By 25 August 2018 0 Comments

வெற்றிடம்!!(கட்டுரை)

ஓரிடத்தில் காற்று வெற்றிடம் உருவானால், வேறோர் இடத்தில் இருந்து, அவ்வெற்றிடத்தை நோக்கிக் காற்று நகரும். வெறிடத்தை நோக்கிக் காற்று நகரும் சந்தர்ப்பங்களில், வானிலையில் சீரற்ற தன்மை உருவாகி விடுகின்றது. அத்துடன், அவ்வாறு வெற்றிடத்தை நோக்கி நகரும் காற்று, நாம் எதிர்பார்க்கும் விதத்திலான பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளும் இல்லை.

இலங்கை முஸ்லிம்களின் அரசியல் தலைமைத்துவத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு, இதை உவமானமாகக் குறிப்பிட முடியும்.

பல நூறு வருடங்கள் வரலாற்றைக் கொண்ட, ஒரு தனியான இனக் குழுமமாகத் திகழ்கின்ற முஸ்லிம்களை வழிநடத்துவதற்கு, அவர்களால் ஏகமனதாகவும் பரவலாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு தலைமைத்துவம், இன்று கிடையாது.

முன்னைய காலங்களில், தென்னிலங்கை அரசியல்வாதிகளின் தலைமைத்துவத்தின் கீழ், முஸ்லிம்கள் வழிநடத்தப்பட்டார்கள். அதன் பின்னர், கிழக்கிலங்கைத் தலைமைத்துவத்தின் பின்னால் அணிதிரண்டார்கள். ஆனால் இன்று, மாகாண ரீதியாகவோ, தேசிய ரீதியாகவோ அரசியலில் வழிப்படுத்துவதற்கான தனித்துவம் மிக்க ஒரு தலைவரைக் கொண்டிராத சமூகமாக, முஸ்லிம்கள் இருக்கக் காண்கின்றோம்.

இந்த நாட்டில் வாழ்கின்ற சிங்கள மக்களுக்கு, ஒரு பிரதான தலைமைத்துவமும் இரண்டாம் நிலைத் தலைமைத்துவமும் இருந்து வந்திருக்கின்றது. அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை நிறுவிய பெருந்தேசிய ஆட்சியாளர்கள், எல்லாச் சிங்கள மக்களினதும் தனிப்பெரும் தலைமையாக இருந்திருக்கின்றார்கள்.

அது தொங்குநிலை, கூட்டாட்சியாக இருப்பினும் கூட, சிங்கள மக்களின் நலன்களைப் பொறுத்தமட்டில், திரைமறைவிலேனும் இணைந்து செயற்படுகின்ற தலைமைத்துவக் கோட்பாடுகள் இருந்து வந்திருக்கின்றன. இன்றும் இந்த நிலையே தொடர்கின்றது.

இதற்கு இன்னும் சிறந்த முன்மாதிரியாக, தமிழர்களின் அரசியல் எடுத்தாளப்படலாம். ஆயிரத்தெட்டு விமர்சனங்கள் இருந்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரை, நாட்டின் பெரும்பாலான தமிழர்கள், சிறிதளவேனும் தங்களுக்கான தலைமையாகக் கொள்கின்றார்கள்.

மலையகத்திலும் தென்னிலங்கையிலும் உள்ள அரசியல் நிலைமைகளைப் பொறுத்து, அங்கு பிராந்தியத் தலைமைத்துவங்கள் உருவாகியிருந்தாலும், கிட்டத்தட்ட இலங்கைத் தமிழர்களின் முடிசூடாத் தலைவர் என்ற நிலையிலேயே, சம்பந்தன் இருத்தப்பட்டிருக்கின்றார்.

இங்கே கூறப்படுகின்ற ‘தலைமைத்துவம்’ என்பது, பிரதானமாக ஆள் சார்ந்ததாக இருக்கும். அவ்வாறில்லாத பட்சத்தில், கோட்பாடு சார்ந்ததாகவும் இருக்கலாம். தனியொரு நபர் வழிநடத்தும் தலைமைத்துவமாக இருக்க வேண்டும் என்பதே, முதன்மைத் தெரிவாகும்.

