By 2 September 2018 0 Comments

ஹெல்த் காலண்டர்(மருத்துவம்)

ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச அளவில் உலகக் கொசு தினம்(World Mosquito Day) ஆகஸ்ட் 20-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. பெண் கொசுக்கள் மலேரியாவை மனிதர்களுக்குப் பரப்புகிறது என்பதை 1897-ம் ஆண்டு மருத்துவர் சர். ரொனால்ட்ரோஸ் என்பவர் கண்டுபிடித்தார். அவரை நினைவுகூர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த சிறப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.

மழைக்காலமானது கொசு பெருகி பல நோய்களைப் பரப்புவதற்கு ஏற்றதாக இருக்கிறது. உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான கொசு வகைகள் உள்ளன. அவற்றில் சில மட்டுமே அதிக ஆபத்தானவை. ஆண் கொசுக்கள் தேனையும், பெண் கொசுக்கள் ரத்தத்தையும் தங்கள் உணவாக எடுத்துக்கொள்கின்றன. ரத்தத்தை உறிஞ்சும்போது பெண் கொசுக்கள் உயிருக்கு ஆபத்தான நோய்களை உண்டாக்கும் கிருமிகளைப் பரப்புகின்றன.

ஒரு சிறிய கொசுக்கடி பெரிய ஆபத்துகள் உருவாக வழிவகுக்கிறது. கொசுக்கடியால் மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா, ஜப்பானிய மூளையழற்சி, யானைக்கால் நோய், மஞ்சள் காய்ச்சல், சிக்கா வைரஸ் போன்ற உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் நோய்கள் இதன் மூலம் ஏற்படலாம்.
கொசுக்கடியைத் தடுக்க கொசுவலை மற்றும் கொசுவிரட்டி பயன்படுத்துவதே அதிக செலவற்ற தடுப்பு முறைகளாக உள்ளது. நமது சுற்றுப்புறத்திலுள்ள பொருட்களில் நீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

நீர் தேங்கும் குட்டைகளிலும் திறந்த வெளிகளிலும் மண்ணெண்ணெய் தெளித்தும் கொசு பெருகுவதைத் தடுக்கலாம்.நாம் ஒவ்வொருவரும் விழிப்புணர்வோடு இந்த நடைமுறைகளைப் பின்பற்றினால் கொசுவால் பரவும் நோய்களைத் தடுக்கலாம். அரசு எடுக்கக்கூடிய முன்முயற்சிகளை நாம் ஆதரிப்பதும் அவசியம்.

கண்தானம் குறித்த விழிப்புணர்வினை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்டு மாதம் 25 முதல் செப்டம்பர் மாதம் 8-ம் தேதி வரை தேசிய கண்தான இருவாரமாக (National Eye Donation Fortnight) இந்தியாவில் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

பார்வையின்மையைக் குறைப்பதோடு அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது, மரணத்திற்குப் பின்னர் கண்தானம் செய்ய உறுதியெடுக்கும்படி மக்களை ஊக்கப்படுத்துவது மற்றும் கண்தான விழிப்புணர்வினை அதிகரிப்பது போன்றவற்றை முக்கிய நோக்கமாகக் கொண்டு கண் தான இருவாரம் அனுசரிக்கப்படுகிறது.

வளர்ந்து வரும் நாடுகளில் பார்வையிழப்பு என்பது ஒரு பெரும் சுகாதாரப் பிரச்னையாக உள்ளது. உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரப்படி கண்புரை, கண்ணழுத்த நோய்களுக்கு அடுத்தபடியாக, கண்ணின் முன்பகுதித் திசுக்கள் சேதமடைவதால் ஏற்படும் கருவிழிப்படல நோய்களே(Corneal Blindness) கண் பார்வையிழப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது.

இந்த Corneal Blindness பிரச்னையானது குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ குறைபாடு, தொற்றுகள், பிறப்புக் குறைபாடு மற்றும் பல்வேறு காரணங்களால் கண்ணில் ஏற்படும் காயங்களாலும் ஏற்படுகிறது. பெரியவர்களுக்கு தொற்றுகள், காயங்கள் மற்றும் கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ஏற்படும் பார்வையிழப்பு போன்றவற்றால் இது ஏற்படுகிறது.

