By 20 August 2018 0 Comments

பெண்களை தாக்கும் நோய்கள்!!(மகளிர் பக்கம்)

நன்றாக நடமாடிக் கொண்டிருந்தவர்களை திடீரென படுக்கையில் வீழ்த்தி விடும் பக்கவாதம் எனப்படும் ஸ்ட்ரோக், நம் நாட்டில் கடந்த ஆண்டில் மட்டும் கிட்டதட்ட 2 மில்லியன் மக்களை தாக்கி இருக்கிறது. அதில் பாதிக்கும் மேலே பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள். இந்நோய் ஏற்பட்டு சிலர் சுய நினைவை இழக்கலாம். உயிர் பிழைத்தாலும் பேச்சு, பார்வை, சிந்திக்கும் திறன் ஆகியவை பாதிக்கப்படலாம். முகம் அல்லது உடலின் ஒரு பகுதி செயலிழந்து போகலாம் எனும் மருத்துவர் திலோத்தம்மாள் ஸ்ட்ரோக் என்பது என்ன? ஏன் ஏற்படுகிறது? முன் கூட்டியே தவிர்க்க முடியுமா என்பது பற்றியெல்லாம் இங்கே விவரிக்கிறார்.

ஸ்ட்ரோக் என்பது என்ன?

மூளையில் ஒவ்வொரு உறுப்பு செயல்படுவதற்கும் என ஒவ்வொரு பகுதி இருக்கும். அந்தந்த பகுதிகளுக்குச் செல்லும் ரத்தம் தடைபடுவதால் அந்த பகுதியில் உள்ள மூளை திசுக்களுக்கு தேவையான அளவு பிராண வாயு, குளுக்கோஸ் கிடைக்காமல் போகலாம். எனவே அந்த பகுதிகளில் உள்ள மூளை திசுக்கள் பாதிக்கப்படலாம். அது எந்த பகுதியை செயற்படுத்தும் மூளையின் பாகமாக இருக்கிறதோ அந்த உறுப்பு பாதிக்கப்படும். ஸ்ட்ரோக் ரத்தக் குழாய் அடைப்பு, ரத்தக் குழாய் வெடிப்பு ஆகிய இரண்டு காரணங்களால் ஏற்படுகிறது. இவற்றின் அளவைப்பொறுத்து அந்த பாகங்களின் பாதிப்பு விகிதங்கள் மாறுபடலாம். ஸ்ட்ரோக் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐந்தில் ஒருவருக்கு மரணமும் ஏற்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

Ischemic Attack என்பது ரத்தக் குழாய் அடைப்பு.

Hemorrhagic Stroke என்பது ரத்தக்குழாய் வெடிப்பு.

ரத்தக்குழாய் அடைப்பு (Ischemic Attack)

ரத்தக் குழாய்களில் கொழுப்புப் படலம் படிந்து அதனால் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு ரத்தம் செல்லும் பாதை சுருங்கிப் போகும். அதனால் மூளையின் பாகங்களுக்குச் செல்லும் ரத்தம் தடைபடலாம். (Thrombotic occulusion) கழுத்தில் இருந்து மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயிலும் தடை படலாம். ஒரு குழாயில் தடை ஏற்பட்டு அது வேறு சிறு சிறு ரத்தக்குழாய் வழியாகவும் செல்லலாம். அதனால் ரத்தத்தின் அளவு குறையலாம்.இதிலே இன்னொரு வகை பாதிப்பு உண்டு. ரத்தக்கட்டி (அ) ரத்தத்துகள் (Emblos) உருவாகி ரத்தக்குழாயை அடைத்துக்கொள்வது. இது பெரும்பாலும் இதயத்தில் உருவாகும். ரத்தக் குழாய் வழியாக எங்கே வேண்டுமானாலும் நகர்ந்து சென்று திடீரென ரத்தக்குழாயை அடைத்துக்கொள்ளும்.

ரத்தக்குழாய் வெடிப்பு (Hemorrhagic Stroke)

ரத்த அழுத்தம் அதிகரித்து ரத்தக் குழாயில் வெடிப்பு ஏற்பட்டு மூளையில் ரத்தக் கசிவு ஏற்படலாம்.