ஆனால், அது சாத்தியப்படாத பட்சத்தில், ஒரே தலைமைத்துவக் கோட்பாட்டின் கீழ், இரண்டுக்கும் மேற்படாத நபர்கள், தாம் சார்ந்த இனக் குழுமத்தை முன்னோக்கி அழைத்துச் செல்வதாக இருக்கலாம்.
துரதிர்ஷ்டவசமாக இந்நிலைமை, மூன்றாவது பெரும்பான்மையினமான முஸ்லிம் சமூகத்தின் மத்தியில், இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கின்றது.

இலங்கையில் வாழ்கின்ற இருபது இலட்சத்துக்குக் குறையாத முஸ்லிம்கள், ஒரு தலைமைத்துவ வெற்றிடத்தை, இன்று உணர்கின்றனர் என்பதே, இக்கட்டுரை அழுத்தமாக உரைக்க விரும்புகின்ற செய்தியாகும்.

நாட்டின் ஏதோவொரு பிரதேசத்தில் வாழ்கின்ற முஸ்லிமைப் பார்த்து, “உங்களது ஆதரவுக் கட்சியின் தலைமைத்துவம் யார்” எனக் கேட்டால், சட்டென பதிலளிப்பார்கள்.

ஆனால், “நாட்டு முஸ்லிம்களின் தலைவர் யார்”? எனக் கேட்டால், சற்று யோசித்தே பதிலளிக்க வேண்டியுள்ளது.

அவ்வாறு ஒருவர், ஒரு குறிப்பிட்ட அரசியல்வாதியைத் ‘தலைவர்’ என்று கூறினாலும், மற்றவர் வேறு ஒருவரை, ‘முஸ்லிம்களின் தலைமைத்துவம்’ என அடையாளப்படுத்துவார் என்பதே யதார்த்தமாகும்.

இன்றைய சூழலில், குறைந்தது நான்கு முஸ்லிம் கட்சிகள் செயற்பாட்டு அரசியலில் உள்ளன. ‘தேசியத் தலைவர்’ என்ற அடைமொழியோடு பலர் இருக்கின்றனர்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட எம்.பிக்களும், சண்டையிட்டுத் தேசியப்பட்டியல் எம்.பியைப் பெற்றுக் கொண்டவர்களுமாக, 21 பேர் நாடாளுமன்றத்தில் இருக்கின்றனர். இவர்களுள் அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் உள்ளடங்குகின்றனர்.

ஆனால், இவர்கள் யாருமே ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களின் ஏகோபித்த தலைவராக அல்லது 75 சதவீத முஸ்லிம்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைமைத்துவக் கோட்பாட்டுக்குச் சொந்தக்காரராக இல்லை என்பதே, கசப்பான உண்மையாகும்.

முஸ்லிம்களை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் அரசியல் கட்சிகளுக்கு, தலைவர்கள் இருக்கின்றார்கள். கட்சிகளுக்கு வாக்களித்தோருக்கு தலைமைத்துவங்கள் இருக்கின்றன. ஆதரவாளர்கள், கட்சிப் போராளிகள், செயற்பாட்டாளர்கள், அனுகூலம் பெறுவோர் எல்லோரும், பல அரசியல்வாதிகளைத் தமது தலைவர் எனத் தலையில் வைத்துக் கொண்டாடுகின்றனர்.

ஆனால், ‘இலங்கை முஸ்லிம் மக்களுக்கான தலைவர்’ என்று, யாரையும் அடையாளப்படுத்த முடியாதுள்ளது. எந்த முஸ்லிம் அரசியல்வாதியும் மக்கள் தலைவர்களாகத் தங்களைச் செதுக்கிக் கொள்ளவில்லை என்பதே, அதற்கு அடிப்படைக் காரணம் எனலாம்.

சுதந்திரத்துக்கு முன்-பின்னரான காலப்பகுதியில், முஸ்லிம்களுக்கு இத்தனை கட்சிகள் இருக்கவில்லை. ஆனால், கிட்டத்தட்ட ஒரே நிலைப்பாட்டைக் கொண்ட தலைமைத்துவக் கோட்பாட்டின் கீழ், முஸ்லிம்ககள் ஆளப்பட்டார்கள். அவர்கள் கட்சிகள், பதவிகள் ஊடாகத் தலைவர்களாகத் தம்மை இனம்காட்டிக் கொள்ளாமல், முஸ்லிம்களுக்கு ஆற்றிய சேவைகளின் ஊடாக, தம்மைத் தலைவர்கள் போல, நிலைநிறுத்திக் கொண்டனர்.

