By 4 September 2018 0 Comments

உலக சாம்பியன்களான தெருவோரக் குழந்தைகள் அலட்சியப்படுத்தும் அரசு!!(மகளிர் பக்கம்)

உலக நாடுகளில் கால்பந்து போட்டி அதிக ரசிகர்களை கொண்டுள்ள விளையாட்டாக இருக்கிறது. உலகம் முழுவதும் தெருக்களில் வாழும் சிறுவர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது.

(FIFA) கமிட்டியின் விதிகளைப் பின்பற்றி இந்தப் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த போட்டியில் சென்னையின் இருக்கும் தெருவோரவாழ் சிறுமிகள் இந்தியா சார்பாக விளையாடி கோப்பையை வென்றுள்ளனர்.இந்த ஆண்டு ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் போட்டிகள் தொடங்கின‌. மே 17-ம் தேதி வரை போட்டிகள் நடைபெற்றன. இதில் 14 வயது முதல் 17 வயது வரையிலான சிறுவர்- சிறுமிகள் பங்கேற்றனர். 29 நாடுகளிலிருந்து சுமார் 250-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் விளையாடுவதற்கு, ஒன்பது தெருவோர சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளைக் கருணாலயா தொண்டு நிறுவனம் செய்தது.

இந்தச் சிறுமிகளில் நான்கு பேர் சென்னையில் தெருவோரங்களிலும், மற்றவர்கள் குழந்தைத் தொழிலாளராக மீட்கப்பட்ட‌வர்கள். தற்போது தொண்டு நிறுவனத்தின் பராமரிப்பிலும் வளர்கின்றனர்.உலக அளவில் கவனம் பெற்ற இந்த வீரர்கள் தன் சொந்த நாடான இந்திய நாட்டின் மத்திய,மாநில அரசுகளின் கவனத்தில் மட்டும் படாதது ஆச்சரியமாக இருக்கிறது.தங்க இடமில்லை, சுத்தமான குடிநீர் இல்லை, ஊட்டச்சத்து நிறைந்த உணவு இல்லை, கல்வி இல்லை. பாதுகாப்பும் இல்லாத சூழலில்தான் தெருவோரத்தில் வாழும் மக்களும், அவர்களின் குழந்தைகளின் எதிர்காலமும் இருக்கிறது. இத்தனை போராட்டங்களைக் கடந்து இந்தச் சிறுமிகள் 9 பேரும் உலகத்தின் கவனத்தை தங்கள் பக்கம் ஈர்த்துள்ளனர்

வெற்றியைக் குறித்தும், தங்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் குறித்து பகிர்ந்து கொள்கிறார்கள் இந்த உலக சாம்பியன்கள். இந்திய அணியின் கேப்டனாக இருந்து வழிநடத்திய 17 வயதான சங்கீதா பேசுகையில்“ நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் இருக்கும் வால்டாக்ஸ் சாலை ஓரத்தில்தான். அப்பா குடிப்பழக்கத்தால் சிறுவயதிலேயே இறந்து விட்டார். அம்மா தான் என்னையும் என் சகோதரியையும் வளர்த்து வருகிறார். குடும்ப வறுமை காரணமாக 9 ஆம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குச் சென்றேன். எங்கள் பகுதிக்கு கருணாலயா அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் வகுப்பு எடுக்க வருவார்கள். எங்களுக்கான உரிமைகளை பற்றி சொல்லி கொடுப்பார்கள். அவர்கள் நான் வேலைக்குச் செல்வதை பார்த்து மீண்டும் நீ பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றனர். பொருளாதாரச் சூழ்நிலை கருதி பள்ளிக்குச் செல்லத் தயங்கினேன். அம்மாவிடமும், என்னிடமும் தொடர்ந்து பேசி என்னை பள்ளியில் சேர்த்தனர். விருப்பம் இல்லாமலே பள்ளிக்கு சென்று வந்தேன். அந்த நேர்த்தில்தான் கருணாலயாவில் சிறுவர்களுக்கான கால்பந்து பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன‌.

