கண்ணம்மா கண்ணம்மா!!(மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 43 Second

யாரிடமும் தற்சமயம் மிகவும் பாதித்த திரைப்பாடல் எது என்று கேட்டால் ‘காலா’வின் ‘கண்ணம்மா..கண்ணம்மா..’ தான் என்பது பெரும்பாலும் யாவரின் பதிலாகவும் இருக்கும். எழுதிய கவிஞர் உமாதேவிக்கு சமூக ஊடகங்களில் ஏகப்பட்ட லைக்ஸ். சூழலுக்கும், மனம் ஒன்றிவிடுகிற அந்தக் காட்சிக்கும் ‘கண்ணம்மா..’வின் வரிகள் ரொம்பவும் பொருந்திப்போகின்றன. ‘மாயநதி’யில் கரைந்து வந்த உமாதேவி ‘கண்ணம்மா’ உருவான விதம் பற்றிப் பேசினார்.

துள்ளி வந்த குளிர் உரையாடலில் இருந்து… “ஒரு வார்த்தைதான் எங்களை இணைத்தது. அதுதான் மக்களுக்கான சினிமா. இயக்குநர் பா.இரஞ்சித் அதற்கான இடத்தை, பாடலுக்கான வரிகளின் சுதந்திரத்தை எங்களுக்கு எப்பவும் அளிப்பார். எல்லாமே அவர் கொடுத்த சுதந்திரத்தின் நல் விளைவுதான்” என்றவர், ‘ஆகாயம் சாயாமல் தூவானம் ஏது? ஆறாமல் ஆறாமல் காயங்கள் ஏது?’ என தான் எழுதிய வரிகளை பாடிக்கொண்டே நம்மிடம் தொடர்ந்தார். “இயக்குநர் இரஞ்சித்துக்கு மெலடியான பாடல்கள்தான் ரொம்பவும் பிடிக்கும்.

அந்தவகையில் அவர் இதுவரை இயக்கிய படங்களில், அவருக்குப் பிடித்த மெலடிப் பாடல்களில் எனது மூன்று பாடல்களுமே இடம் பெற்றுள்ளது. மெட்ராஸ் படத்திற்காக நான் எழுதிய ‘நான்..நீ..’ பாடல், கபாலி படத்திற்காக நான் எழுதிய ‘மாயநதி இன்று..’ பாடல், இப்போது காலாவிற்காக எழுதிய ‘கண்ணம்மா…’ பாடல் என இயக்குநர் இரஞ்சித்துக்காக மூன்று மெலடி எழுதியிருக்கிறேன். கபாலியில் மாயநதி பாடலை நான் எழுதும்போது காட்சிகளை பதிவு செய்துவிட்டு வந்து பாடலை எழுதச் சொல்லிக் கேட்டார்கள். பாடலை எழுதிய பிறகு காட்சிகளை பதிவு செய்திருக்கலாமே என்ற எண்ணம் அப்போது இருந்தது.

ஆனால் காலா படத்தில் எனது பாடல் வரிகளுக்கு ஏற்ப காட்சிகளை விஷுவலைஸ் செய்ய வேண்டும் என்பதில் இயக்குநரும், சினிமாட்டோகிராஃபரும் உறுதியாகவே இருந்தனர். எனவே காலாவில் முழுக் கதையையும் எனக்குச் சொல்லி, பாடலுக்கான காட்சி அமைப்பையும் என்னிடம் விளக்கிய பிறகே, பாடல் வரிகளை நான் எழுதினேன். பிறகுதான் பாடல் காட்சிகளை பதிவாக்கினார்கள். அந்த பாடலுக்கான காட்சிகள் சென்னை மதுரவாயலில் தாராவி போன்று செட் போட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

கபாலி படத்தில் 20 வருடங்களுக்குப் பிறகு சந்திக்கும் கணவன்-மனைவிக்கான பாடல் ஒன்றை எழுதியிருந்தேன். இதுவும் அந்த மாதிரியான ஒரு பாடல்தான். ஜெரினா என்ற கதாப்பாத்திரத்திற்காக எழுதப்பட்ட பாடல் அது. காதலர்களாக இருந்த இருவரும் பிரிந்துவிடுவார்கள். அவர்களின் காதல் திருமணம் வரை சென்று, சூழ்நிலையால் காதல் உடைந்து, திருமணமும் நின்றுவிடும். காதலர்கள் சந்திப்பதற்கான வாய்ப்பு நீண்ட இடைவெளிக்குப்பின் கிடைக்கும். தன் காதலியோடு பேசியது, சிரித்தது, பழகியது, தாங்கள் என்னமாதிரியான வாழ்க்கை வாழ கனவு கண்டோம் என அத்தனையும் காதலியை பார்த்த நிமிடத்தில் காதலனின் அடி ஆழத்தில், கிடப்பில் கிடக்கும் அந்தக் காதல், காலாவிற்குள் தோன்ற வேண்டும்.