தானம் செய்வதில் இருக்கும் பிரச்னை விழிப்புணர்வின்மை, மருத்துவமனைகளில் போதிய வசதியின்மை, கண் தானம் பற்றிய பயம் போன்ற காரணங்களால் கண்களை தானம் செய்ய பரவலாக முன்வராத சூழல் உள்ளது. நம் நாட்டில் கண்பார்வை குறைபாடுடைய 95 சதவிகிதம் பேர் எளிதில் குணப்படுத்தக்கூடியவர்களே. கண் திசுக்களை தானம் பெறுவது, அதை சரியான முறையில் செயல்படுத்துவது மற்றும் நவீன வசதிகளை அதிகப்படுத்துவதன் மூலம் இந்தக் குறைபாட்டை சரிசெய்ய முடியும்.

வெற்றிகரமான உறுப்பு தானம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை களில் 95 சதவிகிதம் வெற்றிகரமாக நடைபெறுவது கண் அறுவை சிகிச்சைகளே! ஒரு நபர் உயிருடன் இருக்கையில் தன் கண்களை தானம் செய்வது சட்டப்படி இயலாத ஒன்று. எனவே, ஒருவருடைய மரணத்திற்குப் பின் கண்களை தானமாக வழங்குவதே கண் தானம்.

இந்தியாவிலுள்ள மருத்துவமனைகளில் நடக்கும் மரணங்களின்போது, உறவினர்களின் ஒப்புதலோடு இறந்தவரின் கண்களை தானம் பெறும் முயற்சியை மருத்துவமனைகள் மேற்கொள்ளலாம். நம் நாட்டில் விபத்தில் மட்டும் ஓர் ஆண்டுக்கு லட்சக்கணக்கானோர் இறக்கின்றனர்.

விபத்துகள் காவல்துறை வழக்குகள் சம்பந்தப்பட்டவை என்பதால் பல்வேறு நடைமுறைகள் முடிந்து 6 மணி நேரத்திற்குள் கண்களை தானம் பெற முடியாத நிலை உள்ளது. இப்படி இறப்பவர்களின் கண்களை 6 மணி நேரத்திற்குள் தானம் பெறும் வகையில் உரிய மாற்றங்களை அரசு மேற்கொண்டால் கண்தான பற்றாக்குறையைக் குறைக்க அது பெரும் உதவியாக இருக்கும்.

கண் தானம் செய்வது எப்படி?

கண்தானம் செய்ய விரும்பினால், ஏதேனும் கண் வங்கி அல்லது கண் மருத்துவமனையில் பதிவு செய்ய வேண்டும். அப்படி பதிவு செய்த நபர் இறந்த பிறகு உடனடியாக அந்த கண் வங்கி அல்லது மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். (ஒரு நபர் இறந்த பிறகு மட்டுமே கண் தானம் செய்ய முடியும். அந்த நபர் உயிருடன் இருக்கும்போதே, அதற்கான உறுதிமொழி படிவத்தை அருகிலுள்ள கண் வங்கியில் கொடுத்து வைக்கலாம்.)

மேலும் இந்த தகவலை குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடம் தெரிவித்து, கண் வங்கியின் தொலைபேசி எண்ணையும் அவர்களிடம் கொடுத்து வைத்திருந்தால் இறந்த பிறகு கண்தானம் பெறுவதற்கு உதவியாக இருக்கும். அருகிலுள்ள கண் வங்கியை அணுக நாடு முழுவதற்குமான தொலைபேசி உதவி எண்ணான 1919 இருபத்து நான்கு மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. கண் தான உறுதிமொழியை எந்த வயதிலும் அளிக்கலாம்.

கண் தானம் செய்வதற்கு ஏற்கெனவே உறுதிமொழி கொடுக்காவிட்டாலும், இறந்த நபரின் உறவினர்கள் விரும்பினால் கண் வங்கியை தொலைபேசியின் மூலம் உடனடியாக அணுகி அதற்கான விதிமுறைகளின்படி கண் தானம் செய்யலாம். கண் கொடையாளர் இறந்தவுடன்
என்ன செய்ய வேண்டும்?

கண் கொடையாளர் இறந்தவுடன் கண் வங்கிக்கு தகவல் கொடுத்த பின்னர், அந்த குழுவினர் வந்து அவரது உடலிலிருந்து கண்களை எடுக்கும் வரை அவற்றைப் பாதுகாப்பது மிகவும் அவசியம். கண் வங்கிக் குழுவினர் கண் கொடையாளரின் வீட்டுக்கு அல்லது மரணம் நடைபெற்ற மருத்துவமனைக்கு சென்று, அவருடைய கருவிழிப்படலத்தினை எடுத்துக் கொள்வார்கள். இறந்தவரின் உடலிலிருந்து கண்களை அகற்ற 15 முதல் 20 நிமிடங்களே தேவைப்படும்.

