குடல்வால் என்பது தேவையற்ற உறுப்பா?!(மருத்துவம்)

Read Time:14 Minute, 53 Second

அப்பண்டிக்ஸ் என்ற குடல்வால் தேவையற்ற ஓர் உடல் உறுப்பு. அதனை அகற்றுவதால் இழப்பு ஒன்றும் இல்லை’ என்று ஆங்கில மருத்துவம் குறிப்பிடுகிறது. ஆனால், இதற்கு நேர்மாறாக ‘தேவையற்ற உறுப்பு என்று உடலில் எதுவுமே இல்லை’ என்ற மாறுபட்ட பார்வையை முன்வைக்கிறது மாற்று மருத்துவம். இந்த எதிரெதிர் கருத்துக்களுக்கான தர்க்கரீதியான, மருத்துவரீதியான காரணங்கள் என்னவென்று நிபுணர்களிடம் பேசினோம்…

‘‘குடல் வால் என்பது பெருங்குடலும் சிறு குடலும் முடிகிற இடத்தில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரு சிறிய குழாய் போன்ற அமைப்பாகும். இது சிறிய வால் போன்று இருக்கும். அதனால்தான் இதனை குடல்வால் என்று பெயர் சொல்கிறோம். இந்த உறுப்பு எதற்காக, என்ன பயனுக்காக இருக்கிறது என தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பெரும்பாலான தகவல்களின்படி இதனால் நம்முடைய உடலுக்கு எந்த பயனும் இல்லை. மேலும், குடல்வால் இல்லாததால் நமக்குப் பெரிதாக எந்தத் தீங்கும் ஏற்படுவதில்லை’’ என்கிறார் இரைப்பை மற்றும் குடலியல் அறுவை சிகிச்சை நிபுணரான சீனிவாசன்.

‘‘குடல்வால் தொடர்பாக பல ஆய்வுகள் சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடல்வால் பயன்பாட்டை பற்றிப் பல கருத்துகள் சொன்னாலும், அவையெல்லாம் முழுமையாக நிரூபிக்கப்படாத தகவல்களாகவே இருக்கின்றன. இன்றைய மருத்துவ சூழலில் குடல்வால் என்பது அழற்சி ஏற்படும்போது அதை மாத்திரைகள் மூலம் குணப்படுத்தியோ முற்றிய நிலையில் அது பாதிக்கப்பட்டால் அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதே சிறந்தது.

குடல்வால் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டால் குடல்வாலில் ஏற்படும் வீக்கம், செரிமான பிரச்னையால் ஏற்படக்கூடிய மலக்கட்டிகள் தேக்கம், சீழ் வைத்தல் போன்ற காரணங்களால் குடல் வால் பாதிக்கப்பட்டால் அது மொத்த செரிமான மண்டலத்தையும் பாதித்து உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையை உண்டாக்கும். அதனால் அறுவைச்சிகிச்சை மூலமும் தற்போது வளர்ந்துள்ள நவீன மருத்துவத்தில் லேப்ராஸ்கோப்பி சிறிய துளை மூலமும் உடனடியாக நீக்கிவிடலாம். ஆரம்ப கட்டத்திலயே கண்டறிந்தால் தேவையான ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் மூலமாகவே அதை
குணப்படுத்திவிடலாம்.

வீக்கமடைந்து அல்லது தொற்றுநோய் ஏற்பட்ட குடல்வால்களுக்குச் சிகிச்சைஅளிக்கப்படாவிட்டால், குடல்வால் வெடிக்கலாம். இது வயிற்றறையின்
உட்புற உறையில் மரணத்தை விளைவிக்கக்கூடிய தொற்றுநோயை ஏற்படுத்தலாம். அதனால் அறிகுறிகள் கண்டறிந்தபின் மருத்துவரை நாடுவது அவசியம்.

தொப்புளைச் சுற்றி அல்லது வயிற்றின் வலது கைப்பக்க அடிப்பாகத்தில், வலி, பசியின்மை, குமட்டுதல். வாந்தி. காய்ச்சல் போன்றவை இதன் அறிகுறிகளாகத் தோன்றும். தற்போது உள்ள சூழலில் குடல்வால் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அதிகரித்திருக்கிறது. இதற்கு காரணம் தவறான உணவு பழக்கவழக்கங்களாகும்.

ஒருவருக்கு குடல் சம்பந்தப்பட் நோய்கள் வராமல் இருப்பதற்கு அவர் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை அதிகம் எடுத்துக் கொண்டால் குடல் சம்பந்தப்பட்ட நோய்கள் அவருக்கு வருதில்லை. அதனால் செரிப்பதற்கு கடினமாக உள்ள உணவுகளை முற்றிலும் தவிருங்கள்.

