By 4 September 2018 0 Comments

விஸ்வரூபமெடுக்கும் வீட்டுப்பிரசவம்… ஏன் இந்த அலோபதி வெறுப்பு?(மருத்துவம்)

பாரம்பரியம் சார்ந்த இயற்கை மருத்துவம் புத்துயிர் பெற்று வருவது மகிழ்ச்சிக்குரிய விஷயம்தான். ஆனால், அது அலோபதி மருத்துவத்தின் மீதான வெறுப்பாக வளர்கிறதோ என்ற சந்தேகம்தான் இப்போது சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. ‘நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்களல்ல’ என்ற ஆலோசனைகளும், ஆங்கில மருத்துவத்தின் மீதான அச்சமும், எல்லாவற்றுக்கும் இயற்கையிலேயே தீர்வு உண்டு என்று ஒரு தரப்பு மக்களை உறுதியாய் திசை மாற வைத்திருக்கிறது.

இது உச்சகட்டமாக வீட்டிலேயே பிரசவம் பார்த்துக் கொள்ளலாம் என்ற அளவுக்கு விபரீதமாக மாறியிருப்பது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ‘மருத்துவமனைகளில்தான் பிரசவம் பார்க்க வேண்டும். கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை கிடைக்கவிடாமல் செய்வது தண்டனைக்குரிய குற்றம்’ என தமிழக அரசும் எச்சரித்துள்ளது. பேறுகால உயிரிழப்பு கணிசமாகக் குறைந்துள்ளதாக அலோபதி மருத்துவர்கள் தங்கள் தரப்பு வாதத்தை வைக்கின்றனர்.

அதேநேரத்தில், நம் பாரம்பரிய மருத்துவத்தைப்பற்றிய தன்னுடைய அனுபவரீதியான கருத்தை சொல்வதற்குக்கூட உரிமையில்லையா என மாற்று மருத்துவர்களும் தங்கள் தரப்பு வாதங்களை எழுப்பியுள்ளனர். இந்த இரு தரப்பு குழப்பத்தால் இன்னும் அதிகமாகப் பாதிக்கப்படப் போவது பொதுமக்கள்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அலோபதி Vs மாற்று மருத்துவம் என்ற இந்த கருத்து முரண்பாடுகளுக்கு என்ன தீர்வு? பொதுமக்கள் செய்ய வேண்டியது என்னவென்று துறைசார்ந்த நிபுணர்களிடம் பேசினோம்…

‘‘மாற்று மருத்துவத்தில் 30 நாட்களில் உடல் பருமனை குறைத்துக் காட்டுகிறோம், புற்றுநோயைக் குணப்படுத்துகிறோம் என்பது போன்ற விளம்பரங்கள் செய்து சில போலி மருத்துவர்கள் மக்களைக் கவர்கிறார்கள். அலோபதி மீது ஏதேனும் கோபம் இருக்கும் மக்கள் இவற்றை நம்பி மக்கள் ஏமாறுகிறார்கள். இப்படித்தான் பிரச்னை ஆரம்பிக்கிறது’’ என்கிறார் மூத்த பொதுநல மருத்துவரான தேவராஜன்.

மாற்று மருத்துவத்தில் மக்களின் கவனம் திரும்ப என்ன காரணம்?

“அதிக கட்டணக் கொள்ளை, வெளிப்படைத்தன்மையில்லாதது, பரிசோதனை என்கிற பெயரில் பயமுறுத்துவது என ஒரு சில இடங்களில் நடக்கிற தவறுகளால் ஆங்கில மருத்துவத்தின் மீதே பொதுமக்களுக்கு வெறுப்பு ஏற்படுகிறது. இதுதான் மாற்று மருத்துவப் பார்வைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. நீண்ட நாட்களாக ஆங்கில மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டு, அதில் குணமடையாதவர்களும் வெறுப்புற்று மாற்று
மருத்துவத்தை நாடிச் செல்கிறார்கள்.’’

மாற்று மருத்துவ சிகிச்சைப்பிரிவுகள் அரசு மருத்துவமனைகளில் இருந்தாலும் அலோபதிக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கப்படுவது ஏன்?

