By 18 August 2018 0 Comments

அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துங்கள்!!( மருத்துவம்)

மாறிப்போன வாழ்க்கை முறை, உணவுப்பழக்கம், அதிகரித்து வரும் உடல் பருமன், வயது கடந்த கர்ப்பம்… இப்படி பல காரணங்களால் இன்று சிசேரியன் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.எந்த மருத்துவரும் வேண்டுமென்றே சிசேரியனை வலியுறுத்துவதில்லை.

கர்ப்பிணிக்கோ, அவர் சுமக்கும் கருவுக்கோ ஆபத்து எனத் தெரிந்தால் மட்டுமே இரு உயிர்களையும் காப்பாற்றும் வழிகளில் ஒன்றாக சிசேரியனைப் பரிந்துரைப்பார்கள் என்கிறார் மகப்பேறு மருத்துவர் நிவேதிதா.சிசேரியன் மூலம் குழந்தை பெற்ற பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை விளக்குகிறார் அவர்.

சிசேரியன் முடிந்து மயக்கம் தெளிந்ததுமே அந்தப் பெண் தன் குழந்தையைத் தூக்கச் சொல்வார்கள். மயக்கம் தெளியத் தெளிய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தின் ரணத்தை உணர ஆரம்பிப்பார்கள். அந்த வலி சில மணி நேரத்துக்கு இருக்கும். அதிக வலி இருந்தால் மருத்துவர்கள் வலி நிவாரணிகளைத் தருவார்கள்.

சிசேரியன் முடித்த அடுத்தடுத்த நாட்களில் பெண்கள் உணரும் உடல் மாற்றங்கள்…ரத்தப்போக்கு பிரசவத்துக்குப் பிறகு சில வாரங்கள் வரை இந்த ரத்தப்போக்கு தொடரும். கருவிலிருந்த குழந்தையைப் பத்திரமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருந்த கருப்பைத் திசுக்களும் தேவையற்ற ரத்தமும் வெளியேறும். முதலில் அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த ரத்தப்போக்கு, போகப் போக நிறம் மங்கி, பிறகு நின்றுவிடும்.

வலி

மாதவிடாய் நாட்களைப் போன்ற வலியை உணர்வார்கள். அதிகளவிலான ரத்தம் வெளியேறாத படி தடுக்க, ரத்த நாளங்கள் சுருக்கப்படுவதே காரணம். தாங்க முடியாத அளவுக்கு வலி அதிகமானால் மருத்துவரை அணுக வேண்டும்.மார்பக வீக்கம் மற்றும் எரிச்சல்பிரசவம் முடிந்ததும் சுரக்கும் சீம்பால், குழந்தையின் நோய் எதிர்ப்புத் திறனுக்குத் தேவையான அனைத்து சத்துகளையும் உள்ளடக்கியது.

ஒன்றிரண்டு நாட்களுக்கு இது சுரக்கும். பிறகு மார்பகங்களில் பால் சுரப்பு சேர்ந்து வீங்கிக் கொண்டு வலிக்கும். குழந்தைக்கு முறையாக தாய்ப்பால் கொடுக்கும்போது இது சரியாகும். தாய்ப்பால் ஊட்டுவதைத் தவிர்க்கும்போது மார்பகங்களில் பால் கட்டிக்கொண்டு இம்சை அதிகமாகும். மார்பகங்களை முறையாக சுத்தம் செய்வது, சரியான அளவுள்ள உள்ளாடை அணிவது போன்றவையும் அவசியம்.

முடி மற்றும் சரும மாற்றம்

சிசேரியன் முடிந்த முதல் 3 மாதங்களில் அதிகளவிலான முடி உதிர்வு இருக்கும். ஹார்மோன் மாற்றங்களே காரணம் என்பதால் கவலை வேண்டாம். தானாக சரியாகிவிடும். சருமத்திலும் சின்னச்சின்ன மாற்றங்கள் தெரியலாம். அதுவும் தானாகவே மாறிவிடும்.

மன மாற்றம்

பிரசவத்துக்குப் பிறகான மன அழுத்தம் என்பது சகஜமான ஒன்றுதான். கவலை, வருத்தம், அழுகை, தனிமை, பயம் என எல்லாம் கலந்த உணர்வாக இருக்கும். அது உங்கள் கட்டுப்பாட்டை மீறும்போது மருத்துவரின் ஆலோசனை அவசியம். குடும்பத்தார் சூழ இருப்பதும், உதவிக்கு ஆட்களை வைத்துக்கொள்வதும் மிக அவசியம்.