Brain aneurysms

ரத்தக் குழாய்களில் ஏற்படும் பலூன் போன்ற வீக்கத்தை aneurysms என்கிறோம். மூளைக்கும் மூளையை மூடி இருக்கும் திசுவிற்கும் இடையில் ஏற்படும். இது பார்ப்பதற்கு செர்ரி பழம் தண்டில் இருப்பது போல் இருக்கும். இது பிறப்பிலே ஏற்படக்கூடியப் பிரச்னை. திடீரென இதில் ஏற்படும் ரத்தக்கசிவு காரணமாக ஸ்ட்ரோக் ஏற்படும்.மூளை மற்றும் மூளையைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் ரத்தக்கசிவு அந்த இடத்தின் செயல்பாடுகளை பாதிக்கும்.

Arteriovenous malformations (AVM)

சில நேரங்களில் மூளையில் ரத்தக் குழாய்கள், ரத்த நாளங்கள் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து சிலந்திக் கூடு போல ஆகி விடும். இதனை Arteriovenous malformations என்கிறோம். இதனால் மூளைக்குச் செல்லும் ஆக்ஸிஜன் தடை ஏற்பட்டு ஸ்ட்ரோக் ஏற்படலாம்.

ஸ்ட்ரோக் அறிகுறிகள்

பேச்சுக் குழறும். (உளறுதல்)
பேச்சுத் தடைபடுதல்.
முகம் கோணிக்கொள்ளுதல்.
நடையில் தள்ளாட்டம்.
கிறுகிறுப்பு, தடுமாற்றம்.
கை தூக்க முடியாமல் போகும் (விட்டு விட்டும் இது போல் வரும்).
கை கால் வராமல் போகலாம்.
காரணமற்ற கடுமையான தலைவலி.
பார்வைக்கோளாறுகள்.

இது ஆண், பெண் அனைவருக்குமான ஸ்ட்ரோக்கின் அறிகுறி.

பெண்களுக்கு இதைத் தவிர்த்து கை, கால் வலி மற்றும் விக்கல், குழப்பநிலை, உணர்வற்று இருத்தல், நடவடிக்கையில் மாற்றம், பதட்டம், படபடப்பு, தன்னிலை இழத்தல் போன்றவையும் ஏற்படலாம்.குடும்பத்தில் யாருக்கேனும் ஸ்ட்ரோக் வந்திருந்தால் கவனமாக இருக்க வேண்டும். காரணம் மரபு ரீதியாகவும் ஸ்ட்ரோக் வருவதுண்டு. வயது அதிகரித்தல் என்பதும் ஸ்ட்ரோக் வருவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது.

மினி ஸ்ட்ரோக்

ஸ்ட்ரோக் ஆரம்ப கட்டத்தில் சிறிய அளவில் வரலாம். ஸ்ட்ரோக்கிற்கான அறிகுறிகள் வந்து சிறிது நேரம் இருந்து விட்டு பின்னர் சரியாகிவிடலாம். உதாரணத்திற்கு ஒருவருக்கு ஒரு நாள் திடீரென பேச்சுத் தடுமாற்றம் ஏற்படலாம். பின்னர் சிறிது நேரத்தில் அது சரியாகி விடலாம். இந்த பிரச்னை 5 மணி நேரம் முதல் ஒருநாள் வரை கூட இருந்து சரியாகிவிடலாம். இதன் பெயர் மினி ஸ்ட்ரோக் (TAIs) Transient Ischemic Attack. இது எதனால் ஏற்பட்டது என தெரியாமல் அதான் சரியாகி விட்டதே என சிலர் அலட்சியமாக இருந்து விடுவார்கள். சிலர் சிறிய அளவில் ஏற்படும் பாதிப்பை ஏதோ கை வலி, கால் வலி என நினைத்து அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்வார்கள். அது சரியாகிவிடும். ஆனால் இது பின்னாளில் பெரிய ஸ்ட்ரோக் வருவதற்கான அறிகுறி. இது ஒரு எச்சரிக்கை மாதிரி. மினி ஸ்ட்ரோக் என்பது முழுமையாக குணப்படுத்தக்கூடியது.