‘‘அரசு மருத்துவமனைகளிலேயே சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி போன்ற மாற்று மருத்துவத்தை அறிவியல் பூர்வமாகவும், முறையாகவும் படித்து சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் இருக்கிறார்கள். இவர்களை நல்ல முறையில் ஒருங்கிணைத்து ஊக்குவித்தால் நல்லது. அதேநேரத்தில் அரசு பதிவு செய்யப்படாத மருத்துவர்களையும் கண்டறிந்து களைய வேண்டும். நாங்கள் அதைத்தான் குற்றம் சாட்டுகிறோம்.

நீண்ட நாள் மூட்டுவலியால் அவதியுறும் நோயாளிகள் ஆயுர்வேத எண்ணெய் மசாஜ் போன்றவற்றால் குணமடைகிறார்கள். நாள்பட்ட முதுகுவலி, மூட்டுவலி போன்றவற்றுக்கு யோகா பயிற்சிகள், அக்குபிரஷர் சிகிச்சை முறைகள் நல்ல தீர்வாக இருப்பதாக சில நோயாளிகள் சொல்கிறார்கள். இது ஓரளவு உண்மையும் கூட. ஏனெனில், நம் நாட்டின் பாரம்பரிய யோகா பயிற்சிகள், அக்குபிரஷர் சிகிச்சைகள் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டவை.

இவற்றின் மூலம் உடல் மூட்டுப்பகுதிகளுக்கு கொடுக்கப்படும் பயிற்சிகள் சிறப்பாக செயல்படுபவை. நிறைய நோய்களுக்கு ஆரம்பகட்ட நிலையில் சில வாழ்வியல் மாற்றங்கள், நடைப்பயிற்சி, உடற்பயிற்சிகள் கூட மாற்று மருத்துவத்தின் உதவியோடு குணப்படுத்திவிடலாம். ஆனால், புற்றுநோய் வந்த ஒருவர் ஆங்கில மருத்துவத்தில் கீமோதெரபி, எலக்ட்ரோதெரபி போன்ற சிகிச்சைகளைக் கண்டு பயந்து போய் மாற்று மருத்துவத்துக்குப் போனால் அவரை கண்டிப்பாக குணப்படுத்த முடியாது.’’

அலோபதி மருத்துவத்தில் ஏன் செலவுகள் அதிகரிக்கிறது?

‘‘அலோபதி மருத்துவத்தில் முதல்படியாக விலங்குகளிடம் சோதனை செய்து, இரண்டாவதாக மருந்தின் அளவை அதிகரித்துப்பார்த்து, அடுத்த கட்டமாக மனிதனிடத்தில் சோதனை செய்து, இறுதியாக சந்தை ஆய்வு என ஒவ்வொரு கட்டமாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படுகிறது. இப்படி ஒரு மருந்து வெளிவருவதற்கு, பல்வேறு கட்ட சோதனைகள் தேவைப்படுகிறது. மாற்று மருத்துவத்தில் இதுபோன்ற படிப்படியான சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவில்லை.

குறைந்தபட்சம் 16 வகையான மருந்து தயாரிப்பிற்குப் பின்னர்தான் ஒரு சரியான மருந்தை ஆராய்ந்து கண்டுபிடித்து வெளியிட முடிகிறது. இதற்கு கோடி கோடியாய் செலவாகும். ஆனால், மாற்று மருத்துவத்தில் அப்படியில்லை. கைக்கருகில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே அவர்கள் மருந்தை தயாரித்துவிடுகின்றனர். ஆங்கில மருத்துவத்தில் இந்திய நிறுவனங்களின் ஜெனரிக் மற்றும் மல்டி நேஷனல் கம்பனிகளின் மருந்துகள் என இருவகை மருந்துகள் வெளிவருகின்றன. இதில் ஜெனரிக் மருந்துகள் விலை குறைந்தவை இவற்றை மக்கள் வாங்கி பயன்படுத்தலாம். மக்களின் மருத்துவ செலவைக் குறைப்பதற்கான ஒரு தீர்வு இது.’’