அறுவை சிகிச்சை செய்த காயம் சீக்கிரம் ஆறுவதற்கான டிப்ஸ் சிசேரியன் செய்யப்பட்ட முதல் சில நாட்களுக்கு அந்த இடத்தைப் பார்க்கவே உங்களுக்கு பயமாகவும் அருவெறுப்பாகவும் இருக்கலாம். ஆனாலும் அந்தப் பகுதியை மருத்துவர் சொல்லிக் கொடுக்கும் முறையில் சுத்தப்படுத்தி, இன்ஃபெக்‌ஷன் ஏதும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சிசேரியன் என்பது சற்றே பெரிய அறுவை சிகிச்சைதான். எனவே முதல் சில வாரங்களுக்கு உங்கள் குழந்தையைத் தவிர வேறு எந்த எடையையும் தூக்க வேண்டாம். உங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைக் குனிந்து எடுக்காமல் கைகளுக்கு எட்டும் உயரத்தில் வைத்துக் கொள்ளவும்.

இருமும்போதும், தும்மும்போதும், பலமாகச் சிரிக்கும்போதும் உங்கள் வயிற்றுப் பகுதிக்கு சப்போர்ட்டாக இரண்டு கைகளையும் வைத்துக் கொள்ளலாம். அறுவை சிகிச்சையின் ரணம் அதிகமானதன் காரணமாக சிலருக்கு வலியும் அதிகமாக இருக்கலாம். மருத்துவர் பரிந்துரைக்கிற வலி நிவாரணிகளைத் தயங்காமல் எடுத்துக் கொள்ளவும். தாய்ப்பால் கொடுப்பதில் அந்த மருந்துகள் ஏதேனும் பக்க விளைவுகளை ஏற்படுத்துமா என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.

வழக்கத்தைவிடவும் அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். பிரசவத்தின் போதும், தாய்ப்பால் ஊட்டும்போதும் உங்கள் உடல் இழந்த, இழக்கும் தண்ணீரின் அளவை ஈடுகட்ட இது உதவும். இப்போதெல்லாம் சிசேரியன் முடிந்து 24 மணி நேரத்திலேயே பெண்களை எழுந்து நடமாடச் சொல்கிறோம். இது வாயுப் பிடிப்பினால் உண்டாகும் வலிகளைப் போக்கி, குடல் இயக்கத்தைச் சீராக்கும். ரத்தக் கட்டுகளைத் தவிர்க்கும்.

சிசேரியன் முடிந்து முதல் சில வாரங்களுக்குக் கடுமையான எந்த வேலையையும் செய்ய வேண்டாம். முதல் 6 வாரங்களுக்குக் கடினமான பயிற்சிகளையும் செய்ய வேண்டாம். உங்களுக்கு சிசேரியன் செய்த மருத்துவரிடம் நேரடி ஆலோசனை பெற்ற பிறகே தாம்பத்திய உறவிலும் ஈடுபட வேண்டும்.

சிசேரியன் முடிந்து சில நாட்களில் இருந்து செய்யக்கூடிய பயிற்சிகள்

ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி
* ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் ஒரு முறை மூச்சை உள்ளிழுத்து சில நொடிகள் வைத்திருந்து வெளியே விடுகிற பயிற்சியை செய்யவும்.
* அறுவை சிகிச்சை செய்ததால் நீண்ட நேரம் படுக்கையில் இருக்க வேண்டியிருக்கும். அதனால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பு ஆழ்ந்த மூச்சுப் பயிற்சியின் மூலம் தவிர்க்கப்படும்.

தோள்பட்டைகளை சுழற்றுங்கள்

உங்களுக்கு வசதியான இடத்தில் உட்கார்ந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு தோள்பட்டையாக இடது, வலமாக 10 முறை சுழற்றுங்கள். 2 மணி நேரத்துக்கொரு முறை இப்படிச் செய்வதால் தோள்பட்டைகள் இறுக்கம் சரியாகும்.

ரிலாக்ஸ்

சுவரில் சாய்ந்தபடி நேராக நின்றுகொள்ளவும். இரண்டு கைகளையும் தலைக்கு மேலே உயர்த்தவும். உங்கள் வயிற்றுப்பகுதி தசைகளில் அதை உணர வேண்டும். ரொம்பவும் கடுமையாகச் செய்ய வேண்டாம்.இது உங்கள் வயிற்றுப் பகுதியில் தளர்ந்திருக்கும் தசைகளை உறுதியாக்க உதவும்.
எது அவசர நிலை?

சிசேரியன் முடிந்து நீங்கள் வீட்டுக்கு வந்த பிறகு அறுவை சிகிச்சை செய்த இடத்தில் அதிகமான வலி, எரிச்சல் மற்றும் வீக்கம் இருந்தால் உடனே மருத்துவரை அணுகவும். 100 டிகிரிக்கு மேல் காய்ச்சல் அடித்தாலும் மருத்துவரைப் பார்க்கவும்.பிறப்புறுப்பிலிருந்து அதிகளவிலான ரத்தப் போக்கு இருந்தாலோ, அது துர்வாடையுடன் வெளியேறினாலோ மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.Post a Comment

Protected by WP Anti Spam