By 14 August 2018 0 Comments

எதிர்பார்ப்பு!!(கட்டுரை)

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாடுகள், பேராளர் மாநாடுகள் எப்போதுமே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும். ஏனென்றால் அந்தக் கட்சி அந்த அளவுக்கு எதிர்பார்ப்புடன் உருவாக்கப்பட்ட ஓ​ர் அரசியல் இயக்கம் என்பது மட்டுமன்றி, தனது மாநாடுகளில் வரலாற்று முக்கியத்துவம்மிக்க தீர்மானங்களையும் அறிவிப்புகளையும் வெளியிட்ட கட்சியும் என்பதனாலாகும்.
அவ்வாறு முக்கியத்துவம் மிக்க இன்னுமொரு பேராளர் மாநாடு, இம்மாதம் நடைபெறவுள்ள நிலையில், அது பற்றிய எதிர்பார்ப்புகள் மேலோங்கியுள்ளன.

முஸ்லிம் காங்கிரஸின் 26ஆவது பேராளர் மாநாடு கண்டி, பொல்கொல்லையில் 2015 நவம்பரில் நடைபெற்றது. கட்சிக்குள் யாப்பு ரீதியான பெரும் மாற்றங்கள் நிகழ்த்தப்பட்ட மாநாடாக இதைக் கொள்ள முடியும்.

அதன்பிறகு, பல்வேறு விமர்சனங்களும் இன்னுமோர் உடைவுக்கான நிகழ்தகவுகளும் அதிகரித்திருந்த சூழலில், முஸ்லிம் காங்கிரஸ் தனது தேசிய மாநாட்டைப் பாலமுனையில் நடாத்தியது.

27ஆவது பேராளர் மாநாடு, கொழும்பில் 2017 பெப்ரவரியில் நடைபெற்றிருந்தது. முஸ்லிம் காங்கிரஸில் ஏற்பட வேண்டுமென்றிருந்த கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள், கட்சியால் எடுக்கப்பட்டிருக்க வேண்டிய முக்கியமான தீர்மானங்கள் எதையும் சொல்லிக் கொள்ளுமளவுக்கு நிறைவேற்றாத நிகழ்வுகளாகவே, அநேக மாநாடுகள் அமைந்திருந்தன.

மக்கள் சார்பு அரசியலில் மிக முக்கியத்துவமான நிகழ்வுகளாகக் காணப்பட்ட பேராளர் மற்றும் தேசிய மாநாடுகள், மர்ஹூம் எச்.எம். அஷ்ரப் காலத்திலிருந்த உயிர்த்துடிப்பின்றி, வெறும் சட்டத் தேவைக்காகவும் கூட்டக் குறிப்புகளுக்காகவும் நடாத்தப்படுகின்ற உள்ளூர் சங்கங்களின் கூட்டங்கள் போலவே நடந்தேறின என்ற குற்றச்சாட்டுகள், கட்சி உறுப்பினர்கள் மட்டத்திலிருந்து முன்வைக்கப்பட்டிருந்தன.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பது, மற்றைய அரசியல் கட்சிகளில் இருந்து அடிப்படையில் வேறுபட்ட பண்பியல்புகளைக் கொண்டது என்பதை முதலில் கட்சிக்குள்ளேயும் வெளியேயும் உள்ளவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

பெருந்தேசியக் கட்சிகளுடனோ, தமிழ்த் தேசியக் கட்சிகளுடனோ இணைந்து பயணிப்பதன் மூலம், முஸ்லிம்களின் உரிமையை, அபிவிருத்தியை, அபிலாஷையை உறுதிப்படுத்த முடியாது என்று கண்டுணர்ந்த பின்னால், உருவெடுத்த தனித்துவ அடையாள அரசியல் சிந்தனையிலேயே முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது எனலாம்.

‘ஆயுதங்களின் கை’ மேலோங்கியிருந்த காலப் பகுதியில், முஸ்லிம் இளைஞர்கள் ஆயுத போராட்டத்தில் அள்ளுண்டு செல்லாதவாறு நல்வழிப்படுத்துவதற்காகவும் முஸ்லிம் சமூகத்தை, ஒரு குடையின் கீழ் ஒன்றுசேர்த்து, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நோக்கிச் செல்வதற்காகவும் உருவாக்கப்பட்ட அரசியல் இயக்கமே இக்கட்சியாகும்.

