நீராலானது இவ்வுலகு!!(மகளிர் பக்கம்)

Read Time:12 Minute, 25 Second

உலகில் வேறு எங்கும் காண முடியாத அரிய குணங்கள் படைத்த பல கோடி தாவ‌ரங்கள், மூலிகைகள், உயிரினங்கள் இந்தியாவில் உள்ளன. நம்முடைய மூதாதையர்கள் இக்குணங்களை கண்டறிந்து காலகாலமாக பலவிதங்களில் பயன்படுத்தி வந்துள்ளனர். ‘பாட்டி வைத்தியம்’ என்று அழைக்கப்படும் இவை பெரும்பாலும் எழுத்து வடிவில் இருப்பதில்லை, சொல் வடிவம் மூலமாக ஆண்டாண்டு காலம் நாம் இவற்றை பயன்படுத்தி வருகிறோம். உலகெங்கும் மக்கள் இப்படி மூலிகைகள் மற்றும் உயிரினங்களின் மருத்துவ மற்றும் பிற பயன்பாடுகளை அறிந்து வைத்துள்ளனர்.

இத்தகைய அறிவை மரபுசார் அறிவாண்மை (Traditional Knowledge)என்று வகைப்படுத்துகின்றனர். இதுபோன்ற அறிவை நம்மக்கள் ‘நவீன அறிவியலுக்கு’ ஏற்ப ஆவண‌ப்படுத்தி வைப்பதில்லை. இவை பெரும்பாலும் மக்களின் பொதுச் சொத்தாக இருக்கின்றன‌. ஆனால் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு பொது பயன்பாட்டில் உள்ள இத்தகைய இயற்கை வளங்களை காப்புரிமை போன்ற சட்டங்கள் மூலம் தனியார் நிறுவனங்கள் தங்கள் உடைமைகளாக மாற்றப்படும் கொடூரம் அதிகரித்து வருகிறது.

மஞ்சள், வேப்பிலை போன்றவற்றுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் காப்புரிமை கொடுக்கப்பட்டதை நாம் இங்கு நினைவில் கொள்ளலாம். ஆண்டுதோறும் சுமார் 2000 காப்புரிமைகள் நம் நாட்டு மரபுசார்ந்த இயற்கை வளங்களுக்கு மேற்கு நாடுகளில் கொடுக்கப்படுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். மூன்றாம் உலக நாடுகளின் இயற்கை வளங்கள் காப்புரிமை போன்ற சட்டங்கள் மூலம் கொள்ளை போவதைத் தடுப்பதற்கும், இயற்கை வளங்கள் மீதான ஆராய்ச்சிகளை முறைப்படுத்தவும் 1992 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவை தலைமையில் மாநாடு ஒன்று நடைபெற்றது.

ஒரு நாட்டின் இயற்கை வளங்களை மற்றொரு நாடு ஆராய்ச்சிக்காக பயன்ப‌டுத்துகின்ற போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் உள்ளடங்கிய உயிர்-பன்மை ஒப்பந்தம் (Convention For Biodiversity) ஒன்று அந்த மாநாட்டில் வரையறுக்கப்பட்டது. உயிர்-பன்மை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இயற்கை வளங்களையும் மூதாதையர்களின் மரபுசார் அறிவாண்மையையும் பாதுகாத்திட, உயிர்-பன்மை சட்டத்தை (Biological Diversity Act,2002) இந்தியா இயற்றியது.

இயற்கை வளங்களை, பழங்குடி, விவசாயிகள் போன்ற அடிநிலை மக்களை பாதுகாக்கும் நோக்கோடு கொண்டு வரப்பட்டுள்ள பல்வேறு அதிகாரங்களை கிராம சபைக்குக் கொடுக்கிறது. இயற்கை வளங்களுக்கு மிகவும் அடிப்படையாக உள்ள நீர்நிலைகளை கிராம சபை மூலம் பாதுகாக்கும் அதிகாரத்தையும் இச்சட்டம் வழங்குகிறது. உயிர்-பன்மை சட்டத்தின் கீழ் இயங்கும் அமைப்புகள் உயிர்-பன்மை சட்டத்தின் கீழ் ‘தேசிய உயிர்-பன்மை ஆணையம்’ மற்றும் ‘மாநில உயிர்-பன்மை வாரியம்’ ஆகிய கமிட்டிகள் நியமிக்கப்பட்டுள்ளன.

