கேட்டட் கம்யூனிட்டி பாதுகாப்பானதா?(மகளிர் பக்கம்)

Read Time:15 Minute, 5 Second

அயனாவரத்தில் பதினோரு வயது சிறுமிக்கு நடந்த பாலியல் கொடூரம் தமிழகத்தையே உலுக்கிவிட்டது. கேட்டட் கம்யூனிட்டி மிகவும் பாதுகாப்பானது என்பதுதான் பொதுவான கருத்து. அங்கேயே இத்தகைய பிரச்னை நடைபெற்றதை நினைத்தால் பெண் குழந்தைகளின் எதிர்காலம் இருட்டாக இருப்பது போல் தோன்றுகிறது. மிகவும் பாதுகாப்பானதாக சொல்லப்படும் கேட்டட் கம்யூனிட்டியில் இத்தகைய குற்றம் நடைபெற காரணம் என்ன? அதைத் தவிர்ப்பது எப்படி என்பது பற்றி இங்கே சில பெண்கள் அலசுகிறார்கள்.

* கீதா தெய்வசிகாமணி

‘‘பொதுவாக கேமரா என்பது பாதுகாப்பிற்காக வைக்கப்படுகிறது. ஆனால் கேட்டட் கம்யூனிட்டி அபார்ட்மென்ட் என்றில்லை எல்லா அபார்ட்மென்ட்களிலுமே பெரும்பாலும் கேமரா என்பதை கட்டாயத்தின் பேரில்தான் வைக்கிறார்களோ என்றுதான் தோன்றுகிறது. காரணம் அபார்ட்மென்டுகளில் உள்ள அலுவலகங்களில் இந்த கேமரா கண்காணிப்பு என்பது ஒரு பெரிய பிரச்னைக்குப் பிறகுதான் நடக்கிறது. இல்லையென்றால் நெடு நாட்களுக்கு ஒரு முறைதான் நடக்கிறது. இதனால் ஆரம்பத்திலே தடுக்கப்பட வேண்டிய பிரச்னைகள் நடந்த பின் வருத்தப்பட வேண்டி இருக்கிறது.

கேமராவை மானிட்டர் செய்ய என்று ஒருவரை வேலைக்கு வைக்க வேண்டும். தினமும் முதல் நாள் என்ன நடந்தது என்பதை அவர் கண்காணிக்க வேண்டும். புதிதாக சந்தேகப்படும்படியாக யார் வந்தார்கள்? ஏன் ஒருவர் பலமுறை லிஃப்ட் உபயோகப்படுத்துகிறார் என்பது போல பல விஷயங்களை கண்காணிக்க முடியும். நிறைய தவறுகள் நடக்க வாய்ப்புள்ள மொட்டை மாடி, லிஃப்ட் போன்ற இடங்களில் கேமராக்கள் அமைக்கப்படுவதில்லை. எங்கள் அபார்ட்மென்டில் ஊருக்குச் சென்றிருந்தவர்களின் பைக்கை யாரோ திருடி விட்டார்கள்.

அவர்கள் ஊரிலிருந்து வந்த பிறகுதான் பைக் காணவில்லை என்ற விஷயம் தெரிந்து கேமராவை செக் செய்து பார்த்தால் ஒரு மாதத்திற்கு முன் அந்த திருட்டு நடந்திருந்தது. அந்த பைக்கை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்போது இந்த சிறுமியின் பிரச்னையிலும் இதுதான் நடந்திருக் கிறது. ஜனவரியில் இருந்து இந்த தவறு நடந்திருக்கிறது. அப்போது இவர்கள் இத்தனை மாதங்களாக கேமராவை கண்காணிக்கவில்லையா? முன்னரே கவனித்திருந்தால் சந்தேகித்திருக்கலாம் இல்லையா? இந்தப் பிரச்னையையும் தடுத்திருக்கலாம்.