எனக்கும் விளையாடவேண்டும் என்கிற ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் கருணாலயாவில் படிப்பில் கவனம் செலுத்தினால் மட்டுமே விளையாட முடியும் என்று நிபந்தனை விதித்தனர். இதனால் படிப்பிலும் ஆர்வம் செலுத்தினேன். பயிற்சியிலும் ஈடுபட்டேன். பொதுவாக விளையாட்டு வீரர்கள் எல்லாம் சத்தான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் உட்கொண்டு உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொண்டிருப்பார்கள். எங்கள் நிலைமையே அதற்கு அப்படியே நேர் எதிராக இருந்தது. நான் உட்பட எங்கள் பகுதியில் இருக்கும் அனைவருக்குமே நல்ல உணவு, உடை, சுத்தமான குடிநீர் கிடைப்பது இல்லை. மழை வந்தால் ஒதுங்கி ஓர் ஓரமாய் நின்று கொண்டிருப்போமே தவிர‌ தூங்க முடியாது.

தெருவேரத்தில் இருப்பதால் சிலர் எங்களை இழிவுபடுத்திப் பேசுவார்கள். எங்கோ நடக்கும் தவறுக்கு இரவு எத்தனை மணி என்றாலும் காவல்துறையினர் எங்கள் பகுதியில் இருப்பவர்களை விசாரணை என்ற பெயரில் அழைத்துச்செல்வார்கள். தெருவோரத்தில் இருப்பதால் இங்கிருக்கும் பெண்கள் பாலியல் தொழிலில் இருப்பவர்கள் என்று இவர்களே மதிப்பிட்டுகொள்கிறார்கள்.இத்தனை போராட்டங்களையும் எதிர்கொண்டிருந்த வேலையில் தான் கருணாலயா அறக்கட்டளைமூலம் என் வாழ்க்கை மாறியது.கால்பந்து பயிற்சி பெற எங்களுக்கு நல்ல மைதானம் கிடைக்கவில்லை. ஒரு சிறிய இடத்தில் பயிற்சி பெற்றோம்.உலகக் கோப்பை விளையாட ரஷ்யா செல்லவேண்டும். அதற்காக பாஸ்போர்ட் எடுக்க வேண்டும். ஏற்கனவே இருகின்ற பிரச்சனையில் உருவானது புதிய பிரச்சனை.

மருத்துவமனையில் பிறக்காததால் எனக்கு பிறப்புச் சான்றிதழ் கிடையாது. நாங்கள் இந்த மண்ணுக்கானவர்கள்தான் என்பதை நிரூபிப்பதே பெரிய சவாலாக இருக்கிறது.ஆதார் அட்டை கிடையாது. எடுக்கச் சென்றால் தெருவில் இருந்து வருகிறவர்கள் என்பதால் ஏள‌னமாக பேசுகிறார்கள் அதிகாரிகள். தங்குவதற்கே இடமில்லாமல்தான் தெருவில் இருக்கிறோம். இது தெரிந்தும் அதைக் கொண்டுவா இதைக் கொண்டுவா என்று காலம் கடத்துவதையே நோக்கமாக வைத்துள்ளனர்.எங்கள் 9 பேருக்கும் கருணாலயா அறக்கட்டளைதான் பாஸ்ட்போர்ட் எடுக்க தேவையான அனைத்து வேலைகளையும் செய்து கொடுத்தனர். அவர்களுக்கு இது பெரும் போராட்டமாக இருந்தது.

இங்கிருந்து போகும்போது எங்களுக்கு வாழ்த்து சொல்லக்கூட இந்த அரசு தயாராக இல்லை. ஆனால் ரஷ்யாவில் மொழிதெரியாத மனிதர்கள் அன்போடு வரவேற்றனர். 10 நாட்கள் நாங்கள் ரஷ்யாவில் தங்கினோம். தினமும் மாலையில் தெருவோரக் குழந்தைகளுக்கான கருத்தரங்கம் நடந்தது. அந்தக் கருத்தரங்கில் இந்தியாவில் தெருவோர‌ மக்கள் சந்திக்கின்ற பிரச்சனைகள், என்னவென்று நாங்கள் ஒவ்வொருவரும் பேசினோம். இங்கு இருக்கும் அரசு அதிகாரிகளுக்கு சொல்லிச் சொல்லி எந்தக் குறையும் தீரவில்லை. உலக அரங்கில்ல் எங்களின் பிரச்சனைகளை முன்வைத்திருக்கிறோம். அதற்கு இந்த கால்பந்து போட்டி பெரிதும் உதவி செய்திருக்கிறது.

