மீண்டும் படுகுழிக்குள் விழலாமா?(கட்டுரை)

Read Time:14 Minute, 11 Second

இராணுவத்தினருடன் ஒன்றாக அமர்ந்து பேசுவதால், தமிழர் தரப்பின் அரசியல் உரிமைக்கான போராட்டத்தின் நியாயங்கள் அர்த்தமிழந்து போய் விடுமா? இது, முக்கியமானதொரு கேள்வியாக இப்போது மேலெழுந்திருக்கிறது.

இந்தக் கேள்வி எழுந்திருப்பதற்குக் காரணம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அண்மையில் வெளியிட்டிருந்த கேள்வி – பதில் வடிவிலான அறிக்கை ஆகும்.

வடக்கு – கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணிக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு முடிவெடுத்ததும், முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவசர அவசரமாக, தானே, கேள்வியையும் எழுப்பி, தானே பதிலையும் எழுதி வெளியிட்ட அறிக்கையே அது.
அந்த அறிக்கையில் அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த முடிவைச் சாடும் வகையில், பல நியாயப்பாடுகளை முன்வைத்திருந்தார்.

அதில்தான், இராணுவ அதிகாரிகள் அங்கம் வகிக்கும் ஜனாதிபதி செயலணியில், ஒன்றாக அமர்ந்து பேசிவிட்டு, எவ்வாறு ஜெனீவாவில் போய், இராணுவத்தினருக்கு எதிராக நியாயம் கேட்க முடியும்? என்ற தொனியில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

“செயலணியில் எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள், முப்படையினருடனும் சேர்ந்து, ஒரே மேசையைச் சுற்றிக் கூடியிருந்து, வடக்கு, கிழக்கின் அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டு, படையினருக்கு எதிரான போர்க்குற்றங்கள் பற்றி, சர்வதேச அரங்குகளில் குறிப்பாக, ஜெனீவாவில் பேசப் போகின்றார்களா? அப்படிப் பேச எத்தனித்தால், இப்பொழுது தான் படையினருடன் பொருளாதார விருத்தி சம்பந்தமாகச் சேர்ந்து விட்டீர்களே, இனி ஏன் போர்க்குற்ற விசாரணை? அவர்களைக் கொண்டே, உங்கள் இடங்களை அபிவிருத்தி செய்யுங்களேன் என்று, சர்வதேச ரீதியாகக் கேட்கப் போகின்றார்கள்” என்று, அவர் குறிப்பிட்டிருந்தார்.

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான செயலணியில், இராணுவ அதிகாரிகள் அவசியமில்லை என்பது நியாயமான கருத்து. அதில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மாத்திரமன்றி, தமிழர் தரப்பில் உள்ள எவருக்குமே மாற்றுக் கருத்து இருக்கும் என்று தோன்றவில்லை. எனவே, அபிவிருத்தி குறித்த இந்தச் செயலணியில், இராணுவ அதிகாரிகள் சேர்க்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதை அரசியல் நகர்வாகக் கூறவும் முடியாது.

ஆனால், இராணுவ அதிகாரிகள் இருக்கிறார்கள் என்பதற்காக, ஒட்டுமொத்தச் செயலணியையும் புறக்கணிப்பது சரியானதா என்பது தான், விவாதத்துக்குரிய விடயமாக இருக்கிறது,
அதுவும், இந்த விவகாரத்தை முதலமைச்சர் விக்னேஸ்வரன், போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறும் விவகாரங்களுடன் தொடர்புபடுத்தியிருக்கும் நிலையில், அது ஆராயப்பட வேண்டிய விடயமும் கூட.

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியில் இராணுவ அதிகாரிகளுடன் அமர்ந்து, அபிவிருத்தி குறித்துப் பேசுவது, முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்குப் பிடிக்கவில்லையா? அல்லது, ஒட்டுமொத்தமாகவே இராணுவ அதிகாரிகளுடன் தொடர்பு வைத்துக் கொள்வது, பேசுவது அவருக்குப் பிடிக்கவில்லையா என்று பார்க்க வேண்டியுள்ளது.

வடக்கின் முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் பதவியேற்ற பின்னர், இராணுவ அதிகாரிகளைப் பலமுறை சந்தித்திருக்கிறார்; பேசியிருக்கிறார். அவர்களுடன் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருக்கிறார்.

