ஆரோக்கியத்தை அழிக்கும் விஷயங்கள்!!(மருத்துவம்)

Read Time:9 Minute, 38 Second

எலும்பே நலம்தானா?!

உடலுக்கு வடிவம் கொடுப்பதில் தொடங்கி, உடலின் சமநிலையைத் தக்க வைத்துக்கொள்வது வரை அனைத்து செயல்களுக்கும் எலும்புகள் அவசியம் என்பதைக் கடந்த இதழ்களில் பார்த்தோம். ஒரு மாறுதலுக்காக எலும்புகளின் ஆரோக்கியத்தைக் குலைக்கும் விஷயங்களையும், அவற்றுக்கான தீர்வுகளையும் தெரிந்துகொள்வோமா?

உடலியக்கம்

தினமும் உடற்பயிற்சிகள் செய்வோருக்கும், உடலளவில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்போருக்கும் எலும்புகள் ஆரோக்கியமாகவே இருக்கும். உடலுழைப்பே இல்லாதவர்களுக்கு எலும்புகளின் ஆரோக்கியம் இளவயதிலேயே பாதிக்கப்படும்.

கால்சியம்

எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு கால்சியம் சத்து அடிப்படை. சிறு வயது முதல் பால் பிடிக்காது, தயிர் பிடிக்காது என்று வளர்பவர்களுக்கும், காய்கறி, பழங்கள், தானியங்கள் எடுத்துக்கொள்ளாதவர்களுக்கும் உடலில் போதுமான அளவு கால்சியம் இருக்காது. அவர்களுக்கு எலும்புகளின் அடர்த்தி குறைவாக இருக்கும். தவிர சிறிய அடிபட்டாலே எலும்பு முறிவு ஏற்படும் அளவுக்கு எலும்புகள் உறுதியின்றி இருக்கும்.

புகை மற்றும் குடிப்பழக்கம்

இந்த இரண்டும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையே அழிக்கும் வல்லமை கொண்டவை. புகைப்பழக்கத்தால் எலும்புகளின் அடர்த்தி குறையும். அதே போல தினமும் குடிப்பவர்களுக்கு உடலில் கால்சியம் கிரகிக்கப்படும் தன்மை பாதிக்கப்படுவதால் எலும்புகள் உறுதியிழக்கும்.

பாலினம்

ஆண்களைவிட பெண்களுக்கே எலும்பு தொடர்பான பாதிப்புகள் அதிகம். காரணம் அவர்களுக்கு இயல்பிலேயே ஆண்களைவிட எலும்புத் திசுக்களின் அளவு குறைவு. தவிர மாதவிடாய் நின்ற பெண்களுக்கு எலும்புகள் வலுவிழப்பது மிகவும் சகஜமான ஒன்று. அவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படுகிற எலும்புகள் மென்மையாதல் பிரச்சனை ஏற்படவும் வாய்ப்புகள் மிக அதிகம்.

உடல் எடை

அதிக உடல் பருமன் இதயம் முதல் எலும்புகள் வரை ஆரோக்கியத்தை பாதிக்கிற விஷயம். அதே போல சராசரிக்கும் குறைவான உடல் எடை கொண்டவர்களுக்கும் எலும்புகளின் ஆரோக்கியம் சீராக இருக்காது. ஒல்லியாக இருப்பவர்கள் தாம் ஆரோக்கியமாக இருப்பதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். அவர்களுக்கு எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கின்றனவா என்பதே கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

ஹார்மோன் சமநிலையின்மை

தைராய்டு ஹார்மோன்களின் சீரற்ற தன்மையும் எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம். மாதவிடாய் நிற்கும் காலத்தில் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு வெகுவாகக் குறைவதும் ஒரு காரணம். மெனோபாஸ்க்கு முன் நீண்ட நாட்களாக மாதவிடாய் வராமலிருப்பதும் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தை அதிகரிக்கும். ஆண்களைப் பொறுத்தவரை டெஸ்ட்டோஸ்டீரோன் என்கிற ஹார்மோன் அளவு குறைவது அவர்களுக்கு எலும்புகளின் உறுதியை பாதிக்கும்.

முறையற்ற உணவுப்பழக்கம்

சரியான நேரத்துக்கு சரிவிகித உணவு உண்ணத் தவறுகிறவர்களுக்கு எலும்புகள் ஆரோக்கியம் இழக்கும். உதாரணத்துக்கு உடல் எடை அதிகரிக்குமோ என்கிற பயத்தில் உணவைத் தவிர்ப்பவர்கள், சாப்பிட்டதை உடனே வாந்தி அல்லது பேதி மூலம் வெளியேற்றுகிறவர்கள் போன்றவர்களுக்கு எலும்புகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

மருத்துவ சிகிச்சைகள்

சில வகை பிரச்னைகளுக்காக ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக்கொள்வோருக்கும் அதன் விளைவு எலும்புகளின் ஆரோக்கியத்தில் பிரதிபலிக்கும். புற்றுநோய்க்காக எடுத்துக்கொள்கிற சில மருந்துகளும் எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம்.

