By 6 September 2018 0 Comments

தடை செய்யப்பட்ட கனி!!(மருத்துவம்)

ஆதாம் – ஏவாள் கதை தெரிந்த அனைவருக்கும் ஏதேன் தோட்டத்தில் தடை செய்யப்பட்ட ஒரு கனி பற்றியும் தெரிந்திருக்கும். அதேபோல் நிஜத்தில் சில நாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கும் கனியாகவும், அதிக சுவையும் சத்தும் கொண்ட கனியாகவும் விளங்குகிறது துரியன் பழம். பார்ப்பதற்கு சின்னஞ்சிறிய பலாப்பழம் போல இருக்கும் துரியன் பழம் பற்றி உணவியல் நிபுணர் சாந்தி காவேரியிடம் பேசினோம்…‘‘துரியன் பெயரில் காணப்படுகிற வித்தியாசம் போன்றே இதன் சுவையும், நறுமணமும் வித்தியாசமானது.

இக்கனி, ஏராளமான மருத்துவ குணங்களைத் தன்னகத்தே கொண்டு இருந்தாலும், சிங்கப்பூர் போன்ற ஒரு சில ஆசிய நாடுகள், இதைப் பயன்படுத்த தடை
விதித்துள்ளன. தோரினா(Dorena) என்ற பழமையான நாடுதான் துரியன் பழத்தின் தாயகமாக சொல்லப்படுகிறது. இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் போன்ற ஆசிய நாடுகளிலும் துரியன் பயிரிடப்படுகிறது. இந்தக் கனி ‘பழங்களின் ராஜா’(King of Fruits) என உணவியல் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களால் வர்ணிக்கப்படுகிறது. இதற்குப் பலவிதமான காரணங்கள் முன் வைக்கப்படுகின்றன.

முதலாவதாக, துரியன் பழத்தின் சுவையானது, சொர்க்கத்துக்கும், அமிர்தத்துக்கும் இணையாக கருதப்படுகிறது. மேலும், இதில் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான நல்ல விஷயங்கள் நிறைய காணப்படுகின்றன. குறிப்பாக, பொட்டாசியம், காப்பர், இரும்பு சத்து, மக்னீசியம், மலச்சிக்கலைப் போக்க உதவும் நார்ச்சத்து, உடல் நலத்துக்கு எந்த வகையிலும் தீங்கு விளைவிக்காத நல்ல கொழுப்பு சத்து, புரதம் மற்றும் Phyto Nutrition நிறைய உள்ளன.

இவைதவிர, பி-குரூப் வைட்டமின்களான நியாசின்(Niacin), ரிபோசிலாவின்(Riboslavin), தயாமின்(Thaimien), பைரிடாக்சின்(Pyridoxine) போன்றவையும் இதில் அடங்கியுள்ளன. Tropical Fruit ஆன இந்தப் பழத்தில் வாழை போன்ற பிற பழங்களைவிட, நமக்கு நிறைய எனர்ஜி கிடைக்கிறது.
இவ்வாறு ஏராளமான வைட்டமின், புரதம் போன்ற சத்துக்களை இந்தப் பழம் கொண்டுள்ளதால், பற்களையும், எலும்பு மண்டலத்தையும் பலப்படுத்துகிறது. வயதான தோற்றம் அடைவதைத் தவிர்த்து, ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ், செரிமான ஆற்றல், ரத்த அழுத்தம் போன்றவற்றை சீராக வைக்க துணை செய்கிறது.

ரத்த சோகை நோயாளிகளுக்கு ஏற்ற உணவாகவும் இது திகழ்கிறது. கொலஸ்ட்ரால் லெவலைக் குறைக்கும் தன்மையும் இதற்கு உண்டு. தைராய்டு லெவலைச் சீராக வைக்கவும் துணை செய்கிறது. ஒற்றை தலைவலியையும்(Migraine) குணப்படுத்தும் தன்மையும் இதற்கு உண்டு. மற்ற பழங்களில் இல்லாத ஈஸ்ட்ரோஜன் அளவு இப்பழத்தில் இயற்கையாகவே அதிகம் உள்ளதால் வீட்டில் உள்ள பெரியவர்கள் தாய்மை அடைய விரும்பும் பெண்களை இதனைச் சாப்பிட சொல்வார்கள். இதனால், கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம். தாய்ப்பால் புகட்டும் காலக் கட்டங்களில், பெண்கள் இதனை உண்பது நல்லது.

