மேற்குலகின் மையம்-அமெரிக்கப் பயணக் கட்டுரை!!(மகளிர் பக்கம்)

Read Time:13 Minute, 30 Second

கல்வி நிறுவனங்கள், பள்ளிக் கல்லூரிகள் பார்த்தாயிற்று. அடுத்து எல்லோருக்கும் பிடித்த இடமான ‘ஷாப்பிங்’. புதிதாக ஓர் இடத்திற்குச் சென்றால், அங்கு என்னவெல்லாம் கிடைக்கும், எந்த மாதிரி பொருட்கள் கிடைக்கும், யாரிடமும் இல்லாத மாதிரி பொருட்கள் நமக்குக் கிடைக்குமா, அது பலரால் பாராட்டப்படுமா போன்றவற்றை அலசி ஆராய்வதில் தான் பெண்களுக்கு என்ன ஒரு ஆர்வம். பல்லாயிரம் மைல்களுக்கப்பால், பல கடல்களுக்கப்பால் பல நூறு கடைகள் ஓரிடத்தில் என்றால் சொல்லவும் வேண்டுமா?

அண்ணாந்து பார்த்தால் கட்டட நுணுக்கங்களையும், கலைத் திறனையும் பார்க்க முடிந்தது. எஸ்க‌லேட்டர் வழியாக எந்தப் பக்கம் போனால் எந்த இடம் வரும் என்று கூட நம்மால் கணக்கிட முடியாது. துபாயில் இது போன்ற மால்கள் உண்டு. அதுபோல் தான் ‘மால் ஆஃப் அமெரிக்கா’ என்பது. அமெரிக்காவின் அனைத்துப் பகுதிகளிலும் இருக்கும் மக்கள் அங்கு வந்து சந்தோஷமாக தங்கள் விடுமுறையை கழிக்கின்றனர். உலகத்தின் பல்வேறு மூலைகளிலிருந்தும், பல மொழி பேசுபவர்களையும் அங்கு காண முடியும்.

பெரிய கப் காபியை வைத்துக் கொண்டு அவ்வப்பொழுது சிறிது உறிஞ்சுக் கொண்டே நடந்து செல்வோரைப் பார்க்க முடியும். அதே போல் சிறிய பாக்கெட்டுகளில் கூட ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டு நடக்கும் பலநாட்டுக் குழந்தைகளையும் பார்க்க முடியும். அந்த அலங்காரங்களையும், ஜொலிக்கும் விளக்குகளையும் பார்த்தால் சுவர்க்க லோகம் என்பார்களே, அது போல் இருக்கும். அங்கு நடப்பது ஒரு கனவு போல் இருக்கும். அதிர்ஷ்டவசமாக, ‘மால் ஆஃப் அமெரிக்கா’ நாங்கள் இருந்த இருப்பிடத்திலிருந்து அருகில் தான் அமைந்திருந்தது.

சில மணி நேரங்கள் காரில் செல்ல வேண்டும். நாடு விட்டு நாடு வருபவர்களுக்கிடையே, இரண்டு மணி நேர கார் பயணம் பெரிதா என்ன? வெப்பநிலை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். மாலையில் நல்ல வெப்பநிலையும் இருந்து, எங்களுக்கும் ஓய்வாக இருந்தால் உடன் ‘மாலு’க்குக் கிளம்பி விடுவோம். மாலுக்கு எதிரே ஏர்ப்போர்ட், முகப்பில் நட்சத்திர ஹோட்டல். இரவு முழுவதும் பளிச்சிடும் விளக்குகள். பாதி இரவில் கூட, பாப்கார்ன் பாக்கெட்டுடன் உலவும் மக்கள் கூட்டம். எவ்வளவு முறை சென்றாலும், மீண்டும் செல்லத் தூண்டும் அலுக்காத இடம் ‘மால் ஆஃப் அமெரிக்கா’. காரணம், கடைகள் மட்டும் கிடையாது.

நமக்கு வேண்டிய பொழுதுபோக்குகள், கேளிக்கைகள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொழுதுபோக்குகள், ஓவியங்கள், கலையம்சங்கள் அனைத்தும் இருக்கும். ஒவ்வொரு மாடியின் முகப்பிலும் அங்கு என்னென்ன பகுதிகள் அடங்கியுள்ளன, கடைகள் பெயர்கள், அதன் திசைகள், விசேஷ அம்சங்கள் அத்தனையும் எலக்ட்ரானிக் போர்டில் ஓடிக் கொண்டிருக்கும். ஒரு கடையில் சுமார் பத்து நிமிடங்கள் செலவு செய்தால் கூட, மால் முழுதும் பார்வையிட ஐந்து நாட்கள் ஆகலாம் என சிலர் புள்ளிவிவரத்தை எங்களிடம் சொன்னார்கள்.