பெருகி வரும் வீட்டுப்பிரசவங்கள் பற்றி…

‘‘இது மிகவும் ஆபத்தான போக்கு. ரத்த அழுத்தம், ரத்த சோகை திடீரென்று அதிகரிப்பது, குழந்தையின் தலை திரும்பாமல் இருப்பது, அதீத உதிரப்போக்கினால் ஏற்படும் ரத்த இழப்பு, பனிக்குட நீர் வற்றிப்போவது, குழந்தையின் கழுத்தில் தொப்புள் கொடி சுற்றிக் கொள்வது போன்ற சிக்கல்களால் ஒரு பெண்ணுக்கு பிரசவ நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். சில தாய்மார்களுக்கு மஞ்சள் காமாலை இருந்தால் பிரசவ நேரத்தில் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும். சரியான முறையில் சுகாதாரம் கடைபிடிக்காவிடில் தாய்க்கும், குழந்தைக்கும் நோய்த்தொற்று ஏற்படலாம்.

அதற்கான தடுப்பூசி போட வேண்டும். தாய்க்கும், தந்தைக்கும் வெவ்வேறு ரத்த வகை இருக்குமாயின் குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்படலாம். அதற்கான தடுப்பூசி போட்டாக வேண்டும். இதையெல்லாம் சரியாக கவனிக்க மாட்டார்கள். அந்தக்காலத்தில் வீட்டில் சுகப்பிரசவம் பார்த்தோம் என்று பேச்சுக்கு வேண்டுமானால் வாதிடலாம். ஆனால் அந்த காலத்து பெண்கள் கடுமையான வீட்டு வேலை செய்பவர்களாகவும், உணவுக் கட்டுப்பாட்டினை கடைபிடிப்பவர்களாகவும் இருந்தார்கள். அதனால் சுகப்பிரசவம் எளிதாக இருந்தது.

ஆனால், இன்றோ 2 மாதங்களுக்கு முன்பே பிரசவ விடுப்பில் ஓய்வெடுத்துக் கொண்டு தங்களுக்கு பிடித்ததை அளவில்லாமல் சாப்பிடுபவர்களாக இருக்கிறார்கள். பிரசவ வலியினைத் தாங்கி, கஷ்டப்பட்டு குழந்தை பெற்றுக் கொள்வதை இன்றைய பெண்கள் விரும்புவதில்லை. அதனாலும் சிசேரியன் பிரசவங்கள் இப்போது அதிகமாகிவிட்டது. தவிர, கிராமங்கள், நகரங்கள் இரண்டிலுமே நிறைய மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என எல்லாவிதமான மருத்துவ வசதிகளும் இருக்கும்போது வீட்டில் பிரசவம் பார்க்கும் அவசியம் என்ன?

மரணங்களை குறைக்க மருத்துவத்தில் முழு பரிணாம வளர்ச்சி அடைந்துள்ள இந்தக் காலத்தில் எதற்காக ஆபத்தை விலை கொடுத்து வாங்க வேண்டும்?’’ என்று கேள்வி எழுப்புகிறார். ‘‘அலோபதி பெரிதா, பாரம்பரிய மருத்துவம் பெரிதா என்ற பட்டிமன்றத்தால் எந்த லாபமும் இல்லை. இரண்டு மருத்துவங்களிலும் பல சிறப்பம்சங்கள் இருக்கின்றன. எனவே, இரண்டும் தங்கள் ஈகோவை விட்டொழித்துவிட்டு இணைந்து செயல்பட வேண்டும்’’ என்கிறார் சமூக ஆர்வலரும் பொதுநல மருத்துவருமான புகழேந்தி.

‘‘மகப்பேறு மருத்துவத்தை அலோபதி மருத்துவத்திற்கு மட்டுமே சொந்தமானது என்று சொல்வது தவறு. இங்கு மருத்துவமனையின் தேவை அவசியமா என்பது கேள்வியல்ல? மருத்துவமனையின் அவசியத்தை மக்களிடையே திணிக்கப்படுகிறதா என்பதுதான் கேள்வி. திருப்பூரில் நடந்த கிருத்திகாவின் உயிரிழப்பை வைத்து ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது. அங்கு முறையான பயிற்சி பெறாமால் பிரசவம் பார்க்கப்பட்டிருக்கலாம். வீட்டு பிரசவத்தில் ரத்தசோகை, அதிக ரத்தப்போக்கு, கிருமித்தொற்று, உயர் ரத்த அழுத்தம் போன்ற 4 முக்கிய விஷயங்களை பேறுகால இறப்பிற்கு காரணமாக ஆங்கில மருத்துவத்தில் சொல்கிறார்கள்.

