வலி நீக்க… தோல் தானம்! (மகளிர் பக்கம்)

Read Time:12 Minute, 35 Second

நாம் இறந்த பிறகு நம் உடலோடு சேர்ந்து எரியும் அல்லது புதைப்பதனால் மண்ணுக்குள் மட்கி அழுகும் தோலை நம் இறப்பிற்கு பின் நம் கண்களைப் போலவே தானம் செய்ய முடியும் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? மிகச் சமீபத்தில் தேனி மாவட்டம் குரங்கணியில் ட்ரெக்கிங் கிளப் மூலமாக மலையேற்றத்திற்குச் சென்றவர்கள் தீ விபத்தில் சிக்கி, தீயின் கோரத் தாண்டவத்தால் பலர் இறந்ததையும், சிலர் தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதையும் எளிதில் மறக்க முடியாது.

2004ம் ஆண்டு கும்பகோணம் பள்ளித் தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்த சம்பவமும் தமிழகத்தை பயங்கரமாக உலுக்கியது. அதிலும் பல குழந்தைகள் தப்பிப் பிழைத்திருக்கலாம். விருதுநகர் மாவட்டம் சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலைகளில் அடிக்கடி நடக்கும் தீ விபத்துக்களும் நாம் அறிந்தவைதான். அவ்வப்போது சென்னையின் சேரிகள் தீ பிடித்து எரிவதையும், அதில் அப்பாவி மக்கள் பலியாவதையும் செய்திகளாகக் காண்கிறோம். மேற்குறிப்பிட்ட விபத்துக்கள் எல்லாம் ஊடகங்கள் வழியாக நாம் அறிந்தவை.

ஆனால் தினம் தினம் நமக்குத் தெரிந்தோ தெரியாமலே எத்தனையோ தீ விபத்துக்கள் ஆங்காங்கே நிகழ்கின்றன. அதிலும் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழக்கின்றனர். சிலர் தீக்காயத்தோடு உயிருக்குப் போராடுகின்றனர். எப்படியாயினும் தீ விபத்தில் தப்பிப் பிழைத்தவர்களின் நிலை நிச்சயம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. தப்பிப் பிழைத்தவர்கள் வாழ வேண்டுமே?

இறந்தபின் மண்ணுக்குள் செல்லும் நம் தோலை நாம் நினைத்தால் கண்டிப்பாக தானம் செய்ய முடியும். தோல் தானம் குறித்த சரியான விழிப்புணர்வு இல்லாததாலே ஒவ்வொரு ஆண்டும் தீ விபத்துக்களில் சிக்கிய பலர் மரணம் அடைகின்றனர். இந்தியாவில் ஒவ்வொரு 6 நிமிடத்திற்கு ஒருவர் தீ விபத்தில் இறக்கிறார். அவர்களுக்கான சிகிச்சைக்கு, மாற்றுத் தோல் மிகமிக அவசியம். கண் தானம் போலவே யார் வேண்டுமானாலும் தங்கள் மறைவிற்குப் பிறகு
தோலை தானமாக வழங்கலாம் என்கிறார் கோயம்புத்தூரில் உள்ள பிரபல மருத்துவமனையில் தோல் மறுசீரமைப்பு மருத்துவ நிபுணரான டாக்டர் ராஜ சபாபதி.
“கண்தானம் பற்றி எல்லோருக்கும் தெரியும். ஆனால் தோல் தானம் பற்றி பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. மனிதனின் உயிர் பிரிந்த பிறகும் கூட செய்யக் கூடிய தானம் உடலில் இரண்டுதான். ஒன்று கண். இரண்டு தோல். கண்தானம் செய்யும் ஒவ்வொருவரும் தோல் தானம் செய்யலாம். கண்தானம் என்பது பெறப்பட்ட தினத்தில் இருந்து நான்கு அல்லது ஐந்து நாட்களுக்குள் கருவிழியை(Cornea) பயன்படுத்திவிட வேண்டும்.