இயக்குநர் இரஞ்சித்துடன் ஏற்கனவே மெட்ராஸ், கபாலி என தொடர்ந்து இரண்டு படங்களுக்கு வேலை செய்திருப்பதால், டீம் வொர்க் என்பது எந்த அளவிற்கு படத்திற்கு வெற்றியினைக் கொடுக்கும் என்பது ஏற்கனவே நிரூபணமாகி இருந்தது. தொடர்ந்து அதே டெக்னீஷியன்கள், சினிமாட்டோகிராஃபர், ஆர்ட் டைரக்டர், எடிட்டர், லிரிக்ஸ் என எல்லோரும் இதில் வேலை செய்துள்ளோம். மெட்ராஸ், கபாலி தொடர்ந்து காலா இவை எல்லாமே எங்களுக்குள் உள்ள புரிதலின் வெளிப்பாடே. எங்கள் புரிதல் தொடர்கிறது.

காலா படத்தில் நான் எழுதியுள்ள கண்ணம்மா மெலடி பாடலைத் தொடர்ந்து இன்னொரு பாடல் ஒன்றையும் எழுது வதற்கு என்னிடம் பேசினார்கள். மும்பையில் தாராவியினை மையமாகக் கொண்ட இப்படத்தில், அந்த மண் சார்ந்து வாழும் கலைஞர்கள் மற்றும் பாடலாசிரியர்களும் இருக்கிறார்கள். எனவே, அவர்களுக்கும் முக்கியத்துவமும் தரப்படவேண்டும் என்கிற நிலைப்பாட்டில், அந்த நிலத்திற்கான படமென்கிற பட்சத்தில், அங்கு வாழும் கலைஞர்களும் இடம்பெறுதல் வேண்டும் என நினைத்து, இரஞ்சித் பாடல்களை அனைவருக்குமாக பகிர்ந்து கொடுத்திருக்கிறார்.

அங்கிருக்கக் கூடிய பாடலாசிரியர்களும் சில பாடல்களை இதில் செய்திருக்கிறார்கள். காலாவில் மொத்தம் 9 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. பாடல்கள் ஆங்காங்கே இடத்திற்கு ஏற்றார்போல், பாடல் வரிகளாக வரும். கண்ணம்மா பாடல் முழுமையாக வரும். பிரதீப் குமார் மற்றும் தீ இருவரும் கண்ணம்மா பாடலைப் பாடியுள்ளனர். தீ இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகள். இன்னொரு வர்ஷனில் அகதுல்லாவில் எமோஷனல் மியூசிக்கில் பாடலைக் கொண்டு வந்திருப்பார். அதை அனந்து பாடியுள்ளார். பாடல்கள் மிகவும் அருமையாக வந்துள்ளன.

அனந்துதான் கபாலியில் மாயநதி பாடலில் முதலில் வரும் முதல் சரணத்தைப் பாடியவர். இயக்குநர் இரஞ்சித் சாரைப் பொறுத்தவரை, படத்தில் உள்ள அனைத்து டெக்னீஷியன்களுக்குமே உரிய மரியாதையை கொடுப்பார். அவர்களும் பொறுப்பை உணர்ந்து செயல்படுவார்கள். யாரையும் எதற்காகவும் நெருக்கடிக்கு உட்படுத்தவே மாட்டார். இதை இப்படி செய், வார்த்தையை மாத்து, வரியை மாத்து போன்ற வேலைகளையெல்லாம் எப்போதும் செய்ததில்லை. தானொரு படைப்பாளியாக இருந்து, சக படைப்பாளிக்கு உரிய நேரத்தையும், மரியாதையையும் கொடுப்பார்.

நமக்கான வேலையினை, நம்மை நம்பி முழுவதுமாக நம்மிடம் ஒப்படைப்பார். கதையை சொல்லும்போதே கதையில் வரும் பாடலுக்கான பொறுப்பை நான் முழுவதுமாக எடுத்துக்கொள்வேன். அந்த ஒப்படைப்புதான் மிகப்பெரிய விஷயம். இன்றைக்கு இந்தப் பாடல்கள் வெற்றியை நோக்கி நகர்வதற்கு இச்சுதந்திரமே காரணமாக இருக்கின்றது. காலா படப்பிடிப்பின்போது, படப்பிடிப்பு தளத்தில் என் பாடலுக்கான காட்சிகளை எடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ரஜினி சாரை பார்க்கச் சென்றிருந்தேன். கபாலியில் நான் எழுதிய மாயநதி பாடல் வந்த பிறகு நான் ரஜினி சாரை சந்திக்கவே இல்லை.

இரஞ்சித் சார்தான், ரஜினி சாரிடம் என்னை அழைத்துச் சென்று நம்ம கவிஞர் உமாதேவி வந்திருக்காங்க என அறிமுகப்படுத்தினார். அதற்கு ரஜினி சார், ‘வாங்க..வாங்க..’ என எனக்கு கைகொடுத்து, ‘ரொம்ப இளமையான கவிஞரா இருக்கீங்க. மாயநதி பாடல் ரொம்பப் பிரமாதமாக இருந்தது’ என அவரது ஸ்டைலில் சிரித்துக்கொண்டே என்னைப் பாராட்டினார். கண்ணம்மா பாடலும் ரொம்பப் பிரமாதமாக வந்திருக்கு, அருமையாக வந்திருக்கு எனப் பாராட்டினார்” என முடித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிங்கப்பூர் மாநாடும் எதிர்பார்ப்புகளும்!!(கட்டுரை)
Next post மனசுதான் டாக்டர்…!!(மருத்துவம்)