எலும்புகளின் ஆரோக்கியம் மேம்பட என்ன செய்யலாம்?

* கால்சியம் : 19 வயது முதல் 50 வயது வரையிலான ஆண்களுக்கு தினசரி 1000 மி.கி கால்சியமும், 50 வயது முதல் 70 வயது வரையுள்ள பெண்களுக்கும், ஆண்களுக்கும் இந்த அளவு 1200 மி.கி அளவாகப் பரிந்துரைக்கப்படுகிறது. பாதாம், ப்ரோக்கோலி, சோயா, சாலமன் மற்றும் சார்டைன் வகை மீன்கள் போன்றவற்றில் கால்சியம் அதிகமுள்ளதால் அவற்றை அடிக்கடி சாப்பிட வேண்டும். இவற்றை எடுத்துக்கொள்வதில் நடைமுறை சிரமங்கள் இருந்தால் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் சப்ளிமென்ட்டுகள் எடுத்துக்கொள்ளலாம்.

* வைட்டமின் டி : கால்சியம் சத்தை உட்கிரகிக்க வைட்டமின் டி சத்தும் அவசியம். அதை சூரிய வெளிச்சத்திலிருந்து இயற்கையாகப் பெறலாம். இளம் வெயிலில் உடற்பயிற்சி செய்வது, தோட்ட வேலை செய்வது போன்றவை பலனளிக்கும். அளவைப் பரிசோதித்துத் தெரிந்துகொண்டு, அதற்கும் மருத்துவரிடம் கேட்டு சப்ளிமென்ட் எடுத்துக்கொள்ளலாம்.

* உடற்பயிற்சியும் உடலியக்கமும் : எடை தூக்கும் பயிற்சிகள் மிக முக்கியம். நடைப்பயிற்சி நல்லது. ஜாகிங், மாடிப்படிகளில் ஏறி இறங்குவது போன்றவை சிறந்த பயிற்சிகள். புகையும் குடியும் தவிர்க்கப்பட வேண்டும்.

கால்சியம் டேட்டா

எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு கால்சியம் அவசியம் என்று அறிவோம். ஆனாலும் ஆரோக்கியமான எலும்புக்கூட்டமைப்புக்கு அது மட்டுமே போதாது. அதற்கு ஹார்மோன்களின் சிக்னலும் அவசியம். உதாரணம் வைட்டமின் டிக்கான தேவை. கால்சியம் வேண்டும் என்பதற்காகக் கண்டதையும் சாப்பிட்டு அதன் அளவை ஏற்ற முடியாது.

உடலுக்கு கால்சியம் சத்தை கிரகிக்கவென ஓர் அளவு இருக்கும். சப்ளிமென்ட் என்கிற பெயரில் அளவுக்கதிகமாக எடுத்துக்கொள்கிற கால்சியம் அளவு ஆபத்தானது.சில வகை உணவுகள் கால்சியம் சத்தை கிரகிக்கவிடாமல் செய்பவை. உதாரணத்துக்கு ஆக்ஸலேட் அதிகமுள்ள உணவுகள். அவற்றை அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும்.

இன்னும் சில சத்துக்கள்

கால்சியம் மற்றும் வைட்டமின் டி மட்டுமே எலும்புகளின் நலன்காக்க போதுமானவை அல்ல. இவை தவிர வேறு சில சத்துகளும் அவசியம். அதன்படி மக்னீசியம் எலும்புகளின் அடர்த்தி குறைவதை இது தடுக்கும். கீரைகள், பீன்ஸ், நட்ஸ் மற்றும் சீட்ஸ் போன்றவற்றில் மக்னீசியம் இருக்கிறது.

வைட்டமின் பி எலும்பு முறிவுக்கும், வீக்கத்துக்கும் காரணமான ஹோமோசிஸ்டைனை கட்டுக்குள் வைத்திருக்க வைட்டமின் பி அவசியம். முழுதானியங்கள், பால், முட்டை, கீரை, பழங்களில் இது அதிகமுள்ளது.

வைட்டமின் ஏ அளவு குறைந்தாலும், கூடினாலும் எலும்புகளுக்கு நல்லதல்ல. கேரட், ஈரல், வெண்ணெய், முட்டை போன்றவை வைட்டமின் ஏ நிறைந்தவை.புரதம் எலும்புகளின் அடர்த்திக்கு 20 சதவிகிதம் புரதச்சத்து அவசியம். புரதத்தின் அளவும் சரியாக இருக்க வேண்டியது அவசியம். சப்ளிமென்ட்டாக எடுத்துக்கொள்வோர், அதன் அளவிலும் எடுத்துக்கொள்கிற நாட்களிலும் கவனமாக இருக்க வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிக்கி சேலஞ்சில் கலக்கிய நடிகை – வைரலாகும் வீடியோ!
Next post அக்காவா? அக்கா கணவரா? இருவருக்கும் மத்தியில் மாட்டிக் கொண்டு தவிக்கிறேன் !!( அவ்வப்போது கிளாமர்)