By 5 August 2018 0 Comments

குழந்தையை டேகேரில் சேர்க்கிறீர்களா? (மகளிர் பக்கம்)

குழந்தைகளுக்கு முதலில் டேகேர் வேண்டுமா என்ன? பெற்றவர்களே பார்த்துக் கொள்ளலாமே; எப்படியும் கிண்டர்கார்டன் என்ற பெயரில் சீக்கிரமே குழந்தைகளை பள்ளியில் சேர்த்து விடுகிறோமே என நினைக்கலாம். கிராமங்களில் வாழ்ந்த வரைக்கும் நம் அக்கம்பக்கத்து வீட்டுப் பிள்ளைகளோடு தைரியமாக நம்பி விளையாட அனுப்பி வைக்கவோ அல்லது பிற குழந்தைகள் வீட்டிற்கு வந்து விளையாடும் சூழல் அமைவது என்பது எளிதானது. நகரமயமானபின் இந்த சூழல் தற்போது இல்லவே இல்லை. இன்னும் சொல்லப்போனால் நகரங்களில் தெருவில் குழந்தைகளை பார்க்கக் கூட முடிவதில்லை.

பூங்காக்களில் மட்டுமே பெற்றவர்கள் கண் பார்வையில் வைத்தபடி விளையாட வைத்து அழைத்து சென்று விடுகிறார்கள். தன் வயது ஒத்த பிள்ளைகளை பார்க்கில் பார்க்க முடியும். விளையாடலாம் என்கிற மகிழ்ச்சியே குழந்தைகளை பூங்காவிற்கு வர வைக்கிறது. மூன்றரை அல்லது நான்கு வயதில் எந்தவொரு டேகேரும், ப்ளே ஸ்கூல்க்கு போகாத குழந்தைகளால் கிண்டர் கார்டன் பள்ளிகளில் சேர்க்கும்போது திடீரென ஒரு மூன்று மணி நேரம் பெற்றோர்களை பிரிந்திருப்பது என்பது அவர்கள் பார்க்கும் பிரிவின் முதல் கட்டம். பால் குடி மறக்கவைக்கும் போது எப்படி ஏதோ ஒன்றை இழந்தது போல் தவித்து அழுவார்களோ அது போல் பெற்றோர் சிறிதுநேரம் கூட அருகில் இல்லை என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

அதுபோல் ஒரே இடத்தில் உட்கார வைப்பது என்பதும் தற்போது உள்ள ஆசிரியர்களின் பொறுமையை சோதிக்கக் கூடிய ஒன்றாகத்தான் இருக்கும். அதனால் துறு துறுவென ஓடி ஆடித் திரிய நினைக்கும் குழந்தைகளை அவர்கள் ஹைப்பர் ஆக்டிவ் எனக் கூறி குற்றத்தை குழந்தைகள் மீதும் பெற்றோர் மீதும் சுமத்தி விடுகிறார்கள். விளையாட நினைக்கும் குழந்தைகளை விளையாடக்கூடாது என சொல்வதுதான் இங்கு வன்முறையே. நம் வழியாகவே அவர்கள் இந்த உலகை வந்தடைந்தாலும் அவர்கள் தனி மனிதர்கள்தான் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ளவோ நினைத்துப் பார்க்கவோ கூட விரும்பாத ஓர் உண்மை.

டேகேருக்கோ அல்லது ப்ளே ஸ்கூலுக்கோ குழந்தைகள் போகத் தொடங்கினால்தான் தன் வயது ஒத்த குழந்தைகளை பார்க்கும்போது சாப்பிடவும் ஏதோ ஒரு மணிநேரமாவது உட்கார்ந்து விளையாடவும் பின் நன்றாக தூங்கவும் செய்வார்கள். இவை எல்லாவற்றையும்விட, குழந் தைக்காக என்று இரண்டு மூன்று ஆண்டுகளை முழுவதுமாக ஒப்படைக்க முடியாத சூழலில் இன்றைய பெண்கள் இருக்கிறார்கள். குழந்தையை பார்த்துக்கொள்ள வீட்டில் யாருமற்றவர்களாகவும் பணிக்குச் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்திலும் இருக்கும் பெண்களுக்கு டேகேர் ஒரு மிகப்பெரிய கொடை.

