உயிரைப் பறித்த சுய மருத்துவம்!!(மருத்துவம்)

Read Time:4 Minute, 56 Second

சாதாரண தலைவலிக்கு மாத்திரை வாங்கிப் போட்டுக் கொள்வதில் தொடங்கிய சுய மருத்துவம், இப்போது வீட்டிலேயே பிரசவம் பார்த்து உயிரைப் பறிக்கும் அளவுக்கு விபரீதமாகி இருக்கிறது.

திருப்பூர், காங்கயம் சாலையில் உள்ள புதுப்பாளையம் பகுதியில் வசிப்பவர் கார்த்திகேயன். பனியன் நிறுவன ஊழியர். இவரது மனைவி கிருத்திகா தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. 2-வது முறையாக கர்ப்பமான கிருத்திகாவுக்கு வீட்டிலேயே பிரசவம் பார்க்கலாம் என்ற ஆபத்தான முடிவுக்கு வந்திருக்கிறார் கார்த்திகேயன்.

கடந்த 22-ம் தேதி கிருத்திகாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இணையதளங்களில் கொட்டிக் கிடக்கும் பிரசவம் தொடர்பான வீடியோக்களைப் பார்த்து, நாமே சுகப்பிரசவத்தை நிகழ்த்திவிடலாம் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கையால் தன்னுடைய நண்பரையும், அவரது மனைவியையும் துணைக்கு அழைத்திருக்கிறார்.

வீட்டிலேயே பிரசவம் பார்த்தபோது ஏற்பட்ட எதிர்பாராத ரத்த இழப்பால் மயக்கமடைந்து கிருத்திகா இப்போது உயிரிழந்துவிட்டார். பிறந்த பெண் குழந்தை மட்டும் உயிர் தப்பியிருக்கிறது. பல்வேறு மட்டங்களிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவம் பற்றி பொதுநல மருத்துவர் ஜெய சித்ராவிடம் பேசினோம்…

‘‘மருத்துவமனைக்குச் சென்றால் சிசேரியன் செய்வார்கள். பணம் செலவாகும். வீட்டிலேயே இயற்கை முறையில் பிரசவம் பார்த்துவிட முடியும் என்றதவறான நம்பிக்கையால் ஓர் உயிர் பலியாகி இருக்கிறது. இப்போது சிசேரியன் முறை பிரசவம் பார்ப்பது அதிகரித்திருக்கிறது என்பதை மறுக்க முடியாதுதான். அதுவும் கூட தேவையைப் பொறுத்துதான் செய்கிறார்கள்.

வேண்டும் என்றே எல்லா மருத்துவமனைகளும் சிசேரியன் செய்வதில்லை. சுகப்பிரசவம் என்பது கருவை சுமந்திருக்கும் தாயின் உடல்நிலை, கருவில் இருக்கும் குழந்தையின் பொசிஷன், குழந்தையின் எடை மற்றும் அவர்கள் உடல் நலனைப் பொறுத்துதான் அமையும். மேலும் இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை, உணவுமுறையால் சுகப்பிரசவம் குறைந்திருக்கிறது.

சிசேரியன் அதிகரித்திருக்கிறது. இதற்கு மருத்துவ உலகை மட்டுமே குறை சொல்லிப் பயன் இல்லை. மருத்துவ உலகமும் சுகப்பிரசவங்கள் நிகழ வேண்டும் என்று அதனை நோக்கி தேவையான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டுதான் வருகிறது. இதைத் தவறாகப் புரிந்து கொண்டதால் வந்த வினைதான் இது.

வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது என்பது மிகவும் தவறான முடிவு. இது தாயின் உயிருக்கும், குழந்தையின் உயிருக்கும் ஆபத்தாகவே முடியும் என்பதைப் பலரும் புரிந்துகொள்ள வேண்டும். மருத்துவமனையில் பிரசவம் பார்ப்பது என்பதே பாதுகாப்பான ஒன்று. எதிர்பாராத எந்த சூழல் வந்தாலும் அந்த நெருக்கடியை சமாளித்து நோயாளியைக் காப்பாற்றும் திறனும், வசதியும் மருத்துவமனையில் மட்டுமே உண்டு.

அதனால் சுய பிரசவம் பார்த்துக்கொள்வது, சுய சிகிச்சை பெற்றுக்கொள்வது போன்ற தவறுகளைச் செய்யாமல் மருத்துவரையும் மருத்துவத்தையும் நம்ப வேண்டும். அலோபதி மருத்துவம் என்பது அறிவியல் தொழில்நுட்பத்தோடு வளர்ந்திருக்கிற மருத்துவம் என்பதை முக்கியமாகப் புரிந்துகொள்ளுங்கள்’’ என்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டிப்ஸ்.. டிப்ஸ்..!!(மகளிர் பக்கம்)
Next post விடாமல் விரட்டும் விக்கல் ஏன்? தீர்வு என்ன?!(மருத்துவம்)