கடைகள் என்றால் பல இடங்களில் அது பெரிய ஹால் போன்றே இருக்கும். அனைத்திலும் விலை விபரங்கள் அடங்கிய பட்டியலை வைத்திருப்பார்கள். நாமே எடுத்துப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். உடைகள் எடுத்தால் யாரும் போட்டுப் பார்க்காமல் வாங்க மாட்டார்கள். சில இடங்களில் நிறைய விற்பனையாளர்கள் இருப்பார்கள். அனைத்து இடங்களிலும் கேமரா உண்டு. யாரேனும் ஆளில்லை என்று நினைத்து பொருளை எடுக்க நினைத்தால் அலாரம் கத்தும். யாரும் அப்படி நடந்து கொள்ளவும் மாட்டார்கள்.

அதே போல், ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட கால அவகாசம் தருவார்கள். அதாவது ஒரு துணி ஐம்பது டாலர் கொடுத்து வாங்கினால், அதற்கு மூன்று மாதம் அவகாசம் தருவார்கள். ஏதேனும் மாற்றம் செய்ய நினைத்தாலோ, திருப்பிக் கொடுக்க நினைத்தாலோ குறிப்பிட்ட நாட்களுக்குள், எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம் அல்லது திருப்பித் தரலாம். குறிப்பிட்ட நாட்களுக்கு முன், அதற்கு முதல் நாள் தந்தால்கூட, முழுப் பணமும் திருப்பித் தந்து விடுவார்கள். இது அனைத்து விதமான பொருட்களுக்கும் பொருந்தும். ஒரு ஷூ காலுக்கு சரிவர அமையாமல், நாங்கள் கூட திருப்பித் தந்து, முழுப் பணத்தையும் பெற்றுக் கொண்டோம்.

இங்கு ஆடித் தள்ளுபடி என்று ஆரம்பித்து விசேஷ நாட்களில் விற்பனை நடைபெறுவது போல் அங்கும் உண்டு. லேபர்ஸ் தினம் – அதாவது தொழிலாளர்கள் தினம் மற்றும் நவம்பரில் வரும் ‘தேங்க்ஸ் கிவிங்’ (thanks giving) விடுமுறை போன்ற சமயங்களில் பொருட்கள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும். இது மட்டுமல்லாமல் விசேஷ சமயங்களான ‘மதர்ஸ் டே’ போன்ற சமயங்களில், தாய்க்காக வாங்கும் பொருட்களுக்கு சிறப்புச் சலுகையும் உண்டு. வைரம் முதல் அனைத்திலும் தள்ளுபடி கொடுக்கிறார்கள். விற்பனையோடு அந்த இனிய வார்த்தைகளையும் கேட்க வேண்டுமே! அப்படி ஒரு அனுபவம் எனக்கும் கிடைத்தது.

மே மாதம் நாங்கள் சென்றிருந்த பொழுது, என் மகனிடம் அம்மாவுக்கு கிஃப்ட் வாங்கித் தருமாறு எடுத்துச் சொல்ல, ‘நைஸ் மதர்’, ‘நைஸ் சன்’ என்றெல்லாம் அழகாக பேசுகிறார்கள். ஒவ்வொரு கடையிலும் ‘வெல்கம்’ முதல் நேரம் காலத்தை அனுசரித்து, நல்ல நாளாக – இரவாக – வாரக் கடைசியாக அமைய வாழ்த்துக்களை தெரிவிப்பார்கள். வளையல் கடைகள் முதல் செருப்புக் கடைகள் வரை அனைத்திலும் கூட்டம் அலைமோதும். அந்த நாட்டுப் பொருட்கள் மட்டுமின்றி, பல நாட்டுப் பொருட்களும் காணப்படும். ஷூக்கள் கூட அவ்வளவு அழகழகானவை, உறுதியானவை, வேலைப்பாடுகள் மிக்கவை ஒவ்வொன்றும் அத்தனை நேர்த்தியாக அவ்வளவு பளபள வென்றிருக்கும்.

எத்தனையோ சதுர அடிகள் பரப்பளவு கொண்ட பலவிதமான ஷூ கடைகள் கூட பார்த்தோம். இத்தாலியிலிருந்து வரவழைக்கப்பட்டவை முதல் பல்வேறு நாட்டு செருப்பு வகைகளும் அங்கு உண்டு. அங்கு டாலர்களில் வாங்கி விட்டு, நம் கரன்ஸியில் மாற்றிப் பார்த்தால், நமக்கு பயம் வரும். நாம் ஏதோ வெளிநாட்டினர் நகைகள் போட மாட்டார்கள் என நினைப்போம். ஆனால், அவர்களும் வேறு விதங்களில், பலவிதமான உலோகங்களில் போடுகிறார்கள். நிறைய வளையல் கடைகளைக் கூட பார்த்தோம். நிறைய சீனாவிலிருந்து செய்யப்பட்ட சரமான வளையல்கள் இருந்தன.

