By 17 August 2018 0 Comments

நோய்களை உண்டாக்கும் ஃப்ரீ ரேடிக்கல்ஸ்!!(மருத்துவம்)

மருத்துவர்கள் அதிகம் பயன்படுத்தக் கூடிய வார்த்தைகளின் ஒன்றாகவும், பிற நோய்களைப்பற்றிய ஆய்விலும் Free radicals என்ற மருத்துவச்சொல் அடிக்கடி பயன்படுத்தக்கூடியதாக இருக்கிறது. அது என்ன Free radicals என்று ஊட்டச்சத்து நிபுணர் வர்ஷாவிடம் பேசினோம்… அடிக்கடி ஏற்படும் ஆரோக்கிய சீர்குலைவுகள், வயதான தோற்றம், புற்றுநோய் ஆகியவற்றுடன் தொடர்புடையது ஃப்ரீ ரேடிக்கல்ஸ்.

Free radicals என்றால் என்ன?

‘‘மனிதன் உயிர் வாழ அவசியமான ஆக்சிஜன் சில வேளைகளில் ஒற்றை அணுக்களுடன் இணைக்கப்படாத எலக்ட்ரான்களோடு பிரிந்துவிட நேர்கிறது. ஆனால், எலக்ட்ரான்கள் ஜோடியாக இருக்க வேண்டும் என்பது விதி. எனவே ஜோடியாக அல்லாது ஒற்றை அணுக்களாக பிரிந்தவற்றை Free radicals என்கிறோம். இவ்விதம் பிரிந்த ஒற்றை அணுக்கள் எலக்ட்ரான்களைத் தேடுவதற்காக உடலைத் துளைக்க ஆரம்பிக்கின்றன. இதனால் செல்கள், புரதங்கள் மற்றும் டி.என்.ஏ ஆகியவற்றுக்கு சேதம் ஏற்படுகிறது.

இதுபோல மனித உடலினுள் இருக்கும் நச்சுப்பொருட்களாலும், சிலவேளைகளில் புறக்காரணிகளாலும் தொடர்ந்து விஷத் தாக்குதலின் கீழ் இருக்கிறது. உடலின் ஒரு செல்லுக்குள் படிந்துள்ள இந்த Free radicals, மனிதனுக்கு வயதாவதால் ஏற்படும் நோய்களான பக்கவாதம்(Parkinson), மறதிநோய் (Alzheimer) மற்றும் புற்றுநோயைத் தூண்டக்கூடிய காரணியாக செயல்படுவதாகவும், இந்த Free radicals செல்களில் படிவதால், வயதான தோற்றத்தை கொடுப்பதாகவும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.’’

Free radicals-ஐ உருவாக்கும் காரணிகள் எவை?

“ஃப்ரீ ரேடிக்கல்ஸை உருவாக்கக்கூடிய பொருட்கள் நாம் சாப்பிடும் உணவு, எடுத்துக்கொள்ளும் மருந்துகள், குடிக்கும் தண்ணீர் மற்றும் சுவாசிக்கும் காற்று என எவற்றின் மூலமாகவும் வரக்கூடியவை. அவை, சிலநேரங்களில் பொறிக்கப்பட்ட உணவுகள், ஆல்கஹால், புகையிலைப் பொருட்கள் மற்றும் புகைபிடிப்பதன் மூலமாகவும் உருவாகின்றன.

இதனை ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் வாழ்வியல் விஞ்ஞான இதழும் குறிப்பிட்டுள்ளது. மேலும், பழுதடைந்த ஓசோன் படலம், தொழிற்சாலைக் கழிவுகள், எக்ஸ்ரே கதிர்களும் ஃப்ரீ ரேடிக்கல்ஸை உருவாக்குகின்றன. இவற்றை புறக்காரணிகளாகச் சொல்லலாம். உடலுக்குள்ளேயே ஏற்படும் சில நிகழ்வுகளும் ஃப்ரீ ரேடிக்கல்ஸை உருவாக்குகின்றன.

உதாரணமாக, உடலினுள் வளர்சிதைமாற்ற நிகழ்வுகளில் வெளிப்படும் செயல்திறமிக்க என்சைம்களும் ஃப்ரீரேடிக்கல்ஸை உருவாக்குகின்றன. ஆக்ஸிஜன் பிற ரசாயன சேர்மங்களோடு வினைபுரிவதால் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய எதிர்வினை ஆக்ஸிஜன் இனங்களாக (Reactive Oxygen species) மாற்றமடைகின்றன. இத்தகைய எதிர்வினை ஆக்ஸிஜன் இனங்கள் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்ஸ் இரண்டும் மனித உடலுக்கு அத்தியாவசியமான, வளர்சிதை மாற்றங்கள் மூலமாக உற்பத்தி ஆகக்கூடியவை.’’

ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களால் ஏற்படும் நோய்கள்…

‘‘அடிக்கடி ஏற்படும் நோய்கள் அல்லது சீர்குலைவுகள், வயதான தோற்றம் ஆகியவற்றுக்கும் இந்த எதிர்வினை மூலக்கூறுகளுக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பிருக்கிறது. ஃப்ரீ ரேடிக்கல்ஸ் மனித உடலில் ஏற்படுத்தும் சேதங்கள், இதயநோய்கள், அழற்சி நோய்கள், கண்புரை நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நாட்பட்ட நோய்களுக்கு காரணமாகின்றன. அதேபோல எதிர்வினை ஆக்ஸிஜன் இனங்களால்(ROS) நீரிழிவு, வயதோடு தொடர்புடைய கண்நோய்கள், நரம்பு மண்டல நோய்கள் வருகின்றன. ஆர்த்தரைட்டிஸ், ஆஸ்துமா, செரிமானக்கோளாறு போன்ற அழற்சி நோய்களுக்கும் காரணமாகின்றன.’’

ஃப்ரீ ரேடிக்கல்ஸ் உருவாவதை எப்படி தடுக்கலாம்?

‘‘ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்த பாரம்பரிய இயற்கை உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் ஃப்ரீரேடிக்கல்ஸ் மற்றும் எதிர்வினை ஆக்ஸிஜன் இனங்கள் உருவாவதை தடுக்க முடியும். இதுதவிர, புகைப்பழக்கத்தை கைவிடுதல், மாசுபட்ட சூழலிலிருந்து விலகி இருத்தல் போன்ற வாழ்வியல் நடவடிக்கைகள் மூலமாகவும் தற்காத்துக் கொள்ளலாம்.’’Post a Comment

Protected by WP Anti Spam