அங்கு போட்டி கொஞ்சம் கடினமாக இருந்தது. இங்கு நாங்கள் மண் தரையில் பயிற்சி பெற்றோம் அந்த மைதானத்தில் விளையாடுவதில் சிக்கல் இருந்தது. போட்டியாளர்கள் அனைவரும் வலுவாக இருந்தார்கள் எதிர்கொள்ள கொஞ்சம் கடினமாக இருந்தது. எங்களுக்கு இங்கு போதிய ஊட்டச்சத்து உணவு கிடைக்கவில்லை. தெருவோரம் வாழும் எங்களுக்கு பெரும்பாலும் தெருவோரக் கடைகளில்தான் உணவு உண்டு வாழ்நாளை கழித்து வருகிறோம். இந்த கடினமான சூழலிலும் நாங்கள் சந்தித்த அவமானங்கள், போராட்டங்கள் எல்லாம் ஜெயிக்க வேண்டும் என்கிற உத்வேகத்தைக் கொடுத்தது. வெற்றியும் பெற்றோம். எனக்கு ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்று ஆசை. நிலமற்றவர்களுக்கு அவர்கள் இருக்கும் பகுதியிலே வீடு கொடுக்க வேண்டும். தெருவோர‌வாழ் மக்களின் முன்னேற்றத்திற்காக என்னுடைய பணியை தொட‌ங்குவேன்” என்று நம்பிக்கையோடு பேசினார்..

இவரைத் தொடர்ந்து 10ஆம் வகுப்பு படிக்கும் தமிழரசி பேசியபோது“திண்டிவனம் என்னுடைய சொந்த ஊர், சின்ன வயதிலே அம்மாவும் அப்பாவையும் பிரிந்து விட்டேன். அதனால் அம்மா, அப்பா பாசம் எனக்கு கிடைக்கவில்லை. சித்தியோடு சென்னை திருவெற்றியூருக்கு நானும் தங்கையும் வந்துவிட்டோம். 6 வகுப்பு வரை படித்தேன். குடும்ப வறுமை காரணமாக சித்தியோடு வேலைக்கு சென்றேன். படிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை ஆனால் சித்தியால் என்னையும்,தங்கையையும் கவனித்துக்கொள்ள முடியவில்லை. தாம்பரத்தில் உள்ள ஒரு விடுதியில் சேர்த்தார். ஆனால் அங்கு எங்களுக்கு பாதுகாப்பு இல்லை நீண்ட நேரம் வேலை வாங்குவார்கள், சாப்பாடு சரியா இருக்காது. கழிவு நீர் தேங்கி இருக்கும் இடத்தில் அமர்ந்து சாப்பிட சொல்வார்கள். எனக்கு பிடிக்கவே இல்லை. சித்தியிடம் சொன்னேன். அவர் சிலரிடம் விசாரித்து கருணாலயாவில் சேர்த்தார்.

இங்கேயே தங்கி படித்து வருகிறேன். பாஸ்போர்ட் கிடைப்பதில் ஏகப்பட்ட சிக்கல் ஏற்பட்டது. பெற்றோரை கூட்டிகொண்டு வந்தால்தான் கிடைக்கும் என்றார்கள். அறக்கட்டளையைச் சேர்ந்த நிர்வாகிகள் மிகவும் சிர‌மப்பட்டு என் அப்பாவை தேடி கண்டு பிடித்து, அவருக்கும் ஆதார் கார்டு எடுத்து அதற்கு பிறகு எனக்கு ஆதார் எடுத்து பாஸ்போர்ட் எடுத்தனர். எனக்கு முதல் முறை விமானத்தில் போகப்போகிறோம் என்றதும் அளவில்லா மகிழ்ச்சி. முதலில் விமானம் புறப்படும் போது பயம் இருந்தது. இறங்கும்போது கொஞ்சம் பயம் இருந்தது. நம் நாட்டிற்கும் அந்த நாட்டிற்கு நிறைய வித்தியாசம் இருக்கிறது. அங்கு எந்த இடத்திலும் குப்பைகளை பார்க்க முடியவில்லை. மக்கள் எல்லாம் இந்திய அணி வருகிறது என்று எங்களை ஆரவாரத்தோடு வரவேற்றனர். மொழி தெரியவில்லை என்றாலும் எங்களோடு பேசுவதற்கு அவர்கள் அவ்வளவு ஆர்வமாக இருந்தார்கள். எனக்கு அந்த நாடு மிகவும் பிடித்திருந்தது. ரஷ்யாவில் நம்முடைய பாரம்பரிய உடை அணிந்து சில இடங்களை சுற்றி பார்த்தோம், அப்போது அந்த நாட்டை சேர்ந்தவர்கள் பலர் எங்களை ஆச்சரியமாக பார்த்தார்கள் எங்களோடு செல்ஃபி எடுத்துக்கொண்டார்கள்.

