By 7 August 2018 0 Comments

கண்ணே என் கண்மணியே…!!(மருத்துவம்)

உலகைக் காணவும், ரசிக்கவும் உதவும் கண்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமானது. கண்களில் பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாத்து கொள்வது அனைவரின் முக்கிய கடமையாகவும் உள்ளது.
எனவே கண்களில் ஏற்படக்கூடிய பாதிப்புகள், அதற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள், முதலுதவி, சிகிச்சை முறைகள் உட்பட பாதுகாத்து கொள்ளும் வழிமுறைகள் போன்றவை உங்களுக்காக இங்கே தொகுத்து தரப்படுகின்றன…

விழியின் மையப்பகுதியில் உண்டாகிற அனைத்துவிதமான காயங்களும் பார்வையை இழக்கச் செய்யக்கூடியவை. எனவே, சிறுகாயமாக இருந்தாலும், கவனக்குறைவாக இருந்துவிடக் கூடாது. தேவையான முதலுதவிகளை உடனே மேற்கொள்ள வேண்டும்.

கண்மணி மற்றும் கருவிழித் தசையை மூடி இருக்கும் மென்மையான சவ்வுதான் கருவிழிப் படலம் ஆகும். இதில் உண்டாகிற எந்தவொரு சிறிய காயமாக இருந்தாலும், சற்றும் தாமதிக்காமல், உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும். தாமதம் செய்யும் பட்சத்தில் தொற்றுக்கள் உண்டாகி, பார்வையை இழக்கவும் நேரிடலாம்.

விழிக்கோளம் சிவந்து போகும்படி, ஏற்படுகிற ஊமைக்காயங்கள் மிகவும் தீங்கானவை. இது மாதிரியான காயங்களால் ஓரிரு நாட்கள் கழித்து வலி திடீரென அதிகமானால் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு அதிகம். இப்பாதிப்பு எதிர்பாராத நேரத்தில் உண்டாகும் விழி இறுக்கமாகவும் அமையலாம்.

கண்களில் தூசியோ, அழுக்கோ சேர்ந்துவிட்டால் தாம் உடுத்தி இருக்கும் வேட்டி, சட்டை, புடவை, சட்டையின் கைப்பகுதி போன்றவற்றால் சுத்தம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறு செய்வதால் விழிகளில் தொற்று ஏற்படும் வாய்ப்பு உண்டு. அழுக்கு படிந்த துணிகளால் கண்களைச் சுத்தம் செய்வதால், ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு வெண்விழிப்படல அழற்சி, கண்வலி ஆகியவை பரவுகின்றன.

மெட்ராஸ் ஐ, கண் வலி போன்ற பாதிப்புக்கள் இருக்கும் பட்சத்தில், ஒவ்வொரு கண்களையும் சுத்தம் செய்வதற்குத் தனித்தனி துணிகளைப் பயன்படுத்துவது ஆரோக்கியத்துக்கு உகந்தது. கண்களில் அழுத்தம் அதிகமானால் க்ளுக்கோமா(விழி இறுக்கம்) என்கிற கொடிய நோய் உண்டாகிறது. பொதுவாக, 40 வயதைக் கடந்தவர்கள்தான் இந்நோயால் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்நோய் ஒருவரின் பார்வை இழப்புக்கு முதன்மை காரணமாக உள்ளது என்று கண் சிகிச்சை மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

விழி இறுக்கத்தை திடீரென உண்டாகும் விழி இறுக்கம், நாள்பட்ட விழி இறுக்கம் என இரண்டு வகையாகப் பிரிக்கின்றனர். இப்பாதிப்பை மிக எளிதாக தடுக்கலாம். 40 வயதைக் கடந்தவர்கள், விழி இறுக்கம் உள்ளவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் தவறாமல் வருடம் ஒரு முறை கண்களின் அழுத்தத்தைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

கண்ணீர்ப்பை அழற்சி எனும் நோய் கண்ணீர்க் குழாயில் அடைப்பு உண்டாவதால் வருகிறது. கண்களின் கீழே தோல் சிவந்து காணப்படல், வலியும் வீக்கமும் இருத்தல், விழிகளின் வழியாக அதிகளவில் நீர் வெளியேறுதல் முதலானவை இந்நோயின் அறிகுறிகள். கண்களின் மேற்புறம் வெந்நீர் ஒத்தடம் கொடுத்தல், சொட்டு மருந்து விடுதல் ஆகிய எளிய சிகிச்சைகள் மூலம் இந்நோயைக் குணப்படுத்தலாம். அதில் தீர்வு கிடைக்காவிட்டால், அறுவை சிகிச்சை செய்யலாம்.