கேட்டட் கம்யூனிட்டி அபார்ட்மென்ட்களில் மற்றுமொரு பிரச்னையும் உண்டு. புதிதாக வெளியில் இருந்து வருபவர்களின் பேர், வரும் நேரம், போகும் நேரம், யாரைப் பார்க்க வந்தார்கள் என்று லெட்ஜர் எழுதும் வசதி உண்டு. புதிதாக வருபவர்களை கேள்வி கேட்பார்களே தவிர செக்யூரிட்டிகளுடன் மிகவும் பழக்கமாக உள்ளவர்கள், அவர்களின் நண்பர்கள் இவர்கள் வந்தால் செக்யூரிட்டிகள் அவ்வளவாக கண்டு கொள்ள மாட்டார்கள். இவர்கள் அபார்ட்மென்டில் உள்ள பப்ளிக் டாய்லெட்டை பயன்படுத்துவார்கள்.

செக்யூரிட்டிகளும் நண்பர்கள் தானே என இதனை கண்டுகொள்ள மாட்டார்கள். இரவு நேரங்களில் அவ்வளவாக லெட்ஜர் எழுதப்படுவதில்லை. ஆனால் இரவு நேரங்களில் தானே குற்றங்கள் அதிகமாக நடக்கின்றன? இந்தக் குழந்தைக்கு நடந்த மாதிரியான குற்றங்கள் நடக்காமல் இருக்க கேமரா கண்காணிப்பு மட்டுமின்றி குற்றவாளிகளுக்கு உடனுக்குடன் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.’’

* உஷா ராமகிருஷ்ணன்

‘‘கேட்டட் கம்யூனிட்டியைப் பொறுத்தவரை பாதுகாப்பானது தான். ஆனால் இந்த விஷயத்தைப் பொறுத்தமட்டில் வேலியே பயிரை மேய்ந்தது போல் ஆகிவிட்டது. யார் பார்த்துக்கணுமோ அவங்களே தவறிழைச்சுட்டாங்க. எந்த ஒரு வேலையிலும் நூறு சதவிகித உத்தரவாதம் என்பது எதிர்பார்க்க முடியாத விஷயம். எவ்வளவுதான் பாதுகாப்பு போட்டாலும் அதையும் மீறி சில தவறுகள் நடக்கத்தான் செய்யும். சில சிரமங்கள் இருக்கத்தான் செய்யும்.

அபார்ட்மென்ட் ஒன்றில் 300 குடும்பங்கள் இருக்கின்றன என்றால் அந்த 300 குடும்பத்தில் உள்ளவர்கள் தவிர அந்த குடும்பங்களுக்கு சம்பந்தப்பட்டவர்களும் வருவார்கள். அபார்ட்மென்ட்டில் 4 பிளம்பர்கள் இருப்பார்கள் என்றாலும் ஒரு சிலர் தனிப்பட்ட முறையில் வரவழைப்பார்கள். ஏசி ரிப்பேர் என பல வேலைகளுக்காக தனிப்பட்ட முறையில் சிலரை அழைப்பார்கள். அவற்றைத் தடுக்க முடியாது. 300 குடும்பங்கள் இருக்கும் பட்சத்தில் 300 கார் டிரைவர்கள் இருப்பார்கள். எல்லா தரப்பு மனிதர்களிலும் தவறிழைப்பவர்கள் இருப்பார்கள். நல்லவர்களும் இருப்பார்கள். கெட்டவர்களும் இருப்பார்கள்.

இந்தப் பெண்ணுக்கு நடந்தது உச்சபட்சக் கொடூரம். பெண் குழந்தைகள் தனியாக இருந்தால் பொதுவாக பல இடங்களில் அவர்களிடம் தவறாக நடந்துகொள்வோர் இருக்கின்றனர். அதனால் தனியாக பெண் குழந்தைகள் இருந்தால் 100 சதவிகிதம் பாதுகாப்பு சாத்தியமில்லை. தவறுகள் நடக்கத்தான் செய்கின்றன. என்னைப் பொறுத்தவரை பிள்ளைகள் விளையாடப் போனால் நான் கூடவே இருப்பேன். இல்லை என்றால் அம்மா இருப்பார்.

