பெண்களுக்கு தனிமைப் பயணம் பாதுகாப்பானதா?(மகளிர் பக்கம்)

Read Time:8 Minute, 26 Second

காஷ்மீர் டூ கன்னியாகுமரி ஒரு சைக்கிள் ‘டெஸ்ட்’ டிரைவ்!

‘‘ஒரு பொண்ணு, நிறைய நகை போட்டுக்கிட்டு நடு ராத்திரியில தனியா ரோட்டுல நடந்து போக முடிஞ்சா அப்போதான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சதா அர்த்தம்னு காந்தி சொன்னார். இதை இப்ப செக் பண்ணினா என்னன்னு மனசுல ஒரு மின்னல் தோணுச்சு. கிளம்பிட்டேன்!’’ – ரொம்ப கேஷுவலாகச் சொல்கிறார் 21 வயதுப் பெண் அனஹிட்டா. ஆனால் இவர் பயணம் கேஷுவலானது அல்ல… காஷ்மீர் முதல் கன்னியாகுமரி… சுமார் 4500 கிலோமீட்டர் தூரத்தை சைக்கிளில் கடப்பது.

தனியொரு பெண்ணாக இதை 2 மாதம் 4 நாட்களில் சாதித்துக் காட்டியிருக்கிறார் அனஹிட்டா!‘‘எனக்கு பூர்வீகம் கர்நாடகான்னாலும், அம்மாவும் அப்பாவும் சென்னையில செட்டில் ஆனவங்க. அதனால நான் சென்னை பொண்ணுதான். ஸ்கூல் இங்கதான் படிச்சேன். அப்புறம் பெங்களூரு மணிபால் இன்ஸ்டிடியூட்ல விஷுவல் கம்யூனிகேஷன் முடிச்சேன். படிக்கிறப்பவே அட்வெஞ்சர் ஸ்போர்ட்ஸ்ல எனக்கு ரொம்ப ஈடுபாடு. ஸ்கீயிங் (பனிச்சறுக்கு), ட்ரெக்கிங் (மலையேற்றம்) எல்லாம் தேடித் தேடிச் செய்வேன்.

அதனோட தொடர்ச்சியா வந்ததுதான் சைக்கிளிங். சென்னையில் ‘வி ஆர் சென்னை சைக்கிளிங் குரூப்’ என்ற ஒரு குழுவில் இணைஞ்சு சென்னையை சுத்தி சுமார் முப்பது கிலோ மீட்டர், நாற்பது கிலோ மீட்டர் பயணம் எல்லாம் செஞ்சேன். பொதுவாவே பயணம்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். போன வருஷம் டிகிரி முடிச்ச சமயத்தில் பெங்களூருவில் இருந்து மகாராஷ்டிரா, ராஜஸ்தான், காஷ்மீர், இமாசலப் பிரதேசம் வழியா அப்படியே லடாக் வரை பஸ்லயே போயிட்டு வந்தேன். அப்ப பஸ்ஸில் பார்த்தவங்க எல்லாம், ‘என்னம்மா இப்படித் தனியா வந்திருக்கே? பார்த்துப் போம்மா!’னு ரொம்ப அனுதாபப்பட்டாங்க.

இது என் மனசுல ஆழமா பதிஞ்சிருந்தது. அப்புறம் ஒருமுறை ஸ்கீயிங் கோர்ஸுக்காக காஷ்மீர் போயிருந்தேன். அங்கே ஃபைசல் லத்தீப்னு ஒரு பையனைப் பார்த்தேன். 18 வயசுதான். ஆனா, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள்ல போயிட்டு வந்திருக்கான். அந்த அனுபவங்களை எல்லாம் சொல்லிட்டிருந்தான். அந்தச் சமயத்துலதான் ‘இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லை’ங் கற மாதிரி நிறைய பலாத்காரத் தகவல்கள் எல்லாம் வந்துட்டிருந்தது.

நாமும் இவனைப் போல் போய்ப் பார்க்கலாமேனு ஒரு எண்ணம் அப்பதான் வந்தது!’’ என்கிற அனஹிட்டா, தன் பயணத்துக்குப் பிறகு இந்தியத் திருநாட்டைப் பற்றி பாசிட்டிவ் முடிவுக்குத்தான் வந்திருக்கிறார்.‘‘ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, டெல்லி, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடுனு பத்து மாநிலங்களை இந்தப் பயணத்துல தாண்டியிருக்கேன். என்னைப் பொறுத்தவரை இதில் ஒரு சில அசௌகரியங்களைத் தவிர தொந்தரவுன்னு ஒண்ணும் இல்லை. ஆனா, என் வரையில நான் பாதுகாப்பாதான் பயணம் செஞ்சேன்.

