வானவில் சந்தை!!(மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 0 Second

நண்பர் ஒருவர் தனக்கு இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு, ஸ்கூட்டரில் நான்கு பேராய்ச் செல்வது சிரமமாயிருக்கிறது என்று புலம்பினார். உண்மையில் முதல் குழந்தையையும் மனைவியையும் ஸ்கூட்டரில் வைத்துக் கொண்டு செல்லவே அவர் வெகு சிரமப்பட்டார். ஆனால், அது இயற்கைதானே என்பது போலத்தான் எண்ணம் கொண்டிருந்தார். இந்திய நடுத்தர வர்க்கம் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் பைக்குகளுக்கு அல்லது ஸ்கூட்டர்களுக்குப் பழகிவிட்டிருக்கிறது.

இரு சக்கர வாகனம் எண்பதுகளில் இருந்ததைப் போல ஒரு பணக்கார வீட்டுப் பொருளல்ல. அன்றாட வாழ்வின் அத்தியாவசியங்களில் ஒன்றுதான் என ஆகிவிட்டது. இப்போது, ஒரு வீட்டில் சாதாரணமாக இரண்டு இருசக்கர வாகனங்களைப் பார்க்க முடியும். இரண்டாயிரமாவது ஆண்டுகளில், புதிய தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக, நடுத்தர வர்க்கத்தின் பொருளியல் வாழ்விலும் நுகர்விலும் பெரும் மாற்றம் ஏற்பட்டது.

இருசக்கர வாகனங்களே ஆடம்பரம் என்றிருந்த மக்கள் மனதில் கார்கள் மெதுவாக நுழையத் தொடங்கின. இன்று ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பம் கார் வைத்திருப்பது ஆச்சரியம் அல்ல. மெர்சிடிஸ் பென்ஸ் வைத்திருந்தால்தான் ஆச்சரியம். கடந்த பல தசாப்தங்களாகவே இந்தியாவில் நவீன கார் என்பதற்கான அடையாளம் மாருதி 800 கார்தான். வேறு தேர்வுகள் குறைவு. மாற்றாக சாலைகளெங்கும் நிறைந்திருந்தவை அம்பாசிடர்களும் ஃபியட் பத்மினிகளும்தான்.
அதனாலேயே மாருதி 800 ஆலையில்லாத ஊரின் இலுப்பைப் பூவென இருந்து வந்தது. தொன்னூறுகளின் பிற்பகுதியில் நுழைந்த தேவூ (Daewoo),பின்பு ஹூண்டாய் (Hyundai) ஆகியன. இந்தியக் கார் நுகர்வோரின் மன அமைப்பை மாற்றியதில் பெரும் பங்காற்றின. தேவூவின் சியலோ (Cielo) காரும் மாடிஸ் (Matiz) சிறிய காரும், ஹூண்டாயின் சான்ட்ரோ (Santro) சிறிய காரும் இந்திய சாலைகளில் ஓடக்கூடிய புதிய அழகியல் கொண்ட கார்களின் தொடக்கமாக இருந்தன. தாராளமயப் பொருளாதாரத்தில் எழுந்து வந்த புதிய நுகர்வோர், கார்களின் புதிய வடிவங்களையும் அதன் பயன்பாடுகளையும் ருசிக்க ஆரம்பித்தனர்.

பெரிதாகிக் கொண்டே செல்லும் நகர வாழ்வின் தேவை, செல்வந்தர்கள் மட்டுமன்றி நடுத்தரவர்க்கப் பெண்களும் பெருமளவு கார் பயன்படுத்தும் இடத்திற்கு இட்டுச் சென்றிருக்கிறது. ஆனால், கார்களைப் பற்றிய புரிதல் பெருமளவு நடுத்தர வர்க்கத்திடம் குறைவுதான். வளர்ந்த நாடுகளைக் கொண்ட மேற்குலகைப் போல அல்லாது கடந்த இரு தசாப்தங்களாகத்தான் இந்தியக் கார் சந்தை விரிவைக் கண்டிருக்கிறது. இனிமேல் தான் அது கார் பயனாளர்களிடையே பார்வை மாற்றத்தை ஏற்படுத்தும்.

இன்று இங்கே வளர்ந்த நாடுகளில் விற்கப்படும் பல்வேறு வகைமையிலான கார்களில் எதையும் வாங்க முடியும். ஆனாலும், எளிய நுகர்வோரும் புரிந்துகொள்ளத் தோதாக சில அடிப்படையான வகைமைகளை இங்கே பார்க்கலாம். சிறிய கார் (Hatchback)கார்கள் பயன்பாட்டில் முதல் எளிய நுழைவு சிறிய கார்தான். மாருதி 800 இந்தியாவின் சூப்பர்ஸ்டாராக கோலோச்சியது. பொதுவாக, ஒரு காரின் வடிவத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்.

எஞ்சின் இருக்கும் முன்பகுதியை பானட் (Bonnet) என்றும் ஆட்கள் பயணிக்கும் நடுப்பகுதியை கேபின் (Cabin) என்றும் சரக்கு வைக்கும் பின்பகுதியை பூட் (Boot) என்றும் அழைக்கிறார்கள். சரக்கு வைக்கும் பின் பகுதியைக் (பூட்) கொண்டிராத கார்களை சிறிய கார்கள் என்றழைக்கிறோம். கையாள்வதற்கு எளிதானது இது. நகர நெரிசல்களில் ஒரு வரப்பிரசாதம். சிறிய இடத்திலேயே நிறுத்திக் கொள்ளத் தோதானது.