கண் தானத்தால் முகம் சிதைவடையுமா?

கண் தானத்தால் முகம் சிதைவடையும் என்பது ஒரு கட்டுக்கதையே. கருவிழிப்படலத்தை அகற்றுவதால் எந்தச் சிதைவும் ஏற்படாது. கண்கோளம் அகற்றப்பட்ட பின் ஒரு ஒளிபுகும் கண் மூடி அதற்குப் பதிலாக வைக்கப்படுவதால் முகத்தில் எந்த உருக்குலைவும் ஏற்படாது. தேவைப்பட்டால் செயற்கைக் கண்களைகூட பொருத்திக் கொள்ளலாம்.

கண் தானத்திற்கு கட்டணம் உண்டா?

கண் மாற்று சிகிச்சைக்கு ஆகும் செலவுகளை கண் வங்கி ஏற்றுக்கொள்வதால் தானம் அளிப்பவர் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. மனித கண்கள், உடல் உறுப்புகள் அல்லது திசுக்களை விலை கொடுத்து வாங்குவதோ விற்பதோ சட்டப்படி குற்றம் என்பதை நாம் அனைவரும் நினைவில் கொள்வது அவசியம்.

கண் தானம் செய்வதற்கான நிபந்தனைகள்

கண் தானம் என்கிற உன்னதமான செயலை வயது, பாலினம், ரத்த வகை அல்லது மத வேறுபாடுகளைக் கடந்து யார் வேண்டுமானாலும் செய்யலாம். கிட்ட அல்லது தூரப் பார்வைகளுக்காக கண்ணாடி அல்லது ஒட்டுவில்லை(Contact lens) அணிபவர்களும், கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும்கூட கண் தானம் செய்யலாம். நீரிழிவு நோயாளி அல்லது ரத்த அழுத்தம், ஆஸ்துமா நோயாளிகளும் கண் தானம் செய்யலாம். கண்புரை உள்ளவர்களும் கண்தானம் செய்யலாம். ஆனால், தொற்று நோயுள்ளவர்கள் கண்தானம் செய்ய இயலாது.

எய்ட்ஸ், கல்லீரல் அழற்சி, ஹெப்படைட்டிஸ் பி & சி, வெறிநாய்க்கடி, பாம்புக்கடி, நரம்பியல் பிரச்னைகள், மலேரியா, டெங்கு போன்ற தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஒரு நபர் இறந்ததற்கான சரியான காரணம் அறிய முடியாத நிலையில் இருப்பவர்களும் கண் தானம் செய்ய முடியாது.

கண் தான விழிப்புணர்வை அதிகரிக்க அரசு, தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம். ஒரு நபர் இறந்த பிறகு அவரது உடலை மண்ணில் புதைத்து, அதனால் அரிக்கப்பட்டோ அல்லது தீயினால் எரிக்கப்படும்போதோ எவ்வித பலனுமின்றி போகக்கூடிய அந்த நபரின் ஆரோக்கியமான இரு கண்களை தானமாக கொடுப்பதால், வாழும் நான்கு பேரின் வாழ்வில் ஒளியேற்ற முடியும்.

சோரியாசிஸ் நோயைக் கட்டுப்படுத்துவதோடு இந்நோய் குறித்த முழுமையான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் மாதம் தேசிய சோரியாசிஸ் விழிப்புணர்வு மாதமாக (Psoriasis Awareness Month) அனுசரிக்கப்படுகிறது.

சோரியாசிஸ் என்பது வறண்ட சருமம் போல் வெளிப்புற காரணிகளால் ஏற்படுவது அல்ல. சோரியாசிஸ் என்னும் சொரி சிரங்கு, உடலில் நீண்ட நாட்களாக வளரும் ஒரு நோய்த் தொற்று.