இதனால் இறப்பு விகிதம் அதிகமாவதாகவும் குற்றம் சாட்டுகிறார்கள். மருத்துவமனைகளில் பேறுகால இறப்பு நடப்பதில்லையா? தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசாங்க புள்ளிவிவரப்படி 15-49 வயதுடைய ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட கருவுற்ற பெண்களின் எண்ணிக்கை, இந்திய சராசரி அளவான 52 சதவீதத்தைவிட கூடுதலாக 55 சதவீதமாக உள்ளது. கருவுற்ற பெண்களுக்காக அரசாங்கம் நடத்திவரும் சத்துணவுத்திட்டங்கள் பல வருடங்களாக இருக்கும்போதே இந்த நிலமையில் இருக்கிறது. 2017-ம் ஆண்டில் அரசாங்கம் வெளியிட்ட புள்ளி விவரப்படி 2012- 2017 வரையிலான 5 வருடங்களில் சென்னையில் மட்டும் பேறுகால இறப்பு விகிதம் 80 சதவீதம் அதிகரித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த கணக்கு அரசு மருத்துவமனைகளில் மட்டுமானது. தனியார் மருத்துவமனைகளில் ஏற்பட்ட இறப்புவிகிதம் கணக்கில் வராதது. இதில் 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் இறந்த எண்ணிக்கை மட்டுமே 36 சதவீதமாக இருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் இரவு நேரங்களில் பார்க்கப்படும் பிரசவங்களில் போதிய மருத்துவர்கள் இல்லாததால், இறப்புகள் அதிகம் ஏற்படுகிறது. இந்த உயிரிழப்புகள் எப்படி நடந்தது? அரசு இதை தடுக்க என்ன முயற்சி மேற்கொண்டது?

அடுத்ததாக கடந்த 7 வருடங்களில் தமிழகத்தில் சிசேரியன் பிரசவம் 2 மடங்காக அதிகரித்திருப்பதாக புள்ளி விவரம் சொல்கிறது. தனியார் மருத்துவமனைகளில் இரண்டில் ஒருவர் என்ற விகிதத்திலும், அரசு மருத்துவமனைகளில் 5-ல் இருவர் என்ற விகிதத்திலும் சிசேரியன் பிரசவம் செய்கிறார்கள். ஏன் தனியார் மருத்துவமனைகளில் எண்ணிக்கை அதிகம் என்ற கேள்வி எழுகிறது. சராசரியாக சிசேரியன் முறை பிரசவம் 15 சதவீதத்திற்கு மிகாமல் இருக்கவேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெள்ளத் தெளிவாக பரிந்துரைக்கிறது.

இந்த நிலையில், பிரசவத்தைப் பொறுத்தவரை அலோபதி மருத்துவத்தை மட்டும் ஏன் திணிக்கிறார்கள்? சித்த, ஆயுர்வேத மருத்துவ படிப்பிலும் பிரசவத்திற்கான பாடத்திட்டங்கள் இருக்கிறபோது அதற்கான முறையான பயிற்சிகள் கொடுக்கலாமே…‘சித்தா, ஆயுர்வேதா, அலோபதி என அந்தந்த பிரிவு நிபுணர்கள் குழுவை அமைத்து, பிரசவத்திற்கு என்ன நடைமுறைகள் பின்பற்ற வேண்டும், என்ன உபகரணங்கள் பயன்படுத்த வேண்டும்,

எந்த நிலையை சுகப் பிரசவமாக எடுத்துக் கொள்ள வேண்டும் மற்றும் இந்த நிலையில்தான் சிசேரியன் முறை பிரசவம் செய்யவேண்டும் என்பன போன்று ஒரு அளவுகோலை வரையறுத்து, நடைமுறைப்படுத்துவதோடு அதைச் சட்டமாக்க வேண்டும். மேலும், நோயாளிகளுக்கும் நிலைமையை வெளிப்படையாக சொல்லி புரிய வைத்து, சித்தா, ஆயுர்வேதம் அல்லது ஆங்கில மருத்துவம் என மருத்துவ முறையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை கொடுக்க வேண்டும் என்பதே இந்தப்பிரச்னைக்கு நல்ல தீர்வாக இருக்க முடியும்’’ என்கிறார் உறுதியாக!Post a Comment

Protected by WP Anti Spam