இப்படி நகர வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக இன்று டேகேர்களும், க்ரீச்களும் மாறிவிட்ட சூழலில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் டே கேர்கள் எப்படியிருக்க வேண்டும் தெரியுமா? பெரும்பாலானவர்கள் ஏசி ரூம் இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள்.ஏசி ரூம் மட்டுமல்ல அது இல்லாத காற்றோட்டமான இயற்கையான வெளிச்சம் கொண்ட அறைகள் இருக்க வேண்டுமென எதிர்பாருங்கள். ஏசி ரூம் என்று சொன்னாலும் அது ஜன்னல், கதவு என அடைத்திருக்கும் சிறை என்று தான் குழந்தைகளுக்கு தெரியும். காற்றோட்டமுள்ள அறைகள் அவர்களுக்கு கூடுதல் உற்சாகத்தையும் விடுவிப்பையும் கொடுக்கும் விளையாட வெளியில் இடமும் இருக்க வேண்டும் என்பதை மறக்காதீர்கள்.

சரியாக கவனித்துக்கொள்ள முறையாக படித்த ஆசிரியர்களும் அவர்களுக்கு உதவியாக இருக்கும் உதவியாளர்களும் இருப்பதை உறுதி செய்யுங்கள். டாய்லெட் பாத்ரூம்களை எத்தனை நாளுக்கு ஒருமுறை சுத்தம் செய்கிறார்கள் என்பதை விசாரித்துக் கொள்ளுங்கள். டையஃபர்கள் மாற்றும் போது நன்றாக கழுவி துடைத்து பவுடர் போட்டு விட்டு மாற்ற வேண்டுமென அறிவுறுத்துங்கள். அந்த இடம் குழந்தைகளுக்கு பழகிவிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக சிறுநீர் கழிக்க பாத்ரூம்தான் போக வேண்டுமென சொல்லிக் கொடுக்க சொல்லுங்கள். சீக்கிரமே டையஃபர் பழக்கம் மாறிவிடும்.

மற்ற குழந்தைகளுடன் பேசும் வாய்ப்பு கிடைப்பதால் குழந்தைகளின் பேச்சுத்திறன் வெகுவிரைவில் வசப்படும். முதலில் இரண்டு மணி நேரம் மூன்று மணிநேரம் என விட்டு அழைத்து வாருங்கள். இடமும் பிடித்த நண்பர்களும் அமைந்து விட்டால் அவர்களே பையை தூக்கிக் கொண்டு புறப்பட்டு விடுவார்கள். மற்ற குழந்தைகள் என்ன செய்கிறார் களோ அதையே திரும்ப செய்யவும் பழகு வார்கள். அது நல்லதாகவும் இருக்கலாம் கெட்டதாகவும் இருக்கலாம். அனைத்தையும் எதிர்பார்க்க பழகிக் கொள்ளுங்கள்.

சென்னையில் உள்ள பல டேகேர்கள் இரண்டு பெட்ரூம்கள் அல்லது மூன்று பெட்ரூம்கள் கொண்ட வாடகை வீட்டில் பிள்ளைகளை அடைத்து வைத்து டே கேர் என பெயர்ப் பலகை மாட்டி வணிகமாகவே செய்கிறார்கள். இந்த மாதிரியான டே கேர்களை தவிர்ப்பது நல்லது. காசு குறைவாக இருப்பதாக எண்ணி சேர்க்காதீர்கள். குழந்தைகளின் அழுகை தூக்கத்தில் கூட நிற்காது. உங்களின் வீடு போன்று நன்றாக வெளிச்சத்துடனும் அக்கறையுடனும் கவனிக்கும் டீச்சர்கள் இருந்தாலே போதும். குழந்தைகளின் வளர்ச்சியில் டே கேர்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. பிறருடன் பழகவும் விளையாடவும் பகிர்ந்து உண்ணும் பழக்கத்தையும் ஏற்படுத்தும். நமக்குத்தான் இவர்கள் குழந்தைகள்.

சமுதாயத்திற்கு இவர்கள் நல்லதொரு மனிதர்களாகவும் மற்ற கலாசாரங்களை மதிக்கவும் தங்களுக்கான நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்ளவும் இவர்களுக்கு முதல் பயிற்சி கூடம்தான் இது. கண்ணீருடன் குழந்தையை டேகேரில் விட்டுவிட்டு வராதீர்கள். இந்த இடம் உனக்கு மிகவும் பிடிக்கும் என்பதை குழந்தைக்கு உங்கள் செய்கைகளின் மூலம் உணர்த்துங்கள். நம் குழந்தைகள் மனம் விரும்பும் இடத்தினை சரியாக தேர்ந்தெடுத்து அவர்களை உற்சாகமாக அனுப்புங்கள். அம்மாக்களின் நேரங்கள் திரும்பவும் அம்மாக்களிடமே வந்து சேரும். குழந்தைகளை நீங்கள் பிரியவில்லை… அவர்களுக்கான உலகிற்கு செல்ல எடுத்து வைக்கும் முதல் படி என்று கருதுங்கள்.Post a Comment

Protected by WP Anti Spam