அவர்களுடன் இணைந்து நிகழ்வுகளில் பங்கேற்கும் போதெல்லாம், அது போர்க்குற்ற விசாரணைகளுக்குக் குந்தகத்தை ஏற்படுத்தும் என்று கருதாக முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு, இப்போது மாத்திரம், இந்தக் கேள்வி எப்படி எழுந்திருக்கிறது என்பதுதான், புரியாமல் உள்ளது.

இரா. சம்பந்தன் மாத்திரமன்றி, முதலமைச்சர் விக்னேஸ்வரனும் கூட, முன்னர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில், ஒட்டுமொத்த இராணுவத்தையும் போர்க்குற்றம் செய்ததாகக் குற்றம் சாட்டவில்லை.
தவறுகளைச் செய்தவர்களைத் தான், தண்டிக்க வேண்டும் என்று கோருகிறோம் என்று கூறியியிருந்தார் என்பதையும் இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்தலாம்.

அதாவது, கட்டமைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்படவில்லை; எங்கோ, எதேச்சையாக மீறல்கள், குற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம் என்ற தொனியையே, அந்தக் கருத்து வெளிப்படுத்துவதாக இருக்கிறது.

இராணுவத்தில் உள்ள தனிப்பட்ட சிலர் செய்த தவறுகள் என்று, அடையாளப்படுத்தப்படுத்துவது, தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட, நன்கு திட்டமிட்டு, மேற்கொள்ளப்பட்டது என்று, தமிழ்மக்களில் கணிசமானோர் கருதும் போர்க்குற்றங்களை, மலினப்படுத்தும் விடயமாகும்.

ஆனாலும், அதை ஒத்தவாறு முன்னர் கருத்து வெளியிட்ட முதலமைச்சர், இப்போது, இராணுவ அதிகாரிகளுடன் இணைந்து பேச்சுகளை நடத்துவதால், போர்க்குற்ற விசாரணைகள் வலுவிழந்து போய் விடும் என்று பதறுவது, பொருத்தமான ஒன்றாகத் தெரியவில்லை.

இராணுவத்துடன் களமுனையில் நேருக்கு நேர் நின்று போரிட்ட விடுதலைப் புலிகளே, பல்வேறு சந்தர்ப்பங்களில் இராணுவ அதிகாரிகளுடன் கைகுலுக்கி இருக்கிறார்கள்; பேச்சுகளை நடத்தியிருக்கிறார்கள்.

அவர்கள் அவ்வாறு கைகுலுக்கிக் கொண்டதால், பேச்சுகளை நடத்தியதால், சர்வதேச அளவில் புலிகளின் போராட்ட நியாயம், பொய்யாகிப் போய்விடவில்லை.

அவர்களிடம் யாருமே, “நீங்கள் தான் இப்போது ஒன்றாக இருந்து பேசுகீறீர்களே, அவர்களுடனேயே பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறவில்லை. கடைசி வரைக்கும் சர்வதேச சமூகம், பேச்சுக்கான வாய்ப்புகள், சூழல்களை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்திக் கொண்டு தான் இருந்தது.

எனவே, அபிவிருத்திக்கான செயலணியில் இராணுவ அதிகாரிகளுடன் ஒன்றாக அமர்ந்து பேசுவதால், போர்க்குற்ற விசாரணைக்கான கோரிக்கை பலமிழந்து விடும் என்பது, அர்த்தமற்ற அச்சம்.

அதுபோலவே, இராணுவ அதிகாரிகளுடன் பேசிக் கொண்டிருப்பதால், ஜெனீவாவில் போய், போர்க்குற்றங்களுக்கு நியாயம் கோர முடியாது என்பதும் அபத்தமான கருத்தே.

“அவ்வாறு போர்க்குற்றங்களுக்கு நியாயம் கோரினால், இப்பொழுது தான் படையினருடன் பொருளாதார விருத்தி சம்பந்தமாகச் சேர்ந்து விட்டீர்களே, இனி ஏன் போர்க்குற்ற விசாரணை? அவர்களைக் கொண்டே உங்கள் இடங்களை அபிவிருத்தி செய்யுங்களே?” என்று சர்வதேச ரீதியாகக் கேட்கப் போகின்றார்கள் என்ற முதலமைச்சரின் கூற்று, அதைவிடப் பெரிய அபத்தம்.

அபிவிருத்திக்கான செயற்பாடுகளும், போர்க்குற்றங்களுக்கு நீதியைக் கோருகின்ற செயற்பாடுகளும் சமமானவை அல்ல.