அப்படி இல்லையென்றால் அக்கம் பக்கம் தோழிகளாக உள்ளவர்களிடம் சொல்லிவிட்டுத்தான் விட்டுப் போவேன். இன்றைக்கு எல்லோரும் சும்மாஇருக்கும் நேரங்களில் மொபைல் பார்க்கிறார்கள். அதில் வரும் தவறான விஷயங்கள் அவர்களது உணர்வுகளை தூண்டிவிட்டு அவர்கள் மனதைப் பாதிக்கிறது. அதனால் இதுபோன்ற சந்தர்ப்பம் கிடைக்கும்போது அவர்களுக்கு தப்பு செய்யத் தோன்றுகிறது.அதனால் என்னதான் பாதுகாப்பு இருந்தாலும் பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகளை பாதுகாத்துக் கொள்வது அவசியம்.’’

* ஸ்ரீஜா வெங்கடேஷ்

‘‘பொதுவாக கேட்டட் கம்யூனிட்டி என்பது மக்களிடம் இருந்து அந்நியப்பட்டிருக்கிறது. உள்ளே இருக்கவங்களுக்குள்ளேயே ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியலை. யார் வீட்டுக்கு யார் வந்தா என்ன? யார் போனா என்ன என்பது போல ஒருத்தருக்கு ஒருத்தர் தனித்தீவுகளாக இருக்காங்க.அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு அடுத்த வீட்டில் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழறாங்க என்பதை பற்றி எதுவுமே தெரிவதில்லை.

யார் இருக்காங்க என்பது பற்றியும் தெரிவதில்லை. சமூகத்துடன் அவர்களுக்கு பெரிய அளவில் தொடர் பிருப்பதில்லை. அந்தத் தெருவிலோ, பக்கத்துத் தெருவிலோ ஒரு விஷயம் நடந்தாலும் அவர்களுக்குத் தெரிவதில்லை. கேட்டட் கம்யூனிட்டியில் பர்சனல் ஸ்பேஸ் மெயின்டெயின் ஆவது உண்மைதான். ஆனால் அது சமூக அளவில் எந்த அளவிற்கு நல்லது என்பது கேள்விக்குறிதான்.’’

* தேன்மொழி தேவி

‘‘ கேட்டட் கம்யூனிட்டி என்பதில் பொதுவாக 300 குடும்பங்கள் இருக்கும். 300 குடும்பம் என்பது ஒரு ஊருக்குச் சமம். நம் கிராமங்களில் யாராவது ஒருத்தர் புதுசா நுழைஞ்சா யார் வீட்டுக்குப் போறீங்கன்னு அந்த ஊர் பெரியவங்க கேட்பாங்க. அது அவங்க வேலையெல்லாம் கிடையாது. அவங்களுக்கு அதுக்கு சம்பளமும் கிடையாது. பல வருடம் கழித்துப்போனாலும் நீ இன்னாருடைய பிள்ளை தானேன்னு கேட்பாங்க. நாம நினைச்சிட்டிருப்போம். அவங்களுக்கு எப்படி நம்மளை தெரியப்போகுதுன்னு.

அவங்க நம்மோட தான் தொடர்பில் இருக்கலையே தவிர நம் பெற்றோர்களோடு அவங்க பேசிக்கொண்டுதான் இருப்பாங்க. உன் பிள்ளைங்க என்ன செய்றாங்கன்னு கேட்டு தெரிஞ்சு வைச்சிருப்பாங்க. அவங்க அனுமதி இல்லாம புதிதாக வந்தவங்க அந்த ஊர் கண்மாயைக் கூட தாண்ட முடியாது. அது ஒரு வகையான அன்பு. ஆனால் கேட்டட் கம்யூனிட்டியில் மெக்கானிக்கலா ரெக்கார்டு மெயின்டெயின் பண்றாங்க. அதில் வர்றவங்க சொல்ற தகவல்கள் எத்தகைய உண்மை தன்மை வாய்ந்ததுன்னு நமக்கெப்படி தெரியும்? 126 நம்பர் வீட்டுக்குப் போறேன்னு சொல்றாங்கன்னு வைச்சிக்கோங்க.