எண்ணெயில் பொரித்த உணவுகள், ஜங்க் ஃபுட் உணவு வகைகள், பேக்கரி வகை உணவுகள் போன்றவற்றை குறைத்துக் கொண்டு அல்லது முற்றிலும் தவிர்த்துக் கொண்டு காய்கறிகள், பழங்கள் போன்ற உணவுவகைகளை எடுத்துக்கொள்வது உங்கள் செரிமான பிரச்னைகளை தீர்க்கும். இதனால் குடல்வால் அலர்ஜி ஏற்பட வாய்ப்பில்லாமல் போகும். மேலும் ஒருவர் தனக்கு மலச்சிக்கல் இல்லாமல் பார்த்து கொண்டாலே குடல் சம்பந்தப்பட்ட நோய்கள் அவருக்கு வருவதில்லை’’ என்கிறார்.

இதற்கு மாறுபட்ட கருத்தினை முன்வைக்கிறார் அக்குஹீலர் சண்முகசுந்தரம்…

‘‘இந்தியாவில் குழந்தைகள், இளைஞர்கள் என லட்சக்கணக்கானோருக்கு செய்யப்படும் அறுவைச் சிகிச்சைகளில் முக்கியமானது குடல்வால் நீக்கம். அதிகரித்துவரும் பிரச்னை என்பதால் இந்நோய் எப்படி ஏற்படுகிறது என்பதை அனைவருமே தெரிந்துகொள்ள வேண்டும். தெரிந்துகொண்டால்தான் குடல் வாலை நீக்குவதால் மட்டும் நோய் முழுவதும் சரியாகிவிடுமா என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

குடலில் உள்ள நோய்க்கிருமிகள் குடல் வாலில் பரவி, அங்கு ரணத்தை ஏற்படுத்தும். சிறு சிறு மலக்கட்டிகள் குடல்வாலில் அடைத்துக்கொண்டு வீக்கம் ஏற்படும். பசியின்மை, குமட்டல் உணர்வு இருக்கும். வாந்தி ஏற்படும். காற்று வெளியேறும், செரிமானமின்மை காணப்படும். மலச்சிக்கலும் இருக்கும். இவையெல்லாம் அறிகுறிகள் என்று சொல்லப்படுகின்றன.

அறிவியல்பூர்வமாய், மருத்துவரீதியான காரணங்களை வைத்துப் பார்ப்பதே சரியென்பதால் நோய்க்கான அறிகுறிகள் என எதைச் சொல்கிறார்களோ அதை வைத்தே நோய்க்கான காரணத்தையும், தீர்வையும் அறிவியல்பூர்வமாகவே நாமும் பார்த்துவிடுவோம்.குடலில் உள்ள நோய்க்கிருமிகள்தான் குடல்வாலுக்கு வருவதாகச் சொல்கிறார்கள்.

அப்படியெனில் குடலில் ஏன் கிருமிகள் உண்டாகின்றன? அது வெளியிலிருந்து சென்றிருக்கும் என்றும் சிலர் சொல்லிவிடுவார்கள். அப்படியெனில், மலச்சிக்கல் மற்றும் செரிமானமின்மை ஏற்பட்டதற்கும் வெளியில் இருந்து வந்த அந்தக் கிருமியா காரணம்? சிறு சிறு மலக்கட்டிகள் ஏன் குடல்வாலில் சென்று சேர்கின்றன? மலம் இறுகிக் கட்டிகளாக மாறியது ஏன்? வாந்தி ஏன் வருகிறது? வயிற்றுப்போக்கு எதனால் ஏற்படுகிறது? அனைத்துக்கும் அந்தக் கிருமியா காரணம்?

குடலில் கிருமிகள் உருவாகக் காரணம் மலம் உள்ளிட்ட கழிவுகள் முறையாக வெளியேறாமல், உடலில் நீண்ட நாட்கள் தங்குவதே ஆகும். கெட்டுப்போன பொருட்களில் இருந்து கிருமிகள் உருவாவது இயல்பான ஒன்றென நாம் அறிவோம். ஆக, தேங்கிக் கிடக்கும் மலக்கட்டிகளில் இருந்து கிருமிகள் உருவாகி, அது குடல்வால் நோக்கி நகர்கின்றன என்பதே அறிவியல்பூர்வமான உண்மையாகும்.

மலம் முறையாக வெளியேறாத காரணத்தால் ஒருவரின் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதையும் நாம் அறிவோம். முதலாவதாக, செரிமானமின்மை அதிகமாவதால், பசி குறையும். மலம் தேங்குவதால் அபான வாயு பிரியும். வயிற்றுப் பிடிப்பு அடிக்கடி உருவாகும்.
குடல்வாலை வெட்டியெடுப்பதால் மலச்சிக்கலும், செரிமானமும் முற்றிலும் சரியாகி, ஒருவர் வயிறு சார்ந்த நோயே இல்லாமல் வாழ்வார் எனில் இதை முழுமையான சிகிச்சையென்று சொல்லலாம்.

