By 7 September 2018 0 Comments

எண்ணற்ற நன்மைகளைச் செய்யும் வாழைப்பூ !(மருத்துவம்)

பாரம்பரிய உணவுகளில் இன்று வரை இன்றியமையாததாக இருந்து வருவது வாழை சார்ந்த உணவுகள். வாழைத்தண்டு, வாழைக்காய், வாழைப்பழம், வாழை இலை என இதன் ஒவ்வொரு பகுதியின் மருத்துவப் பயன்களும் அளவிட முடியாதது என்பது நமக்குத் தெரியும். இவற்றில் வாழைப்பூவுக்கும் அதைப் போல என்னென்ன மகத்துவங்கள் உண்டு என சித்த மருத்துவர் பானுமதியிடம் கேட்டோம்…

‘‘வாழைப்பழத்தில் பல வகைகள் உண்டு என்பதைப் போல வாழை மரத்திலும் பல வகைகள் உண்டு. சித்த மருத்துவ நூல்களில் 12 வகை வாழையைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. பொதுவாக வாழை மரத்தின் அனைத்து பாகங்களுமே மருத்துவத்தில் பயன்படுகிறது. அதன் தண்டு, காய், பழம், பூ, இலை, நார், பட்டை என எல்லாவற்றையும் நாம் பயன்படுத்துகிறோம். இதற்கு காரணம் வாழையின் மகத்துவ மருத்துவ குணங்கள். அந்த வகையில் வாழைப்பூவும் அதிகம் பயன்தரக்கூடியது.

துவர்ப்பு சுவை கொண்ட வாழைப்பூ பல்வேறு நன்மைகளை நமக்கு அளிக்கிறது. சுவைக்கும், ஆரோக்கியத்திற்கும் அவை ஏற்றதாக இருப்பதால்தான் வாழைப்பூ பொரியல், வாழைப்பூ வடை, வாழைப்பூ அடை, வாழைப்பூ தோசை என்று பல விதங்களில் தயாரித்து உண்கிறோம். வாழைப்பூ குருத்தினை பச்சையாகவே சாப்பிடுகிறவர்களும் உண்டு’’ என்கிற சித்த மருத்துவர் பானுமதி, வாழைப்பூவின் பலன்களைத் தொடர்ந்து விளக்குகிறார்.

‘‘இன்றைய நவநாகரிக வாழ்க்கையில் மனிதனை வாட்டும் பல நோய்களுள் சர்க்கரை நோய் முக்கியமானது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழைப்பூவை சுத்தம் செய்து, சிறிது சிறிதாக நறுக்கி, அத்துடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்துப் பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கணையம் தூண்டப் பெற்று சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். இதன் துவர்ப்பு சுவையானது, ரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்றுகிறது. இதனால் சர்க்கரையின் அளவு குறைகிறது.

சிலருக்கு மலம் கழிக்கும்போது கூடவே ரத்தமும் சேர்ந்து வெளியேறும். இதனை ரத்த மூலம் என்று அழைப்பர். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்து வந்தால் ரத்த மூலம் விரைவில் குணமாகும்.

வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து ரத்தத்தை சுத்திகரிக்கும். இதனால் ரத்தமானது அதிகளவு ஆக்ஸிஜனை உட்கிரகிக்கும். தொடர்ந்து அதிகளவு இரும்புச்சத்து உட்கிரகிக்கப்படுவதால் ரத்த அழுத்தம், ரத்தசோகை போன்றவை வராமல் தடுக்கப்படுகிறது.

கோடைகாலம் முடிந்துவிட்டாலும் வாட்டி வதைக்கும் வெயிலால் பலருக்கு உடல்சூடு ஏற்படும். சிலருக்கு இயற்கையிலேயே உடல் அமைப்பு சூடாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்துக் கடைந்து அதனுடன் சிறிது நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டு வந்தால் உடல்சூடு தணியும்.

ஆண்மை பெருகும். வாழைப் பூவினால் குருதி முளை, வெள்ளை, வெறி நோய், உடல் கொதிப்பு, சீதக்கழிச்சல், ஆசனவாய்க் கடுப்பு, இருமல், கை கால் எரிச்சல் ஆகிய நோய்கள் குணமாகும். ஆண்மை பெருகும். வாழைப் பூவை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி, கை கால் எரிச்சலுக்கு ஒற்றடமிட்டு பிறகு அதையே வைத்து கட்டலாம்.