போட்டியின்போது சிறிய பயம் இருந்தது. புது இடம் புதிய போட்டியாளர்கள், புதிய மைதானம் இருந்தாலும் தன்னம்பிக்கையுடனே கள‌த்தில் இறங்கினோம். விளையாடும்போது எங்கள் அணியை சேர்ந்தவர்களுக்கு பலத்த காயம்கூட ஏற்பட்டது. நன்றாக விளையாடி வெற்றி பெற்றோம். அந்தக் கோப்பையை வாங்கும் போது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி. வந்திருந்த அனைத்து நாட்டினரும் எங்களை பாராட்டினார்கள் நாங்கள் நன்றாக விளையாடினோம் என்றார்கள். இந்தியாவில்தான் அரசுதரப்பில் இருந்து யாரும் கண்டுகொள்ளவில்லை. தமிழ்நாட்டில் ஒரு அரசு இருக்கிறதா என்று கூட தெரியவில்லை.எனக்கு வழக்கறிஞர் ஆக வேண்டும் என்பது கனவு. என்னை போல இருக்கும் பெற்றவர்களை இழந்த பிள்ளைகளுக்கும், தெருவோர மக்களுக்கும் அவர்களுக்கான உரிமையை சட்டத்தின் வழி நின்று பெற்ற தர வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்.” என்கிறார் தமிழரசி.

இவரை தொடர்ந்து பேசிய ஷாலினி“என்னுடைய சொந்த ஊர் திருச்சி நான் கைக்குழந்தையாக இருக்கும்போது நாங்கள் சென்னை வந்ததாக அப்பா சொல்லுவார். சாலை ஓரத்தில்தான் தங்கி இருந்தோம். நான் கொஞ்சம் வளர்ந்த பிறகு தெருவோரத்தில் இருப்பதை நினைத்து வருத்தப்பட்டிருக்கிறேன். அம்மாவும், அப்பாவும் குப்பை பொறுக்கும் வேலை பார்க்கிறார்கள். ஒரு முறை என்னுடைய அம்மாவிற்கு வேலை பார்க்கும்போது 12 ஆயிரம் பணம் கிடைத்தது. அதை எங்கள் உறவினர் ஒருவரிடம் கொண்டுபோய் கொடுத்தார். அதை திருப்பி கேட்கும் போது “உன் பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி கொடுத்தாதான் காசு கொடுப்பேன்” என்று மிரட்டினார். எங்க அம்மாவும் வேறு வழியில்லாமல் திருமணம் செய்து கொடுக்க ஒப்புக்கொண்டார். அப்போது எனக்கு 13 வயது. இந்த செய்தியைக் கேட்டதும் எனக்கு ஒன்றும் புரியவில்லை.
அழுது கொண்டே என்னுடைய தோழி ஒருவரிடம் சொன்னேன். அவளுடைய பாட்டி “நீ உங்க வீட்டுக்கு போக வேண்டாம் இங்கேயே இரு” என்றார். கொஞ்சநாள் அங்கேயேதான் இருந்தேன். என்னை காண‌வில்லை என்று காவல் நிலையத்தில் அம்மா புகார் கொடுத்தார். என்னை மீட்டு திருமணம் செய்து கொடுப்பதிலே குறியாக இருந்தார். நிறைய பிரச்சனை ஏற்பட்டது. ஒரு நாள் நான் தங்கி இருந்த பாட்டி வீட்டிற்கு அந்தப் பையனை கூட்டிக்கொண்டு தாலியெல்லாம் வாங்கி கொண்டு வந்திருந்தனர். அந்த நேரம் நான் அங்கு இல்லை. வெளியில் சென்றிருந்த எனக்கு என் தோழி வந்து வீட்டிற்கு போகாதே என்று விபரங்களை சொன்னாள். அந்த பாட்டி தெரிந்தவர்களுக்கு செய்தியை சொல்லி இங்கு இருந்தால் உனக்கு பாதுகாப்பு இல்லை என்று அறக்கட்டளையில் சேர்த்து விட்டார். தற்போது 12 ஆம் வகுப்பு படித்து வருகிறேன். கால்பந்து பயிற்சி பெற்றேன்.