ஆனால், வாழ்நாள் முழுவதும் செரிமானக்கோளாறும், மலச்சிக்கலும் தொடர்கிறது என்பதுதானே உண்மை. அறுவைச் சிகிச்சை தரும் மோசமான விளைவுகளை வெறும் பக்கவிளைவு என்றும், தவிர்க்க இயலாது என்றும் சொன்னால் அது நோயை முற்றிலும் குணமாக்கும் மருத்துவத்தின் அடிப்படைத் தத்துவத்திற்கே எதிரானதாகும். இப்போது குடல்வாலை நீக்கிவிட்டோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

குடலில் தொடர்ந்து கிருமிகளும், மலக்கட்டிகளும் உருவாகத்தானே செய்யும், குடல்வால் இல்லாதபோது அவை எங்கு சென்று சேரும். எனவே, நோய்க்கான காரணத்தை சரியாக நாடுகையில் அதற்கான தீர்வையும் அறிவியல்பூர்வமாகக் கண்டறிந்துவிடலாம். அதாவது, செரிமானமின்மையும், மலச்சிக்கலும்தான் குடல்வால் அழற்சிக்கான காரணங்கள் எனில் நோய்க்கான தீர்வு அதை சரிசெய்வது என்பதே அறிவியல்பூர்வமான அணுகுமுறையாகும்.

குடல்வால் அவசியமான உறுப்பா இல்லையா என்ற பகுதிக்கு அடுத்து வருவோம். பரிணாமக் கோட்பாட்டின்படி உடலுக்குத் தேவையற்றது எதுவாயினும் தானாக அழியுமெனில் இந்த குடல்வால் மட்டும் ஏன் இலட்சக்கணக்கான ஆண்டுகளாக இன்னும் ஏன் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் வளர்கிறது? அதிலும் ஏன் குறிப்பாக, பெருங்குடல், சிறுகுடல் என இரண்டிற்கும் இடையில் வளரவேண்டும்? விடை கண்டுபிடிக்கவில்லை என்பதாலேயே குடல்வால் பயனற்றது என்று சொல்லிவிடக்கூடாது. குடல்வாலை நீக்குவதால் உடலுக்கு என்னென்ன கேடுகள் ஏற்படுகின்றன என்ற ஆராய்ச்சி கடந்த 20 ஆண்டுகளாக அதிகமாகி வருகின்றன.

இந்த ஆராய்ச்சிகளை செய்வோரும் அலோபதி மருத்துவர்கள்தான் என்பதே வரவேற்க வேண்டிய ஓர் அம்சமாகும். அமெரிக்காவில் உள்ள டியூக் பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் உள்ள அறிவியல் ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பு குடல்வால் குறித்த இதுநாள் வரையான கருத்தை வருங்காலத்தில் மொத்தமாக மாற்றப்போகும் மிகப் பிரசித்தி பெற்ற ஒன்றாகும்.

Biofilms in the large bowel suggest an apparent function of the human vermiform appendix என்ற அந்த ஆய்வுக்கட்டுரை ஜர்னல் ஆஃப் தியரிட்டிகல் பயாலஜி என்ற புகழ் பெற்ற அறிவியல் இதழில் வெளியானதாகும். குடல்வாலில் செரிமான செல்கள் உள்ளன என்றும் அவை நல்ல பாக்டீரியாக்களைப் பாதுகாக்கின்றன என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

2017-ம் ஆண்டு ஜனவரி 9 ம் தேதி அமெரிக்காவின் மிட்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியான மற்றொரு ஆய்வும், குடல்வால் மிக முக்கிய செயலாக்கங்களைக் கொண்டது என்று விவரிக்கிறது. அதேபோல் 2011-ம் ஆண்டில் ஜூன் முதல் தேதியில் யுரோப்பியன் சொசைட்டி ஆஃப் கார்டியாலஜி வெளியிட்ட ஓர் ஆய்வு முடிவோ 20 வயதுக்குள் இந்த அறுவைச்சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கு இளம்வயதிலேயே மாரடைப்பு நோய் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகக் கூறுகிறது.

ஹார்வர்டு மெடிக்கல் ஸ்கூலில் 2012-ம் ஆண்டில் நடைபெற்ற ஆய்வு ஒன்று, குடல்வால் அழற்சி என்பது பலருக்குத் தானாக குணமாகிவிடுகிறது என்றும், சிகிச்சை தேவையெனில் அறுவைச்சிகிச்சையை விட ஆன்டிபயாட்டிக் மருந்தே போதுமென்றும் கூறுகிறது.

ஆனால், அக்குபங்சரில் அந்த மாத்திரையுமின்றி குடல்வால் வீக்கத்தை மட்டுமில்லாமல் அதற்குக் காரணமான செரிமானமின்மை, மலச்சிக்கல், பசியின்மை, வாந்தி என்ற அனைத்தையும் மொத்தமாய் முழுமையாய் குணமாக்க இயலும் என்கிறோம். மொத்த அறிகுறிகளையும் சரி செய்யும் மரபு சார்ந்த பாரம்பரிய மருத்துவ முறைகள் இங்குதான் முக்கியத்துவம் பெறுகின்றன’’ என்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண் பெண் – தகாத உறவுகளுக்கு காரணம் என்ன?(அவ்வப்போது கிளாமர்)
Next post ஹீரோயின் இயக்குவதால் வில்லன் நடிகர் விலகல்!!(சினிமா செய்தி)