வருமுன் காப்போம் மாதிரி இந்த அறிகுறிகளால் பாதிக்கப்படும் போதோ உஷாராகி விட வேண்டும். ஸ்ட்ரோக் ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். சிலர் இதனை அலட்சியப்படுத்துவதால் பெரிய ஸ்ட்ரோக்கினால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படுகிறது. பெரிய ஸ்ட்ரோக் ஏற்படும் போது பாதிப்புகள் அதிகமாகும். முழுமையான குணம் என்பது கேள்விக்குறி தான்.ஆண்களில் மரணத்தை ஏற்படுத்தும் முதல் ஐந்து காரணங்களில் ஐந்தாவதாக ஸ்ட்ரோக் இருக்கிறது. பெண்களிடையே மரணத்தை ஏற்படுத்தும் முதல் ஐந்து காரணங்களில் மூன்றாவதாக ஸ்ட்ரோக் இருக்கிறது.ஸ்ட்ரோக் வந்து பாதிக்கப்பட்டவர் களுக்கு சிகிச்சை கொடுப்பது என்பது இந்தியாவைப் பொறுத்தவரை குறைவாக இருக்கிறது. அதிலும் பெண்களுக்கான மெடிக்கல் கேர் குறைவாகவே இருக்கிறது குறிப்பாக கிராமப்புறங்களில்.

ஏன் குறிப்பாக அதிகம் ஸ்ட்ரோக்கினால் பாதிக்கப்படுகிறார்கள்?

குழந்தை பேறு என்னும் ஒரு விஷயம் தான் முக்கியக் காரணம். பிரசவ காலத்தில் மரணத்தை ஏற்படுத்தும் விஷயங்களில் பெரும்பங்கு வகிப்பது ஸ்ட்ரோக்.பெண்களிடையே ஸ்ட்ரோக் ஏற்படக் காரணங்கள் கருத்தடை மாத்திரைகள்.கருத்தடை மாத்திரைகள் சாப்பிடும் போது ஸ்ட்ரோக் வருவதற்கான அபாயம் அதிகம். அதிலும் உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு இந்த அபாயம் இன்னும் அதிகம்.கர்ப்ப காலத்தில் ஏற்படும் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவுக் காரணமாக பிரசவத்திற்குப் பின் ஸ்ட்ரோக் வரலாம். கர்ப்ப காலத்தின் போது ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் போன்றவற்றைக் கட்டுக்குள் வைப்பது ஸ்ட்ரோக் வர விடாமல் தடுக்கும்.

முறையற்ற சிகிச்சை

கருக்கலைப்பு மற்றும் பிரசவத்தின் போது முறையற்ற சிகிச்சை காரணமாக ஸ்ட்ரோக் வரலாம். பிரசவத்தின் போது தாய்க்கு ஏற்படும் அதீத ரத்தப் போக்கு, நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக பிரசவம் முடிந்த கையோடு ஸ்ட்ரோக் வரலாம்.கர்ப்பத்திற்கு பின் ஏற்படும் நோய்த்தொற்றும் ஒரு காரணம். இந்த பிரச்னை நகரத்தை விட கிராமங்களில் அதிகம் ஏற்படுகிறது.

Amniotic fluid embolism

பனிக்குட நீர் தாயின் ரத்தக் குழாயில் கலந்து விடுதல்.
choriocarcinoma (கேன்சர்) போன்றவற்றாலும் பிரசவத்தின் போது பெண்களுக்கு ஸ்ட்ரோக் வரலாம்.

Periparium cardiomyopathy

இது ஒரு வகை இதயக்கோளாறு. கர்ப்பத்தின் போதோ அல்லது பிரசவமான உடனேயோ இந்த பிரச்னை ஏற்படலாம். இந்த கோளாறினால் ரத்த ஓட்டத்தில் ஒழுங்கின்மை உண்டாகும். இதனால் ரத்த அழுத்தம், ஸ்ட்ரோக் ஏற்பட வாய்ப்பு உண்டு.