அதனாலேயே இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களாக சிறிய கார்களே உள்ளன. தெருவின் ஓர் ஓரத்தில் கூட தொந்தரவில்லாமல் நிறுத்திக் கொள்ளலாம். ஏனென்றால், பெரும்பாலும் நிறுத்துமிடத்தின் அளவுதான் ஒரு காரின் வகைமையத் தீர்மானிக்கிறது. எடை குறைவாக இருப்பதால், சிறிய எஞ்சின்களையே கொண்டிருப்பவை இவை. அதனாலேயே அதிக மைலேஜ் கொடுப்பவை. பராமரிக்க எளிதானவையும் கூட. புதிதாகக் கார் வாங்குபவர்களின் முதல் தேர்வாகப் பெரும்பாலும் சிறிய கார்களே இருக்கின்றன.

சிறிய கார்தான் என்றாலும் இரண்டரை லட்சம் ரூபாய் டாட்சன் ரெடிகோ முதல் நாற்பது லட்சம் ரூபாய் மினி கூப்பர் வரையில் இவ்வகைக் கார்கள் கிடைக்கின்றன. வசதி கருதி ஆடம்பரக் கார்களைத் தவிர்த்துவிட்டு, இங்கு பிரபலமாகவுள்ள முதன்மையான சில பிராண்டுகளைப் பார்க்கலாம். ரூபாய் இரண்டரை லட்சத்திலிருந்து நான்கு லட்சம் வரையிலான விலையில் கிடைக்கும் கார்களில் ரெனா க்விட் (Renault Kwid), மாருதி ஆல்டோ (Maruti Alto), டாட்சன் ரெடிகோ (Datsun Redigo), ஹூண்டாய் இயான் (Hyundai Eon) ஆகியவை முக்கியமானவை.

அதிகம் விற்பனையாகும் காராக மாருதி இருந்தாலும் ரெனா க்விட் போன்ற புதிய கார்களின் வரவும், அதற்குக் கிடைத்த வரவேற்பும் இந்த வகைமையில் ஆரோக்கியமான போட்டியை ஏற்படுத்தியிருக்கிறது. நான்கிலிருந்து எட்டு லட்சம் ரூபாய் விலையிலான கார்களில் ஹூண்டாயின் ஐ 10 கிராண்ட் (Hyundai i10 Grand),மாருதியின் வேகன் ஆர் (Wagon R), செலிரியோ (Celirio), டாடா டியாகோ (Tata Tiago), ஹோண்டா ப்ரியோ (Honda Brio) ஆகியன குறிப்பிடத்தக்கவை. இவை நுழைவு நிலைக் கார்களை விட கூடுதல் வசதிகளைக் கொண்டிருப்பவை.

சற்றே கூடுதல் இட வசதியையும் அளிப்பவை. மாருதியின் இக்னிஸ் (Maruti Ignis) இதில் ஒரு தனியிடத்தைப் பெற்றிருக்கிறது. ஐந்திலிருந்து பத்து லட்சம் ரூபாய் வரையிலான விலையில் கிடைக்கும் சிறிய கார்களில் முக்கியமானவை என ஹூண்டாய் ஐ 20 எலைட் (Hyundai i20 Elite), ஹோண்டா ஜாஸ் (Honda Jazz), மாருதி ஸ்விஃப்ட் (Maruti Swift), மாருதி பலீனோ (Maruti Baleno), ஃபியட் புண்ட்டோ (Fiat Punto), வோக்ஸ்வேகன் போலோ (Volkswagen Polo),

நிஸ்ஸான் மைக்ரா (Nissan Micra), ஃபோர்ட் ஃபிகோ (Ford Figo), டொயோட்டா எட்டியோஸ் லிவா (Toyota Etios Liva) ஆகியவற்றைச் சொல்லலாம். இந்த வகைக் கார்களில் முந்தையவற்றை விடக் கூடுதல் சொகுசும் (நல்ல இருக்கைகள், கிளைமேட் கண்ட்ரோல் போன்றவை), தொழில்நுட்பமும் (தொடுதிரை வசதி, ப்ளூடூத் பேசும் வசதி போன்றவை) பாதுகாப்பு அம்சங்களும் (ஏபிஎஸ், காற்றுப்பைகள் போன்றவை) நிறைந்திருக்கும்.

அதோடு, கூடுதல் சக்தியை அளிக்கும் எஞ்சின்களையும் கொண்டிருப்பதால் ஓட்டும் இன்பத்தையும் அளிக்கும் கார்களாக இவை இருக்கின்றன. குறிப்பாக ஃபியட் புண்ட்டோ அபார்த் (Fiat Punto Abarth),போலோ ஜிடிஐ (Polo GTI)இரண்டும் அதிவேக எஞ்சின்களோடு தனித்துவமான ஓட்டும் அனுபவத்தைக் கொடுப்பவையாகவே சந்தையில் விற்கப்படுகின்றன. இவற்றின் விலையும் ரூபாய் பத்து லட்சத்திற்கும் மேலேதான். மற்ற வகைமைக் கார்களைப் பற்றி அடுத்த கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இளம் வயதினரையும் விட்டுவைக்காத ஆஸ்டியோபொரோசிஸ்!!(மருத்துவம்)
Next post சிறுவயதில் மரணமடைந்த சினிமா பிரபலங்கள்!!(வீடியோ)