கடன் பொறியும் ‘மெகா’ அபிவிருத்தியும்!!(கட்டுரை)

Read Time:16 Minute, 25 Second

இலங்கையின் வெளிநாட்டுக் கடன் பற்றிய பேச்சுகள், மீண்டும் அதிகரித்திருக்கின்ற. சீனாவிடம் அளவுக்கதிகமான கடன்களை இந்நாடு கொண்டிக்கிறதா? சர்வதேச மூலதனச் சந்தைகளிலிருந்து, நாங்கள் அதிகமாக வாங்கிக் கொண்டிருக்கிறோமோ? இல்லாவிடில், சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற பலதரப்பு முகவராண்மைகளிடம் நிதியளிப்புகளைப் பெற்று, பிரச்சினைக்குள் சிக்கிக் கொள்கிறோமோ? அத்தோடு, பொருளாதார அபிவிருத்திக்கான வெளிநாட்டு நிதியளிப்பின் பங்கை, நாம் எப்படி ஆராய்வது?

பொருளாதார அபிவிருத்திக்கும் செழிப்புக்கும் முதலீடு அவசியமானது. முதலீடென்பது, சேமிப்பாலோ அல்லது வாங்குவதாலோ நிதியளிக்கப்பட முடியும். குடும்பங்களால் வங்கிகளில் சேமிக்கப்படுபவற்றாலோ அல்லது மீளெழும் அரச செலவுகளுக்குப் பயன்படுத்தப்படாத வரிகள் மூலமாகவோ, முதலீடு வர முடியும். வீடுகளால் போதியளவு சேமிக்கப்படாவிட்டல், அரசாங்கம் போதியளவு கடன்களை அறவிடாவிட்டால். உற்பத்தியையும் வேலைவாய்ப்பையும் அதிகரிப்பதற்காக, வெளிப்புற நிதிக் கொள்வனவு அவசியமாகிறது. வெளிநாட்டுக் கடன் பொறியைத் தவிர்ப்பதற்கு, போதுமானளவு வரி அறவீட்டை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், தேசிய திட்டங்களுக்கும் அது தொடர்பாக முதலீடுகளுக்கும் நிதியளிப்பதற்காக, உள்நாட்டுத் தனியார் சேமிப்புகளைப் பெறக்கூடியதாக இருக்க வேண்டும்.

தற்போதைய நிலையில், முன்னைய வெளிநாட்டுக் கடன்கள் செலுத்தப்படாத நிலையில், இந்நிலைமை சிக்கலானது. வெளிநாட்டுக் கடன்களைச் செலுத்துவதற்காகவும் அவற்றின் வட்டிகளைச் செலுத்துவதற்காகவும், மேலதிக வெளிநாட்டு நிதியளிப்புகளைத் தேட வேண்டியுள்ளது. இந்தக் கடன் பொறி தான், நாட்டைத் தற்போது கவலைக்குள்ளாக்கியிருக்கிறது. முன்னைய வெளிநாட்டுக் கடன்களை, அரசாங்கம் எவ்வாறு திரும்பக் கொடுக்கலாம்? சர்வதேச மூலதனச் சந்தைகளிடமிருந்து, இறையாண்மைப் பிணைமுறி வடிவில் பெறுவதன் மூலமாகவா, இல்லாவிடில், சீனா, ஜப்பான், இந்தியா போன்ற இருதரப்புக் கொடையாளிகளிடமிருந்தா, இல்லாவிட்டால், சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற, பலதரப்பு முகவராண்மைகளிடமிருந்தா?

சீனா அல்லது மூலதனச் சந்தைகள்

இலங்கையின் வெளிநாட்டுக் கடன் இருப்பு, 2017ஆம் ஆண்டின் முடிவில், 28.7 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களாக இருந்தது. அவற்றில், இறையாண்மைப் பிணைமுறி மூலமான நிதிக் கொள்வனவு 39 சதவீதமாகவும், கடன்கள் அடிப்படையில் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு 14 சதவீதமும், ஜப்பானுக்கு 12 சதவீதமும், உலக வங்கிக்கு 11 சதவீதமும், சீனாவுக்கு 10 சதவீதமும், இந்தியாவுக்கு 3 சதவீதமும் என்ற நிலையில் கணப்பட்டது.