இக்காலப்பகுதியில் முஸ்லிம்களுக்கு இருந்த அச்சுறுத்தல்கள், ஆயுதமோதல் சார்ந்த நெருக்கடிகள், அதனால் இளைஞர்களுக்கு ஏற்பட்டிருந்த உணர்வெழுச்சி என்பனவே, முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால அதிவேக வளர்ச்சிக்குப் பிரதான காரணமாகியது என்பதை மறக்க முடியாது.

அந்த அடிப்படையில், முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் அஷ்ரபின் காலத்தில் மட்டுமன்றி, இன்றைய தலைவர் ரவூப் ஹக்கீம் பதவியேற்ற பின்னரான ஒரு சில வருடங்களிலும் கூட, இடம்பெற்ற பல பேராளர் மாநாடுகள், தேசிய மாநாடுகள் மட்டுமன்றி சில பகிரங்கப் பொதுக் கூட்டங்கள் கூட, முஸ்லிம்களுக்கான அரசியலில் குறிப்பிடத்தக்க முக்கிய வகிபாகத்தைக் கொண்டிருந்ததாகச் சொல்ல முடியும்.

ஆனால், பிற்காலத்தில் பல்வேறு காரணங்களால் ‘உப்புச் சப்பாக’ நடக்கின்ற கூட்டங்கள் போல, இவையெல்லாம் மாறிவிட்டதாக, கட்சியின் ஆரம்பகால உறுப்பினர்களின் மனதில் ஒரு கவலை குடிகொண்டதை உணரக்கூடியதாக இருந்தது.

மனிதர் என்ற வகையிலும் மர்ஹூம் அஷ்ரப் இடத்திலும் தவறுகள் இருந்தனதான்; ஆனால், தனித்துவ அடையாள அரசியலின் அளவுகோலாக அவர் திகழ்கின்றார் என்பதில் இரண்டு நிலைப்பாடுகள் இல்லை.

முஸ்லிம் காங்கிரஸ், எதற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை அவர் மரணிக்கும் வரைக்கும் மறந்ததாகச் சொல்ல முடியாது. அந்த அடிப்படையில், முஸ்லிம் காங்கிரஸின் ஒவ்வொரு மாநாட்டிலும் பல வரலாற்று முக்கியத்துவம்மிக்க தீர்மானங்களை எடுத்து, அதைப் பிரகடனங்களாக வெளியிட்டார்.

வடக்கும் கிழக்கும் இணைந்திருக்கக் கூடாது என்றும், இணைந்திருந்தால் நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம் தரப்பட வேண்டும் என்றும் அறிவிப்புச் செய்தார் அஷ்ரப்.

அம்பாறை மாவட்டத்தை மய்யமாகக் கொண்டு, தென்கிழக்கு அதிகார அலகு உருவாக வேண்டும் என்றும், கரையோர மாவட்டம் வேண்டுமென்றும் சிங்கள, தமிழ் தேசியங்களுக்கு கிழக்கிலிருந்து அஷ்ரப் அறிவித்தார்.

முஸ்லிம்கள் ஒரு தனியான இனம் என்பதையும் அவர்களது அபிலாஷைகள் தனித்துவமானவை என்பதையும் உலகுக்கு உணர்த்துவதற்காக இவ்வாறான மாநாடுகளை அந்தத் தலைவர் பயன்படுத்தினார்.

முஸ்லிம்களுக்கு, விடுதலைப் புலிகளும் இன்னபிற ஆயுத இயக்கங்களும் செய்த அநியாயங்களுக்கான நீதி, நிலைநாட்டப்பட வேண்டும் என்றும், இனப் பிரச்சினைத் தீர்வில் முஸ்லிம்களின் பங்கு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் நெஞ்சை நிமிர்த்தி நின்று அஷ்ரப் பேசியதும் இவ்வாறான நிகழ்வுகளின்தான்.

அஷ்ரபிடம் பணமோ, அமைச்சுப் பதவியோ இல்லாத காலத்திலும் அவருக்குப் பின்னால், மக்கள் அலை திரண்டதற்குக் காரணமும் இதுவென்றே கூற வேண்டும்.