கண் இமைகளில் அமைந்துள்ள எண்ணெய் சுரப்புகளில் பாக்டீரியா தொற்று ஏற்படும்போது, உண்டாகிற பாதிப்புதான் ‘கண்கட்டி’ என குறிப்பிடப்படுகிறது.

வாழ்க்கைமுறை மற்றும் உணவு பழக்கவழக்க மாற்றங்களால் மழலைகளையும் கண் தொடர்பான பிரச்னைகள் அச்சுறுத்தி வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் அலைகண் பிரச்னை. மாறுகண் குறைபாடு கேள்விப்பட்டு இருக்கிறோம். இதென்ன அறியாத பெயராக உள்ளதே என்று குழப்பம் அடைய வேண்டாம்.

குழந்தைகள் தவறான திசையில் பார்ப்பதுதான் அலைகண் எனக் குறிப்பிடப்படுகிறது. பார்க்க வேண்டிய திசையைத் தவிர்த்து மற்ற இடங்களை நோக்கிப் பார்ப்பதே அலைகண் பிரச்னை. எவ்வித குறைபாடும் இல்லாமல், இயல்பாக செயல்படுகிற கண்ணைத் துணியால் கட்டி வைத்தால், இப்பிரச்னையும் எளிதில் குணமாகும்.

கருவிழித் தசை அழற்சி காரணமாக கண்களில், எதிர்பாராத சமயத்தில் திடீரென்றோ அல்லது மெல்லமெல்லவோ வலி உண்டாகலாம். இதன் காரணமாக, விழிகளில் இருந்து ஏராளமாக நீர் வெளியேறும். கூச செய்யும் வெளிச்சத்தைப் பார்க்கும்போது கண்களில் தாங்க முடியாத வலி காணப்படும். எனவே, பார்வை மங்கலாக வாய்ப்புகள் அதிகம். இதற்கு உடனடியாக தகுந்த சிகிச்சை செய்வது அவசியம். ஆகவே, கருவிழித்தசை அழற்சி பாதிப்பு உள்ளவர்கள் தாமதிக்காமல் மருத்துவரைப் பார்ப்பது அவசியம்.

பெற்றோர்கள் மூலமாக, குழந்தைகளுக்குக் கொனோரியா(மேகவெட்டை) கிளமிடியா போன்ற தொற்றுக்கள் பரவும். இந்த தொற்றுக்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் சிறுநீர் கழிக்கும்போது அதிக வலியால் துன்பப்படுவார்கள். பெண்களுக்கு துர்நாற்றத்துடன் மஞ்சள், பச்சை என எதாவது ஒரு கலரில் பிறப்பு உறுப்பில் கசிவு இருக்கும்.

இரண்டு வயதில் இருந்து ஐந்து வயதிற்குக் கீழே உள்ள குழந்தைகள்தான் மாறுகண் நோயால் அதிகளவில் பாதிக்கப்படுவதாக ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. வைட்டமின்-ஏ குறைவு காரணமாக வருகிற இப்பாதிப்பை, ஆரம்பநிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்தாவிட்டால் குழந்தைகளின் பார்வைத்திறன் முழுவதுமாக செயல் இழக்கும் அபாயம் ஏற்படும்.

ரத்தக்கசிவு, சீழ் பிடித்தல் முதலான பிரச்னைகள் வெண்விழிப் படலத்தின் பின்புறம் ஏற்படக்கூடியவை. ரத்தக்கசிவு பிரச்னை கூர்மையான பொருட்களில் இடித்துக்கொள்வதால் வரக்கூடியது. சீழ் பிடித்தல் என்பது புண்களால் கண் மிகவும் கெட்டுப்போய், அபாயகரமான நிலையில் இருப்பதைக் குறிப்பது. இவ்விரு பாதிப்புகளுக்கும் உடனடியாக மருத்துவரை அணுகுவது கட்டாயம்.Post a Comment

Protected by WP Anti Spam