By 29 August 2018 0 Comments

லாபகர தொழிலாக மாறும் குழந்தை கடத்தல்!!(மருத்துவம்)

குழந்தை கடத்தல் குறித்து சமீபகாலமாக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்கள் நம்மை அதிர்ச்சிக் குள்ளாக்குகிறது. சிலர் இந்த தகவல்கள் மிகைப்படுத்தப்பட்டவையோ என்று நினைத்தால் அது தவறானது என்பதை மத்திய உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களே நிரூபிக்கின்றன. 2017-18ம் ஆண்டுக்கான மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆண்டு அறிக்கையில் கடந்த 2016ம் ஆண்டு நம் நாட்டில் 54,723 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கிறது. இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 30 சதவீதம் அதிகம். குழந்தைகள் கடத்தல் என்பது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது என்பது இதிலிருந்து தெரியவருகிறது. தமிழகத்தில் 2011-15ம் ஆண்டுகள் வரையிலான நான்கு ஆண்டுகளில் 14,716 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். இதில் பெண் குழந்தைகள் 9,660 ஆகும். பல முயற்சிகளின் பயனாக 14,174 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

மேலும் கடந்த 2016ம் ஆண்டு நிலவரப்படி குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தொடர்பாக 16,958 குற்றவழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் குழந்தை கடத்தல் குறித்து பொதுமக்களிடையே மிகப்பெரிய அச்சம் நிலவி வருகிறது. குழந்தைகள் தொடர்பான பீதி தேசிய அளவில் உலாவர ஆரம்பித்துள்ளது. கடந்த 2 மாதங்களில் குழந்தைகள் கடத்தல் தொடர்பான வதந்தியால் 20 பேர் அடித்துக் கொள்ளப்பட்டுள்ளனர். சமீபத்தில் மஹாராஷ்டிரா மாநிலத்துக்கு வந்த நாடோடி சமூகத்தைச் சேர்ந்த 7 பேரை கிராம மக்கள் குழந்தைகளை கடத்த வந்தவர்கள் என்று கருதி கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளனர். இது பசு பாதுகாப்பு என்ற பெயரால் சட்டத்தை அப்பட்டமாக மீறும் கும்பல் கொலைகாரர்களின் கொலை வெறி நடவடிக்கைகள் ஆகும் என்று பலர் சந்தேகிக்கின்றனர்.

மஹாராஷ்டிராவின் மாலேகான் பகுதியில் ஒரே குடும்பத்தை சார்ந்த 5 பேர் தாக்கப்பட்டனர். அதேபோல் அசாம், திரிபுரா, உத்தரப் பிரதேசத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த ஏப்ரல், மே மாதத்தில் மட்டும் தமிழகத்தில் 5 வடமாநில இளைஞர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் கொலை செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் சென்னை பழைய பல்லாவரத்தை சேர்ந்த ருக்மணி என்ற பெண் குடும்பத்தாருடன் காரில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே தண்ணீர்குளம் என்ற இடத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு வந்தபோது கிராமத்தில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளுக்கு சாக்லெட் கொடுக்க, அங்கு திரண்ட கிராம மக்கள் ருக்மணி உட்பட காரில் இருந்த 5 பேரையும் குழந்தைகள் கடத்த வந்த கும்பல் என்று நினைத்து சரமாரியாக தாக்கினர். அதில் ருக்மணி இறந்ததால் பிரச்சனை பரபரப்பானது.

சென்னை அடுத்த பழவேற்காட்டில் வட மாநில வாலிபர் ஒருவரை குழந்தைக் கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என்று கூறி அடித்துக் கொன்றுவிட்டனர். தொடர்ந்து நடக்கும் இத்தகைய சம்பவங்களைப் பார்த்த சில வடநாட்டினர் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்ப தொடங்கிவிட்டனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது வாட்ஸ் ஆப் மூலம்தான் குழந்தை கடத்தல் வதந்திகள் பரவி வருகின்றன. அப்படி வதந்திகளை பரப்புபவர்கள் மீது சைபர் கிரைம் சட்டத்தின்படி துரித நடவடிக்கை எடுப்பதற்கு காவல்துறை கவனம் செலுத்திட வேண்டும். குழந்தைகள் கடத்தல் இன்றைய அரசியல் சூழலில் மிக முக்கிய பிரச்சனையாக மாறியுள்ளது. குழந்தைக் கடத்தலை குறிவைக்கும் சமூக விரோதிகள் பிளாட்பாரங்களில் வசிக்கும் பிள்ளைகள், அரசு மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் கோவில்கள் போன்ற மக்கள் நெருக்கம் அதிகமுள்ள இடங்களை தேர்வு செய்கின்றனர்.

குறிப்பாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து போன்ற வெளிநாடுகளுக்கும், இந்தியாவில் மஹாராஷ்ட்டிரா, கொல்கத்தா, பீகார், சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களுக்கும் தமிழகத்தில் சென்னை, கிருஷ்ணகிரி, வேலூர் போன்ற நகரங்களுக்கும் குழந்தைகள் அதிகமாக கடத்தப்படுகின்றனர். குழந்தைகள் கடத்தலில் மஹாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் மாநிலங்களுக்கு அடுத்த இடத்தில் தமிழகம் உள்ளது. குழந்தைக் கடத்தலை ஒரு தொழிலாகவும், லாபகரமான வியாபாரமாகவும் சமூக விரோத கும்பல்கள் செய்து வருகின்றன என்று ஆதங்கப்படுகிறார்கள் சமூக ஆர்வலர்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் வயது, அழகு, உடல் அமைப்பை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என்று தகவல்கள் வெளிவருகின்றன. 1000லிருந்து பல லட்சம் வரை இதன் விலை மாறுபடுகிறது. கடத்தப்பட்ட எந்த குழந்தையையும் ஓர் ஆண்டுக்கு மேல் ஓர் இடத்தில் வைத் திருப்பது இல்லை. வெளிநாடுகளுக்கு குழந்தைகளை கடத்தி விட்டால் மீட்பதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது.

கடத்தப்படும் பச்சிளம் குழந்தைகளுக்கு போதை மருந்தை கொடுத்து எப்போதும் மயக்க நிலையிலேயே வைத்திருக்கிறார்கள். மயங்கிய குழந்தையை சுமந்தபடி கையேந்தி பொதுமக்களின் பரிதாபத்தைத் தூண்டி பிச்சை எடுப்பதுதான் இந்தக் கும்பலின் தொழில். இன்னொன்று குழந்தைகளை முறையாக வளர்த்தெடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது என்பது மற்றொரு தொழில். இந்நிலையில் குழந்தைக் கடத்தலை தடுப்பதில் பெற்றோர்களின் பொறுப்பும் அக்கறையும் அவசியமாகிறது. அரசும் இன்னும் விரிவான முறையில் குழந்தை கடத்தலை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இல்லையெனில் குழந்தை கடத்தல் என்பது தொடர்கதையாக மாறி சமூக விரோத கும்பல்களின் லாபகரமான வியாபாரமாக தொடரும் ஆபத்து ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.Post a Comment

Protected by WP Anti Spam