விகிதாசாரத் தேர்தல் முறைமையில் 12 சதவீதமாக இருந்த வெட்டுப்புள்ளியை, ஐந்து சதவீதமாகக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்தமை, பல பாரிய அபிவிருத்தித் திட்டங்களைக் கொண்டு வந்தமை என்பவற்றுக்குச் சமாந்தரமாக அஷ்ரப், முஸ்லிம்களுக்காக உரத்துக் குரல் கொடுத்தும் வந்தார்.

இவ்வாறான ஆபத்தான காலப் பகுதியில் அரசியல் ரீதியாகவும், பாதுகாப்பு ரீதியான சவால்களையும் எதிர்கொண்டு, களத்தில் நின்று போராடியவர்கள்தான் உண்மையில் கட்சியின் போராளிகள் ஆவர்.
ஆனால், பின்வந்த காலப்பகுதியில் பேராளர் மாநாடுகள், தேசிய மாநாடுகள், பகிரங்கப் பொதுக் கூட்டங்கள் அந்தளவுக்கு காத்திரமானவையாக அமைந்ததாகத் தெரியவில்லை.

அவ்வாறு நடைபெற்றிருந்தால், அந்தக் கொள்கையில் நிலைத்து நின்று பாடுபட்டிருந்தால், அண்மைக் காலங்களில் முஸ்லிம் காங்கிரஸ் இத்தனை நெருக்கடிகளை சந்தித்திருக்கவும் மாட்டாது; இத்தனை புதுக்கட்சிகளின் தேவை, உணரப்பட்டிருக்கவும் மாட்டாது.

ஒரு கட்சியின் பேராளர் மாநாடு நடைபெற்றால், அதில் ஆண்டறிக்கை வாசித்தல், யாப்புச் சீர்திருத்தம் (அவசியம் என்றால்), தலைவர், கட்டாய உயர்பீடத்தில் தெரிவான தலைவர், செயலாளர் உள்ளிட்ட பதவிநிலைகளுக்கான நபர்களை அறிவித்து அங்கிகாரம் கோரல், பேராளர் (கட்சிப் பிரதிநிதிகள்) கருத்துரைகள் உள்ளிட்ட நிகழ்வுகள், அதன் நிகழ்ச்சி நிரலில் இடம்பிடித்திருக்கும்.

அந்த வகையில், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது, 2015 இல் கண்டியில் நடாத்திய பேராளர் மாநாட்டில், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீம் யாப்புத் திருத்தம் ஒன்றை முன்னகர்த்தி இருந்தார். அதாவது, ஓரளவுக்கேனும் அதிகாரமுள்ள பதவியாகக் காணப்பட்ட, எம்.ரி.ஹசன்அலியின் செயலாளர் நாயகம் பதவிக்கான அதிகாரங்கள், இந்த மாநாட்டில் குறைக்கப்பட்டன. கிட்டத்தட்ட பெயரளவிலான ஒரு செயலாளராக, ஹசன்அலி நியமிக்கப்பட்டதுடன், கட்சியின் உயர்பீடச் செயலாளர் என்ற பதவி புதிதாக உருவாக்கப்பட்டு, அதற்கு மன்சூர் ஏ.காதர் நியமிக்கப்பட்டார்.

கட்சியில் இன்னுமோர் உடைவு ஏற்படுவதற்கு, இந்த யாப்புத் திருத்தமும் தேசியப்பட்டியல் எம்.பி இழுபறிகளும் முக்கிய காரணிகளாகியதை நாமறிவோம்.

நிலைமை இவ்வாறிருக்கும் போது, கிழக்கில் இருக்கின்ற முஸ்லிம்களை மய்யமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஓர் அரசியல் இயக்கமான முஸ்லிம் காங்கிரஸ், 2015 பேராளர் மாநாட்டை கண்டியில் நடாத்துவதும், அதற்காக ஆயிரக்கணக்கானோர் கிழக்கிலிருந்து பஸ்களில் பயணிக்க வேண்டி இருந்ததும் எதற்காக என்ற விமர்சனங்கள், அப்போது முன்வைக்கப்பட்டிருந்தன.