எல்லோருக்கும் இருக்கும் பாஸ்போர்ட் பிரச்சனை எனக்கும் இருந்தது. கிடைப்பதற்கு கஷ்டமாக இருந்தது. ரஷ்யா சென்றது மகிழ்ச்சியாக இருந்தது. அங்கு இருந்த போட்டியாளர்கள் கூட மற்ற நாடுகளில் தெரு ஓரங்களில் வசிப்பவர்கள்தான் ஆனால் அவர்களுக்கு வீடு இருக்கிறது. அவர்களை அந்த நாட்டு பொதுச் சமூகம் அவர்கள் தங்கி இருக்கும் இடத்தை வைத்து ஒதுக்குவார்கள் என்று அவர்கள் சொன்னார்கள். ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் தெருவோர‌ மக்களுக்கும் வெவ்வேறு பிரச்சனைகள் இருக்கிறது. நாங்கள் அங்கு நடந்த கருத்தரங்கில் அதை தெரிந்துகொண்டோம்.விளையாட்டு சுவாரஸ்யமாக இருந்தது. நன்றாகப் படித்து என்னைப் போல் இருக்கும் பிள்ளைகளுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்” என்றார் ஷாலினி.

மற்றொமொரு போட்டியாளரான மஸ்சிஹா பேசுகையில், “காசி மேடு இந்திரா நகர் பகுதியில்தான் எங்கள் வீடு. அந்த பகுதியில் குழந்தைகள் மீதான பாலியல் தொல்லைகள் அதிகமாக இருந்தது. திருட்டு, குழந்தை கடத்தல் போன்ற சம்பவங்கள் எங்கள் பகுதியில் அதிகம். எங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது, எங்களுக்கான உரிமைகள் என்ன என்பது குறித்து கருணாலயா நிர்வாகிகள் அங்கு வந்து பயிற்சி கொடுத்தனர். மேலும் எங்கள் பகுதியில் இருக்கும் பிள்ளைகளின் திறமைகளை கண்டறிய விளையாட்டு பயிற்சிகள் வழங்கினார்கள்.அந்த வகுப்பில் என்னுடைய அண்ணன் சென்று கால்பந்து விளையாடி வந்தான். அவனைபார்த்து எனக்கும் விளையாட வேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டது. நானும் விளையாடத் தொடங்கினேன். அங்கு இருப்பது எனக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் வீட்டில் கருணாலயாவிற்கு அனுப்பினர். இங்கு வந்த பிறகும் கால்பந்து பயிற்சியை தொடர்ந்தேன். வெளிநாடு சென்று விளையாட நானும் தேர்வு ஆனேன்.வெளிநாடு சென்றது புது அனுபவமாக இருந்தது. பல்வேறு நாட்டினருடன் பழகியது நல்ல அனுபவத்தைக் கொடுத்தது. கடைசிப் போட்டி மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. எனக்கு சிறந்த புகைப்படக்கலைஞராக வேண்டும் என்பது ஆசை. என்றவரை தொடர்ந்து சென்னை மெமோரியல் ஹால் பகுதியை சேர்ந்த ஈஸ்வரி பேசினார்.

“மெமோரியல் சாலையின் ஓரத்தில் நாங்கள் தங்கி இருந்தோம். என்னுடைய அப்பா நான் 4 ஆம் வகுப்பு படிக்கும் போதே அம்மாவிடம் சண்டை போட்டு பிரிந்து விட்டார். அதனால் என்னால் படிக்க முடியவில்லை. அம்மா பூ விற்று எங்களைப் பார்த்துவந்தார். அம்மா காலை 5 மணிக்கு சென்றார் என்றால் இரவு 10 மணிக்குதான் வருவார். நாங்கள் பாதுகாப்பு இல்லாமல் இருந்தோம். என் அம்மா கருணாலயாவில் சேர்த்து விட்டார். இப்போது 10 ஆம் வகுப்பு படித்து வருகிறேன். இந்த சின்ன வயதிலே வெளிநாட்டிற்கு சென்று கோப்பையை வெற்றி பெற்று வந்திருக்கிறாய் என்று என்னுடைய பள்ளியில் என்னை பாராட்டினார்கள். நான் ரஷ்யா செல்வது என்னுடைய அண்ணன்களுக்கு தெரிந்து என்னை பார்க்க வந்தனர் எனக்கு தேவையானதை வாங்கிக் கொடுத்தனர். இத்தனை வருடங்கள் என்னிடம் பேசாத அண்ணன் என்னிடம் அன்பாகப் பேசியது அப்போதுதான். அந்தத் தருணம் எனக்கு அளவில்லாத மகி்ழ்ச்சி, அழுதே விட்டேன். இந்த வெற்றியின் மூலம் எங்களுடைய பிரச்சனைகளை உலக அளவில் தெரிவிக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது.

