வானவில் சந்தை!!(மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 4 Second

நீண்ட தூரம் பயணம் போவது குறித்து ஒரு தோழியுடன் பேசிக்கொண்டிருந்த போது அவர் ஆண்களைப் போலத் தன்னால் பைக் ஓட்ட முடியாதென்று சொன்னார். பைக் குறித்து பெண்கள் பலருக்கும் இந்த அச்சம் இருக்கிறது. ஆனால் இது சிறுவயது அச்சம் போன்றதுதான். எனது சிறு வயதில் புல்லட்டில் தடதடத்துப் போகும் பெரியவர்களைப் பார்த்து நான் அச்சமடைந்திருக்கிறேன்.

ஆனால் அச்சமெல்லாம் அந்த வண்டியின் மீது காலைத் தூக்கிப் போடும் வரைதான். அதே நேரம் நீண்ட பயணத்திற்கு பெரிய பைக்குகளால் மட்டும்தான் முடியும் என்பதில்லை. ஓரளவு நல்ல நெடுஞ்சாலைகளை இந்தியா முழுதும் பார்க்க முடிவதால், ஒரு நல்ல ஸ்கூட்டரில் கூட எவரும் நெடும் பயணங்களை மேற்கொள்ள முடியும். சமீபத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் தனது வாசகி ஒருவர் வெஸ்பாவில் இமயமலை செல்வதாகப் பகிர்ந்திருந்தார்.

உண்மையில், நீண்ட பயணம் மேற்கொள்ள விரும்பும் பெண்கள் மிகவும் கவனிக்க வேண்டியது (வாகனத்தைத் தாண்டி), பாதுகாப்பு குறித்த முக்கியமான பல்வேறு பொருட்களைத்தான். ப்ரீடம் ரைடர்ஸ் என்ற பெயரில் இந்திய அளவில் பயண சாகசக்காரர்களை ஒருங்கிணைக்கும் ரஜ்னீஷ்குமார் (www.freedomriders-biking.com), ஒரு இருசக்கர வாகனப் பயணிக்குத் தேவைப்படும் அடிப்படையான பாதுகாப்புப் பொருட்கள் குறித்துப் பகிர்ந்த தகவல்களைப் பார்ப்போம். இருசக்கர வாகன ஓட்டிகளின் முதன்மையான கவசமான ஹெல்மெட் பற்றி சென்ற கட்டுரையில் பார்த்தோம். பிறவற்றைப் பார்க்கலாம்.

ரைடிங் ஜாக்கெட்

இடுப்புக்கு மேலிருந்து கழுத்து வரையான பகுதிகளைக் காக்கும் சட்டைதான் ரைடிங் ஜாக்கெட். முதுகுத்தண்டு, தோள்பட்டை, முழங்கை, மார்புப்பகுதி, வயிற்றுப்பகுதி (சிறுநீரகப் பாதுகாப்பிற்காக) ஆகியவற்றைப் பாதுகாப்பதே ரைடிங் ஜாக்கெட்டின் பணி. இது மூன்று வகைப்படும். ஸ்ட்ரீட் ஜாக்கெட் இது அன்றாடப் பயன்பாட்டுக்கானது. இலகுவான, காற்றோட்ட வசதி கொண்ட இந்த வகை ஜாக்கெட்கள் ஐயாயிரத்திலிருந்து பதினைந்தாயிரம் ருபாய் வரையிலான விலைகளில் கிடைக்கிறது.

ரைனாக்ஸ் (Rynox), மோட்டோடெக் (Mototech) ஆகியன பிரபலமான பிராண்டுகள். ஸ்போர்ட்ஸ் ஜாக்கெட். இது பந்தயத் தடங்களில் பயன்படுத்தப்படுவது. பெரும்பாலும் தோலினால் செய்யப்படும் இது தீவிர இருசக்கர வாகனர்களுக்கு முக்கியமானது. ஸ்ட்ரீட் ஜாக்கெட்டை விடக் கூடுதல் பாதுகாப்பானது. ஆல்பைன் ஸ்டார் (Alpinestars), டையனீஸ் (Dainese) போன்றவை பிரபலமான பிராண்டுகள். எழுபதாயிரத்திலிருந்து நான்கு லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகின்றன.

டூரிங் ஜாக்கெட் நிறையப் பாக்கெட் களோடு, தட்பவெப்ப அடுக்கு, மழைப் பாதுகாப்பு அடுக்கு ஆகியவற்றைக் கொண்டிருக்கும் இது, நீண்ட தூரம் பயணிக்கும் இருசக்கர ஓட்டிகளின் அத்தியாவசியமான ஒரு கவசமாகும். இது இல்லாமல் ஒருவர் நீண்ட பயணத்தை ஆரம்பிக்கக் கூடாது. க்ளிம், ரைனாக்ஸ், மோட்டோடெக் போன்றவை பிரபலமானவை. பத்தாயிரம் ரூபாயிலிருந்து அறுபதாயிரம் ரூபாய் வரை இவை கிடைக்கின்றன.

ரைடிங் பேன்ட்

இடுப்புக்குக் கீழிருந்து கணுக்கால் வரை பாதுகாப்பு கொடுப்பது ரைடிங் பேன்ட். குறிப்பாக இடுப்புப் பகுதியையும் முழங்கால்களையும் பாதுகாப்பது. இதில் மூன்று வகைகள் உள்ளன. ஜீன்ஸ் கெவ்லார், லைக்ரா போன்ற உயர்தரமான பொருட்களால் உருவாகும் இந்த ஜீன்ஸ்கள் நான்காயிரத்திலிருந்து பத்தாயிரம் ரூபாய் வரை சந்தையில் கிடைக்கின்றன. கொமினி (Komine) இதில் பிரபலமானது. மெஷ் டூர் செல்ல ஏற்ற வகையிலான ரைடிங் பேன்ட் இது.

