By 15 August 2018 0 Comments

பருக்கள்… தழும்புகள்…!!(மருத்துவம்)

பருவ வயதானால் அனைவருக்கும் முகப்பரு வருவது இயல்புதானே… இதற்கு எதற்கு வைத்தியம் என்று பொதுவாக பலரும் நினைக்கிறார்கள். அதேபோல இப்போதெல்லாம் பருவ வயதைக் கடந்த பின்பும் பருக்கள் வருகிறது. மேலும், பருவுக்கு வைத்தியம் அவசியம் என்று உணராது, அலட்சியமாக இருப்பவர்களுக்கு, பக்க விளைவுகள் ஏற்பட்டு மாறாத
வடுவாகவும் ஆகிவிடுகிறது.

சிலர் காலம் கடந்து, சிகிச்சைக்கு வருவதால் அல்லது வீரியமில்லாத பற்பல மருந்துகளை கடையில் வாங்கி உபயோகப்படுத்துவதாலும் அல்லது தொலைக்காட்சி மற்றும் வலைதளங்களில் வரும் ஏற்றுக்கொள்ள சான்றிலல்லாத பொருட்களை உபயோகப்படுத்துவதாலும் அல்லது நோயின் தன்மைக்கு ஏற்ற மாதிரி மருந்தை அந்த நோயின் நிபுணரிடமல்லாமல் பொது மருத்துவரிடம் வாங்கி உபயோகிக்கும்போதும் மறையாத தழும்புகளும், கரும்புள்ளிகளும் தோன்றிவிடுகின்றன. இந்தத் தழும்புகள் முகத்தைக் காட்டிலும் பாதிக்கப்பட்டவரின் மனதில் பெரிய காயத்தை ஏற்படுத்தி விடுகின்றன.

அரைகுறையான வைத்தியத்தினால் பருவின் தழும்பு அப்படியே தங்கிவிடுகிறது அல்லது மிகவும் மோசமாகிவிடுகிறது. புது பருக்கள் வருவதும் தடுக்கப்படாமல் தழும்பாக மாறி, மன உளைச்சலை அதிகப்படுத்தி விடுகிறது.‘எனக்கு அந்த வயதில் ஏதும் தெரியவில்லை, என் முகமெல்லாம் நிறைய தழும்பு ஏற்பட்டுவிட்டது’ என்று சொல்கிறீர்களா? அதற்கும் சிகிச்சை உண்டு. பருவினால் ஏற்பட்ட தழும்புகள் பள்ளங்களாக உள்ளதா அல்லது மேடாக உள்ளதா என்பதைப் பொறுத்து அதனை வகைப்படுத்தலாம்.

பள்ளங்கள்

1) Ice pik scars, 2) Rolling scars,
3) Boxcar scars, 4) Follicular
Macular Atrophy.

மேடுகள்

1) Hypertroptic scars, 2) Keloidal Scars.