தெருவில் இருக்கும் உங்களுக்கு எல்லாம் விளையாட்டு கேக்குதா என்று நான் விளையாடும் போது சிலர் சொல்லும் போது மனசு வருத்தமாக இருக்கும். இன்று அவர்கள் எல்லேரையும் நாங்கள் திரும்பி பார்க்க வைத்திருக்கிறோம். எங்களுக்குக் கிடைத்த குறைந்த பயிற்சிக்கான இடவசதியும், குறைந்த நாள் பயிற்சியிலே எங்களால் வெற்ற பெறமுடிகிறது என்றால். இன்னும் எங்களுக்கு அரசு ஆதரவு கிடைத்து முறையான ஊட்டச்சத்து நிறைந்த உணவு, பயிற்சி பெறும் இடம் கிடைத்தால் எதிர்காலத்தில் இன்னும் பல சாதனைகளை படைப்போம்” என்றார். இந்த அணியின் கோல் கீப்பர் இந்து பேசுகையில்“சென்னை மின்ட் பகுதியில் உள்ள தெருவில் வசி்த்து வந்தோம். சரியான தூக்கம் இருக்காது.

எப்போது கடை மூடப்படும் தூங்கலாம் என்று காத்துக்கிடப்போம். கால்பந்து விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்து. 9 மாதமாக பயிற்சி பெற்றேன். தெருவில் விளையாடும்போது வானத்தில் போகும் விமான‌த்தைப் பார்த்து ரசித்தது உண்டு. அதில் நான் போவேன் என்று கனவில் கூட நினைத்தது இல்லை. நான் விமானத்தில் போகப்போகிறேன் என்பதே எனக்குப் பெரும் மகிழ்ச்சி. எங்கள் உறவினர்களுக்கு பெரும் மகிழ்ச்சி. ஒரு வழியாக ரஷ்யாவிற்குப் போனோம். ரஷ்யாவில் வெயில் அடித்துக் கொண்டிருக்கிறது ஆனாலும் குளிராக இருந்தது. போட்டி கடுமையாக இருந்தது. எதிர் தரப்பினர் பலசாலியாக இருந்தனர். நாங்கள் அவர்களோடு ஒப்பிடுகையில் எலிகளை போல் இருந்தோம். அவர்களோடு போட்டிபோட போகிறோம் என்றதுமே பயம் வந்து விட்டது. இருந்தாலும் மன தைரியத்தை உருவாக்கிக்கொண்டு விளையாடினோம். வெற்றியும் பெற்றோம். தொடர்ந்து நாங்கள் விளையாட போதிய வசதியும், உணவும் கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது. அது கிடைத்தாலே நாங்கள் இன்னும் உற்சாகமாக விளையாட உதவியாக இருக்கும்” என்கிறார்.

பயிற்சியாளர் கண்ணதாஸ் கூறுகையில், ““இவர்களுக்கு பயிற்சி கொடுப்பதும் எனக்கு எளிமையாக இருந்தது.பெரும் போராட்டங்களுக்கு நடுவே இவர்களால் வெற்றி பெற முடிகிறது என்றால் இவர்களை முறையாக கண்காணித்து ஊக்கப்படுத்தினால் இவர்களால் எல்லா இடங்களிலும் சாதிக்க முடியும். இவர்களை அரசு கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அவர்களுக்குத் தேவையான பொருளாதார வசதியை ஏற்படுத்தித் தரவேண்டும். இவர்களுக்கு பயிற்சி கொடுப்பதற்காக நேரு உள்விளையாட்டு அரங்கம் 1 மணிநேரம் கேட்டிருந்தோம். ஆனால் இந்த அரசு மறுத்துவிட்டது. கடைசி ஒரு மாதத்தில் ஒரு தனியார் நிறுவனம் பயிற்சி பெற விளையாட்டு மைதானத்தை இலவசமாக ஏற்படுத்தி கொடுத்தனர். நல்ல விளையாட்டு மைதானம் இவர்களுக்கு தேவைபடுகிறது.” என்கிறார் .Post a Comment

Protected by WP Anti Spam