அம்மாவும் அப்பாவும் lovable couple!!(மகளிர் பக்கம்)

Read Time:26 Minute, 39 Second

நடிகை சாவித்திரியைப் பற்றிய படமான ‘நடிகையர் திலகம்’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தைப் பார்த்தவர்கள் சாவித்திரியின் வாழ்க்கையின் தாக்கத்தில் மிரண்டு நிற்கிறார்கள். திரை உலகம் கொண்டாடிய ஒரு மிகப் பெரிய நடிகையின் வாழ்க்கை இத்தனை ஏற்றத்தாழ்வுகளும் துயரமும் நிறைந்ததா? அவரைப் பற்றி அறிய அவரின் மகளான விஜய சாமுண்டீஸ்வரியிடம் பேசினேன்.

‘நடிகையர் திலகம்’ எப்படி வந்திருக்கு?

எனக்கு படம் மிகவும் பிடித்திருந்தது. ரொம்ப திருப்தியாகவும் இருந்தது. என் அம்மா-அப்பாவின் காதல் கதையை கண் முன்னால் பார்க்கிற பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைக்கும்? எனக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைத்திருக்கிறது. அவர்கள் இருவரும் லவ்வபிள் கபுள் என்று ஆரூர்தாஸ் மாமா அடிக்கடி சொல்வார். அப்பா காரில் வந்து அம்மாவுக்காக காத்திருப்பது… அம்மாவிற்காக காரிலிருந்து ஹாரன் ஒலி எழுப்புவது… அம்மா, அப்பாவிடம் வருவது… என எல்லாத்தையும் அவர் சொல்லி நிறையக் கேட்டிருக்கிறேன். அம்மா, அப்பாவுடன் நெருங்கிய நட்பில் இருந்த, பலர் சொல்லிக் கேட்ட அவர்களின் காதல் கதையினை திரையில் பார்க்கும்போது ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தது எனக்கு.

உங்கள் அப்பாவாக நடித்த துல்ஹரின் நடிப்பு பற்றி?

துல்ஹர் அப்பா கேரக்டரை எடுத்து செய்தது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அப்பாவுடைய அதே ஸ்டைல், அவரோட இயல்பான நடிப்பு, துடுக்குத் தனத்துடன் பட்பட்னு பதில் சொல்ற அவரின் கேரக்டர், எப்பவும் ஸ்டைலிஷா இருக்கும் அவரின் மேனரிஸ‌ம். துல்ஹரிடம் அப்பா கேரக்டர் அப்படியே பொருந்தி இருந்தது. சில விசயங்களை அப்பாவால் ஏத்துக்க முடியலைன்னாலும், சட்டுன்னு தன்னை மாத்திக்கிட்டு ‘இல்ல அம்மாடி, நீ நடிக்கிறத நிறுத்தக்கூடாது’ எனச் சொல்லும் இடத்தில் எல்லாம் அப்பாவின் கேரக்டரை அவர் நன்றாகப் புரிந்து நடித்திருக்கிறார். அம்மா எப்பவுமே இன்னொசன்ட் டைப். எதுக்காக அப்பா மூடு அவுட்டாகி குடிக்கிறார் என்பது கூடத் தெரியாது. ‘என்னால்தான் குடிக்கிறீங்களா?’’ என கேட்பார். ‘என்னால்தான் நான் குடிக்கிறேன். உன்னால் இல்லை. அந்த உரிமையை எனக்கு தர மாட்டியா’ என அப்பா கேட்பார். அந்தக் காட்சியில் எல்லாம் துல்ஹர் ரொம்பவே அப்பாவைப்போல் அசத்தியிருப்பார்.

உங்கள் அப்பாவை குடிகாரராக காட்டி இருப்பதாக கருத்து நிலவுவது பற்றி?