ஆனால் தோல் தானம் அப்படியல்ல. தோலை பதப்படுத்திவிட்டால், தோல் பெறப்பட்ட 21 நாள் கழித்து 5 ஆண்டுகளுக்குள் எப்போது வேண்டுமானாலும் தோலை பயன்படுத்திக்கொள்ளலாம். தோல் வங்கியில் இருந்து எந்த இடத்திற்கும் சுலபமாக தொலைதூரங்களுக்குத் தோலை அனுப்ப முடியும். நமது உடலிற்கு பெரிதும் பாதுகாவலாக‌ இருக்கும் தோலை 18 வயது நிரம்பியவர்கள் யார் வேண்டுமானாலும் தானம் செய்யலாம்.

உடலில் 30 சதவிகிதம் தீக்காயம் ஏற்பட்டவர்களை மட்டும்தான் காப்பாற்ற முடியும். அதற்கு அதிகமாக காயம் ஏற்பட்டிருந்தால் அவரை காப்பாற்றுவது நமது நாட்டில் கடினம். தீக்காயத்தில் 20 சதவிகிதம் மட்டும் தோல் எரிந்துவிட்டது என்றால், காயம் அடைந்தவரின் உடலில் இருந்தே தோல் எடுக்கப்படும். 40 சதவிகிதமும் எரிந்து விட்டது என்றால் தோல் வங்கியில் இருந்து தோலைப் பெற்று எரிந்த தோல்களை நீக்கிவிட்டு, பெறப்பட்ட தோல் தற்காலிகமாக உடலில் ஒட்டப்படும். அந்தத் தோல் 20 நாட்கள் வரை உடலோடு ஒட்டி இருக்கும்.

அந்த இடைப்பட்ட நாளில் காயமுற்றவர் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகிக் கொண்டே வருவார். தீக்காயம் விரைவில் ஆறும். இல்லையெனில் அவரது உடலில் தோல் இல்லாத பகுதி நோய் தொற்றுக்கு (infection) மிக விரைவில் இலக்காகும். அது அவரின் உயிரைப் பறிக்கும் நிலைக்கே தள்ளும். தீக்காயம் மற்றும் தோலில் வேறு வகையான காயம் ஏற்பட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு, புதிய தோல் உருவாகுவதற்குள் எரிந்த பகுதிகள் கிருமித் தாக்குதலுக்கு இலக்காகி பெரும்பாலும் உயிரிழக்கவே நேரிடுகிறது.

தோல் அதிகமாக கிடைக்கும்போது, அப்படிப்பட்ட உயிரிழப்புகளை நிச்சயமாக நம்மால் தடுக்க முடியும். தீக்காயம் அடைந்தவர்களின் உடலிலிருந்து புரதச்சத்து இழப்பு, திரவம் வெளியேறுவது, காயத்தில் சீழ் பிடிப்பது போன்றவற்றை தடுக்கவும், தீக்காயத்தின் வலி குறையவும் தோல் தானம் உதவுகிறது. தானமாகப் பெறப்பட்ட தோல், காயம் ஏற்பட்ட இடத்துக்கு ஒரு பாதுகாப்பு கவசமாக இருக்கிறது. காயம் ஏற்பட்ட இடத்தில் ஒட்டப்பட்ட தோல், 15 நாட்களில் உதிர்ந்துவிடும்.
அந்த 15 நாட்களுக்குள் காயம் ஏற்பட்ட இடத்தில் புதிய தோல் காயம் ஏற்பட்டவருக்கு தானாக வளரும்.

உயிருடன் இருப்பவர்களிடம் இருந்து பெறப்படும் தோல் இறந்தவரின் உடலில் இருந்து பெறப்படும் தோல் என இரண்டு வகையாக தோல் தானம் செய்யப்படுகிறது. இதில் உயிருடன் இருப்பவர்கள் என்பது மூளைச்சாவு அடைந்தவர்களை மட்டும் குறிக்கும். ஒருவர் இறந்துவிட்டால் அவர் இறந்த 6 மணி நேரத்திற்குள்ளாக அவரின் உடலில் இருந்து தோலை எடுக்க வேண்டும். தொடைப் பகுதி, கால்கள் மற்றும் முதுகு போன்ற வெளியே தெரியாத உடல் பகுதிகளிலிருந்தே தோல் தானமாக எடுக்கப்படுகிறது.