இவற்றுக்கு மேலதிகமாக, உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவி என்ற வடிவில், பல கடன் ஒப்பந்தங்கள், கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றின் மீளளிக்கப்பட வேண்டியனவாக, 9 பில்லியன் ஐ.அமெரிக்க டொலர்கள் காணப்படுகின்றன. திரும்ப வழங்கப்படாத இக்கடன்களில், இருதரப்பு, பல்தரப்புக் கொடையாளிகளில், 22 சதவீதத்துடன் சீனா முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து ஜப்பானும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் 19 சதவீதத்துடனும், உலக வங்கி 13 சதவீதத்துடனும், இந்தியா 6 சதவீதத்துடனும் உள்ளன.

இலங்கையின் கடன் பிரச்சினைகளுக்குப் பங்களித்தன என, பிராந்திய வல்லரசுகளான சீனா, ஜப்பான், அல்லது இந்தியா மீது குற்றஞ்சாட்டுவது இலகுவானது. ஆனால், ஏற்கெனவே குறிப்பிடப்பட்டபடி, பூகோள நிதியியல் மூலதனம் அல்லது பார்ப்பதற்கு அப்பாவி போன்று தென்படும் சர்வதேச மூலதனச் சந்தைகள் தான், முக்கியமான குற்றவாளிகளான உள்ளன. அவை, மிக அதிகளவில் வட்டிகளை அறவிடுகின்றன.

கடந்த சில தசாப்தங்களில் மீண்டும் மீண்டும் ஏற்பட்ட நிதியியல் நெருக்கடிகளிலிருந்து பார்க்கும் போது, மிக அண்மையில் தெற்கு ஐரோப்பாவில், சர்வதேச சந்தைகளிலிருந்து பெறப்படும் நிதியளிப்புகள், பேராபத்தானவையாக மாறக்கூடும்.

ஆனாலும் கூட, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி ஆகியன, பூகோள மூலதனச் சந்தைகளுக்கு இலங்கையைத் திறந்துவிட வேண்டுமென்கின்றன. ஆனால் இந்நிலை, மூலதன உட்பாய்ச்சல், நெருக்கடிகளை உருவாக்கும் நிலை ஆகிய ஆபத்துகளைக் கொண்டிருக்கின்றன.

சர்வதேச நாணய நிதியம், 2016ஆம் ஆண்டின் இறுதியில் கைச்சாத்திடப்பட்ட “நீட்டிக்கப்பட்ட நிதி வசதி ஒப்பந்தம்” என்பதைப் பயன்படுத்துகிறது. ஆசிய அபிவிருத்தி வங்கியும் உலக வங்கியும், மூலதனச் சந்தைகளை விரிவுபடுத்துவதற்காக அபிவிருத்தி உதவியாக வழங்கப்பட்ட பல மில்லியன் ஐ.அமெரிக்க டொலர்களைச் சாக்காகப் பயன்படுத்துகின்றன. மிக அண்மையில், ஆசிய அபிவிருத்தி வங்கியின் மூலதனச் சந்தை அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் (250 ஐ.அமெரிக்க டொலர்கள்), உலக வங்கியின் நிதியியல் துறை நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டம் (75 மில்லியன் ஐ.அமெரிக்க டொலர்கள்) ஆகியன குறிப்பிடத்தக்கன.

மேலே குறிப்பிடப்பட்ட தரவுகளே, நிலைமையை வெளிப்படுத்துகின்ற போதிலும், இலங்கையின் இறையாண்மைப் பிணைமுறிகளை அடிப்படையாகக் கொண்ட சந்தைக் கடன்களைப் பற்றி, மிகக் குறைவான கலந்துரையாடலே இருப்பதற்குக் காரணமென்ன? சீனாவும் இந்தியாவும் ஐ.அமெரிக்காவும் எங்களுக்காக மோதிக் கொண்டிருப்பதால், உலகின் மய்யத்தில் நாங்கள் இருக்கிறோம் என நாம் நம்புவதாலா? இல்லாவிட்டால், பூகோள அரசியல் விளையாட்டின் புள்ளியாக இலங்கைக் குறிப்பிட்டு, மூலதனச் சந்தைகளின் நவதாராளவாத ஒருங்கிணைப்பால் ஏற்படும் பேரழிவைக் கவனிக்காமல் விடுகின்றன, மேற்கத்தேய, பிராந்திய ஊடகங்களின் பக்கச்சார்புக்கு நாம் வீழ்ந்து விட்டோமா?