சூரியன் உதிக்கும் நேரத்திலிருந்து அது மறையிற வரைதான் பயணம். இருட்டாகும்போது நான் எங்க நிக்கிறேனோ, அது பக்கத்துல தெரிஞ்சவங்க வீடு ஏதாவது இருக்கான்னு பார்த்து தங்கிடுவேன். இல்லாட்டி, பக்கத்தில் இருக்குற லாட்ஜ்தான் கதி. ஆனா, தங்குறதுக்கு முன்னாடி அந்த இடத்தைப் பத்தி கூகுள்ல நல்லா தேடித் தெரிஞ்சுக்கிட்டுதான் காலெடுத்து வைப்பேன். ஒரு ஹோட்டல்ல நான் சைக்கிள் சகிதமா வந்து தங்குறதைப் பார்த்த ஹோட்டல்காரங்க, என் பயணத்தைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டு நிறைய உதவிகளை செஞ்சாங்க.

காஷ்மீர்ல ஒரு பகுதியில ஆண்கள் என்னை வழியில் நிறுத்தி, அவங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய் அவங்க வீட்டுப் பெண்களுக்கு அறிமுகப்படுத்தினாங்க. ‘இந்தப் பொண்ணோட தைரியத்தைப் பார்’னு வீட்டுலயே அடைஞ்சி கிடந்த அந்தப் பெண்கள்கிட்ட சொல்லி ஊக்கப்படுத்தினாங்க. ஹைவேயில் பயணிக்கும்போது சில வாகன ஓட்டிகள் எனக்கு ‘ஹாய்’ சொல்றதுக்காகவே ஸ்லோ பண்ணி ஹாரன் அடிக்கிறதும் சைகை காட்டுறதுமா இருந்தாங்க!’’ என்கிற அனஹிட்டா, நம் நாட்டுப் பெண்களுக்கு சில அட்வைஸ்களையும் வைத்திருக்கிறார்.

‘‘இந்தியப் பெண்கள் எல்லாரும் இப்படிப் பயணம் செய்யப் போறதில்லைன்னாலும் நான் என்னை பாதுகாத்துக்கிட்ட விதத்தில் அவங்களும் தங்களைப் பாதுகாத்துக்க முடியும். பொதுவா நம்ம பெண்கள் அவங்க விருப்பத்தையும் தேர்வையும் பெற்றோருக்குக்கூட சொல்றதில்லை. இது தப்பு. உதாரணத்துக்கு இங்கே ஒரு ஸ்கூல் பொண்ணு பள்ளி டூருக்குப் போக ஆசைப்படுறேன்னு கூட வெளியே சொல்றதில்ல. பெத்தவங்க அனுமதிப்பாங்களோ இல்லையோனு நினைச்சு பயந்து மறைச்சிடறா.

விருப்பத்தைச் சொல்லும்போதுதானே அனுமதி கொடுக்கலாமா, வேண்டாமானு பேரன்ட்ஸ் யோசிப்பாங்க? எதையுமே சொல்லாம முன்னேற்றம் எப்படி வரும்? அதே மாதிரி, ஆண்கள் சீண்டினா கண்டுக்காதேனு நாம பெண்களுக்கு அட்வைஸ் கொடுக்குறோம். இதுவும் தப்பு. கண்டுக்காம விட்டால் அது தொடரத்தான் செய்யும். ஆண் சீண்டினா அந்த இடத்துலயே அந்தப் பொண்ணு எதிர்ப்பைக் காட்டிடணும். ஆனா, ஒரு கன்ட்ரோலோட அதைச் செய்யணும். அவர்களை தண்டிக்கிற நோக்கம் ஜெயிக்காது…

திருத்துற நோக்கம்தான் இந்த இடங்கள்ல ஜெயிக்கும். இப்படியெல்லாம் ஒரு பெண் தன் முன்னேற்றத்துக்கான பாதைகளைப் போடும்போது எதிர்காலம் இனிமையா இருக்கும்!’’ – பொறுப்பாகப் பேசி முடிக்கிறார் அனஹிட்டா.ஆண்கள் சீண்டினா கண்டுக்காதேனு நாம பெண்களுக்கு அட்வைஸ் கொடுக்குறோம். இது தப்பு. கண்டுக்காம விட்டால் அது தொடரத்தான் செய்யும். எதிர்ப்பைக் காட்டிடணும்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கேட்டிலும் துணிந்து நில்!!(கட்டுரை)
Next post “இச் அது நச்சு” இனம் புரியாத ஈர்ப்பு “முத்தம்” !!( அவ்வப்போது கிளாமர்)