நேரடியாக எதிர்க்கப்போவதில்லை என்பதுதான். ஜே.ஆருக்கு இன்னொரு விடயமும் புரிந்திருக்காது போயிருந்தது.

தமிழர்களின் தலைமை, தமிழ் உயர்குழாமிடமிருந்து விலகிக் கொண்டிருந்தது. இந்த மாற்றம்தான், இலங்கை அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க முக்கியமானதொரு திருப்பம்.

உயர்குழாமும், இலங்கை அரசியலும் பிரித்தானிய கொலனித்துவ காலத்தில் கோல்ப்றூக்-கமரன் அரசமைப்பின் மூலம், உள்நாட்டவருக்குப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டதிலிருந்து இலங்கையின் அரசியல், இலங்கையின் உயர்குழாமின் கட்டுப்பாட்டில்தான் இருந்துகொண்டிருந்தது.

பெரும் தனவான்களும், நிலவுடைமையாளர்களும், முதலியார்களும் கொலனித்துவக் காலத்தில், மேற்கத்தேய கல்வி கற்றதன் வாயிலாக உருவான புதிய உயர்-மத்திய தர தொழில் நிபுணர்களையும் கொண்ட உயர்குழாம் தான், இலங்கையின் அரசியலை வடிவமைத்தது.

இது பற்றிய கடுமையான விமர்சனப் பார்வை, முதலில் இடதுசாரிய அரசியல் ஆய்வாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. இலங்கை அரசியலை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு, இலங்கை அரசியலின் இந்தப் பரிமாணத்தையும் விளங்கிக் கொள்வது அத்தியாவசியமானது.

இது தனித்து ஆராயப்படக்கூடிய ஒரு பரப்பு. ஆனால், மிகச் சுருக்கமாகவேனும் இதனை இங்கு நாம் கருத்தில் கொண்டாக வேண்டும்.

இலங்கையின் சுதந்திரத்தை, இரத்தம் சிந்தாது பெற்ற சுதந்திரம் என்று, சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமர் டீ.எஸ்.சேனாநாயக்க வர்ணித்தார்.

ஆனால், 1948இல் இலங்கை பெற்றது சுதந்திரம் அல்ல; மாறாக, டொமினியன் அந்தஸ்துதான். 1947இல் பிரித்தானியா வகுத்தளித்த, பெரும்பாலும் சோல்பரிக் குழுவின் பரிந்துரைகளைப் பின்பற்றியமைந்த சோல்பரி அரசமைப்பின்படி, பிரித்தானிய ‘வெஸ்மின்ஸ்டர்’ மாதிரியை ஒத்த அமைப்பு இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்டது,

இது 1972இல் இலங்கை குடியரசு ஆகும் வரை தொடர்ந்தது. அதாவது 1948இலிருந்து 1972 வரை, இலங்கை தொழில்நுட்ப ரீதியில், பிரித்தானிய முடியாட்சிக்குக் கீழ்ப்பட்ட நாடுதான். இலங்கையின் அயலவர்களின் நிலையிலிருந்து இது மிகவும் வேறுபட்டது.

இந்தியாவும், பாகிஸ்தானும் விரைவில் தமக்கென்ற சுதந்திர அரசமைப்பைத் தாம் வடிவமைத்துக்கொண்டன. 1946இல் அமைக்கப்பட்ட இந்திய அரசமைப்புச் சபை, தன்னுடைய கடமையை 1950இல் நிறைவு செய்ததுடன், அந்த அரசமைப்பு ஏற்கப்பட்டு, 1950இல் இந்தியா குடியரசாகியது.

பாகிஸ்தான் 1956இல் குடியரசாகியது. ஆனால் இலங்கையில், 1972இல் இடதுசாரித் தோழர்களுடன் சிறிமாவோ பண்டாரநாயக்க கைகோர்த்தது வரை, அதற்கான தேவையை இலங்கை அரசியல் தலைவர்கள் உணரவே இல்லை.

ஏனென்றால், அதற்கான அவசியப்பாடு, இலங்கையின் உயர்குழாம் அரசியல் தலைமைகளுக்கு இருக்கவில்லை.

இலங்கையின் சிங்கள அரசியல் பரப்பை எடுத்துக் கொண்டால், சுதந்திரத்துக்கு முற்பட்ட இலங்கையிலான அவர்களது அரசியல், கண்டியச் சிங்களவர், கீழ்நாட்டுச் சிங்களவர் என்ற இருபெரும் பிரிவுகளும், அப்பிரிவுகளுக்குரிய மேற்குறிப்பிட்ட உயர்குழாமால்தான் வடிவமைக்கப்பட்டு, பிரதிநிதித்துவம் செய்யப்பட்டது.