அபிவிருத்திக்கான நிதியளிப்பு

ராஜபக்‌ஷ ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பாரிய (மெகா) அபிவிருத்திகளும் பயனற்ற ஆடம்பரச் செயற்றிட்டங்களும், வெளிநாட்டுக் கடன்கள் என்ற கடன் பொறிக்குள் இலங்கையை ஆழமாகச் செலுத்தின என்றால், சர்வதேச நிதியளிப்பு மூலமாக பாரிய அபிவிருத்திச் செயற்றிட்டங்களை முன்னெடுத்து, மொத்தத் தேசிய உற்பத்தியை அதிகரிக்கவும் குறுகிய காலத்தில் வெளிநாட்டு நிதிகளை அதிகரிக்கவும் தற்போதைய அரசாங்கம் மேற்கொளளும் நடவடிக்கைகளை, மேலும் ஆழமான கடன் பொறிக்குள் இலங்கையைத் தள்ளுகின்றன. இங்கும் கூட, சீனாவால் நிதியளிக்கப்படும் துறைமுக நகரம் போன்ற செயற்றிட்டங்களே அதிக கவனத்தை ஈர்த்தாலும், பலதரப்பு முகவராண்மைகளால் மேற்கொள்ளப்படும் செயற்றிட்டங்கள், பெருமளவுக்குக் கவனிக்கப்படுவதில்லை.

பலதரப்பு முகவராண்மைகளால் நிதியளிக்கப்படும் பாரிய அளவிலான செயற்றிட்டங்களும், சர்வதேச ஆலோசனைக்காக ஒதுக்கப்படும் மனதைத் தடுமாற வைக்கும் நிதியொதுக்கீடுகளும், பலதரப்பட்ட நிலையில் கேள்விகளை எழுப்புகின்றன. வடக்கின் மேற்கொள்ளப்பட்ட அவ்வாறான பாரிய அபிவிருத்தித் திட்டங்கள், தெளிவான விளக்கத்தை வழங்கக்கூடும். இதேபோன்ற நிலைமையே, நாடு முழுவதிலும் காணப்படுகிறது.

ஆசிய அபிவிருத்தி வங்கியால் நிதியளிக்கப்பட்ட வடக்கு மாகாண நிலைத்திருக்கக்கூடிய மீன்பிடி அபிவிருத்திச் செயற்றிட்டம், 174 மில்லியன் ஐ.அமெரிக்க டொலர்கள் பெறுமதியானது. அவற்றின் மூன்றிலொரு பகுதி, பருத்தித்துறைத் துறைமுகத்தில் செலவிடப்பட்டது. மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை மீளநிர்மாணிப்பதற்காக, 2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட ஒதுக்கீடான 150 மில்லியன் ரூபாயுடன் (1 மில்லியன் ஐ.அமெரிக்க டொலரிலும் குறைவு) இதை ஒப்பிடுங்கள்.

மயிலிட்டித் துறைமுகம், வடக்கில் காணப்படும் சிறியளவிலான மீன்பிடிச் சமூகத்துக்கு மிகவும் பொருத்தமானது. பருத்தித்துறைத் துறைமுகம், பெரியளவிலான, ஆழ்கடல் மீன்பிடிக்கே பொருத்தமானது. அதிலும் குறிப்பாக, ஆலோசகர்களுக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் “செயற்றிட்ட வரைவு முன்கொடுப்பனவு”, 1.59 மில்லியன் ஐ.அமெரிக்க டொலர்கள் என்பதோடு, அவற்றில் 0.29 மில்லியன் ஐ.அமெரிக்க டொலர்கள், இலங்கை அரசாங்கத்திடமிருந்து வருகின்றன.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், சர்வதேசத்தால் நிதியளிக்கப்பட்ட மீன்பிடிச் செயற்றிட்டத்துக்கான ஆலோசனைக் கொடுப்பனவு, பாரிய மீன்பிடித் துறைமுகத்தை மீளநிர்மாணிப்பதற்கான தேசிய செயற்றிட்டத்துக்கான ஒட்டுமொத்தச் செலவை விட அதிகமானது. இது, சர்வதேச நிதியளிப்புடனான அபிவிருத்திச் செயற்றிட்டத்தில் ஈடுபட்டுள்ள சர்வதேச ஆலோசகர்களுக்கான பெருமளவு பணம், உள்ளூர் அதிகாரிகளுக்கான வசதிகள், ஒப்பந்தக்காரர்களுக்கான மிகப்பாரியளவு இலாபம் ஆகியவற்றைக் காட்டி நிற்கிறது. இரண்டாவது உதாரணமாக, யாழ்ப்பாணத்துக்கான தண்ணீர் தொடர்பான ஆசிய அபிவிருத்தி வங்கியின் செயற்றிட்டம், நூற்றுக்கணக்கான மில்லியன் ஐ.அமெரிக்க டொலர்கள் செலவானதாகக் காணப்படுகிறது.