கட்சியில், விரும்பிய மாற்றங்களைச் செய்து கொள்வதற்குச் சாதகமான, பாதுகாப்பான ஒரு பிரதேசத்தில், இம்மாநாடு நடாத்தப்படுகின்றது என்ற குற்றச்சாட்டு, அப்போது முன்வைக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான ஒரு பின்னணியில், அதன்பின், கட்சியின் தேசிய மாநாடு, அம்பாறை மாவட்டம் பாலமுனைப் பிரதேசத்தில் நடைபெற்றது. தேசிய அரசியல் தலைவர்கள் பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில், முஸ்லிம் காங்கிரஸ் வழக்கமாக மேற்கொள்கின்ற காத்திரமான மாநாட்டுப் பிரடகனங்களை எடுத்து, அவற்றை அறிவிப்புச் செய்யவில்லை. குறைந்தபட்சம், முஸ்லிம்களின் அபிலாஷைகள் என்ன என்பதைக் காத்திரமாகத் தனதுரையில், கட்சித் தலைவர் முன்வைக்கவில்லை என்ற விமர்சனங்களும் அப்போது எழுந்தன.

ரவூப் ஹக்கீம் – பஷீர் சேகுதாவூத், ஹசன்அலி முரண்பாடு உச்சமடைந்திருந்த ஒரு காலப்பகுதியில், கட்சியின் 27ஆவது பேராளர் மாநாடு கொழும்பில் நடாத்தப்பட்டது.

இந்த மாநாட்டில், ஏற்கெனவே நிகழ்ந்து விட்ட சில தவறுகளைக் கட்சித் தலைவர் திருத்திக் கொள்ளலாம் என்று மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், மீண்டும் செயலாளர் பதவியில் ஒரு மாற்றம் மேற்கொள்ளப்பட்டு, கட்சியின் செயலாளராக நிசாம் காரியப்பர் நியமிக்கப்பட்டார்.

முஸ்லிம் காங்கிரஸின் தலைமை கிழக்குக்கு வேண்டுமென்ற கோஷங்கள் வலுப்பெற்றிருந்தாலும் கூட, கட்சித் தலைமைப் பதவியைத் தவிர, மற்றப் பதவிகளிலேயே சிறியதும் பெரியதுமான மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டன.

இப்போது 28ஆவது பேராளர் மாநாடு எதிர்வரும் ஐந்தாம் திகதி, கண்டியில் நடைபெற ஏற்பாடாகி இருக்கின்றது. கட்சியில் பாரிய உடைவொன்று நிகழ்ந்துவிட்ட பிறகு, ஓர் உள்ளூராட்சித் தேர்தலுக்கும் மாகாண சபைத் தேர்தலுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், இந்த மாநாடு இடம்பெறவுள்ளமை கவனிக்கத் தக்கது.

குறிப்பாக, கிழக்கு மக்களிடையே அண்மைக்காலமாக முஸ்லிம் காங்கிரஸின் போக்குகள் சம்பந்தமாகப் பல்வேறு மனக்கிலேசங்கள் ஏற்பட்டிருக்கின்றன. கடந்த இரு பேராளர் மாநாடுகளும் கிழக்குக்கு வெளியே நடைபெற்றுள்ளன.

கிழக்கிலேயே கட்சிக்கான ஆதரவுத் தளம் அதிகமாகக் காணப்படுவதுடன், ஒப்பீட்டளவில் கட்சியை உயிருக்குயிராக நேசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களும் பேராளர்களும் இந்தக் கிழக்கு மண்ணில்தான் இருக்கின்றார்கள் என்பதை யாரும் மறுக்கவியலாது.

எனவே, இந்த முறை மாநாட்டை கிழக்கில் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மீண்டும் கண்டியில் இது ஏற்பாடாகியுள்ளமை, பலதரப்பட்ட எண்ணவோட்டங்களுக்கு வித்திட்டுள்ளது. அவை, எவ்வாறான எண்ணவோட்டங்கள் என்பதை விவரித்துச் சொல்ல வேண்டியதில்லை.

முஸ்லிம் காங்கிரஸ், கிழக்கு மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி என்றாலும் இன்று, முஸ்லிம்களின் தேசிய கட்சிகளுள் ஒன்றாக இருக்கின்றது. அந்தவகையில், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், தனது சொந்த மண்ணில் பேராளர் மாநாட்டை நடாத்துவதில் எந்த உள்நோக்கங்களும் இல்லை என்றால், அது வேறு விடயம். ஆனால், இந்தக் கட்டுரை அழுத்தமாக உரைக்க விளைகின்ற விடயம், மாநாட்டின் காத்திரத் தன்மை பற்றியதாகும்.