சிங்களப் பெருந்தேசியம், பௌத்த வாதத்தை முன்னிறுத்தியும் தமிழ்த் தேசியம் இனப்பிரச்சினைத் தீர்வை முன்னிறுத்தியும் தனித்தனி தலைமைத்துவங்களின் கீழ் அல்லது தலைமைத்துவக் கோட்பாடுகளின் கீழ், அணிதிரளத் தலைப்பட்டிருந்த நிலையில், கிழக்கில் இருந்து வந்த
எம்.எச்.எம். அஷ்ரப் எனும் அரசியல்வாதி, நாட்டிலுள்ள பெரும்பான்மையான முஸ்லிம்களின் ஒப்புதலைப் பெற்ற ஒரு தலைவராக, முன்னேறிக் கொண்டுவந்தார்.

வடக்கு, கிழக்குக்கு வெளியில் வாழ்ந்த, கணிசமான முஸ்லிம்களும் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் தலைமைத்துவக் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டனர்.

சுருங்கக் கூறின், காலப்போக்கில் இலங்கை முஸ்லிம்களின் தேசியத் தலைமையாக, அவர் மிளிர்வதற்கான அறிகுறிகளும் தென்படத் தொடங்கிய வேளையிலேயே, அவரது மரணம் நேர்ந்தது.

ஒருவேளை அவரது மரணம், திட்டமிடப்பட்டதாக இருந்திருக்குமானால், முஸ்லிம்களின் தேசியத் தலைமை உருவாவதைத் தடுப்பதும், அதற்கொரு முக்கிய காரணமாக இருந்திருக்கும் என்பதை, உலக அரசியலைப் படித்தோர் இலகுவாக அறிந்து கொள்வார்கள்.

இப்போதும் கூட, இலங்கை முஸ்லிம்களுக்குப் பொதுவான ஒரு தேசியத் தலைமைத்துவம் உருவாகும் என்றால், இதேபோன்ற ஓர் உள்ளுறைந்த ஆபத்தும், சவாலும் இருக்கவே செய்கின்றன என்பதை, நினைவில் கொள்ள வேண்டும்.

முஸ்லிம்களுக்கு நீண்டகால, குறுங்காலப் பிரச்சினைகள் பலவுள்ளன. முஸ்லிம்களைத் தனித்துவமான இலட்சணங்களைக் கொண்ட இனமாக, தேசியமாக முன்னிறுத்த வேண்டிய தேவையிருக்கின்றது.

தென்னிலங்கையிலும் வடக்கு, கிழக்கிலும் வாழ்கின்ற முஸ்லிம்களின் சில பிரச்சினைகள் ஒருமித்ததாகவும் வேறு சில விவகாரங்கள் தனித்தனியாகவும் கையாளப்பட வேண்டியதாகக் காணப்படுகின்றன.

மிகக் குறிப்பாக, இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான சர்வதேச, உள்நாட்டுச் சக்திகளையும் அவற்றுக்கு உதவுகின்ற ‘எட்டப்பர்’களையும் புத்திசாலித்தனமாக எதிர்கொள்ள வேண்டிய காலகட்டமாக, இது இருக்கின்றது.

முஸ்லிம்களுக்கு எதிரான சதித்திட்டங்கள், மிக நுட்பமான முறையில், உலகெங்கும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

மேற்கத்தேய நாடுகளில், இஸ்லாமிய அடையாள எதிர்ப்புவாதமாகவும் அரபுலகில் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையாகவும், இலங்கை, இந்தியா, மியான்மார் போன்ற தென்கிழக்காசிய நாடுகளில், முக்கூட்டு இனவாதமாகவும் முஸ்லிம்களுக்கு எதிரான திட்டங்கள் வெவ்வேறு மாதிரிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதை, அரசியல் அவதானிகள் மட்டுமன்றி, நிலைமைகளை உன்னிப்பாக நோக்கும் சாதாரண மக்களும் கூட அறிவார்கள். இவைபற்றி ஆக்கபூர்வமாகச் சிந்திக்கவும் அவற்றை எதிர்கொள்ள இலங்கை முஸ்லிம்களைத் தயார்படுத்தவும் ஒரு தலைமைத்துவம் அவசியமாக இருக்கின்றது.