அதாவது பட்டையாக ஒரே வளையல் போடுவது போன்றும், விதவிதமான ப்ரேஸ்லெட்க‌ளும் இருந்தன. சரசரமான மாலைகள் வண்ண மயமான நிறங்களில் காணப்பட்டன. உலகத்தின் அனைத்துப் பொருட்களும் ஒரே இடத்தில் காணப்பட்டால் எப்படியிருக்குமோ அப்படியிருந்தன பெண்களுக்கு எத்தனையெத்தனையோ பொருட்கள். ‘தலை முதல் பாதம் வரை என்று சொல்வோமே’ அது சரியாகப் பொருந்தும். முகப் பருவிற்காக போடும் க்ரீம் முதல், கால் பித்த வெடிப்புக்குப் போடும் க்ரீம் வரை அனைத்தும் உண்டு.

எப்படிப்பட்ட தோல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கும் ஏற்றவாறான விதவிதமான மருந்துகள், அழகு சாதனங்கள், லிப்ஸ்டிக் முதல் நக பாலிஷ் வரை அத்தனையும் டெஸ்ட் செய்யப்பட்டவை. நாம் வாங்குவதற்கு முன்னால் சாம்பிள் கேட்டால் அவர்களே சிறிய கண்டெய்னரில் வைத்துத் தருவார்கள். நாம் அதை பயன்படுத்திப் பார்த்து திருப்தியான பின் பணம் கொடுத்து வேண்டியவற்றை வாங்கிக் கொள்ளலாம். மேலும் மற்றக் கடைகளில் இருந்ததை விட காஸ்மெடிக்ஸ் கடையில் நிறைய இந்தியர்களைக் கண்டோம். எலக்ட்ரானிக் முதல் வீட்டு உபயோகப் பொருட்கள் வரை விதவிதமான பொருட்கள் கண்காட்சி போல் காணப்பட்டன.

இது ஒரு புறமிருக்க, ப்ளே ஸ்டேஷன் பக்கம் ஒரே குதூகலம் தான். என்னென்ன விளையாட்டுக்கள்! ஒரு தடவை ஒரு கேம் ஆடினால் கூட பல நாட்கள் வந்து விளையாடினால்தான் அனைத்திலும் அனுபவம் கிட்டும். குழந்தைகளுடன் பெற்றோரும் சேர்ந்து குதூகலிப்பதும் ஒரு ஜாலி தான். கலைப்பொருட்கள் ஒரு பக்கம், ஆடம்பரப் பொருட்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், போட்டோ ஃபிரேம்களில் தான் எத்தனை விதங்கள்! நம் தொடைப்பம் போன்ற பொருட்கள் கூட அவ்வளவு கலைத்திறன் கொண்ட பொருளாக மாற்றப்பட்டிருக்கும்.

நிறைய இயற்கையை அடிப்படையாகக் கொண்டவையும், ‘மாடர்ன் ஆர்ட்’டும் குறிப்பிடத்தக்கவை. அது போல் சில இடங்களில், நம்மையே ஓவியமாக வரைந்து காட்டும் ஓவியக் கூடங்களுக்கும் குறைவில்லை. நானும், என் கணவரும் அமர்ந்திருக்க அப்படியே தத்ரூபமாக அரை மணியில் வரைந்து கொடுத்து விட்டார் ஓர் ஓவியர். அதற்கு 30 அல்லது 40 டாலர் என்று நினைக்கிறேன். அதை பேக்கிங் செய்து வெளியூர் கொண்டு வரும்படி பேக்கிங் செய்ய கொஞ்சம் அதிகம்.

எங்கு சென்றாலும், மாற்றுத் திறனாளி களுக்கென்று முதலிடம் – விசேஷ இடம் இருக்கும். கார் பார்க்கிங் இடத்தில் ஆயிரக்கணக்கான வண்டிகள் இருக்கும். முதல் பகுதி மாற்றுத் திறனாளிகளுக்குதான். அவர்களும் வண்டி ஓட்டிக் கொண்டுதான் வருவார்கள். பேஸ்மெண்ட்டில் நம் வண்டி நிறுத்திய இடத்தைக் கண்டுபிடிப்பதே கடினம். எனவே ஒவ்வொரு முறையிலும், அதன் அருகாமையிலுள்ள இடத்துடன் அடையாளமாக போட்டோ எடுத்துக் கொண்டுதான் செல்வோம். விடுமுறைகளில் பார்க்கிங் கிடைப்பதும் கஷ்டம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கட்ட பொம்மன் மறைந்திருந்த அறையின் மர்மம், காற்று கூட நுழையாது..! துரோகம் செய்தது யார்.?!!(வீடியோ)
Next post ‘பேஸ்மென்ட் நன்றாக இருந்தால்தானே பில்டிங் பலமாக இருக்கும்’!!(அவ்வப்போது கிளாமர்)