தட்பவெப்ப அடுக்கு, மழைப் பாதுகாப்பு அடுக்கு, வெளிச்சத்தைப் பிரதிபலிக்கும் ரெப்ளக்டர்கள் (எச்சரிக் கைக்காக) போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கும் இந்த வகைப பேன்ட்கள் பத்தாயிரத்திலிருந்து இருபதாயிரம் ரூபாய் வரையில் விற்கப்படுகின்றன. ரைனாக்ஸ், மோட்டோடெக் ஆகியன பிரபலமானவை. லெதர் பேன்ட்கள் தோலினால் ஆன இவ்வகைப் பேன்ட்கள் முதன்மையாக பந்தயத் தடத்தில் பயன்படுத்தப்படுவன. முழுமையான பாதுகாப்பை அளிப்பவை இவை. ஆல்பைன் ஸ்டார், டையனீஸ் ஆகியன முக்கியமானவை. முப்பதாயிரத்திலிருந்து ஒரு லட்சம் ருபாய் வரையில் விற்கப்படுகின்றன.

ரைடிங் பூட்

தலைக்கவசம் போன்று இது கால் கவசம். நீண்ட பயணம் செல்பவர்கள் செருப்பு களையோ சாதாரண ஷூக்களையோ அணிவது பாதுகாப்பானதல்ல. பொருத்தமான ரைடிங் பூட்களையே அணிய வேண்டும். இவற்றையும் மூன்றாகப் பிரிக்கலாம். ஸ்ட்ரீட் பூட் கணுக்கால் வரை பாது காக்கும் இவ்வகை ஷூக்கள் அன்றாடப் பயன்பாட்டுக்கானவை. கேன்வாஸ், மெஷ் அல்லது தோலினால் செய்யப்படும் இவ்வகை ஷூக்கள், மூவாயிரத்திலிருந்து ஏழாயிரம் ரூபாய் வரையிலான விலையில் கிடைக்கின்றன.

பூமா (Puma), மோட்டோடெக், டிசி எக்ஸ் (TCX) ஆகியன பிரபலமான பிராண்டுகள். டூரிங் பூட் / முழுமையான பூட் கணுக்காலுக்கும் மேலே முழங்கால் வரை பாதுகாப்புக் கொடுப்பது இவ்வகை ஷூக்கள். நெடுஞ்சாலையில் நெடுந்தூரம் பயணிக்கும் எவருக்கும் முக்கியமான தேவை இவை. ஏழாயிரம் ரூபாயிலிருந்து ஐம்பதாயிரம் வரையான விலையில் இவை கிடைக்கின்றன. மோட்டோடெக், டிசிஎக்ஸ் ஆகியன குறிப்பிடத் தக்கவை.

ரேசிங் பூட் அதிவேகப் பந்தயத்தடத்தில் விரைந்து செல்லும் வீரர்களுக்கானது. கடுமையான விபத்துக்களையும் தாக்குப்பிடிக்கும் வகையில் உயர்தரமான டைட்டானியம் போன்றவற்றால் தயாரிக்கப்படும் இவ்வகை ஷூக்கள் அன்றாடப் பயன்பாட்டிற்கானவை அல்ல. அதிகபட்சப் பாதுகாப்பை வழங்கும் இவை இருபத்தைந்தாயிரத்திலிருந்து இரண்டு லட்ச ரூபாய் வரை இவை விற்கப்படுகின்றன. டையனீஸ், ஆல்பைன் ஸ்டார் ஆகியன பரவலாகக் கிடைக்கின்றன.

கையுறை

உள்ளங்கைகளை மட்டுமே மூடும் கையுறையிலிருந்து முழங்கை வரை பாதுகாக்கும் கையுறை வரை சந்தையில் கிடைக்கின்றன. விபத்தின் போது எவரும் முதலில் ஊன்றுவது கைகளைத்தான். மென்மையான எலும்புகளைக் கொண்ட விரல்களையும் மணிக்கட்டையும் பாதுகாக்கும் இன்றியமையாத செயலைச் செய்கின்றன கையுறைகள். அன்றாடப் பயன்பாட்டுக்கான கையுறைகள் இருநூறிலிருந்து இரண்டாயிரம் வரையில் சந்தையில் கிடைக்கின்றன.

மணிக்கட்டிலிருந்து விரல்கள் வரை மூடும் முழுக்கையுறைகள் இரண்டாயிரம் ரூபாயிலிருந்து பத்தாயிரம் வரை விற்கப்படுகின்றன. முழங்கை வரை காக்கும் கையுறைகள் நான்காயிரத்திலிருந்து முப்பதாயிரம் வரையில் கிடைக்கின்றன. டையனீஸ், ரைனாக்ஸ், ஆல்பைன் ஸ்டார், மோட்டோடெக் ஆகியன பரவலாகக் கிடைக்கின்றன. விலை உயர்ந்த பைக்குகளையோ ஸ்கூட்டர்களையோ வாங்குவது பெரிதல்ல. ஓட்டுபவர் தன்னைப் பாதுகாக்கும் மேற்கண்ட கவசங்களில் முதலீடு செய்வதுதான் மிகவும் அவசியமானது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மரண தண்டனையெனும் கூச்சல்!!(கட்டுரை )
Next post கணவரலேயே பிரியங்கா மர்ம மரணம் அதிர்ச்சி தகவல் !!(வீடியோ)