அவங்க பேரை அவங்க எப்படியாவது தெரிஞ்சி வைத்திருக்கலாம். கையெழுத்துப் போட்டுட்டு உள்ளே போய் அவங்க யார் வீட்டுக்கு வேணுமென்றாலும் போகலாம். இங்கதான் அக்கம் பக்கத்தில் இருக்கிறவங்க பற்றி யாரும் கவலைப் படறதில்லையே. பெற்றோர்களுக்குள்ளே கலந்துரையாடல் இல்லை. குழந்தைகளும் அவ்வளவாக சேர்ந்து விளையாடுவதில்லை. இங்க யாரும் வாழலை. மிதந்திட்டிருக்காங்க என்றுதான் சொல்ல வேண்டும்.பிள்ளைகளை வளர்க்கும் விதத்தில் வீண் பெருமை கொள்றாங்க. லிஃப்டில் போகும் போது ஸ்விட்ச் போட்ட மாதிரி போறாங்க.

மரண அஞ்சலி செலுத்துவது போல கைய கட்டிட்டு அமைதியா போறாங்க. ஒருத்தரைப் பார்த்து ஒருத்தர் புன்னகைத்தால்தான் என்ன? ஃபேஸ்புக்கில் யாரென்றே தெரியாத ஒருவரிடம் பல விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் நாம் ஏன் அக்கம் பக்கம் இருப்பவரிடம் விஷயங்களை பகிர்ந்து கொள்வதில்லை? பக்கத்து அக்கத்து வீடுகளில் உள்ளவர்களோடு கருத்துப் பரிமாற்றம், ஒரு விசேஷத்தின் போது உணவு பரிமாற்றங்கள் இருந்த நமது பழைய வாழ்க்கையின் போது நடந்த குற்றங்கள் குறைவு.

இங்கே ஒரு குழந்தை ஏழு மாதங்களாக இத்தகைய நிலைக்கு ஆளாகும்போது, பெற்றவர்களை விடுங்கள், பக்கத்து அக்கத்து வீடுகளில் இருந்தவர்களுக்கும் கூட சந்தேகம் வரவில்லைதானே? ஒருத்தர் கூடவா இந்த தவறுகளை சந்தேகிக்கவில்லை. தொடர்ந்து அந்த குழந்தை ஏன் மொட்டை மாடி, பேஸ்மென்ட், கொடவுன் என்று வரவழைக்கப்பட்டாள் என ஏன் யாருமே கேள்வி கேட்கவில்லை. எல்லாரும் ஒருத்தரோடு ஒருத்தர் நட்போடு இருந்திருந்தால் இத்தகைய செயல்கள் நடந்திருக்காதோ? வாரம் ஒருநாளாவது பெற்றோர்கள் கலந்துரையாட வேண்டும். மொட்டை மாடியில் கூட கெட் டூ கெதர் போல வைத்துக்கொள்ளலாம். பிள்ளைகளை தினமும் கலந்து விளையாட விட வேண்டும்.

விளையாட விட்டுவிட்டு கூடவே உட்கார்ந்து இவனோடு விளையாடாதே… அவனோடு விளையாடாதே என்று சொல்லாதீர்கள். ஒரு வேளை குழந்தைகள் ஒற்றுமையாக தினமும் விளையாடி இருந்தால் இந்த குழந்தைக்கு இந்த நிலைமை வந்திருக்காதோ என்னவோ? ஒரு விசேஷம் என்றால் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களை கூப்பிடுங்கள். நம் குழந்தைகள் மீது மட்டுமல்லாமல் மற்ற குழந்தைகள் மீதும் அக்கறை செலுத்துங்கள். உங்கள் ஈகோக்களை தள்ளி வையுங்கள்.கேட்டட் கம்யூனிட்டி என்ற பெயரில் நமக்கு நாமே சிறை வைத்துக் கொள்கிறோம். அந்த தன்மையை மாற்றினால் இத்தகைய குற்றங்கள் குறைய வாய்ப்புண்டு.’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அதிசக்தி வாய்ந்த புயல் – 17 லட்சம் பேர் வெளியேற உத்தரவு !!(உலக செய்தி)
Next post தாய் – மகன் பாசக்கதையில் நடிக்கும் நேகா !!(சினிமா செய்தி)