இது முழுக்க முழுக்க அம்மாவைப் பற்றிய படம். அம்மாவைப் பற்றிய படத்தில் அப்பாவைப் பற்றிய கேரக்டரைசேஷனைக் கொண்டுவர முடியாது. ஆனாலும் ஒரு சில இடங்களில் அப்பாவின் கேரக்டருக்காக டயலாக் மூலமாக சில விசயங்களை செய்திருக்கிறார்கள். அம்மாவோடு தொடர்புடைய அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டும்தான் இதில் அப்பாவிற்காக காட்டப்பட்டுள்ளது. அந்தச் சம்பவம் நடந்தபோது அப்பா ரொம்பவே அப்செட்டாக இருந்தார். அதனால் அவர் குடிப்பதாக காட்டப்பட்டுள்ளது. அதற்காக அப்பா குடிகாரர் என்றாகிவிடாது. அவரை குடிகாரர் என்று காட்டுவதற்காக அந்தக் காட்சிகள் திணிக்கப்படவில்லை.

இதில் அப்பாவை மட்டும் நெகட்டிவாகக் காட்டவில்லை. அம்மாவையும்தானே நெகட்டிவாக காட்டியுள்ளார்கள். அம்மாவின் பிடிவாதத்தை, அம்மா குடிப்பதை, அம்மா ஏமாந்ததை எல்லாம்தானே காண்பிச்சுருக்காங்க. ஒரு பயோபிக் மூவி எடுக்கும்போது நேச்சுரலா அந்த கேரக்டருக்கு இருக்க கேரக்டரைசேஷனை காட்டனும். படத்துல் பிக் ஷ‌ன் கதை எழுதுற மாதிரி ஹீரோ இப்படி ஹீரோயின் இப்படி என காட்ட முடியாது. அவுங்க நேச்சுரல் கேரக்டரைத்தான் காட்ட முடியும். அம்மா, அப்பா இரண்டு பேருக்கும் இருக்குற பிளஸ் மைனஸ் இரண்டையும் ரொம்ப நேச்சுரலா காமிச்சுருக்காங்க.கொஞ்சம் யாராவது அழுதா அம்மா உடனே மனம் இரங்கிடுவாங்க‌. நின்னு யோசிக்கிற தன்மை இல்லை அவ‌ங்களுக்கு. எப்பவுமே அதுதான் அவ‌ங்க கேரக்டர்.

படம் பற்றி உங்கள் கருத்து?

இயக்குநரைத்தான் பாராட்ட வேண்டும். அம்மாவின் மொத்த வாழ்க்கையையும் மூன்று மணி நேரத்திற்குள் காட்ட வேண்டும். குழந்தைப் பருவம், டீன் ஏஜ், 20 வயதில் இருந்து அவர் முடிவு வரை என்று மூன்று காலமாக இயக்குநர் காட்டி இருக்கிறார். மொத்தமாக காட்டும்போது அதில் பல விசயங்கள் கலந்திருக்கும். அம்மாவின் பாத்திரப் படைப்பு, அவரின் இன்பம், துன்பம், அவர் பட்ட கஷ்டம், அம்மா செய்த தானம். திரைத் துறையில் அவர் முன்னுக்கு வந்தது என எல்லாவற்றையும் காட்டனும். இத்தனையும் காட்ட அந்த
3 மணிநேரம் பத்தாது. அதுவும் அம்மா தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் சிறந்து விளங்கியதால் எல்லாவற்றையும் கொண்டுவருவது கஷ்டம். எனவே தெலுங்கு படமாக நினைத்து தெலுங்கில் மட்டும் காண்பிக்கிறார்கள். தெலுங்கில் எடுத்ததைத்தான் தமிழில் டப் செய்திருக்கிறார்கள்.

அம்மாவுடைய திரை உலக வாழ்க்கை மிக அகன்று விரிந்தது. அம்மா இருந்தது மிகக் குறைந்த நாட்கள்என்றாலும் எல்லா புகழ் பெற்ற நடிகர்களுடனும் நடித்திருக்கிறார்கள். தெலுங்கு திரை உலகத்திலும் அம்மா நடித்த நிறைய படங்களை காட்டவில்லை என ஒரு குறை இருக்கு. அவ‌ங்க திரை வாழ்க்கையோட அவ‌ங்க சொந்த வாழ்க்கையும் காட்ட வேண்டியது இருந்ததால், நிறைய காட்சிகள் எடிட்டிங்கில் நீக்கப்பட்டு இவ்வளவுதான் காட்ட முடிந்தது. எல்லாவற்றையும் காட்ட மூன்று மணி நேரம் பத்தாது. எனவே தமிழ்த் திரை உலகத்திற்கு குறையாகத் தெரியுது.