இலங்கை முஸ்லிம்கள், இனப் பிரச்சினையில் தனிநாடு கேட்டுப் போராடவோ அல்லது அதற்குத் தடையாக நிற்கவோ இல்லை. என்றாலும், பெரும் இழப்புகளைச் சந்தித்தார்கள்.

ஆனால், அவர்கள் மீதான உரிமை மீறல்கள் பற்றியும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயங்கள் பற்றியும் இன்று, சர்வதேச நாடுகள் கவனம் செலுத்துவதில்லை. அத்துடன், அதனை எந்த முஸ்லிம் தலைமைகளும் முழுமையாக ஆவணப்படுத்தி, சர்வதேசத்திடம் முன்வைக்கவில்லை.

குறிப்பாகச் சொன்னால், இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பான பேச்சுகளில், முஸ்லிம்களுக்கு உரிய இடம் வழங்கப்படவில்லை என்பது மட்டுமன்றி, முக்கிய ஒப்பந்தங்களில், ‘வடக்கு, கிழக்கில் வாழும் சிறுகுழுவினர்’ என்று, முஸ்லிம்கள் குறிப்பிடப்பட்டமை போன்ற, பெரும் வரலாற்றுத் தவறுகள் இடம்பெற்றுள்ளன.

இவற்றையெல்லாம் தட்டிக் கேட்டு, போராடுவதற்கான ஒரு தலைமைத்துவத்துக்கான வெற்றிடம், அன்றுமுதல் இருந்து வருகின்றது.

இப்போது, அரசமைப்பு மறுசீரமைப்பை மேற்கொள்ள, அரசாங்கம் முன்முயற்சிகளை எடுத்து வருகின்றது. சமகாலத்தில் வடக்கு, கிழக்கு இணைப்புப் பற்றியும் பேசப்படுகின்றது. அதாவது, அரசமைப்பு மறுசீரமைப்பின் ஊடாகவோ அல்லது வேறு அடிப்படையிலோ, அரசாங்கம் தமிழர்களுக்குத் தீர்வுத்திட்டம் ஒன்றைக் கொடுப்பதற்கு விரும்புகின்றது. அல்லது, அவ்வாறான ஒரு போலித் தோற்றப்பாட்டைக் காட்டுகின்றது. இந்தத் தீர்வில், வடக்கையும் கிழக்கையும் இணைப்பதன் மூலம், முன்னர் கற்பனை செய்த தனிஈழ நிலப்பரப்பைப் பெறுவதற்கு, தமிழ்த் தேசியம் அனைத்துக் காய் நகர்த்தல்களையும் மேற்கொண்டு வருகின்றது.

இச்சந்தர்ப்பத்தில், முஸ்லிம்கள் வடக்கு, கிழக்கு இணைப்புக்குச் சம்மதிக்கமாட்டார்கள் என்று சர்வதேசத்தின் காதுகளுக்குக் கேட்கும்படி அடித்துச் சொல்வதற்கும், தீர்வுத் திட்டத்தில் முஸ்லிம்களின் பங்கை, நியாயமான அடிப்படையில் உறுதிப்படுத்திக் கொள்வதற்கும், நாட்டில் எல்லாப் பாகங்களிலும் வாழ்கின்ற முஸ்லிம்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிக்கும் வகையில் செயற்படுவதற்கும் உகந்த, எல்லா முஸ்லிம்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட, தைரியமுள்ள, தலைமைத்துவப் பண்புள்ள தலைவர் ஒருவரின் இடம், காலியாகவே இருக்கின்றது.

இதேபோன்று, சட்டவாக்கங்கள், யாப்புத் திருத்தங்கள் முதல், நவீன இனவாதம், புதிய தேர்தல் முறைமை, எல்லை மீள்நிர்ணயம், முஸ்லிம் தனியாள் சட்டம், ஹபாயா தொட்டு மாடறுப்பு வரையான எல்லா விவகாரங்களிலும் முஸ்லிம்களின் விருப்பங்கள், அபிலாஷைகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு, முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு உள்ளது. ஆனால், சரியான ஒரு தேசிய தலைமைத்துவம் இல்லாமையால், இவ்விடயங்களில் பல கட்டங்களாகத் தவறிழைக்கப்பட்டுக் கொண்டிருப்பதை, நாம் தொடர்ச்சியாகக் கண்டு வருகின்றோம்.

