By 3 August 2018 0 Comments

வீதிக்கு வந்துள்ள முஸ்லிம் தனியாள் சட்டம்!!(கட்டுரை)

உலகில், புனிதமான கடமையாக இருந்த திருமணம் என்ற விடயம், தற்கால அளவுக்குமிஞ்சிய நாகரிகம் காரணமாக, சடங்காக மாறிக்கொண்டிருப்பதைப் போலவே, முஸ்லிம்களின் விவாக மற்றும் விவாகரத்து விதிமுறைகளை உள்ளடக்கிய ஒரு கட்டுக்கோப்பான சட்ட ஏற்பாடாகக் கருதப்பட்ட முஸ்லிம் தனியாள் சட்டம் (Personal Law ) தொடர்பான மறுசீரமைப்பு விவகாரம், இன்று நான்கு சுவர்களையும் தாண்டி வீதிக்கு வந்திருக்கின்றது.

வீட்டு வன்முறைகளுக்கு எதிராகவோ நாட்டில் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும், ஏன் சாதாரண மனிதர்களுக்கும் கூட நடக்கின்ற அநியாயங்களுக்கு எதிராகவோ, தெருவுக்கு வந்து போராடாத அமைப்புகளும் செயற்பாட்டாளர்களும், இன்று விவாக – விவாகரத்துச் சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும், பொதுத் தளத்தில் இறங்கியிருப்பதை, எந்த வகையறைக்குள் அடக்குவதெனத் தெரியவில்லை. பெண்கள், தமது உரிமைக்காகப் போராடுவது பாராட்டத்தக்கது. என்றாலும், பெரிதுபடுத்தப்படும் இவ்விவகாரம், இனி யாருடைய கைக்குப் போகுமோ என்பதே இன்றைய கரிசனையாக உள்ளது.

இலங்கையில், பல பிரத்தியேக (தனியாள்) சட்ட ஏற்பாடுகள் உள்ளன. தேசவழமைச் சட்டம், கண்டியச் சட்டம், முஸ்லிம் தனியாள் சட்டம் என்பவையே அவையாகும். நாட்டில் எல்லா இன, மத, குலங்களுக்கும் பொதுவான ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, இதில் முதல் இரு சட்டங்களும் கிட்டத்தட்ட வழக்கொழிந்துப் போய்விட்டன. ஆனால், முஸ்லிம்களின் திருமணம், விவகாரத்து, அதனோடு தொடர்புபட்ட ஏனைய நடைமுறைகள் தொடர்பான வரண்முறைகளை விதந்துரைக்கும் முஸ்லிம் தனியாள் சட்டம், இன்னும் நடைமுறையில் இருக்கின்றது.

இது, இஸ்லாமிய ஷரீஆ சட்டத்தை நடைமுறையாகக் கொண்டு, நாட்டுக்கு நாடு சிறுசிறு மாற்றங்களுடன் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு சட்டமாகவே காணப்படுகின்றது. எனவே, இதனை இல்லாதொழிப்பதற்கு, முஸ்லிம் விரோத நாடுகள், பல்வேறு காய்நகர்த்தல்களை காலாகாலமாக மேற்கொண்டு வருகின்றன. ஆனால், இலங்கையில் அது சாத்தியப்படவில்லை என்றாலும், அவ்வப்போது காலத்துக்குப் பொருத்தமான மாற்றங்கள், மறுசீரமைப்புகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இலங்கையில், பல நூறு வருடங்களாக, முஸ்லிம்களுக்கு என்று விஷேடமானதொரு தன்மையுடைய சட்ட நடைமுறை பின்பற்றப்பட்டு வந்திருக்கின்றது. 1700களின் பிற்பகுதியிலேயே, முஸ்லிம்களுக்காக ஒரு பிரத்தியேகச் சட்ட ஏற்பாட்டை மேற்கொள்ள, ஒல்லாந்தர் கொலனித்துவ ஆட்சியாளர்கள் முன்னின்றனர். இதற்காக, இந்தோனேஷியாவில் இருந்த சட்டத் தொகுப்பு தருவிக்கப்பட்டது. பின்பு, ஆங்கிலேயர் இதனை அடிப்படையாக வைத்து ‘முஹம்மதியர் தொடர்பான விஷேட சட்டங்கள்’ என்ற ஒன்றை அமுலாக்கினர். 1806இல் இருந்து, தனியார் அல்லது தனியாள் சட்டம் நடைமுறைக்கு வந்தது.