அம்மா-அப்பா காதல் வாழ்க்கை பற்றி?

அம்மா, அப்பா தொடர்பான‌ எந்தக் காட்சியும் அதில் சும்மா காட்டப்படவில்லை. அவர்களின் ரொமான்டிக் லைஃப் ரொம்ப ஸ்ட்ராங்கானது. அவங்க ரெண்டு பேரும் வாழ்ந்த வாழ்வை அப்பாவின் பொற்காலம்னு சொல்லலாம். படத்தில் கூட அதை அழகா காட்டியிருப்பார்கள். அப்பாவை அம்மா குளிக்க வைப்பது, வாசல் வரை வந்து வழி அனுப்புவதென அம்மா-அப்பாவின் சின்னச் சின்ன அன்பை, காதலை நான் கண்ணாலேயே பார்த்திருக்கிறேன். நான் பார்த்ததைதான் படத்திலும் அப்படியே காட்டியுள்ளார்கள். அவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமா, அன்பா, காதலா இருப்பதை நிறைய பார்த்திருக்கிறேன். அதனால்தான் அப்பாவின் பிரிவால் அம்மா நிறைய பாதிக்கப்பட்டாங்க. அதனால்தான் அம்மாவுக்கு இத்தனை பாதிப்பு வந்தது. அவர்களின் காதல் வாழ்க்கை படத்திலும் ரொம்ப அழகா வந்திருக்கு. படத்தில் எனக்கு அந்தக் காட்சிகள் ரொம்ப பிடித்திருந்தது.கல்யாணம், காதல், வாழ்க்கை பற்றி
அப்பாவின் சிந்தனைகள் எல்லாமே ரொம்ப வித்தியாசம். It is much ahead of this time அவருடைய சிந்தனை அப்பவே அப்படி இருந்தது. காதல் என்பது நாம தேடி கண்டுபிடிப்பது இல்லை. அது அந்த நேரத்தில் நடப்பது. நேச்சுரல் ஹேப்பனிங். அது நடக்கும்போது நம்மால் அதை தடுத்து நிறுத்தவும் முடியாது. அப்பா நடிகராக சிறந்து விளங்கியபோதும், அம்மாவினுடனான காதலின்போதும் சரி,

அவரோட காதல் ஒரு சைக்கலாஜிக்கல் ஸ்டடி

நாராயணி அக்காவே (முதல் மனைவியின் மூத்த மகள்) சொல்லி இருக்காங்க… ‘எனக்கு முதல்ல சாவித்திரி அம்மாவ யாருன்னே தெரியாது. ஒரு முறை வீட்டுக்கு போகும்போது நான் அவுங்களை நர்ஸ் என நினைத்துவிட்டேன். அந்த அளவுக்கு அப்பாவ அவ‌ங்க ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டாங்க’ என்று. என்னோட மற்ற எல்லா சகோதரிகளுக்கும் சாவித்திரி அம்மான்னா இஷ்டம்தான். இருந்தாலும் அப்பாவோட இந்த காதல் வாழ்க்கையை படம் போட்டு காட்டும்போது இது கொஞ்சம் அன்ஈஸியாகத்தான் இருக்கும். கஷ்டமாகத்தான் இருக்கும். அவ‌ங்க கண்ணோட்டத்தில் பார்த்தால் அவ‌ங்க வலி நமக்கு புரியும்.

உங்கள் அம்மாவோடு ஒப்பிட்டு அப்பாவுக்கு தாழ்வு மனப்பான்மை இருந்ததா?