எஸ்.டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்கவும் கண்டியத் தலைவர்களும் பிரித்தானிய ஆட்சியாளர்களிடம் சமஷ்டி கோரியது, கண்டியச் சிங்களவர்களாகிய தம்முடைய தனித்த அடையாளத்தைப் பாதுகாத்துக் கொள்ளவேயாகும்.

ஆனால், 1931இல் டொனமூர் அரசமைப்பின் கீழ், சர்வஜன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், இலங்கைக் குடிப்பரம்பலில் சிங்கள பௌத்தர்கள் அதீத பெரும்பான்மையைக் கொண்டிருக்கிறார்கள் என்பது உணரப்பட்டது.

இதன் பின்னர், பிரிவடைந்த சிங்கள அடையாளங்களுக்குப் பதிலாக, ஒருமித்த சிங்கள பௌத்த தேசிய அடையாளம்தான் தமக்குச் சாதகமானது என்று, சிங்களத் தலைவர்கள் கருதினார்கள். இது, அவர்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வழிசமைத்தது.

மறுபுறத்தில், தமிழ்த் தலைமைகள் ஆரம்பத்தில் சமஷ்டிக் கோரிக்கையை முன்வைக்காது, இலங்கைத் ‘தேசியஅரசு’ என்ற ஒற்றையாட்சிக்குள், அதிகாரச் சமநிலையைக் கோரின.

இக்கோரிக்கையானது, நிச்சயம் தமிழ் மக்களின் விருப்பின் பிரதிபலிப்பாக இருந்திருக்க முடியாது. மாறாக, மேற்கத்திய பாணியிலான, குறிப்பாக பிரித்தானியாவின் மாதிரியிலான தேசிய அரசொன்றைக் கட்டியெழுப்பும், பிரித்தானியப் பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்ற, உயர்குழாமின் எண்ணமாகவே இருந்தது.

சுதந்திர இலங்கை அரசியலைத் தீர்மானித்தவர்கள், ஒரு சில குடும்பங்களைச் சேர்ந்தவர்களே ஆவார்.
இலங்கையை ஆட்சி செய்த, செய்கின்ற பிரதமர்கள் மற்றும் ஜனாதிபதிகளுள் டீ.எஸ்.சேனாநாயக்க, டட்லி சேனாநாயக்க, ஜோன் கொத்தலாவல, ஜே.ஆர். ஜெயவர்தன, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் குடும்ப ரீதியிலான பிணைப்புகளைக் கொண்ட உறவினர்கள்.

எஸ்.டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்க, சிறிமாவோ பண்டாரநாயக்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க ஆகியோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அனைவரும் நிலவுடைமையாளர்கள்.
இவர்கள் அத்தனை பேரும் ஆங்கிலப் பாடசாலைகளில் ஆங்கிலக் கல்வி பெற்றவர்கள். டீ.எஸ். சேனநாயக்கவையும் சிறிமாவோ பண்டாரநாயக்கவையும் தவிர, ஏனையவர்கள் அனைவரும் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்தவர்கள். இது சிறியதோர் உதாரணம் மட்டும்தான். இலங்கை அரசியலை வடிவமைத்ததும், கொண்டு நடத்தியதும் இப்படிச் சில குடும்பங்களும், உறவினர்களும், நண்பர்களும்தான்.
தெற்காசியாவின் சந்ததி அரசியலைப் பற்றிய இந்தர் மல்ஹோத்ராவின் நூலில், ‘இலங்கை தான், சந்ததி அரசியலில் மிக முக்கியமானதும், முன்னணியானதுமான நாடு’ என்று குறிப்பிடுகிறார்.

தமிழ்மக்களின் அரசியலும் இதற்கு விதிவிலக்கல்ல. சுதந்திரத்துக்கு முற்பட்ட இலங்கையின் தமிழர் அரசியலில் பொன்னம்பலம், குமாரசுவாமி குடும்பத்தினர் ஆதிக்கம் செலுத்தினர்.

இதன் பின்னணியில், யாழ்ப்பாண சைவத் தமிழ் வேளாளர் என்ற அடையாளம் செல்வாக்குச் செலுத்தியது. அதன் பின்னர், தனித்த குடும்ப செல்வாக்குக்குப் பதிலாக ஜீ.ஜீ. பொன்னம்பலம், சா.ஜே.வே.செல்வநாயகம், அ. அமிர்தலிங்கம் என, ஆங்கிலக் கல்வி கற்ற, ‘அப்புக்காத்துகள்’ என்ற உயர்குழாமின் ஆதிக்கத்துக்குள் தமிழ் அரசியல் வந்தது.

இதனாலேயே தமிழர் அரசியலை, ‘அப்புக்காத்துகளின் அரசியல்’ என்று ஹாஸ்யத்துடன் சிலர் விளித்ததை, அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

இதைவிடவும், இதற்குள் பிரதேசவாத, சாதிய அடையாளங்களும் முக்கியத்துவம் பெற்றதை மறுக்க முடியாது.