இந்த கமிட்டிகளுக்கு நம் நாட்டினுடைய இயற்கை வளங்களை பாதுகாக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ஒவ்வொரு பஞ்சாயத்து மற்றும் நகராட்சியையும் ‘உயிர்-பன்மை நிர்வாகக் குழுக்களை’ அமைக்க இச்சட்டம் வலியுறுத்துகிறது. தத்தமது எல்லையில் உயிர்-பன்மை பாதுகாப்பு நிலையான பயன்பாடு மற்றும் வாழ்விடங்களை பராமரித்தல், நீர்நிலைகளை பாதுகாத்தல், நில இனங்கள், நாட்டுப்புற வகைகள் பயிரிடு இனங்கள், வளர்ப்புக்காக பயன்படுத்தப்படும் விலங்குகளும், கால்நடை இனங்களும், மற்றும் நுண்ணுயிர்களை பாதுகாத்தல்,

உயிர்-பன்மை தொடர்பான அறிவாண்மையை பதிவு செய்தல் போன்றவை இத்தகைய குழுக்களின் நோக்கமாகவும் செயல்பாடுகளாகவும் இருக்க வேண்டும் என்றும் இச்சட்டம் வலியுறுத்துகிறது. மேலும் இக் குழுவின் முக்கிய பணியாக இச்சட்டம் கூறுவது, உள்ளூர் மக்களிடம் கலந்துபேசி மக்களுடைய உயிர்-பன்மை பதிவேடு தயாரிப்பதே ஆகும். இந்த பதிவேடு உள்ளூர் இயற்கைவளம், நீர்வளம், உயிர்-பன்மை, தாவ‌ரவளம், அதன் மருத்துவ பயன் அல்லது இதர பயன்கள், மரபுசார் அறிவாண்மை ஆகிய விவரங்கள் உள்ளடங்கியதாக இருக்க வேண்டும் என்றும் இச்சட்டம் கூறுகிறது.

இச்சட்டப்படி தேசிய மற்றும் மாநில உயிர்-பன்மை ஆணையம், உயிர்-பன்மை நிர்வாகக் குழுக்களின் எல்லைக்குள் அமைந்துள்ள நீர்வளம் உள்ளடங்கிய இயற்கை வளம் மற்றும் அது தொடர்பான பயன்பாடு குறித்து அரசு யாதொரு முடிவு எடுக்கும்போது அவற்றை கலந்தாலோசிக்க வேண்டும். இயற்கை வளங்களும் காப்புரிமையும் இந்தச் சட்டம் நம் நாட்டு இயற்கைவளங்களுக்கு அறிவுசார் சொத்துரிமை (Intellectual Property Rights) வழங்குவதை முழுவதுமாக‌ தடை செய்கிறது.

குறிப்பாக காப்புரிமையை தடைசெய்கிறது. காரணம் காப்புரிமை என்பது தனியாருக்கு வழங்கப்படும் ஏகபோக உரிமையாகும். காப்புரிமை பெற்ற ஒருவர்/நிறுவனம் தாம் காப்புரிமை சட்டப்படி பதிவு செய்த பொருளை மற்றொரு நபர் உற்பத்தி/விற்பனை செய்வதை 20 ஆண்டுகளுக்கு தடுக்கும் உரிமையை பெறுகிறார். காப்புரிமையை தடை செய்யும் அதே நேரத்தில் (உள்நாட்டு/வெளிநாட்டு) ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆராய்ச்சிக்காக உயிர்-பன்மை சட்டத்தின்படி அமைந்துள்ள கமிட்டியின் கீழ் பாதுகாக்கப்படும் இடங்களுக்குச்சென்று அவர்களுடைய அனுமதியோடு ஆராய்ச்சி செய்யும் உரிமையையும் இச்சட்டம் வழங்குகிறது.

இந்த சலுகை, ஆராய்ச்சி என்ற பெயரில் நம்முடைய இயற்கை வளங்கள் கொள்ளை போவதற்கு உதவக்கூடும். இந்த சட்டம் நம்முடைய இயற்கைவளங்களின் மரபணுக்களை (Gene) ஆராய்ச்சிக்காக வெளிநாடுகளுக்கு எடுத்துச்செல்வதை தடை செய்யவில்லை. இவ்வாறு ஆராய்ந்து அதன் மூலம் பெறப்படும் கண்டுபிடிப்புகளுக்கு(!?) காப்புரிமை வழங்குவதையும் இச்சட்டம் தடை செய்யவில்லை. ஆக அனுமதி பெற்று ஆராய்ந்து கண்டுபிடிக்கப்படும் பொருட்களுக்கு இந்தியாவிலும் காப்புரிமை பெற முடியும்.