குறித்த காலத்தில் உணவு உட்கொள்ளாமல் காலம் தாழ்த்தி உண்ணுவது, இப்போது உள்ள ஃபாஸ்ட் ஃபுட் உணவு கலாச்சாரம், அதிக காரமான உணவு ஆகிய பழக்கங்களால் பலரையும் பாதித்திருக்கும் பிரச்னை அஜீரணக் கோளாறு. இதனால் வயிற்றுக்கடுப்பு, சீதக்கழிச்சல் ஏற்படும். இவர்கள் வாழைப்பூவை நீரில் கலந்து, அதனுடன் சீரகம், மிளகுத்தூள் சேர்த்துக் கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை இளஞ்சூடாக அருந்தி வந்தால், வயிற்றுக்கடுப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

வாழைப்பூவில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, தாமிர சத்து முதலிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இது தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் பி1 மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்களும் உள்ளன. வாழைப்பூவிற்கு காயங்களை விரைவாக ஆற்றக்கூடிய குணம் இருப்பதால் அதனை அறுவை சிகிச்சைக்குப் பின் உண்டாகக்கூடிய காயங்களை ஆற்றுவதற்குப் பெரிதும் பயன்படுகிறது.

வாழைப்பூவில் HDL கொழுப்புச்சத்து இருப்பதால், அது ரத்தக் குழாய்களில் LDL கொழுப்பினால் வரக்கூடிய இதய சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது. மூளை மற்றும் மார்பகப் புற்றுநோய் வராமல் தடுப்பதில் வாழைப் பூவானது பெரும் பங்கு வகிக்கிறது. இதில் நார்ச்சத்து மிக அதிகளவில் காணப்படுவதால் மலச்சிக்கல் உண்டாகாமல் பார்த்துக் கொள்கிறது.

பெண்களின் கர்ப்பப்பை நலன் காக்க வாழைப்பூ மிகவும் நல்லது. மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு, அதிக உதிரப்போக்கு உண்டாகும். அப்போது அவர்கள் வாழைப்பூவின் உள்ளே இருக்கும் வெண்மையான பாகத்தைப் பாதியளவு எடுத்து நசுக்கிச் சாறு பிழிந்து, அதனுடன் சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்துக் கொதிக்க வைத்து, அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் ரத்தப்போக்கு கட்டுப்படும்.

அதோடு உடல் அசதி, வயிற்றுவலி, சூதக வலி குறையும். மேலும் பெண்களுக்கு ஏற்படும் மிகப் பெரிய பிரச்னை வெள்ளைப்படுதல் ஆகும். அதனாலேயே மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். எனவே, இத்தகைய பிரச்னை உள்ளவர்கள் வாழைப் பூவினை நல்ல பக்குவத்தோடு ரசம் செய்து சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் வெளியேறிவிடும்.

வாழைப்பூ ரசம் சாப்பிட, வறட்டு இருமலும் மறைந்து விடும். வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்து வந்தால் உடல் பலம் பெறும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள், மாதவிலக்கு காலங்களில் அதிக ரத்தப்போக்கு அல்லது ரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் நோய்கள் நீங்கும்.

சிலர் குழந்தையின்மையால் மிகுந்த மனவேதனைக்கு ஆட்படுவர். மிகவும் கவலை கொள்வர். அவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். இதை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மலட்டுத்தன்மை நீங்கி மகப்பேறு கிடைக்கும்.

இதனாலேயே ‘வாழையடி வாழையாக’ என்ற தொடர் அர்த்தம் பெறுகிறது. தாதுவை விருத்தி செய்து விந்துவை கெட்டிப்படுத்தும். நரம்புகளுக்கு வலுவூட்டும். குறிப்பாக மூளை நரம்புகளில் சூட்டைத் தணித்து மூளைக்கு புத்துணர்வைக் கொடுக்கும். இத்தகைய சிறப்பு மிகுந்த வாழைப்பூவை நாமும் சமைத்து உண்டு நோயில்லா பெருவாழ்வு வாழ்வோம்.’’Post a Comment

Protected by WP Anti Spam