குறிப்பாக, யாழ்ப்பாண சைவத் தமிழ் வேளாளர்களின் செல்வாக்கு, தமிழ் அரசியலை வடிவமைத்தது எனலாம். இங்கு செல்வநாயகத்தை, விதிவிலக்காகச் சிலர் குறிப்பிடலாம்.

ஆனால், செல்வநாயகம் மேற்குறித்த செல்வாக்குக் குழுவின் நலன்களுக்கு எதிராகச் செயற்பட்டவர் அல்லர்; மாறாக, அவர்களுடன் ஒன்றித்துப் பயணித்தவர். இவர்கள்தான், முதன்முதலில் இலங்கை என்ற, ஒற்றையாட்சி தேசிய அரசைக் கட்டியமைக்க முயன்றார்கள்.

அது சிங்கள பௌத்த தேசியவாதத்தின் ஆதிக்கத்துக்குள் விழுந்ததும், சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்தாலும், ஒற்றையாட்சிக்குள்ளான அதிகாரப் பகிர்வுக்குத் தயாராகவே இருந்தார்கள்.

இங்கு சிங்களவர்கள் இடையேயும் தமிழர்கள் இடையேயும் அரசியலானது, சமூகத்தளத்தில் மேலிருந்து கீழ்நோக்கிய, அதிகாரக் கட்டமைப்பைக் கொண்டிருந்தது எனச் சில விமர்சகர்கள், குறிப்பாக இடதுசாரி விமர்சகர்கள் கருத்துரைக்கிறார்கள்.

இது, ஒரு மக்கள் கூட்டத்தினது அரசியல் அபிலாஷைகளைத் தீர்மானிப்பதில், அந்த மக்கள் கூட்டத்தின் தலைமைக்கு, அதீத செல்வாக்கை வழங்கியது.

அதாவது, தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளைத் தீர்மானிப்பதும், வடிவமைப்பதும் அவர்களின் தலைமைகளாகவே இருந்தார்கள்.

இங்கு தலைமைகள் சொல்வதை, ஆமோதிப்பவர்களாக அல்லது ஆமோதிக்க வேண்டியவர்களாகவே மக்கள் இருந்தார்கள்.

அதிகாரப் பகிர்வோ, சமஷ்டியோ, தனிநாடோ, தமிழ்த் தலைமைகள் தாம் விரும்பியதை, தமிழ் மக்களின் அபிலாஷைகளாகப் பிரதிபலிக்கும் செல்வாக்கைக் கொண்டிருந்தார்கள்.

இலங்கை அரசாங்கம், இந்தக் காலகட்டத்தில் மிகக் குறைவானதோர் அதிகாரப் பகிர்வை வழங்கி இருந்தாலும், அதை ஏற்றதொரு தீர்வாகத் தமிழ் மக்கள் முன் சமர்ப்பிக்கும் அரசியல் வலு, தமிழ்த் தலைமைகளிடம் இருந்தது.

ஆனால், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் எழுச்சியோடு, தமிழ்த் தலைமைகளின் இந்த அரசியல் வலு, குறைவடையத் தொடங்கியது.

இதே தமிழ்த் தலைமைகள், அரசியல் பகட்டாரவாரமாக விதைத்த தனிநாடு என்ற அபிலாஷையைத் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், மக்கள் மயப்படுத்தி, முன்னெடுக்கத் தொடங்கின.

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின்பால் தமிழ் மக்களை நகர்த்திச் சென்றது.

ஜனநாயகத் தமிழ்த் தலைமைகளான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை, தமிழர் அரசியலில் இருந்து அந்நியப்படுத்தும் செயலானது, ஜே.ஆரின் குறுங்கால அரசியல் திட்டமான, இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குச் சாதகமானதாக இருந்திருக்கலாம்.

ஆனால், ஜே.ஆர் எதிர்பார்த்தோ, எதிர்பாராமலோ, அது தமிழர் அரசியலின் உயர்குழாமின் செல்வாக்கைச் சிதைக்கவும் செய்தது.

இனி ஜே.ஆர் விரும்பினாலும், மூடிய அறைகளுக்குள் ஒரு சில தலைவர்களுடன் உடன்படிக்கை செய்து, அரசியல் பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண முடியாது என்ற சூழலை உருவாக்கி இருந்தது.

தமிழ் மக்களின் அரசியல் இப்போது, உயர்குழாமைத் தாண்டி, மக்கள் மயமாகி இருந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடற்பயிற்சிக்கு உகந்த நேரம் !!( மருத்துவம்)
Next post தமிழர்களின் உணவுமுறை அறிவியல் பூர்வமானது!!( மருத்துவம்)