இதன் மூலம் பெறப்படும் லாபத்தில் குறிப்பிட்ட பகுதியை இந்த செல்வங்களை இதுநாள் வரை பாதுகாத்து வந்த மக்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் (Benefit Sharing) என்று உயிர்-பன்மை சட்டம் கூறுகிறது. அதாவது உயிர்-பன்மை நிர்வாகக் குழுக்கள் தமது எல்லைக்குள் அமைந்துள்ள பகுதிகளிலிருந்து வணிக நோக்கங்களுக்காக இயற்கை வளங்களை சேகரிக்கும் அல்லது அணுகும் யாதொரு நபரிடத்திலிருந்து/நிறுவனத்திடம் கட்டணமாக ஒரு தொகையை வசூல் செய்யலாம் என்பது இதன் பொருள்.

மறைமுகமாக நம்முடைய இயற்கை வளங்கள் கொள்ளை போவதற்கு இச்சட்டம் உதவுவதோடு மட்டும் அல்லாமல் இதுபோன்ற ஆராய்ச்சியின் பயனாக இத்தகைய இயற்கை வளங்களை பாதுகாத்து வந்த மக்களுக்கு ஏற்படும் நஷ்டங்களை மிகச்சிறிய இழப்பீட்டுத்தொகை மூலம் நிவர்த்தி செய்துவிடலாம் எனவும் இச்சட்டம் கூறுகிறது. இச்சட்டம் இயற்கை கொள்ளையை (Bio Piracy) சட்டப்பூர்வமாக முறைப்படுத்துகின்றது என்று இயற்கை ஆர்வலர் டாக்டர் வந்தனா சிவா கூறியதை இங்கு நினைவில் கொள்ளலாம்.

கூடுதலாக‌ இந்த சட்டத்தின் கீழ் The Protection, Conservation and Effective Management Of Traditional Knowledge Relating To Biological Diversity Rules, 2009 என்கிற சட்ட வரைவு நிலுவையில் உள்ளது. இந்த சட்ட விதி மேற்கூறிய வகையில் ஆராய்ச்சிகளை முறைப்படுத்தி கட்டணத் தொகை வசூல் செய்வதிற்கு தேசிய உயிர்-பன்மை ஆணையம் மற்றும் இதர கமிட்டிகளுக்கு கூடுதல் அதிகாரம் தருகிறது. சட்டத்தின் செயலற்ற நிலை மாநில அரசு கிராம பஞ்சாயத்து போன்ற உள்ளாட்சி அமைப்புகளோடு கலந்தாலோசித்து,

உயிர்-பன்மை முக்கியத்துவம் உடைய இடங்களை உயிர்-பன்மை பாரம்பரிய இடங்களாக (Biodiversity Heritage Sites)அறிவிக்க இச்சட்டம் வழிவகுத்துள்ளது. இவ்வாறு அறிவிக்கப்படும் இடங்கள் சிறப்புச் சட்டங்கள் மூலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று மேற்கூறிய சட்டம் கூறுகிறது. 2008ம் ஆண்டு நிலவரப்படி கேரளா, கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களை தவிர வேறு எந்த மாநிலமும் இந்த பிரிவுப்படி உயிர்-பன்மை பாரம்பரிய இடமாக தங்கள் மாநிலங்களில் எந்த இடத்தையும் இன்னும் கண்டறியவில்லை. குறிப்பாக தமிழகத்தில் எந்த உள்ளாட்சி அமைப்பும் உயிர்-பன்மை நிர்வாகக் குழுவை ஏற்படுத்தியதாக தெரியவில்லை.

கிராம பஞ்சாயத்து அளவில் இந்த சட்டம் செயல்படுத்தப்படும் போது மட்டுமே நம் மரபுசார் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படும். இயற்கை வளம் என்பது இங்கு மீன்வளம், நீர்வளம் ஆகியவற்றை உள்ளடக்கியதே. பிளாசிமேடா என்கிற ஒரு சிறிய பஞ்சாயத்துதான் கோக் என்கிற மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனத்தை தங்களுடைய நீர் வளத்தை சுரண்ட விடாமல் துரத்தியது என்பதை நாம் மறக்கக் கூடாது. அது போல நமது நீர்வளம், மீன்வளம் அது சார்ந்த மரபு அறிவாண்மையை பாதுகாக்க இச்சட்டத்தை நாம் பரவலாக்க வேண்டிய தேவை இருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வான் தாக்குதல் – குழந்தைகள் உள்ளிட்ட 17 பேர் பலி!!
Next post பிரசந்தாவின் பிறந்த நாளை கொண்டாடும் கூகுள் !!