அதன்பின்னர் நியாயம் தீர்ப்பதில் ஏற்பட்ட பல நடைமுறைச் சிக்கல்களைத் தொடர்ந்து, பல மீளாய்வுக் குழுக்களின் சிபாரிசுகளின் அடிப்படையில் அது மறுசீரமைக்கப்பட்டு, முஸ்லிம் தனியாள் சட்டம் என்ற பெயரில், 1954இல் அமுலாக்கப்பட்ட சட்டமே, இன்று வரை நடைமுறையில் இருக்கின்றது.

கால மாற்றம், உலகப் போக்குகளில் பூகோளமயமாக்கலின் தாக்கம், வாழ்வியல் பழக்க வழக்கங்கள், கூர்ப்படைதல் மற்றும் இன்னோரன்ன காரணங்களால், தற்போதுள்ள முஸ்லிம் தனியாள் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டுமென்று, நீண்ட காலமாகவே அங்குமிங்குமாகக் குரல்கள் மேலெழும்பி வருகின்றன. இதில், ஒருசில மாற்றங்கள், முஸ்லிம்களுக்குள் இருந்து உள்ளார்ந்தமாக உணரப்பட்டவையாகவும், இன்னும் சில மாற்றங்கள், வெளிச் சக்திகளின் செல்வாக்கினால் பரிந்துரைக்கப் பட்டவையாகவும் காணப்படுகின்றன.

உலகளவில், இஸ்லாத்தைப் பின்பற்றுவோரின் தனித்துவ அடையாளத்தை இல்லாது செய்வதற்கு, அமெரிக்காவும் இஸ்‌ரேலும் சியோனிசமும் மும்முரமாக நிற்கின்றன என்பது, சிறு பிள்ளைக்குக் கூட தெரிந்த விடயமாகும். இதற்குத் துணைபோகின்ற ஆயிரத்தெட்டு அரசசார்பற்ற அமைப்புகள் இருக்கின்றன என்பதும், இவை, முஸ்லிம்களுக்கு உள்ளேயே மாற்றுக் கருத்துகளை விதைத்துக் கொண்டிருக்கின்றன என்பதும், வெறும் ஊகங்கள் அல்ல.

ஆனால், முஸ்லிம் தனியாள் சட்டத்தை மறுசீரமைக்க வேண்டுமென்பதில், இருவேறு நிலைப்பாடுகள் கிடையாது. அந்த அடிப்படையில், 1973இலும் 1990களிலும், பல மீளாய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு, சிபாரிசுகள் பெறப்பட்டன. அத்தோடு 2009ஆம் ஆண்டின் அப்போது நீதியமைச்சராக இருந்த மிலிந்த மொறகொடவால், முஸ்லிம் தனியாள் சட்டத் திருத்தத்தை மேற்கொள்வதற்கான சிபாரிசுகளை முன்வைப்பதற்காக, அப்போதைய உயர்நீதிமன்ற நீதியரசராகக் கடமைபுரிந்த சலீம் மர்சூப் தலைமையில், 17பேர் கொண்ட உயர்மட்டக் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

இந்தக் குழு, சுமார் 9 வருடங்களாக கலந்துரையாடல்களையும் கூட்டங்களையும் நடத்தியிருக்கின்றது. முஸ்லிம்களின் திருமணம் மற்றும் விவாகரத்து நடைமுறைகள், இதில் பிரதான இடம்பிடிக்கின்றன. குறிப்பாக, முஸ்லிம் பெண்கள் மற்றும் ஆண்களின் திருமண வயது, பலதார மணம், தாபரிப்புக்கான கொடுப்பனவு, காழி நீதிபதிகளாக பெண்களை நியமித்தல், வலியுறுத்தல் கட்டளை உள்ளடக்கங்கள் உள்ளடங்கலாக, பல்வேறு விடயப் பரப்புகளில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

இந்தக் குழுவில் அங்கம் வகித்த தரப்பினரிடையே, முஸ்லிம் பெண்களின் திருமண வயது உள்ளிட்ட ஓரிரு விடயங்களில் கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டன. சமகாலத்தில், வெளியில் இருந்துகொண்டு ‘இச்சட்டத்தைத் திருத்த வேண்டும்’ என்றும் ‘ஷரிஆ அடிப்படையிலான சட்டத்தில் கைவைக்கக் கூடாது’ என்றும், ஏட்டிக்குப் போட்டியான வாதங்களும் ஆர்ப்பாட்டப் பேரணிகளும் முன்னெடுக்கப்பட்டன.