ஐஸ் பிக் தழும்புகள்

மிக குறுகலாகவும் (< 2mm) அதே நேரத்தில் ஆழமான தடங்களாகவும் இருக்கும். அருகில் பார்க்கும்போது சின்னச் சின்ன ஓட்டைகள்போல் காட்சியளிக்கும். உருளும் தழும்புகள் (மேம்போக்கான மற்றும் ஆழமான மென்மையான தழும்புகள்) 4-5 mm விட அதிக அகலமான, ஆழமற்ற தழும்புகள் உள் தோலோடு இணைக்கப்பட்டிருக்கும். பாக்ஸ் கார் தழும்புகள் தட்டையான, `U’ வடிவமுள்ள அடித்தளமுடைய, செங்குத்தான விளிம்புகளுடைய தழும்புகள். ஃபாலிக்குலர் மேக்குளார் அட்ரோபி தழும்புகள் ஒவ்வொரு முடியின் வேர்கால்களை சுற்றியுள்ள சின்னச் சின்ன தட்டையான தழும்புகள் நிறைய இருக்கும். மேடுகளான தழும்புகளில் உள்ள இரு வகைகளுள் Hypertroptic தழும்பானது பருக்கள் இருந்த இடத்தில் மட்டும் ஏற்படக்கூடிய மேலெழுந்த தழும்பு. ஆனால், Keloidal தழும்பானது பருக்கள் இருந்த இடத்தையும் தாண்டிச் சுற்றியுள்ள நல்ல தோலையும் கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கும். தழும்புகளில் ஒருவருக்கு, ஒரே வகையான தழும்பு மட்டும் இருக்காது. ஒருவருக்கே பலவகையான தழும்புகள் ஏற்படலாம். ஆகையால் பல சிகிச்சை முறைகள் மூலம்தான் மாறுபட்ட தழும்புகளை குறைக்க வேண்டியிருக்கும். இந்த இடத்தில் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும். எந்த தழும்பையும் எந்த சிகிச்சையாலும் 100 சதவீதம் மாற்றி, பழையபடி நல்ல தோல் போல் கொண்டு வர முடியாது. 50 முதல் 60 சதவீதம் வரைதான் தழும்பை குறைக்க முடியும். முன்னைப்போல் மிகவும் பளிச்சென்று தெரியாமல் 50 சதவீதம் வரை தழும்புகளை குறைக்கலாம். இதுதான் நடைமுறை சாத்தியம். இதை புரிந்துகொள்ளாமல், பரு, தழும்பு சிகிச்சையை மேற்கொள்வதன்மூலம் எனக்கு பழைய முகம் வந்துவிடும் என்று நம்பினால் ஏமாற்றமே மிஞ்சும். இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்... பருக்கள் தோன்றும் ஆரம்ப நிலையிலேயே வீரியமான மருந்துகள் மூலம் சிகிச்சை செய்யும்போது, பருவின் தழும்புகள் உருவாகாமல் சிலருக்கு தடுக்க முடியும். இந்த புரிதலும், ஆரம்பநிலை பரு சிகிச்சையும் மிகவும் முக்கியம். தழும்புகளுக்கு ஆரம்ப நிலையில் வைத்தியம் செய்யாவிடில் நாளடைவில் அழுத்தமான தழும்புகளாகிவிடும். அழுத்தமான தழும்புகளுக்கு சிகிச்சை செய்வது கொஞ்சம் சிரமமானதும்கூட. இதில் கெமிக்கல் பீல்(Chemical Peel) என்ற சிகிச்சை முறை மிகவும் எளிமையானது. செய்வதற்கு எளிமையாக இருந்தாலும் அதை செய்வதற்கு முன்பும் செய்த பின்பும் தோல் பராமரிப்பு மிகமிக அவசியம். மேல் தோல், நடுத்தர ஆழம் மற்றும் உள்தோல் வரை என மூன்று வகையாக இதைச் செய்யலாம். மேலோட்டமாகச் செய்யப்படும் கெமிக்கல் பீல் கரும்புள்ளிகளோடு கூடிய மிதமான தழும்புகள் மற்றும் பாக்ஸ் கார் தழும்புகள் போன்ற வகைகளுக்கு உபயோகப்படுத்தலாம். புது பருக்களும் தழும்புகளோடு சேர்ந்து இருந்தால் சாலிசிலிக் அமிலம், ட்ரைக்ளோரோ அசிடிக் அமிலம் மற்றும் க்ளைகாலிக் அமிலம் போன்ற அமிலங்களை தனியாகவோ அல்லது ஒன்றன்பின் ஒன்றாகவோ உபயோகப்படுத்தலாம். கெமிக்கல் பீல் சிகிச்சையில் நடுத்தர ஆழம் மற்றும் உள்தோல் வரைக்கும் செய்யப்படும் மிக ஆழமான வகையில் சிகிச்சை முடிந்தபின் ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை முகத்தில் புண் ஏற்படும். தேவையான ஆழம் வரை நாமே ஒரு புண்ணை உருவாக்கி கோலாஜன் மற்றும் புதிய தோலை இந்த சிகிச்சை முறையில் நாம் உருவாக்குகிறோம். ஃபீனால் மற்றும் ட்ரைக்ளோரோ அசிடிக் அமிலம் இந்த ஆழமான செய்முறையில் அதிக சதவிகிதம் கொண்டு உபயோகப்படுத்தப்படும். கெமிக்கல் பீல் செய்யும்போது தோலில் எரிச்சல் உண்டாகும்.