80 மில்லியன் ஐ.அமெரிக்க டொலர்கள் செலவில், இப்பிரச்சினைக்கான இடைக்காலத் தீர்வு காணப்படுகிறது. யாழ்ப்பாணத்தின் கிழக்குக் கரையோரத்தில், கடல்நீரை நன்னீராக்கும் நிலையம் உருவாக்கப்பட்டு, நீரை விநியோகிக்க வேண்டியுள்ளது. ஆனால், இலங்கையின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த ஆறுகள் அல்லது குளங்களிலிருந்து நீரை விநியோகிப்பதற்குத் தேவைப்படும் நிதியின் அளவு, பல மடங்கு குறைவானதாகும். ஆனால், கவலைதரக்கூடிய உண்மை என்னவென்றால், யாழ்ப்பாணத்திலுள்ள பலரைப் பொறுத்தவரை, மழை நீர், கடலைச் சென்றடைய நாம் அனுமதித்துவிட்டு, அதன் பின்னர் கடல் நீரை, நாம் நன்னீராக்கப் போகிறோம். சில வேளை, சவூதி அரேபியாவாகவோ அல்லது இஸ்‌ரேலாகவோ நாம் மாற விரும்புகிறோமோ தெரியவில்லை.

ஆனால் நாம், பாலைவனத்திலும் வாழவில்லை, செல்வந்தர்களாகவும் இல்லை. இச்செயற்றிட்டங்கள், கிறுக்குப் பிடித்தவை போன்று தோன்றலாம். ஆனால், கடனால் வருந்திக் கொண்டிருக்கும் பல நாடுகளில், பலதரப்பு முகவராண்மைகளின் உதவியோடு, இவை வழக்கமாகி வருகின்றன.

பொருளாதாரத்துக்கு அரசாங்கத்தால் பணிக்கப்பட்ட முதலீடு என்ற கேள்விக்குத் திரும்ப வருவோமானால், வெளிநாடுகளால் நிதியளிக்கப்படும் இவ்வாறான பாரிய அபிவிருத்தித் திட்டங்கள், முதலீட்டுக்கான பலனை, அரிதான அளவிலேயே வழங்குகின்றன. ஆனால், கடன் இருப்புத் தொடர்ந்தும் அதிகரித்துச் செல்வதோடு, கடன் நெருக்கடியில் நாடு சிக்கிக் கொள்கிறது. அதன் பின்னர், இதே சர்வதேச முகவராண்மைகளால் தான், மக்களுக்குத் தேவையான சேவைகளான சுகாதாரம், கல்வி ஆகியவற்றின் செலவில், குறைப்புகளைச் செய்யுமாறு கோரும்.

சர்வதேசத்தால் நிதியளிக்கப்பட்ட அபிவிருத்திச் செயற்றிட்டங்களின் பிடியிலிருந்து விலகிச் சென்று, சமமானதும் பொருத்தமானதும் தேசிய அளவில் நிதியளிக்கப்பட்டதுமான பொருளாதார அபிவிருத்தியை நோக்கி நாம் செல்வது தொடர்பாகச் சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதல்லவா?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாதுகாப்பு இல்லத்தில் பாலியல் வன்கொடுமை!!(உலக செய்தி)
Next post உலகம் பார்த்திராத வீடியோ | தண்ணீரில் ஏற்பட்ட சுழி!!(வீடியோ)