இச்சட்டத்தைத் திருத்துவதில், அரசாங்கத்துக்கு ஒரு சர்வதேச நலனும் உள்ளது. அதாவது, முஸ்லிம் தனியாள் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளுமாறு, சர்வதேசத்தால் அரசாங்கத்துக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. சர்வதேச நியமங்களுக்கு அமைவாக, விவாக – விவாகரத்துச் சட்டத்தை அமைத்தாலேயே, வெளிநாட்டுச் சலுகைகள் சிலவற்றை இலகுவாகப் பெறும் நிலைமையும் இருக்கின்றது. இதற்குச் சமாந்தரமாக, முஸ்லிம்களின் தனித்துவச் சட்டத்தைச் சிதைக்கும் சர்வதேச நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோர், சலீம் மர்சூப் தலைமையிலான உயர்மட்டக் குழுவிலும் முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலும் ஏற்பட்டுள்ள கருத்து வேற்றுமைகளை, தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்றே தோன்றுகின்றது.

ஆரம்பத்தில், இக்குழுவுக்குள் ஏற்பட்ட மாற்றுக் கருத்துடனான நிலைப்பாடு, ஆக்கபூர்மானதாக இருந்த போதும், 9 வருடங்களாக ஒரு தீர்க்கமான இணக்கப்பாட்டுக்கு வராமையால், அவர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து, இரு அறிக்கைகளைச் சமர்ப்பிக்கும் துரதிர்ஷ்ட நிலை உருவாகியது. உயர்மட்ட மீளாய்வுக் குழுவின் தலைவர் சலீம் மர்சூப் தலைமையில் ஒரு குழுவும், உலமா சபைத் தலைவர் தலைமையில் மற்றுமொரு குழுவுமாக, இரு வெவ்வேறு அறிக்கைகள், நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரளவிடம், இவ்வருடம் ஜனவரி மாதம் சமர்ப்பிக்கப்பட்டன. ஷ

9 வருடங்களுக்குப் பிறகு சமர்ப்பித்த அறிக்கையைப் பிரித்துப் பார்த்து, அதனைச் சட்டமாக்குவதற்கு, அமைச்சர் தலதா அத்துக்கோரளவுக்கு 6 மாதங்களுக்குப் பின் இப்போதுதான் நேரம் கிடைத்திருக்கின்றது. உண்மையில், முஸ்லிம் தனியாள் சட்டத்தைத் திருத்தும் பணிகள், இத்தனை வருடங்கள் தாமதமடைந்ததற்கு, அது தொடர்பான கருத்து முரண்பாடுகள் தான் காரணம் என்பதை விடவும், நேரம் கிடைக்கின்ற போது அல்லது பகுதிநேரமாக அப்பணியில் ஈடுபட்டமையே முதல் காரணமென்றே கூறவேண்டும்.

எனவே அரசாங்கம், முஸ்லிம் தனியாள் சட்டத் திருத்த யோசனைகளை நாடாளுமன்றத்தில் முன்வைத்து சட்டமாக்கும் அறிகுறிகள் தென்படுகின்ற சூழலில், அந்த யோசனைகளை உடனடியாக அமுல்படுத்த வேண்டுமென்று, மகளிர் அமைப்புகள் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளன. ஆனால், இந்த மகளிர் அமைப்புகளும் ஏனைய அமைப்புகளும், இரண்டு அல்லது மூன்று நிலைப்பாடுகளோடு இப்போது போர்க்கொடி தூக்கியுள்ளமை, முஸ்லிம்களிடையே இவ்விடயத்திலும் ஒற்றுமையில்லை என்ற செய்தியை, ஏனைய சமூகங்களுக்குச் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றது.