சரியா புரிஞ்சுக்கணும். அது இன்ஃபீரி யாரிட்டி கேரக்டர் இல்லை. கணவன்- மனைவி இருவரும் ஓரிடத்தில் ஒன்றாக இருக்கும்போது, ஒருத்தருக்கு மட்டும் முக்கியத்துவம் வரும்போது உடனிருப்போருக்கு ஒருவிதமான அன்ஈஸினஸ் வருவது இயற்கை. அதுவும் கணவன்- மனைவியாக ஒரே வீட்டில் வாழும்போது வருபவர்கள் ஒருவருடன் மட்டும் பேசிக்கொண்டே இருந்தால் இன்னொருத்தருக்கு அது சங்கடம். அதுவே வரவே செய்யும். இது காம்ப்ளெக்ஸ் இல்லை. சூழ்நிலை அப்படி.

ஹைதராபாத்தில் நிகழ்ந்த அந்த‌ யானை சம்பவம் குறித்து?

ஆந்திராவில் நிகழ்ந்த அம்மாவிற்கான பாராட்டு நிகழ்ச்சி அது. ஊர்வலம் நடந்தது எல்லாமே உண்மை. ஆந்திராவில் அம்மாவுக்கான நிகழ்ச்சி என்பதால் சென்டர் ஆஃப் அட்ராக் ஷன் அம்மாவுக்குத்தானே வரும். ஆந்திர மாநிலத்தைப் பொறுத்தவரை அப்பா பெரிய ஆர்டிஸ்ட் இல்லை. சாவித்திரி அம்மா கணவர் என்ற முறையில் மட்டுமே அவருக்கு அங்கு மரியாதை. மேலும் அம்மாவுக்கும் அப்பாவுக்குமான இடைவெளி என்பது அந்த ஒரே நாளில் உருவானதல்ல. கொஞ்சம் கொஞ்சமாக உருவாகி பெரிதாக வெடித்தது. அது பல கட்டமாக நடந்தது.

அப்பாவை அம்மா பிரிவதற்கான காட்சி என படத்தில் வருவதெல்லாம்…

ஆமாம். அம்மாவிற்கு அந்த இடத்தை எப்படி கையாளணும்னு தெரியலை. அம்மா எப்பவும் கொஞ்சம் பிடிவாத குணம். கூட இருந்தவர்களும் நல்லதைச் சொல்லி இது தப்பு, இதிலிருந்து வெளியில் வா என சொல்லும் நட்பாக இல்லை. உறவுகளும் அவர்களின் சுய லாபத்திற்காக, அவர்கள் இருவரையும் பிரிக்கப் பார்த்தார்களே தவிர அவர்களை ஒன்றிணைக்க யாரும் முயற்சிக்கவில்லை.

உங்களுக்கு ஜெமினி கணேசன் என்கிற நடிகரைப் பிடிக்குமா? அப்பாவைப் பிடிக்குமா?

எல்லாரும் என்னை அப்பா பொண்ணுன்னுதான் சொல்வார்கள். அதுதான் உண்மையும் கூட. நான் எப்பவுமே அப்பாவோட செல்லம். அப்பா என்னை விஜிக் குட்டி என்றே செல்லமாக அழைப்பார். நான் பிறந்தபோது என்னை அப்பா தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடினார். அம்மாவும் அப்பாவும் பிரிந்தபோது அந்தப் பிரிவால் ரொம்பவும் நான் பாதிக்கப்பட்டேன். எனக்கு அது கஷ்டமான சம்பவம். எனக்கே அப்படின்னா அவர்களுக்கு எவ்வளவு வலி இருந்திருக்கும்? இருந்தாலும் என்னையும் தம்பியையும் பார்க்க அப்பா வீட்டுக்கு வந்து போவார். ஆனால் அம்மா அப்பாவுடன் பேச மாட்டார். அப்பா எங்களை அவரின் வீட்டுக்கு அழைத்துச் செல்வார். அக்காக்களுடன் இணைந்து ஷாப்பிங் செல்வது, வெளியில் செல்வது என அப்பாவோடு மிகவும் மகிழ்ச்சியாக இருப்போம். ஒரு கட்டத்திற்கு மேல் அம்மா அப்பாவை முழுவதும் வரவிடாமல் செய்துவிட்டார். அந்த நேரத்தில்தான் அம்மா சரிவை நோக்கிப் போகத் துவங்கினார்.