மேலே குறிப்பிட்டது போல், முஸ்லிம் காங்கிரஸ் கடைசியாக நடாத்திய இரு பேராளர் மாநாடுகளிலும் ஒரு தேசிய மாநாட்டிலும் முஸ்லிம் மக்களுக்குப் பயன்படுகின்ற மாற்றங்களோ, தீர்மானங்களோ மேற்கொள்ளப்படவில்லை என்பது பொதுவான குற்றச்சாட்டாகும்.

பேராளர் மாநாட்டில், யாப்பைத் திருத்தியதும் செயலாளரின் அதிகாரத்தைக் குறைத்ததும் அப்பதவிக்கு ஆள்களை மாற்றியதுமே நடந்தேறியிருக்கின்றது. தேசிய மாநாடு கூட, அதன் அடிப்படைப் பண்பிழந்து, கிட்டத்தட்ட ஒரு பெரிய பொதுக் கூட்டம் போலவே நடந்ததாகப் பதிவாகியிருக்கின்றது.

கிழக்குக்கு முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் வேண்டும் என்றும், ரவூப் ஹக்கீம் அப்பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் அவ்வப்போது கட்சிக்குள்ளும் வெளியிலும் வலியுறுத்தப்பட்டது. ஆனால், கட்சி இப்போதிருக்கின்ற நிலையில் அது யதார்த்தபூர்வமாகச் சாத்தியமில்லை என்றே தெரிகின்றது.

ஆனால் தலைவர், தனக்குக் கீழுள்ள பதவிகளில் மட்டும் மாற்றங்களைச் செய்யாது, தனது அதிகாரங்கள், பொறுப்புகளிலும் மாறுதல்களைப் பரிந்துரைக்கலாம்.

ஒருவிதமான அதிகாரப் பகிர்ந்தளிப்பை கட்சிக்குள் மேற்கொள்ளலாம். அதன்மூலம் அதிகாரமெல்லாம் ஹக்கீமிடத்தில் குவிந்திருக்கின்றது என்ற விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

நீண்டகாலச் சர்ச்சைகள், விமர்சனங்களுக்கு மேலதிகமாக, கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், முஸ்லிம் காங்கிரஸின் இந்த முறை பேராளர் மாநாட்டைக் கிழக்கிலேயே நடாத்தியிருக்க வேண்டும். அதையும் தாண்டி, கண்டியில் நடாத்தப்படும் இந்தப் பேராளர் மாநாடு, ஆக்கபூர்வமானதாக அமைவது அவசியமாகும்.

பேராளர் மாநாட்டில் மேற்கொள்கின்ற தீர்மானங்களையாவது காத்திரமானதாக எடுக்க வேண்டும். அதேபோன்று இனிமேல் நடக்கும் தேசிய மாநாடுகளும் முஸ்லிம்களின் அபிலாஷைகளைப் பிரடகனம் செய்வதற்கான களமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதே, இச்சமூகத்தை நேசிக்கின்றவர்களின் எதிர்பார்ப்பாகும்.

முஸ்லிம் காங்கிரஸ் தனது பேராளர் மாநாடுகளை 14 மாதங்களுக்குள் நடாத்த வேண்டியது கட்சி யாப்பின்படி கட்டாயமானது (உயர்பீட அனுமதியுடன் மேலும் நான்கு மாதங்களுக்கு நீடிக்கலாம்).

ஆனால், சட்டத் தேவைக்காகவோ, ஓரிருவருக்கு வேண்டிய மாற்றங்களை ஏற்படுத்துவதற்காகவோ, வெறுமனே புதிய உயர்பீட உறுப்பினர்களை உள்வாங்கி, தமது ஆதரவுத் தளத்தை பலப்படுத்துவதற்காகக் கிடைக்கும் ஒரு சந்தர்ப்பமாக இதைக் கையாளக்கூடாது.

பேராளர் மாநாடுகள் முலம், மக்கள் சார்பு அரசியலுக்கு நன்மையளிக்கும் மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும். அதற்கான சந்தர்ப்பங்களாக, இம்மாநாடுகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.Post a Comment

Protected by WP Anti Spam