Post parium cerebral angiopathy

ரத்த ஓட்டம் தடைபட்டு பின்னுக்கு வருவது. பிரசவமான பின் ஏற்படும் இந்த பிரச்னையினால் Ischemic Attack, Hemorrhagic Stroke எனும் இருவிதங்களிலும் ஸ்ட்ரோக் ஏற்படலாம். இதனால் பிரசவத்தின் பின் மரணம் நிகழலாம்.

Cerebral Venous Thrombosis (CVT)

கர்ப்பத்தின் போது ரத்த நாளங்களில் ரத்தம் உறைந்து போகும் நிலைமை. இதனாலும் ஸ்ட்ரோக் வரலாம்.Posterior reversible encephalopathy syndrome(PRES)இது ஒரு வகையான நோய் அறிகுறி. இதனாலும் ஸ்ட்ரோக் ஏற்படலாம். இதன் அறிகுறிகளாக தலைவலி, வாந்தி, கண் பார்வை மங்குதல் போன்றவை ஏற்படும்.

ஹார்மோன் மாற்று சிகிச்சை

ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் சிலருக்கு ஸ்ட்ரோக் வரும் அபாயம் உண்டு.

சர்க்கரை

கட்டுப்பாடில்லாத நீரிழிவு நோய் காரணமாக ஸ்ட்ரோக் வரலாம்.

மைக்ரேன் தலைவலி

Aura என்ற குறிப்பிட்ட அறிகுறிகளுடன் கூடிய மைக்ரேன் தலைவலி இருப்பவர் களுக்கு ஸ்ட்ரோக் வருவதற்கான அபாயம் அதிகம்.இதய நோய்கள், உடல் பருமன், ஸ்ட்ரோக் பற்றிய விழிப்புணர்வு குறைவு போன்றவற்றின் காரணமாக ஏற்படலாம்.ஸ்ட்ரோக் என்பது வாழ்க்கையை மாற்றி அமைக்கும் ஒரு விஷயம். வாழ்வில் பேரழிவை உண்டாக்கும் ஒரு விஷயம். பெரிய அளவில் ஸ்ட்ரோக் ஏற்படும் போது மரணம் கூட ஏற்படலாம். சிலர் மரணப்படுக்கைக்கு தள்ளப்படுவர். பெரும்பாலும் சிகிச்சை செய்ய முடியாத நிலைக்கு சிலர் தள்ளப்படலாம். ஸ்ட்ரோக்கின் பாதிப்பைப் பொறுத்து தான் எந்தளவுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்பதைத் தீர்மானிப்பார்கள்.

ஸ்ட்ரோக் ஏற்படாமல் தடுக்க

சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்றவற்றைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.புகைப்பழக்கம், ஆல்கஹால் பழக்கம், போதை மருந்து பழக்கம் (cocain, heroin) ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். உயர் கொழுப்பைக் (High cholestral) குறைக்க வேண்டும். ரத்த சோகை (Anemic) உள்ள பெண்கள் அதனை சரி செய்ய வேண்டும்.முன்னர் குறிப்பிட்டுள்ள பக்கவாதத்தின் அறிகுறிகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அறிகுறிகள் ஏற்படும் போது மருத்துவரை உடனடியாகச் சந்திப்பது நலம்.

பக்கவாதம் ஏற்படும்போது உடனடியாக சிகிச்சை செய்து கொள்வதன் மூலம், மூளைத் திசுக்கள் பாதிப்படைவது குறைக்க முடியும். இதனால் ஏற்படும் பாதிப்பும் குறையக்கூடும். பக்கவாதம் ஏற்பட்டவர்களில் 50 முதல் 70 சதவீதம் பேர் தாங்களாகவே தங்கள் தேவைகளைக் கவனித்துக் கொள்ளும் நிலைக்குத் திரும்ப முடியும். ஆனால் பெரிய அளவில் ஏற்படும் போது 15 முதல் 30 சதவீதம் பேர் படுத்த படுக்கையாகி நிரந்தரமாக நடக்க முடியாமலும், கை செயல்பட முடியாத நிலையையும் அடையலாம்.Post a Comment

Protected by WP Anti Spam