அப்பா எங்களுடன் எப்போதும் தொடர்பிலேயே இருந்தார். அனைவர் மீதும் அவருக்கு அலாதி ப்ரியம். அவர் ஒரு நடிகரா இருந்தாலும் பொறுப்பான அப்பா. எங்களை எல்லாம் நீ என்ன படிக்க விரும்புற…நீ அதை செய், இதை செய் என எதையாவது சொல்லி, எதையாவது ஒன்றை எங்களை செய்ய வைத்துக் கொண்டே இருப்பார். பெண் குழந்தைகள் சும்மா வீட்டில் இருக்கக் கூடாது, கண்டிப்பாக படிக்க வேண்டும் என்பதில் உறுதியா இருப்பார்.எனக்கு சின்ன வயதிலே திருமணம் நடந்ததால், எனக்கு குழந்தை பிறந்து 2 வயதான பிறகு, என்னை ‘படி, காலேஜ் போ’ என வற்புறுத்தி, நான் சம்மதிக்காத நிலையில் நாராயணி அக்கா மூலம் என்னை சம்மதிக்க வைத்து, அப்பாவும் கமலா அக்காவும் என்னை எத்திராஜ் கல்லூரியில் பி.ஏ. இங்கிலீஸ் லிட் படிக்க சேர்த்துவிட்டார்கள்.

அம்மாவோடு சண்டையெல்லாம் உண்டா?

நன்றாக நினைவில் இருக்கு. எனக்கு அப்போது 13 வயது. நான் அன்று ரொம்பவே கோபமா இருந்தேன். சும்மா குடித்துக் குடித்துக் கொண்டே இருந்தால்? தம்பி வேறு சின்னப் பையன். எங்கள் முன்பே அம்மா குடிப்பது எனக்கு கஷ்டமாக இருந்தது. அந்த மனநிலையில் எரிச்சலுடன் அம்மாவிடம் குடிப்பதை நிறுத்தச் சொன்னேன். படத்தில் வரும் அத்தனை வசனமும் அப்படியே நான் சொன்னதுதான். அம்மா நான் சொன்னதை கொஞ்சமும் கேட்கவில்லை. கோபத்தில் எல்லா பாட்டில்களையும் தூக்கி எறிந்து உடைத்தேன். அன்று அம்மா ரொம்பவே என்மேல கோபப்பட்டார். நெருப்பு பிடிப்பதெல்லாம் இயக்குநர் பிக் ஷனுக்காக‌ வைத்தது. ஒரு கேரக்டர் இன்னொரு கேரக்டருக்கு மாறுவதற்கான ஒரு சிம்பாலிசேஷன் என்பதால் அதில் டைரக்டர் அவர் டச்சுக்காக ஃபயர் சீன் வைத்துள்ளார். அதன் பிறகே அம்மா குடிப்பதை நிறுத்தினார். அதைக் காட்டத்தான் அந்த இடத்தில் அழுத்தமாக‌ அந்த காட்சி.

நீங்கள், உங்கள் தம்பி சதீஷ் இருவரும் ஆடியோ வெளியீட்டில் உணர்ச்சிவசப்பட்டுவிட்டீர்களே?