இது 1-10 நிமிடங்கள் வரை இருக்கலாம். சில நாட்களுக்கு முகம் சிவந்து காணப்படலாம். அதன்பின் தோல் காய்ந்து உறியலாம். தோல் மிகவும் சென்ஸ்டிவ்வாக இருப்பவர்களுக்கு இந்த சிகிச்சை மேற்கொள்ளும்போது கொப்புளங்கள் ஏற்படலாம். சிகிச்சை முடிந்த பின்பு கரும்புள்ளிகளோ அல்லது தோல் சற்று நிறமிழந்தோ போகலாம். ஆனால், இவையெல்லாம் 2-3 மாதங்களில் சரியாகிவிடும். மருத்துவரின் பரிந்துரையின்படி மாய்ஸ்சரைஸைர் க்ரீம்களை அடிக்கடி உபயோகிக்க வேண்டும். தோலை சுரண்டவோ சொரியவோ கூடாது. அப்படி செய்தால் புதிய தழும்புகள் உருவாகி விடலாம். வெயிலில் முகம் படாமல் வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். இந்த சிகிச்சைமுறை முடிந்த பின்பு குறைந்தது 2 மாதங்கள் நல்ல சன்ஸ்கிரீன் கிரீம்களை உபயோகிக்க வேண்டும். இந்த சிகிச்சையில் ஒரு முறை செய்தால் மட்டும் நமக்கு வேண்டிய பலன் கிடைக்காது. 4-6 வார இடைவெளிகளில் 4-6 முறை செய்ய வேண்டி இருக்கலாம். பின்பு வருடம் ஒரு முறையோ, இரண்டு முறையோ செய்ய வேண்டி இருக்கலாம். லேசர் சிகிச்சைகள் Fractional CO2 லேசர் அல்லது Erbium YAG லேசர் சிகிச்சை முறைகள் பரு தழும்பு சிகிச்சைக்கு மிக நல்ல பலனைத் தருபவை. மிக நுண்ணிய லேசர் கதிர்கள் தோலின் உள்ளே ஊடுருவி துளைகள் இட்டு சின்ன காயங்களை ஏற்படுத்தும். தேவையான ஆழம் மற்றும் ஆற்றலை செலுத்தி அனைத்து வகை தழும்புகளையும் நன்கு சரி செய்யலாம். ஆனால் லேசர் சிகிச்சை முடிந்து தோல் செதில் செதிலாக உரியும். நிறமிழந்து காணப்படும். வெயிலில் இருந்து தோலை பாதுகாக்காவிடில் கறுத்தும் போகலாம். டெர்மாரோலர் சிகிச்சை இந்த டெர்மா ரோலர் சிகிச்சையில் மிக மெல்லிய ஊசிகளைக் கொண்ட ஒரு சிறு கருவியான டெர்மா ரோலரை பயன்படுத்துவோம். ஒரு ஷேவிங் ரேஸர் போன்ற வடிவில் ஓரத்தில் மட்டும் ரோடு ரோலரின் சக்கரம் போன்ற அமைப்பில் 540 ஊசிகளைக் கொண்டிருக்கும். இதில் ஆழம் 1mm முதல் 2.5mm வரை இருக்கும். தேவையான இடத்தில் தேவையான அளவைக் கொண்டு செய்யப்படும் இந்த சிகிச்சை லேசர் அளவுக்கு நல்ல பலனைத் தரக்கூடியது. ஆனால் பக்க விளைவுகள் குறைவு. லேசரை விட விலையும் மிக குறைவு. இதை ஏழைகளின் லேசர் என்றே சொல்லலாம். அறுவை சிகிச்சை முறைகள் தழும்புகள் சிலருக்கு ஆழமாக உள்ளே இருப்பதால் தோல் குழிகளாக காணப்படும். இதற்கு Nokor needle என்ற ஊசியைக் கொண்டு Subcision செய்ய வேண்டியிருக்கும். இந்த ஊசி தோலை இழுக்கும் தழும்பை நறுக்கி விடுவதால் தோல் கொஞ்சம் மேல் எழும்பி குழிகளின் ஆழம் குறையும். மேலெழும்பிய தழும்புகள் இருந்தால் அதை அறுவை சிகிச்சை முறையில் நீக்கிவிடலாம். பள்ளமாக இருந்தால் காதுக்குப்பின் இருக்கும் தோலை வைத்து அதை நிரப்பி விடலாம். Micro needle Radio frequency இந்த சிகிச்சை முறையில் பல விஷயங்கள் ஒன்றிணைந்துள்ளன. லேசர் சிகிச்சை போன்றது. ஆனால் இதில் Derma roller போன்று ஊசிகளும் உள்ளே செல்லும். அந்த ஊசிகளின் வழியே Radio frequency ஆற்றலும் செல்லும். இந்த சிகிச்சையில் தழும்புகள் மட்டுமல்ல, தோலின் தொய்வும் நீக்கப்படும். இந்த ஊசிகள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக கழற்றி வைத்துவிடலாம். இரண்டு, மூன்று முறைகள் கூட அவர்களுக்கு இதை உபயோகப்படுத்தலாம். Platelet Rich plasma = (PRP) இந்த சிகிச்சை முறையில் ஒருவரது ரத்தத்தில் இருந்து Grown factors -ஐ பிரித்து எடுத்து அதையே தழும்புகளில் ஊசியின் மூலம் செலுத்தலாம். இந்த PRP ட்ரீட்மென்ட் பரு தழும்புகளுக்கு மட்டுமல்ல வேறு பல விஷயங்களுக்கும் பயன்படும். அதைப்பற்றி விரிவாக அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.Post a Comment

Protected by WP Anti Spam