By 3 September 2018 0 Comments

‘அவர் ஓயாமல் உழைக்க இதுதான் காரணம்!’!(மருத்துவம்)

கோடிக்கணக்கான தொண்டர்களின், பொதுமக்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்த கலைஞர், தன்னுடைய முதுமையின் காரணமாக ஆறாத வடுவை ஏற்படுத்திவிட்டு விடைபெற்றிருக்கிறார். அவரிடம் கற்றுக் கொள்ளவும், பெற்றுக் கொள்ளவும் ஏராளமான சேதிகள் இன்றைய தலைமுறையினருக்கு உண்டு.

அரசியல், திரைப்படம், நாடகம், இலக்கியம் என தொட்ட துறைகளில் எல்லாம் வெற்றிக்கனி பறித்த நேர நெருக்கடியிலும் தன் உடல்நலனை ஆச்சரியமூட்டும் விதத்தில் பராமரித்தவர். வேலையைக் காரணம் காட்டி உடற்பயிற்சியையோ, ஒழுங்கான உணவுமுறையையோ பின்பற்றாதவர்கள் மத்தியில் அவர் நிஜமாகவே ஓர் இனிய ஆச்சரியம். கலைஞரைப் பற்றி கேள்விப்பட்டவர்களுக்கும், அவருடன் நெருங்கிப் பழகியவர்களுக்கும் இது நன்றாகத் தெரியும்.

அந்தவகையில் அவரது மருத்துவ ஆலோசகராக இருந்து வந்த இதய சிகிச்சை மருத்துவர் சொக்கலிங்கம், கலைஞருடனான தன்னுடைய பர்சனல் அனுபவங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

‘‘வெற்றி பெறுவது மகிழ்ச்சியல்ல… மகிழ்ச்சியாக இருப்பதுதான் வெற்றி’ என்னும் கொள்கை உடையவர். சிறந்த நகைச்சுவையாளர் என்பது எல்லோருக்கும் தெரியும். இப்படி எந்த நிலையிலும் மனம் சோர்ந்துவிடாமல் மகிழ்ச்சியாக இருந்ததால்தான் எத்தனையோ துன்பங்கள் வந்தபோதும் உடைந்துவிடாமல், ஆரோக்கியத்தைப் பராமரித்து வந்தார்.

எண்ணும் எண்ணம் சீராக, உண்ணும் உணவு சமச்சீரா
க, உடற்பயிற்சி தவறாத வாழ்க்கையை வாழ்ந்தார். இவற்றையெல்லாம் சாப்பிடாதீர்கள் என்று சொன்னால் அதனை தவறாமல் கடைபிடிப்பார். உணவுக்கட்டுப்பாட்டை ஒரு சுமையாக நினைத்ததில்லை. எந்த விருந்தாக இருந்தாலும் அளவு தாண்ட மாட்டார். எண்ணெய் பதார்த்தங்களை தவிர்த்துவிடுவார். நிறைய காய்கறி, பழங்களை எடுத்துக் கொள்வார். தினமும் ஒரு கீரை வேண்டும். தூங்குவதற்கு 3 மணி நேரம் முன்பே உணவு உண்ண வேண்டும் என்பதையும் கண்டிப்பாக கடைபிடித்தவர்.

‘நடைப்பயிற்சி’ அவருக்கு பிடித்தமான விஷயம். மழை பெய்தால் கூட குடைபிடித்துக் கொண்டு செல்லும் அளவுக்கு நடைப்பயிற்சி ரசிகர். அரை மணி நேரம் முதல் 50 நிமிடங்கள் வரை நடப்பார். வீல் சேரில் அமர்கிற வரையிலும் யோகா பயிற்சிகள் செய்வதை விடவே இல்லை. எத்தனை மாடிக்கட்டிடத்திலும் படிக்கட்டுகளில் ஏறியே செல்வார். லிஃப்ட் உபயோகிப்பதையும் விரும்ப மாட்டார்.

ஓயாது உழைக்கும் அவரைப் பார்த்து குடும்பத்தினரே பயந்துபோயிருக்கிறார்கள். ‘நீங்கள் சொன்னால் கேட்டுக் கொள்வார்’ என்று என்னிடம் புகார் கூட சொல்வார்கள். கட்டாயத் தூக்கத்தின் அளவு, ஓய்வின் அவசியம் பற்றி ஒரு நாள் விரிவாகச் சொன்னேன்.

‘ஓய்வெடுத்தால் என் இதயம் பழுதடைந்துவிடும்’ என்றார். ‘நீங்கள்தான் அண்ணாவின் இதயத்தைப் பெற்றவராயிற்றே… உங்கள் இதயம் பழுதடையாது. எனக்கு நீங்கள் வேலையும் வைக்க மாட்டீர்கள்’ என்று பதில் சொன்னதுடன், அன்றிலிருந்து ஓய்வெடுங்கள் என்று சொல்வதையே நிறுத்திவிட்டேன். தான் செய்யும் வேலையை மகிழ்ச்சியோடு செய்கிறவருக்கு ஓய்வும், மருத்துவமும் தேவையில்லையோ என்று நினைத்ததுண்டு.

அவரது அபார நினைவாற்றலைக் கண்டு வியக்காதவர்களே இருக்க முடியாது. அதற்கு காரணம் எதிரில் இருப்பவர் பேசுவதை கவனமாகக் கேட்பார். புதிய விஷயங்களை ஆர்வத்தோடு கற்றுக் கொள்வார். கற்றலை விடாது கடைபிடித்ததாலேயே அவருக்கு வயது மூப்பால் வரக்கூடிய ஞாபகமறதி நோய் போன்ற எதுவும் அண்டவில்லை.

ஆமாம்… வாழ்க்கையை ஒரு கணக்கிடும் கருவி போலத்தான். நல்லதைக் கூட்டி, கெட்டதைக் கழித்து, அறிவைப் பெருக்கி, நேரத்தை சீராக வகுத்து, சமநிலையில் கலைஞரைப்போல வாழ்க்கையை நடத்தினால் நீண்ட ஆயுளோடும், ஆரோக்கியத்தோடும் வாழ முடியும்!’’.Post a Comment

Protected by WP Anti Spam