பொருளாதார அபிவிருத்தி பற்றிப் படையினருடன் பேச்சு நடத்தினால், போர்க்குற்ற விசாரணை அவசியமில்லையே என்று கூறுகின்ற அளவுக்கு, சர்வதேசம் ஒன்றும் முட்டாள் அல்ல.

போர்க்குற்றங்களையும் அபிவிருத்தியையும் இணைத்துப் பார்க்கின்ற அளவுக்கு, சர்வதேச சூழலும் கிடையாது.

இதுமாத்திரமன்றி, ஏதோ அபிவிருத்திக்காகத் தான் தமிழர் தரப்பு போர்க்குற்றங்களைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு ஜெனீவாவுக்குச் சென்றுள்ளது போலவும் அமைந்திருக்கிறது முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கருத்து.

போர்க்குற்றங்களுக்கு நியாயம் கோரினால், படையினருடன் சேர்ந்து அபிவிருத்தி செய்யுங்கள் என்று கூறுவார்கள் என்ற கற்பனை, மிகையானது. ஏனென்றால், இரண்டுமே வெவ்வேறு விடயங்கள்.

‘வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், துட்டுக்கு இரண்டு கொட்டைப் பாக்கு’ என்று பதில் கிடைத்தது போலவே அது இருக்கும்.

அவ்வாறு ஒரு பதில், முதலமைச்சரிடம் இருந்து வெளிப்பட்டது போன்று, நிச்சயமாக ஜெனீவாவில் இருந்தோ, சர்வதேச சமூகத்திடம் இருந்தோ வர முடியாது.

தமிழர்களைப் பொறுத்தவரையில், போர்க்குற்றங்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் நியாயம் கிடைப்பதில் தாமதங்கள் இருக்கலாம். பூகோள அரசியல் சூழ்நிலைகளால் அதற்கான வாய்ப்புகள் அமையாமல் இருக்கலாம்.

ஆனால், தமிழர்களின் கோரிக்கைகளின் நியாயப்பாடுகளை யாரும் மறுக்க முடியாது; போர்க்குற்றங்கள் இடம்பெற்றிருக்கலாம் என்பதற்கான சாத்தியப்பாடுகளை யாரும் நிராகரிக்க முடியாது; மீறல்கள் நடக்கவில்லை என்று கூறவும் முடியாது; அவை எல்லாமே சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டவை.

ஐ.நா மனித உரிமைகள் பேரவை போன்ற அரங்குகள், மனித உரிமை மீறல்கள் பற்றிப் பேசவும், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் என்றே உருவாக்கப்பட்டுள்ளவையே தவிர, அவ்வாறான மீறல்களைக் கொண்டு செல்பவர்களின் வாயில், அபிவிருத்தியைத் திணித்துத் திருப்பி அனுப்புவதற்காக உருவாக்கப்பட்டவை அல்ல.

இது ஒன்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு தெரியாத விடயமல்ல. கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் முடிவை, அவசரமாக எதிர்க்க வேண்டும் என்பதால் தான் அவர், தேவையற்ற உதாரணங்களைக் காட்ட முனைந்திருக்கிறார்.

அபிவிருத்திச் செயலணியில், படைத்தரப்பு அவசியமற்றது; அதை அதன் வழியில் எதிர்ப்பது தான் முறையே தவிர, இல்லாத பொல்லாத நியாயங்களையும் வலிந்து தேடிய காரணங்களையும் முன்வைக்க முனைந்தால், கடைசியில் மூக்குடைபடும் நிலை தான் ஏற்படும்.

விடுதலைப் புலிகளின் காலத்திலும் இது போன்ற பல சந்தர்ப்பங்களில், வலிந்த நியாயங்களை முன்வைத்து, தமிழர் தரப்பு மூக்குடைபட்ட வரலாறு இருப்பதை, மறந்து விட முடியாது. அது கடைசியில் தமிழர் தரப்புக்குப் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தியது.

மீண்டும் அதே தவறைத் தமிழர் தரப்பு விடுமேயானால், ‘பட்டப்பகலில் கண்ணைத் திறந்து கொண்டு போய், படுகுழியில் வீழுந்த நிலை’யாகத் தான் அமையும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சமீபத்தில் பரிதாபமாக இறந்துபோன பிரபலங்கள்!!(வீடியோ)
Next post பிரதமரின் சொகுசு கார்கள் ஏலத்தில்!!(உலக செய்தி)