தோலின் மேற்புறமாக மிகமிக மெல்லிய லேயரிலே எடுக்கப்படும் தோல் 0.5 மி.மீ. தடிமன் அளவிற்கு மட்டுமே தானமாக பெறப்படுகிறது. அது எடுத்ததே தெரியாது. இதில் பயப்படத் தேவையில்லை. தோலின் மேற்புறம் மிருதுவான பகுதி மட்டுமே எடுக்கப்படுவதால் உடலில் ரத்தக் கசிவோ, உடல் சிதைவோ ஏற்படாது. எடுக்கப்பட்ட பாகங்கள் பேண்டேஜ் செய்யப்பட்டு விடும். பார்ப்பவர்களின் கண்களுக்கு எதுவும் தெரியாது.

தோலை தானமாகப் பெறுவதற்கு முன், தோல் தானம் கொடுப்பவர்களுக்கு ஏதாவது நோய் இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். தொற்றுநோய் மற்றும் வைரஸ் கிருமி தாக்குதல், தோல் நோய்கள், எய்ட்ஸ் போன்ற நோய் தாக்குதலுக்கு ஆளானவர்கள், ஹெபடைடிஸ் பி மற்றும் சி, பால்வினை நோய்கள், தோல் புற்றுநோய், மஞ்சள் காமாலை, தோலில் கடுமையாக நோய் தாக்குக்கு ஆளானோர் தோல் தானம் செய்ய இயலாது. இவர்களின் தோல்கள் தானமாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.

ஆனால் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களால் தோல் தானம் செய்ய இயலும். கண்தானம் குறித்த விழிப்புணர்வு மக்களிடத்தில் அதிகம் இருப்பதால் தினமும் கண்கள் தானமாகப் பெறப்படுகிறது. ஒரு நாளைக்கு ஒருவர் என்ற கணக்கில் ஒரு மாதத்தில் 30 பேர் தானம் செய்தால் ஒரு மாதத்துக்கு 60 கண்கள் கிடைக்கின்றன‌. ஆனால் தோல் தானம் ஒரு மாதத்தில் 4 தான் கிடைக்கிறது. எனவே இது குறித்த விழிப்புணர்வு மிகவும் அவசியம்” என்று முடித்தார் மருத்துவர். தோள் கொடுப்பவன் மட்டுமா… தோல் கொடுப்பவனும் தோழன்தான்.

* அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் உடலில் 80 சதவிகிதம் பாதிக்கப்பட்டவர்களைக்கூட காப்பாற்ற முடிகிறது. காரணம் அங்கே தோல் தானம் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் மிகவும் அதிகமாக உள்ளது.
* நமது நாட்டில் தோல் வங்கிகளின் எண்ணிக்கையும் குறைவு. மும்பை, டெல்லி மற்றும் தமிழ்நாட்டில் சென்னை, கோவை போன்ற நகரங்களில் மட்டும்தான் தோல் வங்கிகள் உள்ளன. சென்னையில் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மற்றும் ஸ்டான்லி மருத்துவமனையிலும் தோல் வங்கி உள்ளது.
* தானமாகப் பெறப்படும் தோல் நவீன முறையில் தோல் வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, 5 ஆண்டுகள் வரை பயன் பாட்டிற்கு வைக்கப்படும்.

தோலை தானம் செய்வது எப்படி?

* தோல் வங்கியில் வழங்கப்படும் படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.
* குறைந்தபட்சம் 18 வயதுடையவர்கள் எந்த வகை ரத்தப் பிரிவை சேர்ந்தவர்களாக இருப்பினும் தோல் தானம் செய்யலாம். 100 வயதை எட்டியவர் கூட தோல் தானம் செய்ய முடியும்.
* 6 மணி நேரத்திற்குள் தோல் தானமளிப்பவரின் குடும்பத்தினர் அனுமதியுடன் தோல் வங்கியையோ அல்லது அறக்கட்டளையின் தன்னார்வலர்களையோ தொடர்பு கொள்ளலாம்.
* தோல் தானம் அளிப்பவரின் உடலை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய அவசியமில்லை. மருத்துவக் குழுவினர் வீட்டிற்கே நேரில் வந்து 30 முதல் 45 நிமிடங்களுக்குள் தோலினை சேகரித்துக் கொள்வர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அந்தரங்க பகுதியில் வளரும் முடி பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள்!! (அவ்வப்போது கிளாமர்)
Next post இரவில் 2 நிமிடம் முகத்தில் தடவுங்கள் காலையில் பார்த்தால் உங்கள் முகம் ஜொலிக்கும்!!(வீடியோ)