நீரிழிவு, கீல்வாதம், மன அழுத்தம் போன்ற காரணிகளால் இந்நோய் ஏற்படுகிறது. உடலின் எதிர்ப்பு சக்தி, தேவையற்ற இடங்களில் அதிக சருமச் செல்களை உருவாக்கக்கூறி தவறுதலாக மூளைக்கு தகவல் அனுப்புவதன் மூலம் இந்நோய் ஏற்படுகிறது. மூன்றில் ஒரு பங்கு சோரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் நெருங்கிய உறவுக்காரர்களுக்கும் இந்நோய் இருப்பதாகவும், அதனால் இவர்களுக்கும் வந்துள்ளதாகவும் மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தோல் வெடிப்புகளை பற்றி பேசும்போது, பாதங்களில் ஏற்படும் வெடிப்பை பற்றியும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். பெரும்பாலும் சோரியாசிஸ் என்பது கொப்பளம் போல் புண்களாக இருக்கிறது.

இந்நோய் உடலில் அதிகளவு தோல் உற்பத்தியாவதால் ஏற்படுகிறது. பொதுவாக உச்சந்தலை, கை, கால் முட்டிகள், பாதங்களில்தான் சோரியாசிஸ் வருவதாக கூறப்படுகிறது. 80 முதல் 90 சதவிகித சோரியாசிஸ் நோயாளிகளுக்கு படர், சிரங்கு பிரச்னைகள் ஏற்படுகிறது. வறண்ட சருமமும் சோரியாசிஸ் நோயும் ஒன்று போலவே முதலில் தோன்றினாலும், சோரியாசிஸ் என்பது அதிகப்படியான அரிப்பு, எரிச்சலை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

சோரியாசிஸ் அறிகுறிகள்

குளிர் மற்றும் வெயில் காலங்களில் எல்லோருடைய சருமமும் சற்று வறண்டு போய் வெடிப்புகளாக காட்சியளிக்கும். முகத்தில் கூட தோல் வறண்டு, திட்டு திட்டாகத் தெரிவதோடு, கை, கால் பகுதிகளிலும் தோல் வறண்டு, அரிப்பு ஏற்படுவது போன்ற உணர்வைத் தரும். சோரியாசிஸ் எனப்படும் சொரி சிரங்கும் இதே அறிகுறிகளை கொண்டுள்ளதால், உங்களுக்கு இருப்பது வெறும் வறண்ட தோல்தானா அல்லது சோரியாசிஸா என்பதை தெரிந்துகொள்வது அவசியம்.

குளிர்ந்த வானிலை, காற்றில் குறைந்த நீர்ப்பதம், அதிகமாக தண்ணீரால் கழுவுவது, கடினமான சரும பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்துவது, அதிக நேரம் கொதிக்கும் நீரில் குளிப்பது, அதிவேகமாக காற்று தொடர்ந்து வீசுவது போன்ற காரணங்களால் சரும வறட்சி ஏற்படுகிறது. மேலும் போதிய அளவு ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளாமல் இருப்பது, தேவையான அளவு நீர் உட்கொள்ளாதது, தைராய்டு பிரச்னையால் வருவது போன்ற பல காரணிகள் சருமத்தை வறண்டு போகச் செய்கின்றன.

சோரியாசிஸ் சிகிச்சை

சோரியாசிஸ்க்கு இன்னும் நிரந்தரத் தீர்வு கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், அதை போதிய அளவு குறைக்க வழிமுறைகள் உள்ளது. வளராமல் தடுத்து இந்நோயை நாம் கட்டுக்குள் வைக்க வேண்டும்.

மருத்துவரை அணுகி நம் உடல்வாகிற்கு ஏற்ற சரும பாதுகாப்பு கிரீம்களை பயன்படுத்துவது அவசியம். மேலும் தீவிர சிரங்கு, படர் ஏற்பட்டவர்கள் மாத்திரைகள் மற்றும் ஊசிகள் போட்டுக்கொள்ள நேரிடலாம். எனவே, மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.

சோரியாசிஸ் உள்ளவர்கள் பெரும்பாலும் உணவு பழக்கத்திலேயே அவற்றைக் கட்டுப்படுத்தலாம். ஒமேகா 3 அமிலங்கள் இருக்கும் கொட்டை வகைகள், விதைகள், மீன் போன்றவற்றை உண்பது மிகவும் நல்லது. வைட்டமின் டி அதிகமுள்ள செறிவூட்டப்பட்ட பால், ஆரஞ்சு பழச்சாறு, முட்டைக்கரு மற்றும் தயிர் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. தயிர் பெருமளவு சோரியாசிஸை கட்டுப்படுத்த தேவையான சத்துக்களை உடலுக்கு அளிப்பதால் அதை அதிகளவு உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.Post a Comment

Protected by WP Anti Spam