அம்மாவைப் பற்றி படம் எடுக்க நினைத்ததும், அதை இவ்வளவு பிரமாண்டமாக எடுத்ததும், அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், துபாய் போன்ற வெளிநாடுகளில் இருந்தெல்லாம் எனக்கு தொடர்ந்து வாழ்த்துக்களும், தொலைபேசி அழைப்புக்களும் வந்தது. எல்லாரும் அம்மா மாதிரியே உடை உடுத்தி படம் பார்க்கச் செல்கிறார்கள் என்பது மாதிரியான தகவல்கள் எங்களை அழவைத்துவிட்டது… இதற்கெல்லாம் காரணம், அம்மாவைப் படமாக்கிய இந்த இளைஞர்கள்தானே. நடிகர் நாக சைத்தன்யா பணம் எதுவும் வாங்காமலே அம்மாவிற்காக இந்தப் படத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறார். சாவித்திரி அம்மாவோட படத்தில் நான் இருக்கேன் என்பதே எனக்கு பெருமை, எனக்கு ஏதாவது ஒரு சின்ன கேரக்டர் கொடுத்தாலும் நடிக்கிறேன் என ஏற்று நடிகை சமந்தா இந்தக் கதாபாத்திரத்தில் நடித்துக் கொடுத்தார். திரை உலகில் அம்மாவுக்கு அந்த அளவுக்கு ஒரு மரியாதை இருக்கு. அதனால் வந்த அழுகை அது.

உங்கள் சின்ன வயது திருமணம் பற்றி?

16 வயதில் எனக்கு திருமணம். அம்மா உடல் நிலை கருதி என் அம்மாவின் உறவுக்காரோடு திருமணம் முடிவானது. அப்பாவுக்கும் அவரை ரொம்ப பிடிக்கும். ஆனால் சின்ன வயதில் திருமணம், பெண்ணை படிக்க வைக்காமல் திருமணம் செய்வதில் அவருக்கு விருப்பம் இல்லைதான். என் திருமணத்தின்போது தென்ஆப்பிரிக்காவில்நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றிருந்தார். எனவே பாபுஜி அம்மாவும்(அலமேலு) சாவித்திரி அம்மா இருவரும்தான் என்னை தாரை வார்த்துக் கொடுத்தார்கள். அப்பா, அம்மா இருந்து செய்ய வேண்டிய இடத்தில் இரண்டு அம்மாக்களும் அமர்ந்து தாரை வார்த்தது என் வாழ்க்கையில் நிகழ்ந்த வினோதம்.

பாபுஜி அம்மா கேரக்டரே வேற. அவர் எல்லாவற்றுக்கும் ஒத்துப் போகிறவர். அடங்கிப் போற டைப். அம்மா மாதிரி அப்பாவிடம் எதிர்ப்புக் காட்டவில்லை. குழந்தைகளை மட்டும் மனதில் வைத்துக்கொள்வார். எனக்கு பாபுஜி அம்மா என்றால் ரொம்ப மரியாதை. எனக்கு பெரியம்மாவை ரொம்பவே பிடிக்கும். ரொம்பவும் அன்பானவர்.பாபுஜி அம்மா பற்றி கமலா அக்கா தமிழில் ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். பெயர் ‘பெண்ணின் பெருமை’. அதை ஆங்கிலத்தில் நான் மொழி பெயர்த்திருக்கிறேன். எழுதுவதும் எனக்கு ரொம்ப பிடிக்கும். ‘Pride of womenhood’ என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்தேன். பாபுஜி அம்மா மீதிருந்த அன்பால் நான் சந்தோஷமாக அந்த வேலையை முடித்தேன்.

அம்மாவைத் தொடர்ந்து நீங்கள் சினிமாவில் நடிக்க முயலவில்லையா?

அப்படி எதுவும் இல்லை. நான் காலேஜ் படிக்கும்போது தெலுங்கு திரை உலகின் மிகப் பெரிய இயக்குநரான தாசரி நாராயணராவ் என்னை நடிக்க சொல்லிக் கேட்டார். எனக்கு அதில் விருப்பம் இல்லை. ஆனால் அம்மா மாதிரி சின்ன வயதில் நடனம் கற்றுக் கொண்டேன். அம்மாவின் உடல் நிலை பாதிப்படைந்ததும் அதையும் விட்டுவிட்டேன். என் திருமணத்திற்கு பின் வீட்டிலேயே இருந்துவிட்டேன். எனக்கு உடற்பயிற்சி ரொம்ப பிடிக்கும். அப்பா யோகா செய்வதை நிறைய பார்த்திருக்கிறேன். என் குழந்தைகள் பெரியவர்கள் ஆனதும் சொந்தமாக ஜிம் ஒன்றை நடத்தினேன். அக்கா கமலா செல்வராஜின் மருத்துவமனையில் உடற்பயிற்சி தொடர்பான கன்சல்டன்டாகவும் இருந்தேன்.தம்பி சதீஷ் பொறியியல் முடித்து கலிபோர்னியாவில் வேலையில் உள்ளான். என் அக்கா ராதாவும் அங்குதான் உள்ளார். ராதா ரேகாவுடன் பிறந்தவர். புஷ்பவல்லி அம்மாவின் பொண்ணு.