கொழும்பில் ஊடகச் சந்திப்பொன்றை நடத்திய பெண் செயற்பாட்டாளர்கள் சிலர், முஸ்லிம் தனியாள் சட்ட மறுசீரமைப்பு தொடர்பாக, தம்முடனும் கலந்துபேச வேண்டுமென்று கூறியுள்ளனர். முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூப் குழுவின் அறிக்கைக்குச் சாதகமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள இப்பெண் செயற்பாட்டாளர்கள், அவ்வறிக்கையை பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு பாதிப்பற்ற விதத்தில் நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளனர்.

மறுநாள், நாடாளுமன்றத்துக்கு அருகில் பெண்கள் சிலர், கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவாக, விவாகரத்துச் சட்டத்தை மறுசீரமைப்பதற்கான சிபாரிசு அறிக்கையை உடனடியாக அமைச்சரவைக்கு சமர்ப்பித்து, நாடாளுமன்றத்தின் ஊடாகச் சட்டவாக்கம் செய்யுமாறு, இக்குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.

ஷரிஆ சட்டம் என்பது, முஸ்லிம்களுக்கு பிரத்தியேகமானது என்றபடியால், யாருடைய விருப்பத்துக்காகவும் ஷரிஆவுக்கு வெளியில் சென்று திருத்தத்தை மேற்கொள்ள முடியாது என்று, இன்னுமொரு தரப்பினர் கூறியுள்ளனர். புதுமையான சிபாரிசுகளை உள்ளடக்கிய சலீம் மர்சூப் தலைமையிலான குழுவின் அறிக்கையோடு உடன்படாத இத்தரப்பினர், உலமா சபையின் அறிக்கைக்கு ஆதரவளிப்பதாகத் தெரிகின்றது. இதற்கிடையில், நடந்தவற்றைத் தெளிவுபடுத்தியும் அறிவுடமையான முறையில் தனியாள் சட்டத்தை திருத்த வேண்டும் என்று குறிப்பிட்டும், முன்னாள் காழி நீதிபதிகள் குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சுருங்கக் கூறின், இலங்கையில் தற்போது நடைமுறையில் இருக்கின்ற முஸ்லிம் தனியாள் சட்டத்தை மறுசீரமைக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. இலங்கை, ஓர் அரபு நாடல்ல என்பதுடன், ஏனைய இன மக்களுக்கான ஒரு பொதுவான சட்டமும், நாட்டில் அமுல்படுத்தப்படுகின்றது. இதனால், சிலவேளைகளில் நீதி நிலைநாட்டும் விடயத்தில் சிக்கல்கள் தோன்றுகின்றன. அதுமட்டுமன்றி, காலப் பொருத்தம் கருதியும் சிறுசிறு மாற்றங்கள் இதில் உள்வாங்கப்பட வேண்டும் என்பதே, பரவலான அபிப்பிராயமாகும். ஆனால், ஷரிஆ சட்டத்துக்கு முரணாக, முஸ்லிம்கள் பயணிக்க முடியாது என்பதும், பல்லின நாடொன்றில் ஷரிஆவை நூறு சதவீதம் அமுலாக்குவது சாத்தியக் குறைவானது என்பதுமே, இங்கிருக்கின்ற இரு வரையறைகள் எனலாம்.

எவ்வாறிருப்பினும், முஸ்லிம் தனியார் சட்ட மறுசீரமைப்புக்காக நியமிக்கப்பட்ட குழு, பொதுவான விடயங்களில் உடன்பாடு கண்டிருந்தது. முஸ்லிம் பெண்களின் திருமண வயது, காழி நீதிபதிகளாகப் பெண்களை நியமித்தல் உள்ளிட்ட ஒருசில விடயங்களில் மாத்திரமே கருத்தியல் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. எனவே, இது ஒரு பாரிய பிரச்சினையில்லை. இதனைச் சுமுகமான முறையில் தீர்த்துக்கொள்ள பல வழிகள் இருக்கையில், அவ்வழிகளைத் தேடாமல், இரண்டு மூன்று அணிகளாகப் பிரிந்து நின்று முரண்பட்டுக் கொள்வது, முஸ்லிம்களுக்கு அழகல்ல.

