By 22 July 2018 0 Comments

இடுப்பில் வலியா… ஆர்த்தரைட்டிஸாக இருக்கலாம்!!(மருத்துவம்)

மனித உடலிலுள்ள நூற்றுக்கணக்கான மூட்டு இணைப்புகளில் மிக முக்கியமானது இடுப்பெலும்பு. நமது இயக்கத்துக்கு மிகப்பெரிய அளவில் உதவுவதும் இதுதான். அதே சமயம் அதிக பிரச்னைகளுக்குள்ளாகிற பகுதியும் இதுதான்.

ஆரோக்கியமான இடுப்பெலும்பு அமைப்பானது ஃபெமர் எனப்படுகிற தொடை எலும்பை முன்னோக்கி, பின்னோக்கி, உள்பக்கமாக, வெளிப்பக்கமாக என எல்லா திசைகளிலும் இயங்க உதவக்கூடியது. இதன் மூலம் உடற்பயிற்சி செய்வது, மாடிப்படிகளில் ஏறி, இறங்குவது, பேருந்து களில் ஏறி, இறங்குவது, காருக்குள் ஏறுவது, படுக்கைக்குச் செல்வது என அன்றாட செயல்பாடுகள் அனைத்தும் சீராக நடக்கின்றன.

இன்றைய தலைமுறையில் பலருக்கும் இடுப்பெலும்பு பகுதியானது அத்தனை ஆரோக்கியமானதாக இல்லை. காரணம் அவர்களது வாழ்க்கை முறை. பலரும் உட்கார்ந்த இடத்திலேயே உடலுக்கு இயக்கமே கொடுக்காமல் வேலை செய்கிறார்கள். விளையாட்டு போன்றவையும் குறைந்துவிட்டன.

எனவே, பலருக்கும் இடுப்பு பகுதியானது அத்தனை நெகிழ்வு தன்மை இல்லாமலும், பலவீனமாகவும் இருக்கிறது. பலமணி நேரம் உட்கார்ந்த நிலையிலேயே வேலை செய்கிறவர்களுக்கு இடுப்பைச் சுற்றியுள்ள மூட்டுப் பகுதிகளில் பலம் குறையும் என ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

அது மட்டுமின்றி, இடுப்பெலும்பு பகுதியானது பலமாக இல்லாத காரணத்தினாலேயே பலருக்கும் அடிக்கடி அடிமுதுகிலும், முழங்கால்களிலும் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் ஆய்வுகள் சொல்கின்றன.இடுப்பு வலி என்பது இன்று எல்லா வயதினரும் அனுபவிக்கிற பொதுவான பிரச்னையாகி வருகிறது. அதன் பின்னணி பற்றி பார்ப்போம்.

இடுப்பு வலியின் அறிகுறிகள்

இடுப்பு வலிக்கான காரணத்தை பொறுத்து அது கீழ்க்கண்ட பகுதிகளில் வலியை ஏற்படுத்தலாம். தொடைகள், இடுப்பெலும்பின் உள் மற்றும் வெளி பகுதிகள், தொடையிடுக்கு பகுதி, பிட்டங்கள்.

இடுப்புவலிக்கான காரணங்கள்

பொதுவாக ஆர்த்தரைட்டிஸ் என்கிற கீல்வாதம் மற்றும் முடக்குவாதம் இந்த இரண்டும்தான் இடுப்பு வலிக்கான முக்கிய காரணங்களாக இருக்கின்றன. மூட்டு வலியானது இடுப்பெலும்பு மூட்டில் வீக்கத்தை ஏற்படுத்தும். தவிர இடுப்பெலும்புகளை குஷன்போல பாதுகாக்கும் குறுத்தெலும்புகளையும் பாதிக்கும். வலி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும். மூட்டுவலி உள்ளவர்களுக்கு இடுப்பு பகுதியில் அசைவுகள் குறைந்த மாதிரி உணர்வார்கள். தவிர அந்த பகுதியில் விரைப்பு தன்மையையும் உணர்வார்கள்.

இடுப்பு வலி ஏற்படுவதற்கான இன்னும் சில முக்கிய காரணங்களும் இருக்கின்றன. இடுப்பெலும்பு முறிவு முதுமையின் காரணமாக எலும்புகள் பலமிழந்து, லேசாக இடறினாலும் அடிபட்டு உடைந்து போகும். அது இடுப்பெலும்பு களுக்கும் பொருந்தும்.

மூட்டுப்பை அழற்சி

எலும்புகள், தசைகள், மற்றும் தசைநார்களுக்கு இடையில் ஒருவித திரவம் இருக்கும். இது ஒன்றோடு ஒன்று உராய்ந்து தேய்வதை தடுக்கும் வகையில் இருக்கும். இந்த திரவம் உள்ள பை போன்ற பகுதியானது வீக்கமடைந்தால் அது வலியை ஏற்படுத்தும். அது இடுப்பு வலியாகவும் பிரதிபலிக்கும்.

தசைநாண் அழற்சி

எலும்புகளை தசைகளுடன் இணைக்கிற அடர்த்தியான திசு இணைப்புகளை டென்டன்ஸ் என்கிறோம். அந்த பகுதியில் வீக்கமும், அழற்சியும் ஏற்படும்போது இடுப்பு பகுதியில் வலி ஏற்படும்.இவை தவிர தசைகளும், தசை நார்களும் அளவுக்கதிகமாக பயன்படுத்தப்படும்போது அவை வீக்கமடைந்து, இடுப்பு வலியை ஏற்படுத்தலாம்.

எலும்புகளில் ஏற்படுகிற கட்டிகள் புற்றுநோய் கட்டிகளாக மாறி, வலியை ஏற்படுத்தலாம். அது இடுப்புக்கும் பரவலாம். இடுப்பெலும்பு பகுதிக்கு செல்கிற ரத்த ஓட்டம் மந்தமாவதும், எலும்பு திசுக்கள் செயலிழப்பதும்கூட இடுப்பு வலிக்குக் காரணமாகலாம்.

சில முக்கிய தகவல்கள்

* ஆரோக்கியமான இடுப்பெலும்பு பகுதியை எக்ஸ் ரே எடுத்துப் பார்த்தால் தொடைச்சிரைக்கும், சாக்கெட் எனப்படுகிற குழிவுபகுதிக்கும் இடையில் 6 மில்லிமீட்டர் அளவுக்கு இடைவெளி காணப்படும்.

* தொடைச்சிரையும், இடுப்பெலும்பு இணைப்பின் உட்பகுதியும் குருத்தெலும்பு லேயரால் மூடப்பட்டிருக்கும். அது எக்ஸ்ரேயில் தெரியாததே காரணம்.

* இடுப்புப் பகுதியின் பால் அண்ட் சாக்கெட் எனப்படுகிற பந்து கிண்ண இணைப்பு பகுதியானது இடுப்பு பகுதியை மிக விசாலமாக சுழல வைக்கிற தன்மைக்கு உதவக்கூடியது. ஜிம்னாஸ்டிக் செய்பவர்களுக்கும், நடனக் கலைஞர்களுக்கும் இடுப்பை அதன் முழு வீச்சில் சுழல செய்கிற அளவுக்கு அவர்களது தசைகளும், தசைநார்களும் ஒத்துழைப்பு கொடுப்பதை வைத்தே இதை உணரலாம்.Post a Comment

Protected by WP Anti Spam