ëஅம்மா கோமாவுக்கு போன கடைசி நாள் என்ன நடந்தது?

படத்தில் உள்ள அந்த சம்பவம் அப்படியே நடந்தது. பாட்டில் உடைந்தது மட்டுமே கற்பனை. ஆனால் அம்மா ரொம்ப இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் அன்றைக்கு குடிக்க ஆரம்பிச்சுருக்காங்க. இன்கம்டாக்ஸில் இருந்து போன் வந்ததும் அதன் அழுத்தத்தால், சாப்பிடாமல் இருந்து குடிக்கத் துவங்கி, சர்க்கரை நோய் வேறு அம்மாவிற்கு இருந்தது. எல்லாம் சேர்த்து அவரை கோமாவில் கொண்டு நிறுத்திவிட்டது. தம்பி சதீஷுக்கு 14 வயது. அவன் அப்போதும் குழந்தைத்தனமான முகத்தோடுதான் இருந்தான். கோமாவிற்கு சென்ற பிறகு அப்பாதான் அம்மாவை முழுவதும் பார்த்துக் கொண்டார். படத்தில் இடம்பெற்ற வசனம் போலவே அப்பா அம்மாவைப் பார்த்துக்கொண்டாலும் பத்திரிகைகள் இவர்கள் இருவரையும் வேறுவிதமாகவே எழுதின.

படத்தின் தாக்கம் உங்களுக்கு எப்படி இருந்தது?

படம் பார்த்து ஒரு மாதிரியான தாக்கத்தில் நான்கு நாட்கள் இருந்தேன். அதன் பிறகே தொலைபேசிகளில் பேசத் துவங்கினேன். அம்மாவின் படத்தில் காட்டப்பட்டுள்ள அனைத்து சம்பவங்களும் உண்மை. பெயர்கள் மட்டுமே மாற்றப்பட்டுள்ளன‌. அம்மாவை ஏமாற்றியவர்களை இருந்துவிட்டுப் போகட்டும் என அம்மாவே மன்னித்து, எதையுமே அவர்
களிடம் கேட்க வேண்டாம் எனச் சொல்லி விட்டார்.அம்மாவுடைய இந்தப் படத்தினால், அம்மாவுடன் நடித்த மிகப்பெரிய லெஜன்ட்களின் வாரிசுகள் எல்லாம் மீண்டும் இணைந்திருக்கிறோம். எல்லோரும் மொபைல் எண்களை பகிர்ந்திருக்கிறோம். சந்திக்க முடிவு செய்திருக்கிறோம். என்.டி.ராமாராவ் மகள் புரந்தரேஸ்வரி என் வகுப்புத் தோழி. அவர் என்னிடம் நீண்ட நேரம் பேசினார். நடிகர் நாகேஸ்வர ராவ் பொண்ணு சுசீலா தொலைபேசியில் என்னிடம் உரையாடினார். தெலுங்கு திரை உலகின் மிகப் பெரிய நடிகர் கும்மடி வெங்கடேஸ்வர ராவ். அவரின் மகள் படம் பார்த்துவிட்டு என்னோடு பேசினார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சார் மகள் தேன்மொழியும் என்னோடு படித்தவர். தேனும் எனக்கு போன் செய்து அம்மா பற்றிய நினைவுகளை பேசிப் பகிர்ந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொலிவான முகம் வேண்டுமா?(மகளிர் பக்கம்)
Next post ஏலியனால் கட்டப்பட்டதா எல்லோரா கைலாச நாதர் கோவில்?(வீடியோ)