மாதவிடாய் காலத்திற்கு முன் பெண்களுக்கு வருகிற உணர்ச்சிக் கொந்தளிப்பை(Pre Menstrual Syndrome) குறைக்கவும் இப்பழம் பயன்படுகிறது. தாய்மை அடைந்தது உறுதி செய்யப்பட்ட பின்னர், பெண்கள் இதனை நிறைய சாப்பிட கூடாது. ஏனென்றால், சர்க்கரை மற்றும் கார்போ ஹைட்ரேட் இதில் அதிகம். இந்தக் கனியில், L-Argimine என்ற ஆசிட் அதிகளவில் உள்ளது. இது ஆண் தன்மையை அதிகரிக்க செய்யும். இத்தகைய சிறப்பு தன்மைகளைத் துரியன் பழம் கொண்டு இருப்பதால், ‘பழங்களின் ராஜா’ என இப்பழம் சிறப்பிக்கப்படுகிறது.

பல வகையான மருத்துவக் குணங்கள் துரியன் பழத்திற்கு உண்டு என்பதால் அனைவரும் இதனைச் சாப்பிடக் கூடாது. குடும்ப உறுப்பினர்களில் பாட்டி-தாத்தா, பெற்றோர், உடன் பிறந்தவர்கள் என அனைவருக்கும் சர்க்கரை நோய்(Gestational Diabetes) இருக்கும். அது மாதிரியான சூழலில் ஒருவருக்கு மட்டும் அந்நோய் பாதிப்பு இருக்காது. அவர் இப்பழத்தை உணவில் சேர்த்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். வாந்தி உணர்வு(Vomiting Sensation) கொண்டவர்களுக்கும் இது ஏற்றதல்ல. நான்கிலிருந்து ஆறு மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் இதைக் கொடுப்பது நல்லதல்ல.

ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குக் கொஞ்சம்கொஞ்சமாக கொடுக்க ஆரம்பிக்கலாம். 100 கிராம் அளவு துரியன் பழத்தில் 147 கலோரியும், வைட்டமின் 33%-மும் உள்ளது’’ என்கிற சாந்தி காவேரி, இக்கனியோடு தொடர்புடைய சில சுவாரஸ்யமான தகவல்களையும் கூறுகிறார்.‘‘ஆரம்பத்தில் கூறியதைப் போன்று, துரியன் பழத்தின் சுவை அமிழ்தத்துக்கு இணையாக சொல்லப்பட்டாலும், அதன் வாசனை குறித்து, எதிர்மறையான பலவிதமான கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. ஒரு முறை இதன் வாசனையை நுகர்ந்து விட்டால், வாழ்நாள் முழுவதும் அவ்வாசனை மனதைவிட்டு அகலாது என ஒரு சாரார் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த உணவியல் எழுத்தாளர் ரிச்சர்ட் ஸ்டெர்லிங், இதன் வாசனை பற்றி கூறும்போது, ‘டர்பன்டைன் போன்றும், ஜிம்மில் உடற்பயிற்சி செய்த பின்னர், வியர்வை நாற்றம் வீசும் சாக்ஸ் மற்றும் வெங்காயம் போன்றும் இதன் வாசனை இருக்கும்’ என்கிறார். 100 அடி தூரத்தில் இருந்தாலும் துரியன் வாசனையை எளிதாக நுகர முடியும். இது போன்ற காரணங்களால், சிங்கப்பூர் முதலான ஆசிய நாடுகள் பொதுமக்கள் அதிகளவில் கூடுகிற ரயில் மற்றும் பேருந்து நிலையம், ஹோட்டல், விமானதளம் போன்ற இடங்களில், துரியன் பழம் சாப்பிட தடை விதித்துள்ளது’’ என்கிறார்.Post a Comment

Protected by WP Anti Spam