‘ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்’ என்று, இஸ்லாமிய மார்க்கம் வலியுறுத்துகின்றது. ஆனால், நிஜத்தில் அவ்வாறான ஒற்றுமையை இலங்கைச் சூழலில் காண முடியாதிருக்கின்றது. அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல் மார்க்க இயக்கங்களின் அடிப்படையிலும் பிரதேச வாரியாகவும், முஸ்லிம்கள் பிரிந்திருக்கின்றனர். இன்று, இந்தச் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளும் சிபாரிசு அறிக்கை விடையத்திலேனும் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வரமுடியாத கையறு நிலையும் ஆளுக்காள் ஆர்ப்பாட்டம் நடத்தும் துரதிர்ஷ்ட நிலையும் உருவாகியிருக்கின்றது.

முஸ்லிம்களுக்குள் உருவாகின்ற மாற்றுக் கருத்தாளர்களை அல்லது முற்போக்குப் பெண்கள் எனக் கூறிக்கொண்டு பொதுத் தளத்துக்கு வரும் தேர்ந்தெடுக்கப்பட்டோரை, இஸ்லாத்துக்கு எதிரான நாடுகள் எவ்வாறு தமது நிகழ்ச்சி நிரலுக்குள் உள்ளெடுக்கின்றன என்பதற்கு, உலக அரங்கில் நிறையவே உதாரணங்கள் உள்ளன. அவ்வாறே, முஸ்லிம்களுக்கு மத்தியில் எந்த அடிப்படையில் கருத்துமுரண் தோன்றினாலும், அதற்குள் புகுந்து விளையாடுவதற்கும் அதே சக்திகள், தமது முகவர்களைத் தயார் நிலையில் வைத்திருக்கின்றன.

இலங்கையில், முஸ்லிம் தனியாள் சட்டத்தை மறுசீரமைக்கும் விடயத்தில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில் இவ்வாறான முஸ்லிம் விரோதச் சக்திகள், மூக்கை நுழைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கே உரித்தான இந்தச் சட்ட மறுசீரமைப்பு பற்றி, நாடாளுமன்றக் கட்டடத் தொகுதிக்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், வேற்றுமதத்தைச் சேர்ந்த ஓரிவர் பங்குபற்றியது, இந்தச் சந்தேகத்தை அதிகரிக்கின்றது. இங்குதான், கவனமாக இருக்க வேண்டும்.

நாட்டில் எத்தனையோ சட்டங்கள் இருக்கின்றன. ஆனால், அவை அமுல்படுத்தப்படுவதைக் காண்பதே அரிதாகவுள்ளது. எழுத்தில் சட்டம் இருக்கின்றது என்பதற்காக, எல்லோரும் சட்டப்படி செயற்படுவதில்லை. அவ்வாறே, எல்லா முஸ்லிம்களும் ஷரிஆ சட்டத்தை நூறு சதவீதம் பின்பற்றுகின்றார்கள் என்று கூறுவது கடினம். தனியாள் சட்டத்தை முழுமையாக மதிக்காத ஆண் – பெண் (திருமண) உறவுகளும், ஒருபோதும் நடந்தேறாமல் இல்லை.

எனவே, என்னதான் சட்டம் இயற்றப்பட்டாலும், ஒருவர் அல்லது ஒரு குடும்பம் நினைக்காதவரை, அந்தச் சட்டத்தை அமுல்படுத்த முடியாது என்றிருக்கையில், தனியாள் சட்ட மறுசீரமைப்புப் தொடர்பாக முஸ்லிம்கள் தமக்குள் முரண்பட்டுக் கொள்ளத் தேவையில்லை.

அதன்மூலம், வெளிச் சக்திகள் இலாபம் உழைக்கவும் முஸ்லிம்களைப் பிறர் எள்ளி நகையாடவும் வழிவகுக்கக் கூடாது. சம்பந்தப்பட்ட முக்கிய தரப்பினர், சுமுகமாகக் கலந்துரையாடி, ஷரிஆவுடன் முரண்படாத அவசியமான மாற்றங்களைக் கொண்டு வருதலே – பக்குவப்பட்ட ஒரு சமூகத்துக்கு அழகு!Post a Comment

Protected by WP Anti Spam