எனவே, அரசியல்வாதிகள் தமது கட்சிக்காரர்களை, ஆதரவாளர்களை, தமது பிராந்திய மக்களின் எண்ணங்களை மட்டும் உணர்ந்து கொள்ளாமல், நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள முஸ்லிம்களின் உணர்வுகளை உள்வாங்கி, அதன்படி செயற்படுவதற்கு, ஒரு தேசிய தலைமைத்துவம் உருவாக வேண்டியது அவசியமாகின்றது.

இந்த வெற்றிடத்தை, இப்போதிருக்கின்ற முஸ்லிம் கட்சித் தலைமைகள், அமைச்சர்கள், எம்.பிக்கள், பிராந்தியத் தலைவர்கள், சமூகத் தலைவர்கள், புத்திஜீவிகள், சமயத் தலைவர்கள் என்று யாருமே இட்டு நிரப்பவில்லை என்பது மிகவும் கவலைக்குரியது.

ஓரளவுக்கு நாட்டின் பல பாகங்களிலும் அரசியல் செயற்பாடுகளை விஸ்தரித்திருக்கின்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸோ, அகில இலங்கை மக்கள் காங்கிரஸோ, தேசிய காங்கிரஸோ நல்லாட்சிக்கான தேசிய முன்னணி போன்ற சிறு கட்சிகளோ அல்லது, ஐக்கிய மக்கள் (முஸ்லிம்) கூட்டமைப்போ அன்றேல் தேசியக் கட்சிகளில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளோ, முஸ்லிம்களுக்கான தேசிய தலைமையாகத் தம்மைக் கற்பனை செய்து கொண்டாலும், நிஜத்தில் 75 சதவீதமான முஸ்லிம்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தேசியத் தலைமையாக, அவர்களால் தம்மை வளர்த்துக் கொள்ள முடியாமல் போயுள்ளமை, பட்டவர்த்தனமாகத் தெரிகின்றது.

இலங்கையில் இருக்கின்ற முஸ்லிம்கள் எல்லோரையும் அச்சொட்டாகப் பிரதிநிதித்துவம் செய்கின்ற 75 சதவீதத்துக்குக் குறைவில்லாத முஸ்லிம்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தலைமையாக இருக்க வேண்டுமென்றால், அதற்கு சில நிபந்தனைகள் இருக்கின்றன. அதற்கு முன்னதாக, ஒரு சிறந்த தலைமைத்துவத்துக்கு இருக்க வேண்டிய பண்புகளையும் அவர் பூர்த்தி செய்தாக வேண்டும்.

தேசிய முஸ்லிம் தலைமைத்துவம், மக்களை முன்னின்று வழிநடத்துவதாக இருக்க வேண்டும். மக்களுக்குப் பின்னால் போவதாக இருக்கக்கூடாது. பதவி பட்டங்கள், கட்சி நலன்கள், சொந்த சுகபோகங்கள், பணம் உழைத்தல் ஆகியவற்றை விட, மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளிப்பவராக, அந்தத் தலைவர் இருக்க வேண்டும்.

வடக்கு, கிழக்கில் இருக்கின்ற முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளையும் தெற்கில் வாழ்கின்ற முஸ்லிம்களின் நலன்களையும் கருத்தில் கொண்டு செயற்படுபவராக இருக்க வேண்டும். தலைவர் சொன்னால், மக்கள் கேட்டு, அதன்படி நடக்க வேண்டும். மக்கள் யாருடைய பேச்சுக்குக் கட்டுப்பட விரும்புவார்களோ, அவரே தலைவராக வரவேண்டும்.

இந்த வெற்றிடத்தை, எந்த முஸ்லிம் அரசியல்வாதி நிரப்பப் போகின்றார் எனத் தெரியாது. ஆனால், யாராவது அந்த இடத்தை நிரப்பும் கனவுடன் இருந்தால், தாம் இப்போது ‘முஸ்லிம்களின் ஏகோபித்த தேசியத் தலைமை இல்லை’ என்ற யதார்த்தத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். மாயைகளை விட்டு இறங்கி வந்து, மக்களுடன் மக்களாகக் கலக்க வேண்டும்.Post a Comment

Protected by WP Anti Spam